மனிதன் வாழ்கிறான் என்பதற்கு அடையாளமே நற்குணங்களாலும் நற்செயல்களாலும் புகழ்பெறுதல் ஆகும். புகழ் என்பது நாம் செய்யும் செயல்களின் விளைவாகத் தாமே நமக்கு வந்து சேருவது. புகழுக்குரிய பண்புநலன்கள் வெளிப்படாமலோ அல்லது செயல்கள் ஆற்றாமலோ பெயர் பெறமுடியாது. புகழ் பெறுவது மட்டுமல்லாமல் இகழ்ச்சி நேராமலும் காத்துக் கொள்ள வேண்டும்.
ஒருவனைச் சுற்றி வாழும் மக்கள் அவனுடைய நற்பண்புகளை அறிந்து போற்றுவது, நாட்டின் மூலை முடுக்கெல்லாம் செல்லும் புகழ் (நிலவரை நீள் புகழ்) எனப் புகழ்நிலைகள் பேசப்படுகின்றன. உலகில் பொன்றாது (அழியாது) நிற்பது புகழ் ஒன்றுதான். தேவர்களைவிட புகழ்பெற்றவர்களையே வானுலகம் போற்றும். நிலையானதான புகழைப் பெற ஒருவன் தனது பொருட் செல்வத்தை இழக்க நேரிடலாம்; உயிரையும் இழக்க வேண்டி இருக்கலாம். வித்தகர்களாய் இருப்பவர்கள் இவற்றிலிருந்து போராடி புகழை எய்துவர்.
தனி மனிதன் புகழ் நோக்கொடு செயலாற்ற வேண்டும்; புகழ் மிக்கார் இல்லாத நாடு அதன் வள ஆதாரங்களில் குறைவுபடும் என்பன சொல்லப்படுகின்றன.
இறந்தபின் ஒருவன் நல்லதாகப் பேசப்படாவிட்டால் அவன் இகழப்பட்டவன் என்பதாகிறது. விளங்கித் தோன்றாமல் வாழ்வது வாழ்க்கை அல்ல; பழி இல்லாமல் வாழ்வதே வாழ்க்கை. இவை இவ்வதிகாரம் கூறும் செய்திகள்.
அன்பு காட்டுவது, விருந்தோம்பல், உதவி செய்வது, நடுநிலையாய்ச் செயல்படுவது, அடக்கம், ஒழுக்கம், பொறை ஆகியவற்றைப் போற்றுவது, பிறனில் விழையாமை, அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை, பயனிலசொல்லாமை, தீவினை செய்யாமை போன்ற அறங்களை ஏறு ஒழுகுதல் ஆகிய பண்புகள் உடையவனுக்குப் புகழ் சேரும். புகழுக்குரிய செயல்கள் என்று எண்ணத் தகுந்தவை எவை? இல்லாதவருக்கும் இயலாதவருக்கும் இயல்பாகவே கொடுக்கும் ஈகையே முதன்மையான புகழுக்குரிய செயல் என்று வள்ளுவர் கருதுவார். ஆனால் ஈகை ஒன்றுதான் புகழுக்குரியது அல்ல. பிறருக்கு நலம் விளைக்கக்கூடியதைச் செய்வதும் தனக்கு இகழ்ச்சி நேராவண்ணம் ஒழுகுவதும் ஒருவனுக்குப் புகழ் சேர்க்கும். ஈகை, ஒப்புரவு, கல்வி, வீரம், செல்வம் ஈட்டுவது. நிர்வாகத் திறன், ஆட்சிமுறை இவற்றால் புகழ் வரும்.
இன்று ஊடகங்களின் வளர்ச்சி புகழ் என்பதற்கு வேறு பொருள் உண்டாகக் காரணமாகியது. ஆரவாரமான விளம்பரம் ஒன்றுதான் புகழ் என்றாகும் நிலைமைக்கு மாறி வருகிறது. ஊடகங்கள் புகழுக்குரியரல்லாதாருக்குப் பெயர் 'உண்டாக்குவது' நற்பண்பும் நற்செயலும் உடையவரின் புகழ் வெளிச்சத்திற்கு வர முடியாமல் செய்வது போன்றவற்றைத் தெரிந்தும் தெரியாமலும் செய்கின்றன. புகழுக்குரிய உண்மையானவரை அடையாளம் காணுவது கடினமாகிறது.