இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0231



ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு

(அதிகாரம்:புகழ் குறள் எண்:231)

பொழிப்பு (மு வரதராசன்): வறியவர்க்கு ஈதல் வேண்டும். அதனால் புகழ் உண்டாக வாழவேண்டும். அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.

மணக்குடவர் உரை: புகழ்பட வாழ்தலாவது கொடுத்தல். அக்கொடையா னல்லது உயிர்க்கு இலாபம் வேறொன்றில்லை.
இது புகழுண்டாமாறு கூறிற்று.

பரிமேலழகர் உரை: 'ஈதல்' - வறியார்க்கு ஈக, இசைபட வாழ்தல் - அதனால் புகழ் உண்டாக வாழ்க, அது அல்லது உயிர்க்கு ஊதியம் இல்லை - அப்புகழ் அல்லது மக்கள் உயிர்க்குப்பயன் பிறிது ஒன்று இல்லை ஆகலான்.
(இசைபட வாழ்தற்குக் கல்வி, ஆண்மை முதலிய பிற காரணங்களும் உளவேனும் உணவின் பிண்டம் உண்டி முதற்று (புறநா.18) ஆகலின் ஈதல் சிறந்தது என்பதற்கு ஞாபகமாக 'ஈதல்' என்றார். உயிர்க்கு என்பது, பொதுப்படக் கூறினாரேனும், விலங்கு உயிர்கட்கு ஏலாமையின், மக்கள் உயிர்மேல் நின்றது.)

சி இலக்குவனார் உரை: வறியார்க்கு ஈக; அதனால் புகழ் உண்டாக வாழ்க; அப்புகழ் அல்லது மக்களுயிர்க்குப் பயன் வேறொன்றும் இல்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது உயிர்க்கு ஊதியம் இல்லை.

பதவுரை:
ஈதல்-கொடுத்தல்; இசைபட--புகழ் உண்டாக; வாழ்தல்-வாழ்தல்; அது-அது; அல்லது-அல்லாமல்; ஊதியம்-வருவாய்; இல்லை-இல்லை; உயிர்க்கு-உயிருக்கு.


ஈதல் இசைபட வாழ்தல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: புகழ்பட வாழ்தலாவது கொடுத்தல்;
பரிதி: ஆத்துமாவுக்குப் பயன் தேகி என்பவர்க்குக் கொடுப்பதும், புகழுடன் வாழ்வதும்;
காலிங்கர்: கீழ்ச்சொன்ன ஈதலின் பின்னரே புகழதிகாரம். என்னை? அது பயக்கப்பெருகி நிகழ்வது புகழ் ஆகலான்;
பரிமேலழகர்: வறியார்க்கு ஈக; அதனால் புகழ் உண்டாக வாழ்க;
பரிமேலழகர் குறிப்புரை: இசைபட வாழ்தற்குக் கல்வி, ஆண்மை முதலிய பிற காரணங்களும் உளவேனும் உணவின் பிண்டம் உண்டி முதற்று (புறநா.18) ஆகலின் ஈதல் சிறந்தது என்பதற்கு ஞாபகமாக 'ஈதல்' என்றார்.

'புகழ்பட வாழ்தலாவது கொடுத்தல்' என்று மணக்குடவர் இப்பகுதிக்கு உரை கூறினார். இவ்விதம் மாற்றி உரை செய்தது புகழுக்கு சிறப்பு கூறுவதற்குப் பதிலாக ஈகைக்குக் கூறுவதாக அமைகின்றது. பரிதி 'கொடுப்பதும் புகழுடன் வாழ்வதும்' என இரண்டையும் கூட்டி உரை கண்டார். காலிங்கரும் பரிமேலழகரும் 'ஈதல் பயக்கும் புகழ்' பற்றிக் கூறுகின்றனர்; இவர்களது உரையே பொருத்தமானது.

இன்றைய ஆசிரியர்கள் 'வறியார்க்கு ஈக; புகழோடு வாழ்க', 'ஏழைகளுக்கு வழங்குக. புகழ் பெற வாழ்க', 'ஏழைகளுக்குத் தானம் கொடுப்பதையும் அதனால் புகழப்பட்டு வாழ்வதையும்', 'வறியவர்களுக்கு வேண்டியதைக் கொடுக்க வேண்டும்; அதனால் புகழ் உண்டாகும்படி வாழவேண்டும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

வறியார்க்குக் கொடுத்தல், புகழோடு வாழ்தல் என்பது இப்பகுதியின் பொருள்.

அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அக்கொடையா னல்லது உயிர்க்கு இலாபம் வேறொன்றில்லை.
மணக்குடவர் குறிப்புரை: இது புகழுண்டாமாறு கூறிற்று.
பரிதி: அல்லது வேறொன்றும் இல்லை என்றவாறு.
காலிங்கர்: இவை வேண்டுமல்லது மற்று இவை போல்வன லாபம் ஒன்றும் இல்லை உலகத்தில் அறமியற்றும் மக்கட்கு என்றவாறு.
பரிமேலழகர்: அப்புகழ் அல்லது மக்கள் உயிர்க்குப்பயன் பிறிது ஒன்று இல்லை ஆகலான்.
பரிமேலழகர் குறிப்புரை: உயிர்க்கு என்பது, பொதுப்படக் கூறினாரேனும், விலங்கு உயிர்கட்கு ஏலாமையின், மக்கள் உயிர்மேல் நின்றது.

'அக்கொடையா னல்லது உயிர்க்கு இலாபம் வேறொன்றில்லை' என்றார் மணக்குடவர். காலிங்கர் அறம் இயற்றும் மக்களுக்கு இவை போல்வன லாபம் எனக் கூறினார். பரிமேலழகர் அப்புகழ் அல்லது மக்கள் உயிர்க்கு வேறு பயன் இல்லை எனப் பொருள் சொன்னார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அதுவே உயிர்க்குச் சிறந்த ஊதியம்', 'அப்புகழ் அல்லது மக்கள் உயிர்க்குப் பயன் தருவது வேறொன்றில்லை', 'தவிர இந்தப் பிறவியினால் அடையக்கூடிய பயன் வேறு எதுவும் இல்லை', 'அப் புகழைத் தவிர மக்களுயிருக்குச் சிறந்த இம்மைப்பயன் வேறில்லை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அப்புகழைத் தவிர உயிர்க்குப் பயன் தருவது வேறொன்றில்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
வறியார்க்குக் கொடுத்தல், புகழோடு வாழ்தல்; அப்புகழைத் தவிர உயிர்க்கு ஊதியம் வேறொன்றில்லை என்பது பாடலின் பொருள்.
இப்பாடலிலுள்ள 'ஊதியம்' என்ற சொல்லின் பொருள் என்ன?

மனித உயிர்க்கு மதிப்பு எனப்படுவது ஈவதினால் உண்டாகும் புகழொடு வாழ்வதனால் ஏற்படும்.

வறியார்க்குச் சோறிடுதலே ஈகை என்று முந்தைய அதிகாரத்தில் ஈகைக்கு வரையறை செய்யப்பட்டது (குறள் 221). அப்படி ஈந்து அதனால் உண்டாகும் புகழுடன் வாழ்வது மக்கள் உயிர்க்கு ஊதியம் என இங்கு கூறப்படுகிறது.
ஈகை ஒன்றுதான் ஒருவனுக்குப் புகழ் சேர்க்கும் என்பதில்லை. இசைபட வாழ்வதற்கு கல்வி, ஆண்மை, பொருளீட்டல், வீரம் போன்ற பிற காரணங்களும் உள. ஆனால் 'இவையனைத்தும் பசி வந்திடப் பறந்துபோம் ஆதலானும், 'பசி, குடிப்பிறப்பழிக்கும், விழுப்பங்கொல்லும், பிடித்த கல்விப் பெரும் புணைவிடூஉம், நாணணிகளையும், மாணெழில் சிதைக்கும்' என மணிமேகலை (11:76-80) கூறுதலானும் உணவளிக்கும் ஈகையே இசைபட வாழ்தற்குச் சிறந்தது' என ஈகையால் வரும் புகழுக்கு விளக்கவுரை தருவார் சொ தண்டபாணி பிள்ளை.
உயிர்க்கு என்பது உயர்திணை, அஃறிணை என்னும் இருதிணை யுயிர்க்கும் பொதுவான சொல். உலகில் மக்கள் பிறவியல்லாமல் ஏனைய பிறவிகளுக்கெல்லாம் ஈதலும், இசைபட வாழ்தலும் இயலாதாகையால், அஃறிணை உயிரை ஒழித்து உயர்திணை உயிரை உணர்த்தியது; உயிர் என்றது மக்களுயிரைக் குறித்தது.

புகழ்பட வாழ்தலாவது ஈதல் என மணக்குடவர் உரை கூறினார். ஆனால் இப்படிக் கொள்வது ஈகைச் சிறப்பைத்தான் கூறுவதாக அமையும். இப்பாடல் புகழ் பற்றியது ஆதலால் இவர் உரை பொருந்தாது. சில உரையாளர்கள் 'ஈதல் இசைபட வாழ்தல் அவையல்லது ஊதியம் இல்லை' எனக் கொண்டுகூட்டி உயிர் எய்தும் ஊதியமாகக் கொடை, புகழ் என இவ்விரண்டையும் கூறினர். இவர்கள் உரைப்படி ஈகையும் புகழுமாகிய இரண்டையும் சுட்டி ஈகை செய்தல், மற்றும் புகழ்பட வாழ்தல் இவையல்லாமல் பயன் தருபவை வேறு இல்லை என்பது பாடலின் பொருளாகிறது. ஆனால் குறளில் 'அதுவல்லது' என்ற ஒருமைச் சொல்லே உள்ளது. எனவே 'அப்புகழல்லது உயிர்க்கு ஊதியம் இல்லை' என்று கொள்வதே பொருத்தம். ‘அது’ என்பது குறள் நடைப்படி உயிர்க்கு ஊதியம் தரும் (ஈந்து) புகழ்பட வாழ்தலையே சுட்டும்.

இப்பாடலிலுள்ள 'ஊதியம்' என்ற சொல்லின் பொருள் என்ன?

'ஊதியம்' என்ற சொல்லுக்கு இலாபம், பயன், பேறு, வளர்ச்சி, இம்மைப்பயன், மதிப்பு, நிலையான பேறு, ஆக்கம், விளைபயன், பலன், நன்மை என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

கொடையின் பயனாகிய புகழே ஊதியம் என்பது வெளிப்படை. நம் முன்னோர் வாழ்க்கையில் பெறுதற்கும் உறுதற்கும் உரிய மேம்பட்ட பொருள்களை 'ஊதியம்' என்று வழங்கி வந்தனர் என்பதற்குப் பேதைமை அல்லது ஊதியம் இல் (புறநானூறு 28:5 பொருள்: பேதைத்தன்மையையுடைய பிறப்பாவதல்லது இவற்றாற் பயனில்லை; [ஊதியமென்பது, அறம்பொருளின்பங்களை; அன்றி அறமென்பாரும் உளர்]) என்ற சங்கப்பாடலும் அதன் பழைய உரையும் சான்றாகும். ஊதியம் என்பது 'இலாபம்' (கூட்டிக்கழித்தால் கிடைக்கும் இலாபம் நாம் விட்டுப்போகும் நற்பெயர்) என்ற பொருளும் இங்கு ஏற்கும் என்றாலும் மக்கள் வாழ்க்கையினைக் குறித்துப் பேசும் போது அதனைப் 'பயன்' எனக் கொள்வது சிறக்கும்.

ஊதியம் என்பதற்குப் பயன் என்பது பொருள்.

வறியார்க்குக் கொடுத்தல், புகழோடு வாழ்தல்; அப்புகழைத் தவிர உயிர்க்குப் பயன் தருவது வேறொன்றில்லை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கொடுத்துப் புகழ் பெறுவது வாழ்க்கைப் பயன்.

பொழிப்பு

வறியார்க்குக் கொடுத்தல், புகழோடு வாழ்தல்; அது அல்லாமல் உயிர்க்குப் பயன் தருவது வேறொன்றில்லை