இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0248பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற்று ஆதல் அரிது

(அதிகாரம்:அருளுடைமை குறள் எண்:248)

பொழிப்பு (மு வரதராசன்): பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர்; அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயன் அற்றவரே; அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை.

மணக்குடவர் உரை: பொருளில்லாதார் ஒருகாலத்தே பொருளுடையராதலும் கூடும்; அருளில்லாதார் கெட்டார், பின்பு ஆக்கமுண்டாகாது.
இது பொருளின்மையேயன்றி எல்லாக் கேடு முண்டாமென்றது.

பரிமேலழகர் உரை: பொருள் அற்றார் ஒருகால்பூப்பர்- ஊழான் வறியராயினார் அது நீங்கிப் பின் ஒரு காலத்துச் செல்வத்தால் பொலிவர், அருள் அற்றார் அற்றார் மற்று ஆதல் அரிது - அவ்வாறு அன்றி அருளிலாதார் பாவம் அறாமையின் அழிந்தாரே; பின் ஒருகாலத்தும் ஆதல் இல்லை.
('மற்று' வினைமாற்றின்கண் வந்தது, மேல் பொருள் இன்மையொடு ஒருவாற்றான் ஒப்புமை கூறினார் ஆகலின், அது மறுத்து, பிற ஆற்றான் அதனினும் கொடியது என்பது கூறியவாறு.)

இரா சாரங்கபாணி உரை: பொருட் செல்வமற்ற வறியவர் பின் ஒரு காலத்துச் செல்வத்தால் செழிப்பர். ஆனால், அருட்செல்வமற்ற கொடியவர் அழிந்தவரே; பின் ஒரு காலத்தும் ஆக்கம் பெறுதல் இல்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பொருளற்றார் ஒருகால் பூப்பர்; அருள் அற்றார் அற்றார்; மற்று ஆதல் அரிது.

பதவுரை:
பொருள்-உடைமை; அற்றார்-இல்லாதவர்; பூப்பர்-பொலிவுடையார்; ஒருகால்-ஒருமுறை; அருள்-அருள்; அற்றார்-இழந்தவர்; அற்றார்-இழந்தவரே; மற்று-பின், ஆனால், அவ்வாறன்றி; ஆதல்-ஆகுதல்; அரிது-அருமையானது.


பொருளற்றார் பூப்பர் ஒருகால்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருளில்லாதார் ஒருகாலத்தே பொருளுடையராதலும் கூடும்;
பரிப்பெருமாள்: பொருளில்லாதார் ஒருகாலத்தே பொருளுடையராதலும் கூடும்;
பரிதி: பொருளற்றார் ஒருகாலத்திலே செல்வராவர்;
காலிங்கர்: முன் தமக்குள்ள பொருட் செல்வமற்றார் பின்னும் ஒருகாலம் பொருட்பொலிவுடையார் ஆகவும் கூடும்;
காலிங்கர் குறிப்புரை: பூப்பர் என்பது பொலிவுடையார் என்றது.
பரிமேலழகர்: ஊழான் வறியராயினார் அது நீங்கிப் பின் ஒரு காலத்துச் செல்வத்தால் பொலிவர்;

'பொருளில்லாதார் ஒருகாலத்தே செல்வத்தால் பொலிவர்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பொருளில்லார் ஒருநாள் செல்வத்தால் செழிப்பர்', 'செல்வத்தை இழந்துவிட்டவர்கள் மறுபடியும் ஒரு காலத்தில் செல்வத்தைப் பெற்றுச் செழிக்க முடியும்', 'முன்வினையினால் வறியரானவர்கள் அது நீங்கிய பின் ஒரு காலத்திற் சிறப்புறுதல் கூடும்', 'பொருளினை இழந்தோர் மீண்டும் ஒரு காலத்து அதனைப் பெற்று விளங்குவர்', என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பொருள் இழந்தவர்கள் ஒரு காலத்தில் செல்வத்தால் பொலிவுறுவர் என்பது இப்பகுதியின் பொருள்.

அருள் அற்றார் அற்றார் மற்று ஆதல் அரிது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அருளில்லாதார் கெட்டார், பின்பு ஆக்கமுண்டாகாது.
மணக்குடவர் குறிப்புரை: இது பொருளின்மையேயன்றி எல்லாக் கேடு முண்டாமென்றது.
பரிப்பெருமாள்: அருளில்லாதார் கெட்டார், பின்பு ஆக்கமுண்டாகாது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பொருளின்மையேயன்றி எல்லாக் கேடு முண்டாமென்றது.
பரிதி: அருளற்றார் நரகத்துமாக்கள் ஆவர் என்றவாறு.
காலிங்கர்: இனி, அவ்வாறன்றி வீட்டின்பக்காரணமாகிய மெய்யருளற்றார் மறித்து ஆக்கமுடையார் ஆதல் அரிது என்றவாறு.
பரிமேலழகர்: அவ்வாறு அன்றி அருளிலாதார் பாவம் அறாமையின் அழிந்தாரே; பின் ஒருகாலத்தும் ஆதல் இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது, மேல் பொருள் இன்மையொடு ஒருவாற்றான் ஒப்புமை கூறினார் ஆகலின், அது மறுத்து, பிற ஆற்றான் அதனினும் கொடியது என்பது கூறியவாறு.

'அருளில்லாதார் கெட்டார், பின்பு ஆக்கமுண்டாகாது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அருளில்லார் தொலைந்தவரே. திரும்ப மீளார்', 'ஆனால் அருள் குணத்தை இழந்துவிட்டவர்கள் மறுபடியும் அதை அடைவது முடியாது', 'அருள் இல்லாதவர்கள் அழிந்து போனவரே; அவர்கள் மேன்மையடைவதில்லை', 'ஆனால் அருளினை இழந்தோர் பின்னர் என்றும் அதனைப் பெறுதல் முடியாது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அருள் குணத்தை இழந்தவர் இழந்தவரே; மறுபடியும் அதை அடைவது எளிதல்ல என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பொருள் இழந்தவர்கள் ஒரு காலத்தில் செல்வத்தால் பொலிவுறுவர்; அருள் குணத்தை இழந்தவர் இழந்தவரே; மறுபடியும் அதை அடைவது எளிதல்ல என்பது பாடலின் பொருள்.
ஏன் அருளை இழந்தோர் அதை மீளப்பெறல் அரிது?

பொருள் இழந்தவர்கள் அதை மீண்டும் ஈட்டிக்கொள்வதற்கு வாய்ப்புகள் நிறைய உண்டு. ஆனால் ஒருமுறை அருள்நீங்கி வன்முறை உலகில் சென்றோர் அங்கிருந்து மீண்டு வருதல் முடியாத செயல்.

அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல் (குறள் எண்: 243) என்ற இதற்கு முந்தைய குறள் ஒன்று அருளாள்வார் இருள் சேர்ந்த இன்னா உலகம் அதாவது வன்முறையாளர் உலகு சென்றுசேர்தல் இல்லை எனச் சொன்னது. அதன் தொடர்ச்சியாக இப்பாடலை எடுத்துக்கொள்ளலாம். அப்படிச் சென்றுவிட்டால் அங்கிருந்து திரும்பி வருதல் முடியாத செயல் என்று இங்கு கூறப்படுகிறது. அவர்கள் வாழ்க்கையில் அழிந்தவர்களே என்றும் ஈடேற முடியாது என்கிறது இது. இக்கருத்தை விளக்க மறுபடியும் அருட்செல்வம் பொருட்செல்வத்தோடு ஒப்பு நோக்கப்படுகிறது.
பொருள் மிக்காராய் இருந்தவர் ஒரே இரவில் ஒன்றும் இல்லாராக மாறுவதை நாம் காண்கிறோம், மலையும் மடுவாய் ஆகிவிடுகிறது. ஆனால் அப்படிச் செல்வம் இழந்தவர்கள் மீண்டும் மலர்வதற்கு அதாவது முயற்சி செய்து உழைத்துப் பொருள் சேர்த்துச் செழிப்பதற்கு நிறைய வாய்ப்புக்கள் இருக்கின்றன. ஆனால் அருள் நீங்கி வன்முறைப் பாதையில் புகுந்தவர்கள் அதிலிருந்து மீண்டு அருள்வாழ்க்கைக்குத் திரும்புதல் மிகவும் கடினம் என்கிறது இக்குறள்.
வள்ளுவர் இங்கு “அரிது” என்ற சொல்லையே பெய்துள்ளார். எனவே பாதைமாறிய அவர்களும் முயன்று தம்மை மாற்றிக்கொண்டால், அவர்களுக்கும் உய்வு உண்டு என்ற குறிப்பு உள்ளது.

அழகரடிகள் 'அருளற்றார் அற்றார் என வருமிடத்தில் ‘அற்றார்’ என்பதற்குப் பொருள் பூப்பது அற்றார் எனவும் மீண்டும் ஒருகால் அருள் பூப்பதும் அற்றார் எனவும் ‘ஆதல் அரிது’ என்பதற்கு மீண்டும் அருளுடைமை மலர்தலும் அதனாற் பெறுதற்குரிய திருவருட் பேற்றில் முன்னேறுதலும் அவ்வளவு எளிதில் இல்லை எனவும் கருத்தாகும்' என உரை செய்கிறார்.

ஏன் அருளை இழந்தோர் அதை மீளப்பெறல் அரிது?

இப்பாடலில் அருளற்றார் என்று வன்முறைப் பாதைக்கு மாறியவர்கள் குறிக்கப்படுகின்றனர். மற்று ஆதல் என்ற தொடர் திரும்ப மாறுதல் அதாவது மறுபடியும் அருள் பாதைக்கு திரும்புதல் என்ற பொருள் தரும். பாடலின் பிற்பகுதி அருள் இழந்தவர் அருட்பாதைக்கு மீண்டுவருதல் அரிது என்கிறது.
ஆயுதம் தாங்கியவன் தீச்செயல்களையே நாடுவான். ஒரு தீச்செயல் இன்னொரு கொடிய தீச்செயலுக்கு அடிகோலும். இது தொடர் விளைவுகளை உண்டாக்கி அத்தீச்சுழலிலிருந்து தப்பிக்க முடியாமல் போகும். இப்படித் தனக்குத்தானே ஒரு வலை பின்னிக்கொண்டு வெளிவரமுடியாமல் தவிப்பான். கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் (live by the sword, die by the sword) என்பது பழமொழி. இது பொதுவாக வன்முறையில் செல்பவன் வன்முறையையே எதிர்கொள்வான் என்ற பொருளில் சொல்லப்படுவது. பழி வாங்கும் உணர்ச்சி மிகும். பழிக்குப் பழியாக நடக்கும் நிகழ்வுகளுக்கு முடிவே கிடையாது. இன்ன பிற காரணங்களால் வன்முறைப் பாதையில் சென்றவன் அங்கிருந்து மிளமுடியாமல் தவிப்பான்.
இதனால்தான் வள்ளுவர் 'அருளற்றார் அற்றார்மற்று ஆதல் அரிது' என்றார். அருள் உணர்வை ஒருகாலும் கைவிடக்கூடாது. மீண்டும் அதனைப் பெறுதல் மிகவும் அரிது என்பது செய்தி.

பொருள் இழந்தவர்கள் ஒரு காலத்தில் செல்வத்தால் பொலிவுறுவர்; அருள் குணத்தை இழந்தவர் இழந்தவரே; மறுபடியும் அதை அடைவது எளிதல்ல என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அருளுடைமை இழந்து வன்முறை தழுவியவர் என்றும் அழிந்தவரே.

பொழிப்பு

பொருளில்லார் ஒரு காலத்துச் செல்வத்தில் திளைப்பர்; அருளை இழந்தவர் இழந்தவரே; அதைத் திரும்ப மீள்தல் எளிதல்ல.