இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0232உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்

(அதிகாரம்:புகழ் குறள் எண்:232)

பொழிப்பு (மு வரதராசன்): புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.

மணக்குடவர் உரை: சொல்லுவார் சொல்லுவனவெல்லாம் இரந்துவந்தார்க்கு அவர் வேண்டியதொன்றைக் கொடுப்பார்மேல் நில்லாநின்ற புகழாம்.

பரிமேலழகர் உரை: உரைப்பார் உரைப்பவை எல்லாம் - உலகத்து ஒன்று உரைப்பார் உரைப்பன எல்லாம், இரப்பார்க்கு ஒன்று ஈவார் மேல் நிற்கும் புகழ் - வறுமையான் இரப்பார்க்கு அவர் வேண்டியது ஒன்றை ஈவார் கண் நிற்கும் புகழாம்.
(புகழ்தான் உரையும் பாட்டும் என இருவகைப்படும்(புறநா.27) அவற்றுள் 'உரைப்பார் உரைப்பவை' என எல்லார்க்கும் உரிய வழக்கினையே எடுத்தாராயினும்,இனம் பற்றிப் புலவர்க்கே உரிய செய்யுளும் கொள்ளப்படும், படவே 'பாடுவார் பாடுவன எல்லாம் "புகழாம் என்பதூஉம் பெற்றாம். ஈதற்காரணம் சிறந்தமை இதனுள்ளும் காண்க. இதனைப் பிறர்மேலும் நிற்கும் என்பார். தாம் எல்லாம் சொல்லுக ; புகழ் ஈவார் மேல் நிற்கும்' என்று உரைப்பாரும் உளர். அது புகழது சிறப்பு நோக்காமை அறிக.)

இரா சாரங்கபாணி உரை: உலகத்தில் பாராட்டிப் பேசுவார் பேசுவன எல்லாம் இரக்கும் ஏழைக்கு வேண்டிய ஒரு பொருளை வழங்குபவர் மேல் நிற்கும் புகழாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ்.

பதவுரை:
உரைப்பார்-சொல்லுபவர்; உரைப்பவை-சொல்பவை; எல்லாம்-அனைத்தும்; இரப்பார்க்கு-ஏற்பவர்க்கு; ஒன்று-ஒன்று; ஈவார்மேல்-கொடுப்பவர்மேல்; நிற்கும்-நிலைத்திருக்கும்; புகழ்-புகழ்.


உரைப்பார் உரைப்பவை எல்லாம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சொல்லுவார் சொல்லுவனவெல்லாம்;
பரிதி: சொல்லுவார் சொல்லுவன எல்லாம்;
காலிங்கர்: உரைப்பார் உரைப்பவையாவன சுருதியும் மிருதி புராணமும் கலைகளும் பிறவும் மற்றும் உலகத்தார் நாவில் பிறக்கும் நல்ல சொற்களும் இவை எல்லாம்;
பரிமேலழகர்: உலகத்து ஒன்று உரைப்பார் உரைப்பன எல்லாம்;

'சொல்லுவார் சொல்லுவனவெல்லாம்/உலகத்து ஒன்று உரைப்பார் உரைப்பன எல்லாம்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் உரைப்பார் உரைப்பவை என்றதற்கு 'சுருதியும் மிருதி புராணமும் கலைகளும் பிறவும் மற்றும் உலகத்தார் நாவில் பிறக்கும் நல்ல சொற்களும்' என விளக்கம் தந்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'உலகில் பாராட்டுவார் பாராட்டுவன எல்லாம்', 'சொன்னவர்கள் சொன்னதெல்லாம்', 'பேசுவார் சிறப்பாக எடுத்துப் பேசும் பேச்செல்லாம்', 'யாவரும் பாராட்டும் பொருளாகும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பாராட்டிப் பேசுவார் பேசுவன எல்லாம் என்பது இப்பகுதியின் பொருள்.

இரப்பார்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இரந்துவந்தார்க்கு அவர் வேண்டியதொன்றைக் கொடுப்பார்மேல் நில்லாநின்ற புகழாம்.
பரிதி: தேகி என்பார்க்குக் கொடுப்பார் மேலது புகழ் என்றவாறு.
காலிங்கர்: வறியோர்க்கு ஒன்று ஈவார்மேல் நிற்கும் புகழ் எனச் சொல்லும் என்றவாறு.
பரிமேலழகர்: வறுமையான் இரப்பார்க்கு அவர் வேண்டியது ஒன்றை ஈவார் கண் நிற்கும் புகழாம்.
பரிமேலழகர் குறிப்புரை: புகழ்தான் உரையும் பாட்டும் என இருவகைப்படும்(புறநா.27) அவற்றுள் 'உரைப்பார் உரைப்பவை' என எல்லார்க்கும் உரிய வழக்கினையே எடுத்தாராயினும்,இனம் பற்றிப் புலவர்க்கே உரிய செய்யுளும் கொள்ளப்படும், படவே 'பாடுவார் பாடுவன எல்லாம் "புகழாம் என்பதூஉம் பெற்றாம். ஈதற்காரணம் சிறந்தமை இதனுள்ளும் காண்க. இதனைப் பிறர்மேலும் நிற்கும் என்பார். தாம் எல்லாம் சொல்லுக ; புகழ் ஈவார் மேல் நிற்கும்' என்று உரைப்பாரும் உளர். அது புகழது சிறப்பு நோக்காமை அறிக.

'இரந்துவந்தார்க்குக் கொடுப்பார்கண் நிற்கும் புகழ்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வறியவர்க்கு ஈந்த வள்ளல்களின் புகழ்களே', 'இரந்து கேட்டவர்களுக்கு இல்லையென்னாமல் கொடுத்தவர்களைப் பற்றிய புகழ்தான்', 'இரப்பவர்கட்கு அவர் வேண்டியது ஒன்றைக் கொடுப்பவர்பால் உளதாகும் புகழைப் பற்றியே ஆம்', 'இரக்கின்றவர்கட்கு ஒன்றினைக் கொடுக்கின்றவர் அடையும் புகழே' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

இரக்கின்றவர்கட்கு ஒன்றினைக் கொடுக்கின்றவரது புகழ் பற்றியே ஆகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரக்கின்றவர்கட்கு ஒன்றினைக் கொடுக்கின்றவரது புகழ் பற்றியே ஆகும் என்பது பாடலின் பொருள்.
'உரைப்பார் உரைப்பவை' குறிப்பது என்ன?

உலகத்தில் புகழ்ந்து சொல்பவர் சொல்வன எல்லாம், இரப்பவர்க்குக் கொடுப்பவர்மேல் நிற்கும் புகழே ஆகும்.

உலகில் யார் வியந்து போற்றப்படுவர்? வறியவர்க்குப் பொருள் வழங்கிப் புகழுக்கு உரியவராக விளங்குவர் பற்றியே உலகம் வியந்து பேசும்; ஒருவரைப் பற்றிச் சிறப்பாகச் சொல்பவர் சொல்வதெல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு அவர் வேண்டியதொன்றை ஈவார்மேல் நிற்கும் புகழேயாம். கொடுப்பவனைத்தான் உலகோர் பாடுவர், கொண்டாடுவர், புகழ்ந்துரைப்பர். பல வழிகளிலும் புகழ் பெறலாம் எனினும் கொடுப்பதால் உண்டாகும் புகழே சிறந்தது என்பது கருத்து.
சங்கப் புலவர்கள் வள்ளல்கள்தம் பெருமையையும் மேன்மையையும் குறித்துப் போற்றத்தக்க பாடல்கள் பல பாடியுள்ளமை எண்ணற்குரியது. கடையேழு வள்ளல்களான அதியமான், ஆய், எழினி, காரி, பாரி, பேகன், நள்ளி ஆகியோர் அவர்தம் ஈகைக் குணத்திற்காக அடைந்த புகழ் இன்றும் நினைக்கப்படுகிறது.

இரப்பார்க்கு ஒன்று ஈவார்மேல் நிற்கும் புகழ்-வள்ளன்மை தப்பாமல் புகழைக் கொண்டு வந்து சேர்க்கிறது. ..................... விழு நிதி பெறினும், பழி நமக்கு எழுக என்னாய், விழு நிதி ஈதல் உள்ளமொடு இசை வேட்குவையே (பத்துப்பாட்டு, மதுரைக் காஞ்சி 204-205 பொருள்:....சீரிய பொருட்டிரள்களினைப் பெறுவையாயினும் பிறர் கூறும்பழி நமக்கு வருவதாகவென்று கருதாய்; சீரிதாகிய பொருளைக் கொடுத்தலையுடைத்தாகிய நெஞ்சுடனே புகழை விரும்புவை.) எனப் பாண்டியன் நெடுஞ்செழியன் புகழ் பாடுகிறார் மாங்குடி மருதனார்.
பரிபாடல் திரட்டு ஈவார்மேல் புகழ் நிற்றலை ஈவாரைக் கொண்டாடி, ஏற்பாரைப் பார்த்து உவக்கும் சேய் மாடக் கூடலும் (பரிபாடல் திரட்டு 11 பொருள்: வள்ளன்மையுடையாரைப் பெரிதும் கொண்டாடித் தம்பால் வரும் இரவலரைக் கண்டு பெரிதும் மகிழாநின்ற மேன்மக்கள் வாழும் பாண்டியனுடைய நான்மாடக் கூடலின் கண்ணும்) எனப் பாடுகிறது.

உரை என்றது பெயர்நிலையில் புகழ் என்ற பொருளில் வந்துள்ளது. ...உரைசான்ற நூல்... (குறள் 581) என்பது புகழ் மிக்க நூல் எனப்பொருள்படும். 'புகழ்தான் உரையும் பாட்டும்' என இருவகைப் படும்' என்று கூறி பரிமேலழகர்
வேற்றுமை இல்லா விழுத் திணைப் பிறந்து
வீற்றிருந்தோரை எண்ணும்காலை
உரையும் பாட்டும் உடையோர் சிலரே
மரை இலை போல மாய்ந்திசினோர் பலரே
(புறநானூறு 27 பொருள்: ஏற்றத் தாழ்வில்லாத, சிறந்த குடியின்கட்பிறந்து வீற்றிருந்த வேந்தரை எண்ணுங்காலத்துப் புகழும் பாட்டும் உடையோர் சிலர்; தாமரையினது இலையையொப்பப் பயன்படாது மாய்ந்தோர் பலர்) என்ற புறநானூற்று அடியையும் சான்றாகக் காட்டியுள்ளார். மேலும் இவர் தொடர்பு கருதிப் புலவர்க்கே உரிய செய்யுளும் கொள்ளப்படும் எனவும் 'பாடுவார் பாடுவன எல்லாம் புகழாம் என்பதூஉம் பெற்றாம்'.எனவும் கூறியுள்ளார்,
'உரை என்பது எப்படி புகழைக் குறித்தது என்பது விளக்கத்துக்கு உரியது.புகழ்உரை/புகழ்மொழி என்ற தொடர்களை நோக்கும்போது புகழ் என்பது பாராட்டு+உரை / பேச்சு என்ற இரண்டு பொருட்கூறுகள் அடங்கியுள்ளன என்று கருதலாம். புகழ் என்ற வினைக்கே புகழ்ந்து பேசுதல் /உரைத்தல் / பாடுதல் என்று பொருள். உரைப்பார் உரைப்பவை எல்லாம் என்பது உயர்வாக்கம் ஆகும்' என்பார் செ வை சண்முகம்.
உரை என்பது புகழினையும் பாட்டு என்பது புகழ்மொழிகளையும் சுட்டும் என்பர்,

பரிமேலழகர் வேறுரை ஒன்றைக் குறித்துள்ளார். அது யாருடையது என்று தெரியவில்லை. அவ்வுரை கூறுவதாவது: 'உரைப்பார் உரைப்பவை எல்லாம் (உரைக்க) 'புகழ் இரப்பார்க்கு ஒன்று ஈவார்மேல் நிற்கும்' என இரண்டு முடிபாக்கி இதனை (புகழை) கல்வி ஆண்மை முதலியவற்றை உடைய பிறரிடத்தும் (புகழ்) நிற்கும் என்பார் தாம் எல்லாம் சொல்லட்டும்; புகழ் (வறியவர்க்கு ஒன்று) கொடுப்பாரிடத்து நிற்கும்' என்பது. இந்த உரை அதிகாரத்துக்கு இயையாததினால்- ஈவார்மேல் நிற்கும் புகழின் சிறப்பு வலியுறுத்திக் கூறப் பெறாததினால்- உரையாளர்களால் ஏற்கப்படவில்லை.

'உரைப்பார் உரைப்பவை' குறிப்பது என்ன?

'உரைப்பார் உரைப்பவை' என்ற தொடர்க்குச் சொல்லுவார் சொல்லுவன, உலகத்து உரைப்பார், உலகத்து ஒன்று உரைப்பார் உரைப்பன, புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை, உலகத்தில் புகழ்ந்து பேசுவார் அங்ஙனம் பேசுவன, உலகத்தில் ஒருவரைப் பலர் கேட்க-கற்க உரைக்கும் தகுதி பெற்றோர் சொல்வது, உலகில் பாராட்டுவார் பாராட்டுவன, உலகத்தில் பாராட்டிப் பேசுவார் பேசுவன, சொன்னவர்கள் சொன்னதெல்லாம், உரையாலும் பாட்டாலும் சொல்லுவார் சொல்லுவன, பேசுவார் சிறப்பாக எடுத்துப் பேசும் பேச்சு, யாவரும் பாராட்டும் பொருள், பேச்சில் வல்லவர்கள் எல்லாம் புகழ்ந்து பேசுகின்றவை, சொல்லுவார் சிறப்பித்துச் சொல்லுவன, உலகத்தில் ஒருவரைப் பற்றிச் சிறப்பாகச் சொல்வது, போற்றுவோர் போற்றுவன என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

உலகத்தில் புகழ்ந்து பேசுவார் அங்ஙனம் பேசுவன எல்லாம் இரப்பார்க்குத் தருவோரது புகழைத் தான் என்பது இத்தொடர் தரும் செய்தி.

'உரைப்பார் உரைப்பவை' என்பதற்குப் பாராட்டுவார் பாராட்டுவன என்பது பொருள்.

பாராட்டிப் பேசுவார் பேசுவன எல்லாம் இரக்கின்றவர்கட்கு ஒன்றினைக் கொடுக்கின்றவரது புகழ் பற்றியே ஆகும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பசியாற்றியவர் புகழ் பற்றியே புலவர் பாடுவர்.

பொழிப்பு

பாராட்டுவார் பேசுவன எல்லாம் இரப்பவர்க்கு வழங்குபவர்கண் நிற்கும் புகழாம்