இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0246பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்துஒழுகு வார்

(அதிகாரம்:அருளுடைமை குறள் எண்:246)

பொழிப்பு (மு வரதராசன்): அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பர்.

மணக்குடவர் உரை: முற்பிறப்பின்கண் அருளினின்று நீங்கி அல்லாதவற்றைச் செய்தொழுகினவர் இப்பிறப்பின்கண் பொருளினின்று நீங்கி மறவியுமுடையவரென்று சொல்லுவர்.
இது பொருளில்லையாமென்றது.

பரிமேலழகர் உரை: அருள் நீங்கி அல்லவை செய்து ஒழுகுவார் - உயிர்கள் மாட்டுச் செய்யப்படும் அருளைத் தவிர்ந்து தவிரப்படும் கொடுமைகளைச் செய்து ஒழுகுவாரை, பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர் - முன்னும் உறுதிப்பொருளைச் செய்யாது தாம் துன்புறுகின்றமையை மறந்தவர் என்று சொல்லுவர் நல்லோர்.
(உறுதிப்பொருள்: அறம், 'துன்புறுதல்' - பிறவித்துன்பம் மூன்றனையும் அனுபவித்தல். மறந்திலராயின், அவ்வாறு ஒழுகார் என்பது கருத்து.)

இரா சாரங்கபாணி உரை: உயிர்களிடத்து அருளின்றிக் கொடுமை செய்தொழுகுவாரை அறம் செய்தலைத் தவிர்த்து கடமையை மறந்தாரென்று சொல்லுவர் நல்லோர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அருள்நீங்கி அல்லவை செய்து ஒழுகுவார் பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர்.

பதவுரை:
பொருள்-உறுதிப்பொருள்; நீங்கி-செய்யாமல்; பொச்சாந்தார்-மறந்தவர்; என்பர்-என்று சொல்லுவர்; அருள்-அருள்; நீங்கி-தவிர்த்து; அல்லவை-தீவினைகளை; செய்து-இயற்றி; ஒழுகுவார்-நடந்துகொள்பவர்.


பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இப்பிறப்பின்கண் பொருளினின்று நீங்கி மறவியுமுடையவரென்று சொல்லுவர்;
மணக்குடவர் குறிப்புரை: இது பொருளில்லையாமென்றது.
பரிப்பெருமாள்: இப்பிறப்பின்கண் பொருளினின்று நீங்கி மறவியுமுடையவரென்று சொல்லுவர்;
பரிப்பெருமாள் குறிப்புரை: ஈண்டுமறவி- கற்றது மறத்தல்; இது பொருளில்லையாமென்றது.
பரிதி: சத்தியத்தைச் சேராமல் பொய்ந்நெறி ஒழுகுவார்;
காலிங்கர்: மெய்ப்பொருளாகிய இதனை நீங்கி மற்றிதனை இகழ்ந்துவிடுவார் என்று சொல்லுவர் சான்றோர்;
காலிங்கர் குறிப்புரை: பொச்சாப்பு என்பது இகழ்ச்சி.
பரிமேலழகர்: முன்னும் உறுதிப்பொருளைச் செய்யாது தாம் துன்புறுகின்றமையை மறந்தவர் என்று சொல்லுவர் நல்லோர்.
பரிமேலழகர் குறிப்புரை: உறுதிப்பொருள்: அறம், 'துன்புறுதல்' - பிறவித்துன்பம் மூன்றனையும் அனுபவித்தல். மறந்திலராயின், அவ்வாறு ஒழுகார் என்பது கருத்து.

'பொருள்நீங்கி' என்றதற்கு 'இப்பிறப்பின்கண் பொருளினின்று நீங்கி' என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும் 'சத்தியத்தைச் சேராமல்' என்று பரிதியும் 'மெய்ப்பொருள் நீங்கி' என்று காலிங்கரும் 'உறுதிப்பொருளைச் செய்யாது' என்று பரிமேலழகரும் பொருள் கூறினர். பொச்சாந்தார் என்பதற்கு 'மறவியுடையவர்' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள்/பரிமேலழகர் கூற காலிங்கர் 'இகழ்ந்துவிடுவர்' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பொருளிழந்து வாழ்வும் வழுவினார் ஆவர்', 'செல்வத்தை வைத்த இடம் மறந்துபோய்த் தடுமாறுகின்றவர்களுக்குச் சமானமாவார்கள்', 'உறுதிப் பொருளைக் கைவிட்டுத் தாம் படுந்துன்பத்தையும் மறந்தவர் என்று சொல்லுவர் நல்லோர்', 'உறுதிப் பொருள்கள் அற்று நன்மைகளை மறந்தவர் என்று சொல்லுவர் (நல்லோர்)' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உறுதிப் பொருள்கள் அற்று வாழ்வு மறந்தவர் என்று சொல்லுவர் என்பது இப்பகுதியின் பொருள்.

அருள்நீங்கி அல்லவை செய்து ஒழுகுவார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முற்பிறப்பின்கண் அருளினின்று நீங்கி அல்லாதவற்றைச் செய்தொழுகினவர்.
பரிப்பெருமாள்: முற்பிறப்பின்கண் அருளினின்று நீங்கி அல்லாதவற்றைச் செய்தொழுகினவர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: ஈண்டுமறவி- கற்றது மறத்தல்; இது பொருளில்லையாமென்றது.
பரிதி: அருளை நீங்கிக் கொடுமைத்தொழில் செல்வார் என்றவாறு.
காலிங்கர்: யாரை எனின், அருள் நீங்கி அஃதல்லனவற்றையே செய்து பின்னும் மீட்சி விகாரமின்றியே மறித்து அதன்கண்ணே ஒழுகுகின்ற அறிவில்லாதாரை என்றவாறு.
பரிமேலழகர்: உயிர்கள் மாட்டுச் செய்யப்படும் அருளைத் தவிர்ந்து தவிரப்படும் கொடுமைகளைச் செய்து ஒழுகுவாரை.

'அருளை நீங்கிக் கொடுமைத்தொழில் செய்பவர்கள்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அருள் இல்லாமல் கொடுமைகள் செய்பவர்', 'கருணை வாழ்க்கையை விட்டு அதற்கு மாறான செயல்களைச் செய்து கொண்டிருக்கும் துறவிகள்', 'அருளில்லாதவராய்க் கொடுமைகளைச் செய்தொழுகுவாரை', 'உயிர்களிடம் காட்டும் அருள் அற்றுக் கொடுமைகளைச் செய்து வாழ்வார்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அருளில்லாதவராய்க் கொடுமைகளைச் செய்தொழுகுவார் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அருளில்லாதவராய்க் கொடுமைகளைச் செய்தொழுகுவாரை உறுதிப் பொருள்கள் அற்று வாழ்வு மறந்தவர் என்று சொல்லுவர் என்பது பாடலின் பொருள்.
'பொச்சாந்தார்' என்ற சொல் குறிப்பது என்ன?

அருளற்றவராய் அறமல்லாதவைகளைச் செய்து ஒழுகுபவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பர்.

அருளில்லாதவர் வாழ்வு எப்படி அமையும் எனச் சொல்லும் குறள்.
இப்பாடலிலுள்ள பொருள் என்ற சொல்லுக்கு உறுதிப்பொருள் (அறம், பொருள், இன்பம்) என்று உரை கொள்வர். அவ்வுறுதிப்பொருள்களுள்ளும் அறம் என்று பெரும்பான்மையினர் உரை செய்தனர். மற்றவர்கள் பொருட்செல்வம், அருள்பொருள், மெய்ப்பொருள், இல்லறத்துப் பொருள் என உரை கண்டனர்.
தனக்கென வாழ்வில் நல்ல பொருளுடைய இலக்கு என்றை வைத்து இப்படித்தான் வாழவேண்டும் என்று வாழ்வது குறிக்கோளை மையமாகக் கொண்டு வாழும் வாழ்க்கையாகும். அறம் என்ற உறுதிப் பொருளை நோக்கிச் செல்லும் வாழ்வே உயர் வாழ்வாகும். அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து வாழ்பவர், குறிக்கோளற்று எப்படியும் வாழலாம் எனப் பொய்மிகுவாழ்க்கை நடத்துபவர்கள்; இவர்கள் உறுதிப் பொருளான அறத்தை மறந்தவர்கள் என்கிறது பாடல்.
இதைப் பிறர் கூற்றாக சொல்லுவதால் 'என்பர்' என்பதனைச் சேர்த்துக் கூறினார் வள்ளுவர்.
அருள் இல்லாமல் கொடுமையான செயல்களைத் தொடர்ந்து செய்பவர்கள் பொருள் இல்லாமல் போய் கடமையை மறந்தவர்கள் ஆவார்கள் என்றும் இக்குறட்கு உரை கூறுவர்.
அறன் அறியாது அருளை மறந்தவர்களை அருள்தீர்ந்த காட்சியான் அறன்நோக்கான் நயம்செய்யான்.... (கலித்தொகை 120) எனச் சங்கப்பாடலும் காட்டியது.

'பொச்சாந்தார்' என்ற சொல் குறிப்பது என்ன?

'பொச்சாந்தார்' என்ற சொல்லுக்கு மறவியுடையவர், பொய்ந்நெறி (‘பொய்ச்சார்ந்தார்' பாடம்), இகழ்ந்துவிடுவார், மறந்தவர், வழுவினார், வைத்த இடம் மறந்துபோய்த் தடுமாறுகின்றவர்கள், பிறரால் மறக்கப்பட்டவர் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இச்சொல்லுக்கு அனைவரும் மறந்தார் என்ற பொருளிலேயே உரை கூறினர். காலிங்கர் ஒருவரே பொச்சாந்தார் என்பதற்கு இகழ்ந்துவிடுவார் எனப் பொருள் கூறினார். பொச்சாப்பு என்பதற்கு இகழ்ச்சி என்ற பொருளும் உண்டு.
எதை மறந்து போனவர்கள் என்பதை விளக்குவதில் உரையாளர்கள் பெரிதும் மாறுபடுகின்றனர். கற்றது மறந்தவர், துன்புறுகின்றமையை (பிறவித்துன்பம் மூன்றனையும் அனுபவித்தல்) மறந்தவர், தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் கடமையை மறந்தவர், அறத்தினை மறந்தவர்கள், வாழ்வு வழுவினார், செல்வத்தை வைத்த இடம் மறந்துபோய்த் தடுமாறுகின்றவர்கள், பிறரால் மறக்கப்பட்டவர், தாம் படுந்துன்பத்தை மறந்தவர், நன்மைகளை மறந்தவர், அறத்தின் பொருளையும் சாரத்தையும் மறந்தவர், தங்கட்கு வரும் தீங்குகளை மறந்தவர்கள், மெய்ப் பொருளை மறந்தார் என அவர்கள் வேறுவேறாக உரை தந்தனர்.
இவற்றுள் குறிக்கோளை மறந்தவர், கடமையை மறந்தவர் என்பன சிறந்தனவாக உள்ளன.

அருளில்லாதவராய்க் கொடுமைகளைச் செய்தொழுகுவாரை உறுதிப் பொருள்கள் அற்று வாழ்வு மறந்தவர் என்று சொல்லுவர் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அருளுடைமை நீங்கியவர் அறம் மறந்தவர்.

பொழிப்பு

அருள் இல்லாமல் கொடுமைகள் செய்பவர் உறுதிப்பொருளிழந்து வாழ்வும் மறந்தவர் ஆவர் என்று சொல்வர்.