இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0240



வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய
வாழ்வாரே வாழா தவர்

(அதிகாரம்:புகழ் குறள் எண்:240)

பொழிப்பு (மு வரதராசன்): தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர்; புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர்.

மணக்குடவர் உரை: வசையொழிய வாழுமவர்களே உயிர் வாழ்வாராவர்; புகழொழிய வாழ்வாரே உயிர் வாழாதார்.
இது புகழில்லார் பிணத்தோ டொப்ப ரென்றது.

பரிமேலழகர் உரை: வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் - தம்மாட்டு வசை உண்டாகாமல் வாழ்வாரே உயிர் வாழ்வாராவார், இசை ஒழிய வாழ்வாரே வாழாதவர் - புகழ் உண்டாகாமல் வாழ்வாரே இறந்தார் ஆவார்.
(வசையொழிதலாவது இசை என்னும் எச்சம் பெறுதல் ஆயினமையின், இசையொழிதலாவது வசை பெறுதலாயிற்று. மேல், 'இசை இலா யாக்கை' என்றதனை விளக்கியவாறு. இதனான் இவ்விரண்டும் உடன் கூறப்பட்டன. மறுமைப்பயன் 'வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்' (குறள்50) என மேலே கூறப்பட்டது. படவே இல்லறத்திற்கு இவ்வுலகில் புகழும், தேவர் உலகில் போகமும் பயன் என்பது பெற்றாம். இனி, மனு முதலிய அற நூல்களால் பொதுவாகக் கூறப்பட்ட இல்லறங்கள் எல்லாம் இவர் தொகுத்துக் கூறிய இவற்றுள்ளே அடங்கும்: அஃது அறிந்து அடக்கிக் கொள்க: யாம் உரைப்பின் பெருகும்.)

மயிலை சிவமுத்து உரை: தம்மைப் பிறர் இகழாமல் வாழக்கூடியவரே இவ்வுலகில் உயிரோடு வாழ்பவர் ஆவர். புகழைப் பெறாமல் உயிர் வாழ்கின்றவர்களை வாழாதவர் என்றே சொல்லுதல் வேண்டும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய வாழ்வாரே வாழாதவர்.

பதவுரை:
வசை-பழி; ஒழிய-உண்டாகாமல்; வாழ்வாரே-வாழ்கின்றவரே; வாழ்வார்-வாழ்பவர்; இசை-புகழ்; ஒழிய-நீங்க; வாழ்வாரே-வாழ்க்கை நடத்துபவரே வாழாதவர்-வாழாதவர்.


வசையொழிய வாழ்வாரே வாழ்வார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வசையொழிய வாழுமவர்களே உயிர் வாழ்வாராவர்;
பரிதி: வசையில்லாமல் வாழ்கின்றது வாழ்வுக்கு லட்சணம்;
காலிங்கர்: ஏற்பவர்க்கு ஈயாப் பெரும்பாவியர் இவர் என்று சொல்லும் வழுவுரை தமக்கு இலதாக வாழ்வாரே ஈண்டு உயிர் வாழ்வார் என்று யாவராலும் சொல்லப்படுவர்;[வழுவுரை -பழிச்சொல்]
பரிமேலழகர்: தம்மாட்டு வசை உண்டாகாமல் வாழ்வாரே உயிர் வாழ்வாராவார்.

'வசை உண்டாகாமல் வாழ்வாரே உயிர் வாழ்வாராவார்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வசையின்றி வாழ்பவரே வாழ்பவர்', 'தம்மிடம் பழிவாராமல் புகழ்பட வாழ்வாரே உயிர் வாழ்பவராவார்', 'புகழ் தேடாத குற்றம் ஒழியும்படி முயற்சி செய்கிறவர்களே வாழ்க்கை அறிந்தவர்கள்', 'தம்மிடத்து வசையுண்டாகாமல் வாழ்கின்றவர்களே உயிர்வாழ்பவர்களாவர்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தம்மைப் பிறர் இகழாமல் வாழக்கூடியவரே வாழ்பவர் ஆவர் என்பது இப்பகுதியின் பொருள்.

இசைஒழிய வாழ்வாரே வாழா தவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: புகழொழிய வாழ்வாரே உயிர் வாழாதார்.
மணக்குடவர் குறிப்புரை: இது புகழில்லார் பிணத்தோ டொப்ப ரென்றது.
பரிதி: அதிலும் பெரியது என்றவாறு[வித்தை - கல்வி].
காலிங்கர்: ஆதலால் யாவர்க்கும் உபகரிக்கும் பெரும்புகழாளர் இவர் என்று யாவரும் சொல்லும் புகழ்ந்துரை தமக்கு இலாதாமாறு வாழ்வாரே ஈண்டு உயிர்வாழாத நடைப்பிணம் என்றவாறு.
பரிமேலழகர்: புகழ் உண்டாகாமல் வாழ்வாரே இறந்தார் ஆவார்.
பரிமேலழகர் குறிப்புரை: வசையொழிதலாவது இசை என்னும் எச்சம் பெறுதல் ஆயினமையின், இசையொழிதலாவது வசை பெறுதலாயிற்று. மேல், 'இசை இலா யாக்கை' என்றதனை விளக்கியவாறு. இதனான் இவ்விரண்டும் உடன் கூறப்பட்டன. மறுமைப்பயன் 'வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்' (குறள்50) என மேலே கூறப்பட்டது. படவே இல்லறத்திற்கு இவ்வுலகில் புகழும், தேவர் உலகில் போகமும் பயன் என்பது பெற்றாம். இனி, மனு முதலிய அற நூல்களால் பொதுவாகக் கூறப்பட்ட இல்லறங்கள் எல்லாம் இவர் தொகுத்துக் கூறிய இவற்றுள்ளே அடங்கும்: அஃது அறிந்து அடக்கிக் கொள்க: யாம் உரைப்பின் பெருகும்.

'புகழ் உண்டாகாமல் வாழ்வாரே இறந்தார் ஆவார்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இசையின்றி இருப்பவரே இறந்தவர்', 'புகழ்கெட வசையுண்டாக வாழ்வாரே இறந்தவராவார்', 'உள்ள புகழ் ஒழியும்படி அபகீர்த்தி வரக்கூடிய காரியங்களைச் செய்கிறவர்களே வாழ்த் தெரியாதவர்கள்', 'புகழ் உண்டாகாமல் வாழ்பவரே இறந்தவராவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

புகழைப் பெறாமல் உயிர் வாழ்கின்றவர்கள் வாழாதவர் ஆவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தம்மைப் பிறர் இகழாமல் வாழக்கூடியவரே வாழ்பவர்; புகழைப் பெறாமல் உயிர் வாழ்கின்றவர்கள் வாழாதவர் ஆவர் என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?

இகழ்ச்சி இல்லாமல் வாழ்வதே வாழ்க்கை; நற்பெயர் பெறாமல் வாழ்வது வாழ்க்கையல்ல.

உலகில் புகழ் பொருந்த வாழ்பவர் இருக்கின்றனர். நற்பெயர் பெறவேண்டும் என்ற சிந்தனையில்லாமல் இசைபட வாழாதோரும் உளர். முதலில் சொல்லப்பட்ட பழி இல்லாமல் நற்பெயருடன் வாழ்வாரே மனிதராக வாழ்பவர். அடுத்துச் சொல்லப்பட்ட புகழின்றி இகழ்ச்சி ஏற்று வாழ்பவர் மனிதராகப் பிறந்தும் மனிதராக வாழ அறியாதவர்கள். இவ்வுலகில் பொருளுள்ள வாழ்க்கை வாழ்கிறோம் என்பதற்கு அடையாளமே நற்குண நற்செயல்களால் பயனுண்டாக வாழ்ந்து புகழ்பெறுதல் ஆகும். நல்ல பெயர் பெறாமல் பயனற்ற தன்னல வாழ்க்கை வாழ்பவர்கள் உண்மையில் உயிரோடிருந்தாலும் வாழாதவர்களாதலால் 'இருக்கின்றனர்' என்றுதான் சொல்லப்படுவர்.

'வசையொழிய வாழ்வாரே வாழ்வார்' என்னும் உடன்பாட்டுக் கருத்து 'இசைஒழிய வாழ்வாரே வாழா தவர்' என்னும் எதிமறைக் கருத்தால் மிகத் தெளிவு பெறுகிறது. இதனாலேயே ஒரு கருத்து நன்கு தெளிவுற இருவகை நடைகளையும் வள்ளுவர் பயன்படுத்துகிறார்.

இக்குறள் கூறும் செய்தி என்ன?

எதுதான் வாழ்க்கை? எதற்காக நாம் வாழ்கிறோம்? இவை நமக்குள் அடிக்கடி எழும் கேள்விகள். பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலுள்ளவை உண்ணல், உறங்கல் மட்டும் அல்ல; வாழும் காலத்தில் பெயர் விளங்க வாழ்; இகழ் நீங்கி புகழ்பட வாழ் என்பது வள்ளுவர் கூறும் எளிய விடை. இகழ் என்பது கெட்டபெயர் நேர்ந்திடாமல் காப்பது. புகழ் என்பது நல்ல பெயர் எடுப்பது. ஒருவரது நற்குணங்களினாலும் நற்செய்கைகளினாலும் புகழ் ஈட்டமுடியும். தீக்குணங்களை விலக்கி தீச்செயல்கள் செய்யாமல் இருந்தாலே இகழ்ச்சி அண்டாது. இதைத்தான் வசை ஒழிய வாழ்வாரே உலகில் வாழ்வார் என்னும் நிலைக்கு உரியவர் என்றும் இசையொழிய வாழ்பவர் உயிர்ப்பு நிலையோடு வாழாதவர்கள் என்றும் இக்குறளில் கூறுகிறார்.

வசை ஒழிய வாழ்வார் உயர்வெய்துவர், இசை ஒழிய வாழ்வார் இழிவுறுவர். வாழ்தலும் வாழாமையும் புகழில் அமைந்து கிடக்கிறது என்பது இக்குறள் கூறும் செய்தி.

தம்மைப் பிறர் இகழாமல் வாழக்கூடியவரே உயிரோடு வாழ்பவர்; புகழைப் பெறாமல் உயிர் வாழ்கின்றவர்கள் வாழாதவர் ஆவர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

புகழொடு வாழ்பவர் வாழ்க்கையே பொருளுள்ளது.

பொழிப்பு

பிறர் இகழாமல் வாழக்கூடியவரே உயிரோடு வாழ்பவர்; புகழ்கெட உயிர் வாழ்கின்றவர்கள் வாழாதவர்.