இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0236



தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று

(அதிகாரம்:புகழ் குறள் எண்:236)

பொழிப்பு (மு வரதராசன்): ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும்; அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பது நல்லது.

மணக்குடவர் உரை: பிறக்கிற் புகழுண்டாகப் பிறக்க; அஃதிலார் பிறக்குமதிற் பிறவாமை நன்று.
இது புகழ்பட வாழவேண்டு மென்றது.

பரிமேலழகர் உரை: தோன்றின் புகழோடு தோன்றுக-மக்களாய்ப் பிறக்கின் புகழுக்கு ஏதுவாகிய குணத்தோடு பிறக்க; 'அஃது இலார்' தோன்றலின் தோன்றாமை நன்று-அக்குணமில்லாதார் மக்களாய்ப் பிறத்தலின் விலங்காய்ப் பிறத்தல் நன்று.
(புகழ்; ஈண்டு ஆகுபெயர். அஃது இலார் என்றமையின் மக்களாய் என்பதூஉம், 'மக்களாய்ப் பிறவாமை' என்ற அருத்தாபத்தியான் 'விலங்காய்ப் பிறத்தல்' என்பதூஉம் பெற்றாம். இகழ்வார் இன்மையின் 'நன்று' என்றார்)

இரா சாரங்கபாணி உரை: ஒரு துறையில் முற்படின் புகழ் நோக்கோடு முற்படவேண்டும். அந்நோக்கு இல்லாதவர் அத்துறையில் தலைகாட்டுதலினும் தலைகாட்டாமை நல்லது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று.

பதவுரை: தோன்றின்-தோன்றும்பொழுது, காணப்படின், முன் வந்தால், தலையிட்டால், பிறந்தால்; புகழொடு-புகழ்நோக்கோடு; தோன்றுக-தோன்றுக; அஃது-அது(அந்நோக்கு); இலார்-இல்லாதவர்; தோன்றலின்-தோன்றுதலின்; தோன்றாமை-தோன்றாமல் இருத்தல்; நன்று-நல்லது, நன்மையுடையது.


தோன்றின் புகழொடு தோன்றுக:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறக்கிற் புகழுண்டாகப் பிறக்க;
பரிப்பெருமாள்: பிறக்கிற் புகழுண்டாகப் பிறக்க;
பரிதி: பிறந்தால் புகழுடனே வாழவேனும்;
காலிங்கர்: ஒருவர் தம்புகழ் பரப்புவதாகப் பழியினை நீக்கிப் புகழ்பெறுதலே தோற்றமாவது;
பரிமேலழகர்: மக்களாய்ப் பிறக்கின் புகழுக்கு ஏதுவாகிய குணத்தோடு பிறக்க;
பரிமேலழகர் குறிப்புரை: புகழ்; ஈண்டு ஆகுபெயர். [புகழ் என்னும் காரியப்பெயர் அதனை (புகழை) உண்டாக்குவதற்குக் காரணமாய நற்குணத்தை உணர்த்துதலால் காரியவாகு பெயராம்.]

'புகழ் உண்டாகப் பிறக்க' என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை நல்கினர். 'பிறந்தால் புகழுடனே வாழவேண்டும்' என்பது பரிதியின் உரை. காலிங்கர் 'தோற்றம் என்பது புகழ் பரப்பப் பழியைப் போக்கிப் புகழ் பெறுதல்' என்று உரை வரைகிறார். பரிமேலழகர் 'புகழுக்கு ஏதுவாகிய குணத்தோடு பிறக்க' என்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவைக்கண் புகழ் நோக்கொடு தோன்றுக', '(ஒரு காரியத்துக்கு) பல பேருக்கிடையில் முன்னால் வந்தால் ஏதாவது ஒரு சாமர்த்தியப் புகழுள்ளவர்கள் வரவேண்டும்', 'உலகத்திலே தோன்றினால் புகழோடு விளங்கல் வேண்டும்', 'ஒன்றில் ஈடுபட்டால் புகழ் உண்டாகுமாறு ஈடுபடுக', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

செயலில் தோன்றும்போது புகழ் நோக்கோடு வருக என்பது இப்பகுதியின் பொருள்.

அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அஃதிலார் பிறக்குமதிற் பிறவாமை நன்று.
மணக்குடவர் குறிப்புரை: இது புகழ்பட வாழவேண்டு மென்றது.
பரிப்பெருமாள்: அஃதிலார் பிறக்குமதிற் பிறவாமை நன்று.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது புகழ்பட வாழவேண்டு மென்றது. பிறக்கிற் பழியுண்டாம், பிறவாது ஒழிய அஃது இல்லையாம் ஆதலின் நன்று என்று கருதினார்.
பரிதி: அந்த நெறியில்லாதார் பிறப்பதிற் பிறவாமல் இருப்பதே நன்று என்றவாறு.
காலிங்கர்: அஃதிலார் நானிலத்தின்கண் தாம் ஒருமக்கள் உருபுகொண்டு தோன்றுதலின் இறந்துபடுதலே பெரிதும் நன்மையுடைத்து என்றவாறு.
பரிமேலழகர்: அக்குணமில்லாதார் மக்களாய்ப் பிறத்தலின் விலங்காய்ப் பிறத்தல் நன்று.
பரிமேலழகர் குறிப்புரை: அஃது இலார் என்றமையின் மக்களாய் என்பதூஉம், 'மக்களாய்ப் பிறவாமை' என்ற அருத்தாபத்தியான் 'விலங்காய்ப் பிறத்தல்' என்பதூஉம் பெற்றாம். இகழ்வார் இன்மையின் 'நன்று' என்றார்.

இப்பகுதிக்கு 'அஃதிலார் பிறப்பதைவிட பிறவாமை நன்று' என்றபடி மணக்குடவரும் பரிப்பெருமாளும் பரிதியும் உரை கூறினர். காலிங்கர் 'பிறப்பதினும் இறந்துபடுதலே நன்மையுடைத்து' என்று கூற பரிமேலழகர் 'மக்களாய்ப் பிறப்பதைவிட விலங்காய்ப் பிறத்தல் நன்று' என ஒரே பாய்ச்சலாக உரை செய்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அந்நோக்கம் இலாதார் தோன்றாமை நல்லது', 'அந்தச் சாமர்த்தியப் புகழ் இல்லாதவன் முன்னால் வருவதைவிட மறைந்திருப்பதே நல்லது', 'புகழில்லாதவர்கள் மக்களாய்ப் பிறப்பதைக் காட்டிலும் பிறவாமை நல்லது. (பிறவாவிடின் இகழ்வார் யாருமில்லை. தோன்றுவதென்பதற்குப் பலரால் அறியப்படுவதென்றும் பொருள் கொள்ளலாம்.)', 'அங்ஙனம் ஈடுபட முடியாதார், ஒன்றில் ஈடுபட்டுப் புகழ் இன்றி இருத்தலைவிட ஈடுபடாமல் இருத்தலே நல்லது. (வேறு பொருள்) உலகத்தில் பிறந்தால் புகழை உண்டு பண்ணுதல் வேண்டும். இல்லையேல் பிறவாமல் இருத்தலே நல்லது. பிறந்தும் புகழற்ற வாழ்க்கைப் பயனின்று' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அந்நோக்கம் இல்லாதார் வருவதினும் காட்சியளிக்காமல் போவது நல்லது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
செயலில் தோன்றின் புகழ் நோக்கோடு வருக; அந்நோக்கம் இல்லாதார் வருவதினும் காட்சியளிக்காமல் போவது நல்லது என்பது பாடலின் பொருள்.
இக்குறளிலுள்ள 'தோன்றின்' என்ற சொல் குறிப்பது என்ன?

புகழோடு விளங்காத வாழ்வு வாழ்வல்ல.

செயலில் தோன்றும்போது பெருமை பெறும் நோக்கோடு வரவேண்டும்; புகழ் நோக்கு இல்லாவிட்டால் அதில் தோன்றாமலே இருக்கலாம்.
புகழுடன் கூடிய வாழ்வை அனைவரும் விரும்புவர். புகழ் என்பது ஒருவனது நற்குணங்களினாலோ அல்லது நற்செய்கைகளினாலோ உண்டாவது. புகழ் நோக்கோடு ஒரு செயலில் அமைவுற வேண்டும். அப்புகழ் நோக்கு இல்லாவிட்டால் அச்செயலில் தோன்றுதலினால் என்ன பயன்? எனக் கேட்கிறது இக்குறள்.
புகழோடு வாழ்தல் என்பது ஒருவன் எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதில் அவன் உயர்நிலை அடைந்து நற்பெயர் பெறவேண்டும் என்ற இலக்கோடு செயல்படுதல் என்பதைச் சொல்வது. செயலின் சிறப்பு செய்வார் திறனைப் பொருத்தது. எங்கு தோன்றினாலும் செய்வன திருந்தச் செய்து பாராட்டுப் பெற்றுப் பெருமையுடன் இருக்கவேண்டும். ஓர் சமுதாயத்தில் ஒவ்வொருவரும் -கட்டிடத் தொழிலாளியானாலும் விண்வெளிக் கப்பல் செலுத்துவராயினும் -உலகம் இயங்குவதற்குப் பங்களிக்கிறார்கள். தமது துறையில் முழு ஈடுபாடு கொண்டு புகழ் ஈட்டும் நோக்கில் உழைத்தால் அது தனி மனிதனையும் சமுதாயத்தையும் நல்ல முறையில் முன்னெடுத்துச் செல்ல உதவும். இசைபட வாழும் இலக்கை எட்ட (aiming for excellence) வேண்டியது இங்கு வற்புறுத்தப்படுகிறது. தங்கள் உழைப்பு, திறன், செயல் மூலம் புகழ் பெறத் தவறுபவர்கள் அவ்விடத்துத் தோன்றாமலேயே இருக்கலாம் எனவும் இப்பாடல் சொல்கிறது.
புகழ்வாழ்வு என்பது பெறுவதற்கரிய விழுமியம் ஆகும்.

இப்பாடலிலுள்ள புகழொடு என்பதற்குப் 'புகழ் நோக்கொடு' எனவும் அஃதிலார் என்றதற்கு 'அந்நோக்கம் இலாதார்' என்ற வகையில் கூறிய வ சுப மாணிக்கம் உரையையும்- 'அவைக்கண் புகழ் நோக்கொடு தோன்றுக; அந்நோக்கம் இலாதார் தோன்றாமை நல்லது' -பொருந்த இணைத்துப் பொருள் காணலாம்.

இன்னின்ன குணநலன்களோடு பிறத்தல் நம்மால் ஆகக் கூடியதா? பிறப்பதென்பதும் நாம் முடிவு செய்யக் கூடியது அன்று. பிறக்காமலிருப்பதும் நாம் முடிவு செய்யக் கூடியது அன்று. பிறப்பு நம் ஆற்றலில் இல்லை, ஆனால் பிறந்தபின் இறக்கும்முன்வரை புகழோடு வாழ்வது நம் கையில்தான் உள்ளது. புகழின் இயல்பை உணர்ந்து தங்கள் திறன் மூலமும், செயல்வழியும் சமுதாயத்தின், பாராட்டுதலைப் பெற்று ஒருவன் புகழ் பெறுவான். புகழுக்குரிய வெளிப்பாடுகளைப் பெற்றபின் உலகோர்முன் வெளிப்பட வேண்டும். புகழ் பெற முடியவில்லை என்றால் தோன்றாமல் இருப்பது நல்லது. பிறக்கும்போதே புகழொடு தோன்றவேண்டும் என்பதல்ல இக்குறளின் கருத்து, புகழுண்டாக வாழ வேண்டும் என்பதே இது கூறும் செய்தி.

இக்குறளிலுள்ள 'தோன்றின்' என்ற சொல் குறிப்பது என்ன?

'தோன்றின்' என்ற சொல்லுக்குப் பிறக்கின், (மக்களாய்ப்) பிறக்கின், பிறந்தால், (பழியினை நீக்கிப் புகழ்பெறுதலே) தோற்றமாவது, (மக்களாய்ப்‌) பிறந்தால்‌, உலகில் ஒரு தொழில் கலை புதுமுயற்சியில் பலருமறிய விளங்கித் தோன்றினால், பலர் முன் தோன்றும் பொழுது, ஒரு துறையில் முற்படின், (மக்களிடையில் முன்னால் வந்து) தோன்றினால், ஒரு செயலில் ஒருவர் ஈடுபட்டால், உலகத்திலே தோன்றினால், ஒன்றில் ஈடுபட்டால், உலகத்தில் பிறந்தால், எத்துறையில் எவ்வவையில் தோன்றுவதாயினும், ஒருவர் இவ்வுலகத்திற் பிறக்கின், எந்தத் துறையில் ஈடுபட்டாலும், எங்கேயாவது தோன்றினால் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இப்பாடலில் 'தோன்றின்' 'தோன்றுக' 'தோன்றலின்' 'தோன்றாமை' எனத் தோன்றுதல் என்பது நான்கு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஈட்டம் இவறி இசைவேண்டா வாடவர் தோற்றம் நிலக்குப் பொறை (நன்றியில்செல்வம் 1003 பொருள்: பொருள் தேடுவதையே விரும்பி புகழை வேண்டாத மாந்தரின் பிறவி வாழ்க்கை நிலத்திற்குச் சுமையாகும்) என்ற பின்வரும் குறள் ஒன்றில் 'தோற்றம்' என்ற சொல் பிறப்பு என்ற பொருளிலே ஆளப்பட்டுள்ளது. இதனால்தான் பழம் ஆசிரியர்கள் தொடங்கி இன்றுவரை பல உரையாளர்கள் இக்குறளில் உள்ள 'தோன்றின்' என்ற சொல்லுக்குப் 'பிறக்கின்' எனப் பொருள் கூறினர் போலும். படித்தவுடன் எளிதில் புரிந்து கொள்ளும்படியான சொல்லமைப்போடு உள்ள குறள்தான் என்றாலும் 'தோன்றுதல்' என்றதற்குப் 'பிறப்பு' எனப் பொருள் கொண்ட உரைகளால் இடர்ப்பாடு உண்டானது.
'தோன்றின் புகழொடு தோன்றுக' என்ற பகுதிக்குப் பிறக்கின் புகழுண்டாகப் பிறக்க என்றும் பிறந்தால் புகழுடனே வாழவேண்டும் என்றும் புகழுக்கு ஏதுவாகிய குணத்தோடு பிறக்க என்றும் உரை செய்தனர். பிறப்பும் பிறவாமையும் நம் கையில் இல்லை. புகழுக்கேதுவாகிய குணத்தோடு பிறத்தலும், அக்குணமில்லையாயின் பிறவாதிருத்தலும் ஒருவன் ஆற்றலுக்கு உட்படன அல்ல. எனவே இவ்வுரைகள் பொருந்தா. அது போலவே 'புகழடைந்து, பின் வெளிப்பட்டுத் தோன்றல்' என்றவாறும் உரை கூறினர். ஒருவன் புகழடைய வேண்டுனால் வெளிப்பட்டுத்தான் ஆகமுடியும். வீட்டினுள்ளிருந்து புகழடைந்து பின் வெளிப்பட்டுத் தோன்றல் என்பது பொருளற்றதாகிறது.
‘தோன்றின்’ என்பதற்குப் பலர்முன் தோன்றின், ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றினால், பொது மன்றங்களிலே வந்து தோன்றினால் என்ற வகையிலும் பொருள் கூறினர்.

இக்குறளுக்கான உரையில் தமிழண்ணல் 'உலகில் ஒரு தொழில், கலை, புதுமுயற்சியில் பலருமறிய விளங்கித் தோன்றினால், புகழோடு அவ்வாறு தோன்றவேண்டும்; அஃது வாய்க்காதவர் அங்ஙனம் உலகிடைப் பலருமறியத் தோன்றுவதைவிட, தோன்றாதிருப்பதே நல்லது' எனப் பொழிப்பு தந்து புறநானூற்று ஔவையின் பாடல் ஒன்று இக்குறளின் பொருளைப் புரிந்து கொள்ள உதவுகிறது என்கிறார். தோன்றாதிருக்கவும் வேண்டும்; தோன்ற வேண்டிய அவசியம் வந்தால் சிறப்போடுதான் தோன்றவேண்டும் என்னும் கருத்தை விளக்க அவர் மேற்கோள் காட்டும் பாடல்:
…இல்இறைச் செரீஇய ஞெலிகோல் போல
தோன்றாது இருக்கவும் வல்லன், மற்றதன்
கான்றுபடு கனைஎரி போலத்
தோன்றவும் வல்லன் தான் தோன்றுங் காலே
(புறநானூறு 315 பொருள்: (போர் இல்லாதபோது) வீட்டு இறப்பிலே செருகிய தீக்கடை கோல் போல அமைதியாய் இருக்கும் இயல்பும் அதியமானிடம் உண்டு. கடைந்ததும் அது பற்றி எரிவது போலப் போரில் இறங்கிவிட்டால் விளங்கித்தோன்றும் வீரமும் அவனிடம் உண்டு. எதிலும் எங்கும் தோன்றுங்கால் விளங்கிப் புகழுடன் தோன்ற வேண்டும். [இறை-வீட்டு இறப்பு, தாழ்வாரம். செரீஇய-செருகிவைத்த ஞெலிகோல்-தீக்கடை கோல். கான்றுபடு-காட்டில் தோன்றும். கனை எரி-கூவி எரியும் நெருப்பு. அக்காலத்தில் தீக்கடைகோல்கள் மூலம்தான் நெருப்பை உண்டாக்குவர். இரண்டு மூங்கில் குழாய்களைச் சுழற்றி, அதிலிருந்து நெருப்புப் பொறி பறக்கச் செய்து தீ பற்ற வைப்பர். அந்த மூங்கிலுக்கு 'ஞெலிகோல்' என்று பெயர். அதை வீட்டின் முன் தாழ்ந்திருக்கும் 'இறவாரம்' எனப்படும் இறப்பில் செருகிவைத்திருப்பர். அப்போது அது எவ்வித அசைவுமின்றி அமைதியாய் இருக்கும். அதனையே வெளியே எடுத்துச் சுழற்றினால், அதிலிருந்து கனன்று ஓசையிட்டுக் கொண்டு நெருப்பு வெளிப்படும். அப்போது அதன் ஆற்றல் வெளிப்பட்டு, முன்பு அடங்கியிருந்தது இதுதான் என்று வியக்கவைக்கும்.])
புகழ்பட வாழ்தலின் இன்றியமையாமையை விளக்கவே தோன்றின் புகழொடு தோன்றுக என்று வள்ளுவர் பாடினார்.

'தோன்றின்' என்பது ஒரு செயலில் தோன்றினால் என்பது குறித்தது.

செயலில் தோன்றும்போது புகழ் நோக்கோடு வருக; அந்நோக்கம் இல்லாதார் வருவதினும் காட்சியளிக்காமல் போவது நல்லது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மாந்தர் புகழ் துலங்கும்படி அறியப்படுதல் வேண்டும்.

பொழிப்பு

செயலில் தோன்றும்போது புகழ் நோக்கொடு வருக; புகழ்நோக்கம் இல்லாதார் காட்சிஅளிக்காமல் போவது நல்லது.