வசைஇலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்
(அதிகாரம்:புகழ்
குறள் எண்:239)
பொழிப்பு (மு வரதராசன்): புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும்.
|
மணக்குடவர் உரை:
புகழில்லாத வுடம்பைப் பொறுத்த நிலம் பழியற்ற நல்விளைவு குறையும்.
இது புகழில்லாதா னிருந்தவிடம் விளைவு குன்றுமென்றது.
பரிமேலழகர் உரை:
இசைஇலா யாக்கை பொறுத்த நிலம் - புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த நிலம் , வசை இலா வண்பயன் குன்றும் - பழிப்பு இல்லாத வளப்பத்தை உடைய விளையுள் குன்றும்.
(உயிர் உண்டாயினும் அதனால் பயன் கொள்ளாமையின் யாக்கை எனவும் அது நிலத்திற்குப் பொறையாகலின் 'பொறுத்த' எனவும் கூறினார். விளையுள் குன்றுதற்கேது, பாவ யாக்கையைப் பொறுக்கின்ற வெறுப்பு. 'குன்றும்' என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. இவை நான்கு பாட்டானும் புகழ் இல்லாதாரது தாழ்வு கூறப்பட்டது.)
சி இலக்குவனார் உரை:
புகழ் பெற முடியாத உடலைத் தாங்கிய பூமி, பழிப்பில்லாத வளம் மிக்க பயனை அடைதலில் குறைவுபடும். (புகழ் அற்றோர் வாழும் நாடு வளப்பம் அற்றதாக இருக்கும்).
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
இசையிலா யாக்கை பொறுத்த நிலம் வசைஇலா வண்பயன் குன்றும்.
பதவுரை:
வசை-பழி; இலா-இல்லாத; வண்-வளப்பமான; பயன்-வளமான பயன்; குன்றும்-குறையும்; இசை-புகழ்; இலா-இல்லாத; யாக்கை-உடம்பு; பொறுத்த-சுமந்த; நிலம்-நிலம்.
|
வசைஇலா வண்பயன் குன்றும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பழியற்ற நல்விளைவு குறையும்;
பரிதி: வசையற்ற பயன்குன்றிவிடும்;
காலிங்கர்: வசையில்லாத வளவிய பயனாகிய வளம் எல்லாம் குறைபடும்;
பரிமேலழகர்: பழிப்பு இல்லாத வளப்பத்தை உடைய விளையுள் குன்றும்;
பரிமேலழகர் குறிப்புரை: 'குன்றும்' என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது.
மணக்குடவரும் பரிமேலழகரும் 'பழிப்பு இல்லாத வளப்பத்தை உடைய விளைவு குன்றும்' என இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதியும் காலிங்கரும் விளைபொருள் எனச் சொல்லாமல் 'வளவிய பயன் குறைபடும்' என்றனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'நல்ல நிலங்கூட வளங் குறையும்', 'அக்குற்றத்தால் பழிப்பற்ற வளமான விளைச்சல் குறையும்', 'குற்றமற்ற செல்வ வளமும் அதன் பயனும் குறையும்', 'பழிப்பில்லாத வளமிக்க விளைவிற் குறைவுபடும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
பழியற்ற வள ஆதாரங்களில் குறைவுபடும் என்பது இப்பகுதியின் பொருள்.
இசையிலா யாக்கை பொறுத்த நிலம்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: புகழில்லாத வுடம்பைப் பொறுத்த நிலம்.
மணக்குடவர் குறிப்புரை: இது புகழில்லாதா னிருந்தவிடம் விளைவு குன்றுமென்றது.
பரிதி: கீர்த்தியை வேண்டாதான் இருந்த பதி என்றவாறு.
காலிங்கர்: யாதோஎனில் புகழ் இயற்றுதல் இல்லாத ஆக்கையை உடைய மூர்க்கனைச் சுமந்தநிலம் என்றவாறு.
பரிமேலழகர்: புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த நிலம்,
பரிமேலழகர் குறிப்புரை: உயிர் உண்டாயினும் அதனால் பயன் கொள்ளாமையின் யாக்கை எனவும் அது நிலத்திற்குப் பொறையாகலின் 'பொறுத்த' எனவும் கூறினார். விளையுள் குன்றுதற்கேது, பாவ யாக்கையைப் பொறுக்கின்ற வெறுப்பு. இவை நான்கு பாட்டானும் புகழ் இல்லாதாரது தாழ்வு கூறப்பட்டது.
'புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த நிலம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'புகழில்லா உடம்பைச் சுமப்பின்', 'புகழில்லாத உடம்பை வீண்பாரமாகத் தாங்கிய நிலம்', 'புகழ் வேண்டுமென்ற உணர்ச்சியில்லாத வெறும் உடல்களாவன மக்கள் மிகுந்துள்ள ஒரு நாட்டில்', 'புகழில்லாத உடம்பைச் சுமந்த நிலமானது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
புகழ் இல்லாத உடலைத் தாங்கிய பூமி என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
புகழ் இல்லாத உடலைத் தாங்கிய பூமி, வசைஇலா வண்பயன் குறைவுபடும் என்பது பாடலின் பொருள்.
புகழ் பெறாத மக்களுக்கும் நாட்டின் வளம் குறைவதற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?
|
புகழ் இல்லாதவர்களைச் சுமந்த நாட்டின் நல்ல வளங்கள் குறைந்து போகும்.
புகழற்ற உடம்புள்ளவர்களைப் பொறுத்துக் கொள்ளும் நாட்டில் நல்ல வள ஆதாரங்கள் குறைந்துகொண்டே போகும்.
நற்பெயர் பெறாத மனிதர் புகழற்றவர். அவர்களை மாந்தர் எனச் சொல்லாமல் யாக்கை என்ற சொல்லால் குறிக்கிறார் வள்ளுவர். யாக்கை என்பது உணர்வுகள் இல்லாத வெறும் உடலைச் சுட்டும். இவ்வுடலைக் கொண்ட மனிதர் 'சோற்றிற்குக் கேடாகவும் மண்ணுக்குப் பாரமாயும் வாழ்பவன்' என்று சொல்லப்படுவதால் இழிவு கருதி யாக்கை எனவும் பொறுத்த நிலம் எனவும் கூறினார்.
நிலம் என்ற சொல் செய்யுளில் வருவதால் வண்பயன் என்றதற்கு பல உரையாசிரியர்கள் விளைச்சல் எனப் பொருள் கூறினர். நிலம் என்பதற்குப் பூமி அல்லது நாடு என்றும் பொருள் கொள்ளலாம். எனவே வெறும் தாவரப்பயிர் மட்டுமல்லாது எல்லா வகையான இயற்கை வள ஆதாரங்களையும் (natural resources) வண்பயன் குறிக்கும்.
பகழ்பட வாழாதாரை இகழ்ச்சிக்குரியவர்கள் என்று குறள் (237) கூறியது. பொதுநலச் சிந்தனையற்ற இழிவான தன்னலக்காரர்கள் நீர்நிலைகளில் உள்ள மண்ணைத் தோண்டித் தமது ஆதாயத்திற்காக விற்று நீர் வளத்தைப் பாழ்பண்ணுவதை வண்பயன் குன்றுவதற்கு ஓர் எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.
|
புகழ் பெறாத மக்களுக்கும் நாட்டின் வளம் குறைவதற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?
மக்கள் நல்வாழ்க்கை யுடையராயிருந்தால் இயற்கை வளத்தை நல்கும். மக்கள் அறத்தொடு பொருந்த வாழாவிட்டால் வளத்தைத் தராது என்பன போன்ற மக்களிடம் இருக்கும் அறம் சார்ந்த நம்பிக்கைகளைக் குறள் சில இடங்களில் தொட்டுச் செல்லும். அதுபோன்ற நடையில் அமைந்தது இப்பாடல்.
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல்(கொடுங்கோன்மை 559 பொருள்: ஆட்சியாளன் முறை தவறி நீதி செலுத்தினால் பருவமழை பொய்த்துப் பெய்யாது போகும் ) வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சின் மிசைவான் புலம் (விருந்தோம்பல் 85 பொருள்: விருந்தினரை உண்பித்து மிஞ்சிய உணவை உண்மவன் நிலத்திற்கு விதைக்கவும் வேண்டுமோ?) என்பன நம்பிக்கை சார்ந்த குறட்பாக்கள்.
சங்கப்பாடல்களிலுள்ளும் இதுபோன்ற கருத்துக்கொண்ட பாடல்கள் உள:
ஒளவையார் பாடிய சங்கப்பாடல் ஒன்று புகழ் மனிதருக்கும் நிலத்துக்கும் உள்ள தொடர்புபற்றிப் பேசுகிறது. நிலத்தை விளித்துச் சொல்வதாக உள்ள அப்பாடல்:
நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவ ராடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே. (புறநானூறு 187 கருத்து: தீய நிலனே யாயினும் நல்லோருறையின் நன்றெனவும், நல்ல நிலனே யாயினும் தீயோ ருறையின் தீதெனவும், தன்னிடத்து வாழ்வாரியல்பல்லது தனக்கென ஓரியல்புடைய தன்றென நிலத்தை இழித்துக் கூறுவதுபோல உலகத்தியற்கை கூறியவாறு. )
கலித்தொகைப் பாடலில் அறமல்லாதவற்றைச் செய்து ஒழுகும் மாந்தர் வாழும் நாட்டில் இயற்கை எவ்விதம் எதிர்வினை ஆற்றும் எனச் சொல்லப்படுகிறது:
வள்ளி கீழ் வீழா; வரைமிசைத் தேன் தொடா;
கொல்லை குரல் வாங்கி ஈனா மலை வாழ்நர்
அல்ல புரிந்து ஒழுகலான் (கலித்தொகை 39 பொருள்: அல்லல் புரிந்தொழுகும் குடிமக்கள் வாழும் மலைநாட்டில் வள்ளிக்கொடியும் நிலத்தடியில் கிழங்கு இடாது, மலைமேல் தேனீக்களும் கூடுகட்டாது கொல்லையில் திணையும் கதிர்விட்டுப் பயன் விளைவிக்காது)
'நிலத்திலினின்றும் பெறத்தக்க பயனை முயன்று பெறாமலும் பெற்ற பொருளைத் தக்கார்க்கு ஈயாமலும் இருத்தலால் வருகின்ற பழியையுடைய உடம்பைச் சுமந்த நிலம், பயன்படுத்துவார் இல்லாத காரணத்தால் பழியற்ற வளப்பம் குன்றிக் கெடும்' என வளம் குன்றும் காரணத்தைப் புலப்படுத்த உரையாளர் முயன்றிருக்கின்றனர்.
இக்குறள் பற்றிய வா செ குழந்தைசாமியின் கருத்தும் எண்ணற்குரியது. அவர் 'ஒரு நாட்டின் வளம், அதன் மக்களைப் பொறுத்தது, அவர்கள் தம் தரத்தை, தகுதியைப் பொருத்தது, அந்த நாடு உருவாக்கும் பல்துறைத் தலைவர்களைப் பொருத்தது, அது உருவாக்கும் புகழ்மிக்க மக்களைப் பொருத்திருக்கிறது என்ற ஒப்பற்ற கருத்தை இக்குறள் மூலம் கூறுகிறார் வள்ளுவர். புகழ் இல்லா மக்கள்தம் உடற் பாரத்தைச் சுமக்கும் நாட்டில் வளம் குன்றும் என்றதால் வளம் இயற்கை தருவது மட்டும் அன்று; மக்கள் படைப்பது. அதற்குப் புகழ் வாய்ந்த மக்கள் வேண்டும். உழைப்புத் தேவையெனினும் உத்திகள் அறிந்தார் அதனினும் மிகுதியாகத் தேவை. அப்படிப்பட்ட திறன் மிக்காரை ஒரு சமுதாயம் உருவாக்க வேண்டும். தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் 236) என்ற குறளில் தனி மனிதன் இசைபட வாழும் இலக்கை எட்ட வேண்டிய தேவையை வற்புறுத்தினார். இசையிலா யாக்கை பொறுத்த மண்ணில் வளம் குன்றும் என்று கூறுவதன் மூலம்புகழ் மிக்காரை ஒரு சமுதாயம் உருவாக்க வேண்டிய தேவையைப் பேசுகிறார்.'
|
புகழ் இல்லாத உடலைத் தாங்கிய பூமி, பழியற்ற வள ஆதாரங்களில் குறைவுபடும் என்பது இக்குறட்கருத்து.
புகழ்மிக்க மக்கள் நாட்டின் வளம் பெருக்கக் காரணமாவர்.
புகழில்லாத உடம்பைத் தாங்கிய நிலம் பழிப்பற்ற வளம் மிக்க பயனை அடைதலில் குறைவுபடும்.
|