இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0243



அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்

(அதிகாரம்:அருளுடைமை குறள் எண்:243)

பொழிப்பு (மு வரதராசன்): அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.

மணக்குடவர் உரை: அருளைப் பொருந்தின நெஞ்சினையுடைவர்க்கு இருளைப் பொருந்தின நரகலோகம் புகுதலில்லை.
இது நரகம் புகாரென்றது.

பரிமேலழகர் உரை: இருள் சேர்ந்த இன்னா உலகம் புகல் - இருள் செறிந்த துன்ப உலகத்துள் சென்று புகுதல், அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை - அருள் செறிந்த நெஞ்சினை உடையார்க்கு இல்லை.
('இருள் செறிந்த துன்ப உலகம்' என்றது, திணிந்த இருளை உடைத்தாய்த் தன் கண்ணே புக்கார்க்குத் துன்பம் செய்வதோர் நரகத்தை, அது கீழுலகத்துள் ஓர் இடம் ஆகலின், 'உலகம்' எனப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: இருளடைந்த துன்ப உலகத்தின்கண் புகுதல் அருள் செறிந்த நெஞ்சினை உடையார்க்கு இல்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல் அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை.

பதவுரை:
அருள்-அருள்; சேர்ந்த-அடைந்த; நெஞ்சினார்க்கு-நெஞ்சினை உடையார்க்கு; இல்லை-இல்லை; இருள்-இருள்; சேர்ந்த-செறிந்த; இன்னா-தீய; உலகம்-உலகம்; புகல்-புகுதல்.


அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அருளைப் பொருந்தின நெஞ்சினையுடைவர்க்கு இல்லை;
பரிப்பெருமாள்: அருளைப் பொருந்தின நெஞ்சினையுடைவர்க்கு இல்லை;
பரிதி: சர்வரிடத்திலும் கிருபை ஆள்பவர்க்கு தெய்வலோகம் சித்திக்கும் என்றவாறு;
காலிங்கர்: அனைத்துயிர்மாட்டும் ஒத்த அருளானது பொருந்திய நெஞ்சினையுடையார்க்கு எஞ்ஞான்றும் இல்லை;
பரிமேலழகர்: அருள் செறிந்த நெஞ்சினை உடையார்க்கு இல்லை;

'அருளைப் பொருந்தின நெஞ்சினையுடைவர்க்கு இல்லை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அருள் நெஞ்சம் கொண்டவர் அடைய மாட்டார்', 'அருள் பொருந்திய மனமுடையார்க்கு இல்லை', 'அருள் நெறியை மேற்கொண்ட மனமுள்ள துறவிகளுக்கு இல்லை', 'அருள் நிறைந்த மனமுடையவர்களுக்கு இல்லையாம் ', என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அருள் நிறைந்த நெஞ்சினை உடையார்க்கு இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இருளைப் பொருந்தின நரகலோகம் புகுதல்.
மணக்குடவர் குறிப்புரை: இது நரகம் புகாரென்றது.
பரிப்பெருமாள்: இருளைப் பொருந்தின நரகலோகம் புகுதல்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நரகம் புகாரென்றது.
பரிதி: நரகலோகம் இல்லை.
காலிங்கர்: யாதோ எனில் உண்மை உணராமை காரணமாக வந்து சேர்ந்த இன்னாங்குடைய உலகங்களைச் சென்றடைதல் என்றவாறு.
பரிமேலழகர்: இருள் செறிந்த துன்ப உலகத்துள் சென்று புகுதல்,
பரிமேலழகர் குறிப்புரை: 'இருள் செறிந்த துன்ப உலகம்' என்றது, திணிந்த இருளை உடைத்தாய்த் தன் கண்ணே புக்கார்க்குத் துன்பம் செய்வதோர் நரகத்தை, அது கீழுலகத்துள் ஓர் இடம் ஆகலின், 'உலகம்' எனப்பட்டது.

'இருளைப் பொருந்தின நரகலோகம் புகுதல் என்ற பொருளில்' மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதி ஆகியோர் இப்பகுதிக்கு உரை கூறினர். 'அறியாமை காரணமாக வந்து சேர்ந்த இன்னாங்குடைய உலகங்களைச் சென்றடைதல்' என்று காலிங்கரும் 'இருள் செறிந்த துன்ப உலகத்துள் சென்று புகுதல்' எனப் பரிமேலழகரும் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறியாமையும் துன்பமும் உடைய உலகத்தை', 'அறியாமையுடைய துன்ப உலகிற் சேர்தல்', 'அறியாமை சேர்ந்த துன்பங்கள் உள்ள உலகியல்களில் ஈடுபட வேண்டிய வேலை', 'இருள் நிறைந்த துன்ப உலகத்தில் புகுதல்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

இருளடைந்த தீயவர் உலகத்தில் சென்றுசேர்தல் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அருள் நிறைந்த நெஞ்சினை உடையார்க்கு இருளடைந்த தீயவர் உலகத்தில் சென்றுசேர்தல் இல்லை என்பது பாடலின் பொருள்.
'இருள்சேர்ந்த இன்னா உலகம்' என்பது எது?

அருள் உலகம் சென்றடைந்தவர்க்கு, இருள் சூழ்ந்த கொடியவர் உலகத்துத் துயரங்கள் இல்லை.

அருள்நெறி பேணுபவர்கள் 'அருள் சேர்ந்த நெஞ்சினர்' என்று இங்கு குறிக்கப்படுகின்றனர். அந்த அருளாளர்க்கு இருண்ட சூழலில் உள்ள எந்தத் துன்பத்திலும் உழலும் நிலை இல்லை. அருள் உணர்வுடன் கூடிய உலகில் பொய், கொலை, களவு, முதலான தீய ஆற்றல்களுக்கு இடமில்லை. துன்பங்கட்குக் காரணமான எல்லாக் கொடுஞ்செயல்ககளும் நீக்க்கப்பட்டுவிட்டால் இன்ப நிலை எளிதில் கிட்டும். அவர்கள் அருள் என்னும் ஒளி நிறைந்த நெஞ்சினர். இருள்தான் துன்பம் தருவது; ஒளியையே நெஞ்சில் அடக்கியவர்களுக்கு அத்துன்பம் இல்லை.
இன்னா உலகம் புகல் இல்லை என்று சொல்லப்பட்டதால், அருள் நெஞ்சமுடைய அவர்கள் எந்தக் காலத்திலும் யாருக்கும் இன்னாதவற்றைச் செய்ய மாட்டார்கள்; அவர்கள் இருள் நிறைந்த கொடியவர் உலகத்திற்கு என்றும் செல்ல மாட்டார்கள்; அருளிற்கு நேர் எதிரான வன்முறைச் செயல்களில் மனங்கொளார்.

'இருள்சேர்ந்த இன்னா உலகம்' என்பது எது?

'இருள்சேர்ந்த இன்னா உலகம்' என்றதற்கு இருளைப் பொருந்தின நரகலோகம், நரகலோகம், உண்மை உணராமை காரணமாக வந்து சேர்ந்த இன்னாங்குடைய உலகங்கள், இருள் செறிந்த துன்ப உலகம், அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகம், இருள் மிகுந்த துன்பவுலகம், அறியாமையும் துன்பமும் உடைய உலகம், அறியாமையுடைய துன்ப உலகம், அறியாமை சேர்ந்த துன்பங்கள் உள்ள உலகியல்களில் ஈடுபடல், இருள் அமைந்த கொடிய உலகியல், இருள் நிறைந்த துன்ப உலகம், இருளடைந்த துன்ப உலகம், மயக்கத்தைத் தரக்கூடிய துன்பம் நிறைந்த உலக வாழ்க்கை, இருள் திணிந்த துன்பவுலகம் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

அறியாமையால் துன்பங்கள் நிறைந்த உலகியல் செயல்களில் ஈடுபடுவதால் அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகம் ஆனது,
நெஞ்சில் ஈரமின்றி, பழிக்கு அஞ்சாமல், பாவச் செயல்களில் ஈடுபடுவதால், செறிந்த இருளை உடையதாய்த் தன்னிடம் வந்து அடைந்தவர்களுக்குத் துன்பங்கள் மட்டுமே செய்வதான, தண்டனைக்குரிய தனியிடமான, தொன்மங்களில் சொல்லப்பட்டுள்ள, நரக உலகம் ஆயிற்று. தீயுழி என்றும் அளறு என்றும் இவ்வுலகம் குறிக்கப்பெறும். இவ்வாறு இருள்சேர்ந்த இன்னா உலகம் விளக்கப்பட்டது.

அருள் இல்லாத உலகம் போரும் பூசலுமாகத் துன்பம் நிறைந்து இருக்கும். இருள் சேர்ந்த உலகம் என்று சொல்லப்பட்டதால் அது கொடியவர் கூட்டுறவைக் குறிக்கிறது எனக் கொள்ளமுடியும். அதிகாரத்துப் பின்வரும் குறள் ஒன்றில் 'அருளாள்வார்க்கு அல்லல் இல்லை' எனக் கூறப்படுவதால் அங்கு 'துன்பம் இல்லை' எனக் கொள்வது ஏற்கும்.
இங்கு இன்னா உலகம் என்பது துன்ப உலகத்தைக் குறிக்கும் என்பதைவிட இன்னாங்கு அதாவது தீமை நிறைந்த வன்முறையாளர் உலகத்தைச் சுட்டுகிறது எனக் கொள்வது பொருத்தமாகலாம்.

'இருள்சேர்ந்த இன்னா உலகம்' என்பது இருள் செறிந்த தீயவர் உலகம் என்று பொருள்படும்

அருள் நிறைந்த நெஞ்சினை உடையார்க்கு இருளடைந்த தீயவர் உலகத்தில் சென்றுசேர்தல் இல்லை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அருளுடைமை தீயவர் உலகத்திலிருந்து ஒருவரைக் காக்கும்.

பொழிப்பு

அருள் பொருந்திய நெஞ்சம் கொண்டவர் இருளடைந்த தீயவர் உலகம் சென்றுசேர்தல் இல்லை.