இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0233



ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்அல்லால்
பொன்றாது நிற்பதொன்று இல்

(அதிகாரம்:புகழ் குறள் எண்:233)

பொழிப்பு (மு வரதராசன்): உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.

மணக்குடவர் உரை: உயர்ந்த புகழல்லது இணை யின்றாக உலகத்துக் கெடாது நிற்பது பிறிதில்லை.
இது புகழ் மற்றுள்ள பொருள்போலன்றி அழியாது நிற்கு மென்றது.

பரிமேலழகர் உரை: ஒன்றா உயர்ந்த புகழ் அல்லால்- தனக்கு இணையின்றாக ஓங்கிய புகழல்லது; உலகத்துப் பொன்றாது நிற்பது ஒன்று இல்-உலகத்து இறவாது நிற்பது பிறிதொன்று இல்லை.
(இணை இன்றாக ஓங்குதலாவது : கொடுத்தற்கு அரிய உயிர் உறுப்புப் பொருள்களைக் கொடுத்தமை பற்றி வருதலால் தன்னோடு ஒப்பது இன்றித் தானே உயர்தல். அத்தன்மைத்தாகிய புகழே செய்யப்படுவது என்பதாம். இனி 'ஒன்றா' என்பதற்கு ஒரு வார்த்தையாகச் சொல்லின் எனவும், ஒரு தலையாகப் பொன்றாது நிற்பது எனவும் உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் புகழ் சிறப்புக் கூறப்பட்டது.

இரா சாரங்கபாணி உரை: உலகத்தில் தனக்கு இணையின்றாக ஓங்கிய புகழல்லாமல் அழியாது நிற்பது வேறொன்றில்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்அல்லால் பொன்றாது நிற்பதொன்று இல்.

பதவுரை:
ஒன்றா-இணையில்லாத; உலகத்து-உலகத்தில்; உயர்ந்த-ஓங்கிய; புகழ்-புகழ்; அல்லால்-அன்றி; பொன்றாது-அழியாது; நிற்பது-நிற்றல்; ஒன்று-ஒன்று; இல்-இல்லை.


ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்அல்லால்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உயர்ந்த புகழல்லது இணை யின்றாக உலகத்து;
பரிதி: ஒன்றா உலகத்தில் மிகுந்த புகழல்லாது நிலவாது; .
காலிங்கர்: நிலையாதாகிய இவ்வுலகத்தின்கண் கெடாது நிலைநிற்பது யாதோஎனின், ஓங்கியபுகழ் ஒன்றுமே யல்லது;
பரிமேலழகர்: தனக்கு இணையின்றாக ஓங்கிய புகழல்லது உலகத்து;
பரிமேலழகர் குறிப்புரை: இணை இன்றாக ஓங்குதலாவது: கொடுத்தற்கு அரிய உயிர் உறுப்புப் பொருள்களைக் கொடுத்தமை பற்றி வருதலால் தன்னோடு ஒப்பது இன்றித் தானே உயர்தல். அத்தன்மைத்தாகிய புகழே செய்யப்படுவது என்பதாம். இனி 'ஒன்றா' என்பதற்கு ஒரு வார்த்தையாகச் சொல்லின் எனவும், ஒரு தலையாகப் பொன்றாது நிற்பது எனவும் உரைப்பாரும் உளர்.

'இணை யின்றாக உலகத்து உயர்ந்த புகழல்லது' என்று மணக்குடவரும் 'நிலையாதாகிய இவ்வுலகத்தின்கண் கெடாது நிலைநிற்பது ஓங்கியபுகழ் ஒன்றுமே யல்லது' என்று காலிங்கரும் 'தனக்கு இணையின்றாக ஓங்கிய புகழல்லது உலகத்து' எனப் பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நிலையாத உலகத்து உயர்ந்த புகழ் தவிர', 'ஒரு பொருளும் நிலையில்லாத இந்த உலகத்தில் உயர்ந்த கீர்த்தியைத் தவிர', 'உலகத்தில் தனக்கு இணையில்லாமல் ஓங்கிய புகழைத் தவிர', 'தனக்கு ஒப்பில்லாமல் ஓங்கிய புகழல்லாமல் உலகத்தில்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இணையில்லா ஓங்கிய புகழைத் தவிர உலகத்தில் என்பது இப்பகுதியின் பொருள்.

பொன்றாது நிற்பதொன்று இல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கெடாது நிற்பது பிறிதில்லை.
மணக்குடவர் குறிப்புரை: இது புகழ் மற்றுள்ள பொருள்போலன்றி அழியாது நிற்கு மென்றது.
பரிதி: ஆதலால் மிகுத்த புகழைத்தேடுவான் என்றவாறு.
காலிங்கர்: வேறொன்றும் இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: இறவாது நிற்பது பிறிதொன்று இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: இணை இன்றாக ஓங்குதலாவது: கொடுத்தற்கு அரிய உயிர் உறுப்புப் பொருள்களைக் கொடுத்தமை பற்றி வருதலால் தன்னோடு ஒப்பது இன்றித் தானே உயர்தல். அத்தன்மைத்தாகிய புகழே செய்யப்படுவது என்பதாம். இனி 'ஒன்றா' என்பதற்கு ஒரு வார்த்தையாகச் சொல்லின் எனவும், ஒரு தலையாகப் பொன்றாது நிற்பது எனவும் உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் புகழ் சிறப்புக் கூறப்பட்டது.

'கெடாது நிற்பது பிறிதில்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எதுவும் அழியாது நிலைப்பதில்லை', 'அழியாமல் நிலைத்திருக்கக் கூடியது வேறொன்றுமில்லை', 'அழியாது நிலைப்பது வேறொன்றும் இல்லை', 'அழியாமல் நிற்பது வேறொன்றும் இல்லை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அழியாமல் நிலைப்பது வேறொன்றும் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இணையில்லா ஓங்கிய புகழைத் தவிர உலகத்தில் அழியாமல் நிலைப்பது வேறொன்றும் இல்லை என்பது பாடலின் பொருள்.
'ஒன்றா' என்ற சொல்லின் பொருள் என்ன?

உலகில் அழியாது நிற்பது ஒருவன் ஈட்டிய ஓங்கி உயந்த புகழ் ஆகும்.

தனக்கு இணைசொல்லத்தக்கதாக இல்லாமல் பெறப்பட்ட உயர்ந்த புகழல்லது உலகத்து அழியாமல் இருப்பது பிறிது ஒன்றில்லை. மனித வாழ்வு நிலையில்லாதது ஆனால் அவன் பெற்றபுகழ் அழிவில்லாமல் நீடித்து நிற்கும். மனித வாழ்வில் புகழ் ஒன்றே நிலைத்து நிற்கும் தன்மையுடையது என்பதை உணர்த்த வந்த பாடல் இது.
மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே (புறநானூறு 165 பொருள்: எப்பொருளும் நிலையாத இவ்வுலகத்தின்கண் நிலைபெறுதலைக்கருதினோர் தம்முடைய புகழைப் பூமியிடத்தே நிறுத்தித்தாங்கள் இறந்தார்) என்ற சங்கப்பாடலும் ஒருவன் இறந்தபின்னும் நிலைத்து நிற்கும் புகழைச் சொல்கிறது.
பொன்றுதல் ஒருகாலத்தும்
தவிருமோ? பொதுமைத்து அன்றோ?
இன்று உளார் நாளை மாள்வார்;
புகழுக்கும் இறுதி உண்டோ?
(கம்ப இராமாயணம், இந்திரசித்து வதைப்படலம், 10 பொருள்: இறத்தல் என்பது ஒரு காலத்தும் தவிரக் கூடியதோ? அது எவ்வுயிர்க்கும் பொதுவானது. இன்று இருப்பவர்கள் நாளைக்கு இறப்பார்கள்; ஆனால் புகழுக்கும் அத்தகைய இறுதி உளதாமோ?) எனக் கம்பரும் புகழின் அழிவில்லாத் தன்மை பற்றிப் பாடியுள்ளார்.
இனி, தனக்கு ஒப்புமை சொல்ல இயலாத புகழ் குறிக்கப்பட்டுள்ளதால், அப்படிப்பட்ட பெரும்புகழுக்கு அழிவே இல்லை எனக் கூற வருகிறது இக்குறள். புத்தர், ஏசு, காந்தி, சாக்ரடீசு போன்றோரை இணையில்லா (ஒன்றா) புகழ் எய்திவர்களுக்குக் காட்டாகக் கொள்ளலாம்.

'அல்லால்' என்னும் சொல்லாட்சி புதிய ஆட்சி என்பார் இ சுந்தரமூர்த்தி.

'ஒன்றா' என்ற சொல்லின் பொருள் என்ன?

'ஒன்றா' என்ற சொல்லுக்கு இணையின்றாக, ஒன்றா, நிலையாதாகிய, தனக்கு இணையின்றாக, ஒப்பில்லாத, ஒப்பற்ற, நிலையற்ற, தனக்கு இணை இல்லாது, நிலையாத, ஒரே முறையாகப் பொருந்துதல் இல்லாத, தனக்கு இணையில்லாமல், தனக்கு ஒப்பில்லாமல், ஒத்தல்இல்லாமல், தனக்கு இணையில்லாவாறு, பொருந்தாத என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

ஒரு சாரார் ஒன்றா என்பதை புகழ் தழுவியதாகக் கொண்டு ஒப்பற்ற புகழ் எனப்பொருள் தருமாறு உரை செய்தனர். மற்றவர்கள் இச்சொல் உலகத்து தழுவியதாக உரை கண்டதால் நிலையில்லாத உலகத்து எனக் கொண்டு பொருள் கூறினர். இவ்விதம் 'ஒன்றா உயர்ந்த புகழ்' எனப் புகழுக்கு அடையாக்கியும் 'ஒன்றா உலகம்' என உலகத்துக்கு அடையாக்கியும் இருதிறமாக உரை கண்டனர். ‘ஒன்றா’ என்பதற்கு ஒரு வார்த்தையாக சொல்லின் என்றும், ஒருதலையாக என்றும் பொருள் கூறியுள்ளனர்.
உலகத்தில் ஒன்றேயாக அதாவது அதற்கு இணையில்லாததாக உயர்வாக மதிக்கப்படும் புகழ் பற்றிய பாடல் இது. புகழ் என்றதற்கு அடையாக இச்சொல்லைக் கொள்வதே சிறப்பானது. எனவே இணையின்றாக, ஒப்பில்லாத என்ற உரைகள் பொருத்தமானவை.

'ஒன்றா' என்ற சொல்லுக்குத் 'தனக்கு இணை இல்லாத' என்பது பொருள்.

இணையில்லா ஓங்கிய புகழைத் தவிர உலகத்தில் அழியாமல் நிலைப்பது வேறொன்றும் இல்லை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஓங்கிய புகழ் அழிக்க முடியாத ஒன்று.

பொழிப்பு

இணையில்லா ஓங்கிய புகழல்லாமல் உலகத்தில் அழியாது நிற்பது வேறொன்றில்லை