இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0249தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்

(அதிகாரம்:அருளுடைமை குறள் எண்:249)

பொழிப்பு (மு வரதராசன்): அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது.

மணக்குடவர் உரை: தெளிவில்லாதான் மெய்ப்பொருளைத் தெளிந்தாற்போலும்: ஆராயின்அருளில்லாதான் செய்யும் அறமும்.
இஃது அறஞ் செய்யவும் மாட்டாரென்றது.

பரிமேலழகர் உரை: அருளாதான் செய்யும் அறம் தேரின் - உயிர்கள் மாட்டு அருள் செய்யாதவன் செய்யும் அறத்தை ஆராயின், தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்று - ஞானம் இல்லாதவன் ஒருகால் மெய்ப்பொருளை உணர்ந்தாற் போலும்.
(மெய்ப்பொருள் - மெய்ந்நூலில் சொல்லும் பொருள். நிலை பெற்ற ஞானம் இல்லாதவன் இடையே மெய்ப்பொருளை உணர்ந்தால் அதனைத் தன்ஞானம் இலாமையால் தானே அழித்துவிடும் : அது போல அருளாதான் இடையே அறஞ்செய்தால் அதனைத் தன் அருளாமையால் தானே அழித்து விடும் என்பது ஆயிற்று: ஆகவே, பிற அறங்கட்கெல்லாம் அருள் உடைமை மூலம் என்பது பெற்றாம். இவை நான்கு பாட்டானும் அத்துணை இல்லாதார்க்கு வரும் குற்றம் கூறப்பட்டது.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: அருளில்லாதவன் செய்யும் அறத்தை ஆராய்ந்து பார்த்தால், அது மனத்தெளிவில்லாதவன் உண்மைப் பொருளை உணர்ந்தாற் போலும்!


பொருள்கோள் வரிஅமைப்பு:
அருளாதான் செய்யும் அறம் தேரின் தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால்.

பதவுரை:
தெருளாதான்-தெளிவில்லாதவன்; மெய்ப்பொருள்-உண்மைப் பொருள்; கண்டு-உணர்ந்தாற்; அற்று (ஆல்)-அத்தன்மைத்து; தேரின்-ஆராய்ந்தால்; அருளாதான்-அருளில்லாதவன்; செய்யும்-செய்யும்; அறம்-நற்செயல்.


தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தெளிவில்லாதான் மெய்ப்பொருளைத் தெளிந்தாற்போலும்:
பரிப்பெருமாள்: தெளிவில்லாதான் மெய்ப்பொருளைத் தெளிந்தாற்போலும்:
பரிதி: குழந்தை கையில் மாணிக்கம் என்று அறிக,
காலிங்கர்: இவ்வுலகத்து மெய்ஞ்ஞானமென்னும் அறிவில்லாதான் வீட்டின்பமென்னும் மெய்ப்பொருளினை விடக்கண்ட அத்தன்மையுடைத்து;
காலிங்கர் குறிப்புரை: தெருளாதான் என்பது அறிவில்லாதான்.
பரிமேலழகர்: ஞானம் இல்லாதவன் ஒருகால் மெய்ப்பொருளை உணர்ந்தாற் போலும்.
பரிமேலழகர் குறிப்புரை: மெய்ப்பொருள் - மெய்ந்நூலில் சொல்லும் பொருள்.

தெளிவில்லாதான் மெய்ப்பொருளை உணர்ந்தாற் போலும் என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'குழந்தை கையில் மாணிக்கம் போல' என்று ஒரு புதுமையான விளக்கம் தருகிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பேதை இறைவனைக் கண்டான் என்பது போலாம்', 'அஃது அறிவுத் தெளிவு இல்லாதவன் மெய்ப்பொருளை உணர்ந்தாற் போலும்', 'தெளிந்த ஞானமில்லாதவன் கடவுளைக் கண்டுவிட முடியும் என்பது போன்றதுதான்', 'தெளிவில்லாதவன் மெய்ப்பொருளைக் கண்டதை ஒக்கும்', என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மனத்தெளிவு இல்லாதவன் மெய்ப்பொருளை அறிந்தாற் போலும் என்பது இப்பகுதியின் பொருள்.

தேரின் அருளாதான் செய்யும் அறம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஆராயின், அருளில்லாதான் செய்யும் அறமும்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அறஞ் செய்யவும் மாட்டாரென்றது.
பரிப்பெருமாள்: ஆராயின், அருளில்லாதான் செய்யும் அறமும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அறஞ் செய்யவும் மாட்டானென்றது.
பரிதி: அறிவில்லாதான் செய்யும் தன்மம் என்றவாறு.
காலிங்கர்: நூன்முறைவழி நுண்ணியதாக ஆராய்ந்து தன் நெஞ்சத்து அனைத்துயிர்க்கும் ஒப்ப நிகழ்வதோர் அருளிலாதான் செய்யக் கருதும் துறவறமானது என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: தேரின் என்பது ஆராயின்.
பரிமேலழகர்: உயிர்கள் மாட்டு அருள் செய்யாதவன் செய்யும் அறத்தை ஆராயின்,
பரிமேலழகர் குறிப்புரை: நிலை பெற்ற ஞானம் இல்லாதவன் இடையே மெய்ப்பொருளை உணர்ந்தால் அதனைத் தன்ஞானம் இலாமையால் தானே அழித்துவிடும் : அது போல அருளாதான் இடையே அறஞ்செய்தால் அதனைத் தன் அருளாமையால் தானே அழித்து விடும் என்பது ஆயிற்று: ஆகவே, பிற அறங்கட்கெல்லாம் அருள் உடைமை மூலம் என்பது பெற்றாம். இவை நான்கு பாட்டானும் அத்துணை இல்லாதார்க்கு வரும் குற்றம் கூறப்பட்டது.

'ஆராயின், அருளில்லாதான் செய்யும் அறமும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அருளிலான் அறஞ்செய்தான் என்பது', 'அருளில்லாதவன் செய்யும் அறச் செயல்களை ஆராயின் (உணரமுடியாது என்பது கருத்து)', 'ஜீவகாருண்யம் இல்லாதவன் நடத்துகின்ற துறவறம் பலிப்பது. இரண்டும் முடியாத காரியங்கள்', 'ஆராயுமிடத்து, உயிர்களிடம் உண்மையான இரக்கம் இல்லாதவன் செய்யும் அறம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அருளில்லாதவன் செய்யும் அறச் செயல்களை ஆராய்ந்து பார்த்தால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அருளாதான் செய்யும் அறம் ஆராய்ந்து பார்த்தால், அது மனத்தெளிவு இல்லாதவன் மெய்ப்பொருளை அறிந்தாற் போலும் என்பது பாடலின் பொருள்.
'அருளாதான் செய்யும் அறம்' என்ற பகுதி குறிப்பது என்ன?

அருளில்லாதவனால் எப்படி அறம் செய்யமுடிகிறது என்பதைப் புரிந்துகொள்ள இயலவில்லை.

ஒருவனிடம் அருளுணர்ச்சியே இல்லை; ஆனால் அவன் அறச் செயலில் ஈடுபடுகிறான் என்கிறார்கள். இது எப்படி முடியும் என ஆராய்ந்தால், ஒன்றும் அறியமுடியாதிருக்கிறது. எப்படி அறிவுத்தெளிவில்லாதவன் மெய்யியல் நூல்களிற் கண்டவற்றைத் தெளிய முடியாதோ அதுபோன்றே இரக்கமற்ற ஒருவன் அறம்புரிவதையும் உணரமுடியவில்லை என்கிறது இக்குறள்.
யார் அறம் செய்தாலும் நல்லதுதான்; அருளற்றவனாலும் செய்வது அறம்தானே. செய்யட்டுமே. பொதுவாக அன்புகனிந்து அருள் ததும்பி நிற்கும் உள்ளங்களில் பிறக்கும். இரக்க உணர்ச்சிதான் அறச்செயல்களில் ஈடுபடத் தூண்டும். வன்முறையாளர் அறம் செய்கின்றார் என்றால் அது ஐயத்தை உண்டாக்கி ஏன் செய்கிறான் என்று ஆராய எண்ணுகிறது. செய்வது பலர்க்கு நன்மை செய்யப்போகிறது என்ற உணர்வு இல்லாமல் அறம் செய்கிறான், அதன் விளைவோ, பயனோ ஒன்றும் அறியாமல் செய்கிறான். அவனிடம் அருட்குணம் இல்லையாதலால், அவ்வறச்செயல் ஆரவாரத்தன்மை கொண்டது மட்டும்தான். வெறும் விளம்பரத்துக்காகத்தான் செய்கிறான். அவன் செய்யும் தீச்செயல்களுக்குக் கழுவாய் தேடும் உள்நோக்கத்துடன் அறச்செயல்களைச் செய்கின்றான் என்றாலும் மீட்சியும் கிடைக்காது என்பதை உணராமலும் செய்கிறான்.
பிற உயிர்களிடத்தில் அருள் காட்டும் நெஞ்சமில்லாதவர்கள் அறச்செயல்கள் செய்கிறார்கள் என்றால், அறத்தின் ஆழ்பொருள் அறியாமல், வெற்றுப் புகழுரைக்காகச் அறமென்ற பெயரிலே செய்வது போன்றதே அது. அருளுணர்ச்சியில்லாதான் அறம் செய்தல் கைகூடாது என்பது இக்குறள் கூறும் செய்தி.

இப்பாடலிலுள்ள மெய்ப்பொருள் என்ற சொல்லுக்கு எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு (குறள் எண்: 355) என்னும் பாடலிலுள்ளது போலப் பொருள் கொள்ளவேண்டும்.

'அருளாதான் செய்யும் அறம்' என்ற பகுதி குறிப்பது என்ன?

இப்பகுதிக்கு விளக்கமாக உரையாசிரியர்கள் அறஞ் செய்யவும் மாட்டார், நடவாதது; நடந்ததாகக் கூறினால் பொய்ம்மைப் பாற்படுவது, வீண் முயற்சி அது, உண்மையறமாகாது, அவ்வறம் இரக்கத்தால் நிகழ்ந்ததாகாது. அச்சத்தாலோ அறியாமையாலோ நிகழுமே தவிர அருளுடைமையால் அன்று; ஆகையால் அது அறமாகாது, அருளா தான்அறம் புரிதலில்லை, அருள் இல்லாதான் அறம் புரியான் எனக் குறிப்பிட்டனர்.
பரிதி 'குழந்தை கையில் மாணிக்கம் என்று அறிக, அறிவில்லாதான் செய்யும் தன்மம்' என்று உரை செய்தார். ஒரு குழந்தைக்குத் தன்கையில் இருப்பது மாணிக்கம் என்பது தெரியாது என்று விளையாடிக்கொண்டிருக்கும். அது போலத்தான் அருளில்லாதவன் அறம் செய்வது என்பது இவர் கூறவரும் கருத்து. பரிமேலழகர் 'பிற அறங்கட்கெல்லாம் அருளுடைமை மூலம்; அருளாதான் இடையே அறஞ்செய்தால் அதனைத் தன் அருளாமையால் தானே அழித்து விடும்' என்று குறித்துள்ளார்.

எல்லா வகையான அறச் செயல்கட்கும் பிறப்பிடம் இரக்கவுணர்வே அதாவது அருளே; அறம் அருளுணர்வினின்று பிரித்தறிய முடியாத ஒன்று. அருளில்லாதவன் உள்ளத்தில் ஈரமற்றவன், அவன் மனமிளகி அறஞ் செய்தல் அரிது. செய்தாலும் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்வான். தெளிவில்லாதவன் மெய்ப் பொருள் காண முடியாது. கண்டாலும் பயனில்லை. அருளாதான் செய்யும் அறமும் அப்படியே என்ற பொருளிலேயே பெரும்பன்மையர் இப்பகுதிக்குப் பொருள் கண்டனர். இக்குறள் உள்ளத்தில் இரக்கம் இல்லாமல் எந்த நல்வினையையும் செய்யமுடியாது என்ற கருத்தைத் தருவதாக உள்ளது.
இது போன்ற கருத்து அன்புடைமை அதிகாரத்துக் குறள் ஒன்றிலும் காணப்படும். அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று (குறள் எண்: 78 பொருள்: உள்ளத்தில் அன்பு இல்லாமல் இல்லறவாழ்வு நடாத்துதல் வலிய நிலத்தில் நிற்கின்ற வற்றல் மரம் தளிர்த்தாற் போலும்) என்று அன்பு இல்லாதவன் வாழ்வியலாது எனச் சொல்லப்பட்டது.

அருளில்லாதவன் செய்யும் அறச் செயல்களை ஆராய்ந்து பார்த்தால், அது மனத்தெளிவு இல்லாதவன் மெய்ப்பொருளை அறிந்தாற் போலும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அருளுடைமையோடு செய்யப்படுவதே அறம்.

பொழிப்பு

அருளில்லாதவன் செய்யும் அறச் செயல்களை ஆராயின் அது மனத்தெளிவு இல்லாதவன் மெய்ப்பொருளை அறிந்தாற் போலும்.