இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0238வசைஎன்ப வையத்தார்க்கு எல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்

(அதிகாரம்:புகழ் குறள் எண்:238)

பொழிப்பு (மு வரதராசன்): தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகிய புகழைக் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்.

மணக்குடவர் உரை: உலகத்தார்க்கெல்லாம் புகழாகிய ஒழிபு பெறாவிடின், அப்பெறாமைதானே வசையாமென்று சொல்லுவர்.
மேல் புகழில்லாதாரை யிகழ்பவென்றார் அவர் குற்றமில்லா ராயின் இகழப்படுவரோவென்றார்க்கு வேறு குற்றம் வேண்டா, புகழின்மைதானே யமையுமென்றார்.

பரிமேலழகர் உரை: இசை என்னும் எச்சம் பெறாவிடின் - புகழ் என்னும் எச்சம் பெறலாயிருக்க, அது பெறாது ஒழிவாராயின், வையத்தார்க்கு எல்லாம் வசை என்ப - வையகத்தோர்க்கு எல்லாம் அது தானே வசை என்ற சொல்லுவர் நல்லோர்.
( 'எச்சம்' என்றார், செய்தவர் இறந்து போகத் தான் இறவாது 'நிற்றலின' இகழப்படுதற்குப் பிறிதொரு குற்றம் வேண்டா என்பது கருத்து.)

மயிலை சிவமுத்து உரை: தாம் இறந்த பின்னரும் எஞ்சி நிற்பதாய புகழைப் பெறாவிட்டால் உலகத்தில் பிறந்த எத்தகையோர்க்கும் அஃது ஒரு பெரிய இகழ்ச்சியாகும் என்று அறிஞர் கூறுவர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இசையென்னும் எச்சம் பெறாஅ விடின் வையத்தார்க்கு எல்லாம் வசைஎன்ப.

பதவுரை:
வசை-பழி; என்ப-என்று சொல்வர்; வையத்தார்க்கு-நிலவுலகத்துள்ளவர்க்கு; எல்லாம்-அனைத்தும்; இசை-புகழ்; என்னும்-என்கின்ற; எச்சம்-மிஞ்சி நிற்பது; பெறாஅ விடின்-அடையாவிட்டால்.


வசைஎன்ப வையத்தார்க்கு எல்லாம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உலகத்தார்க்கெல்லாம் அப்பெறாமைதானே வசையாமென்று சொல்லுவர்;
பரிதி: வசை என்றவாறு;
காலிங்கர்: வையத்து வாழும் மக்களாயினார்க்கு எல்லாம் பெரிய வசை என்று சொல்லுப சான்றோர்; .
பரிமேலழகர்: வையகத்தோர்க்கு எல்லாம் அது தானே வசை என்ற சொல்லுவர் நல்லோர்.

'உலகத்தார்க்கெல்லாம் அப்பெறாமைதானே வசையாமென்று சொல்லுவர்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவன் பிறப்பு உலகிற்கே பழி', 'அஃது உலகத்தார்க்கெல்லாம் பழி என்று அறிந்தோர் சொல்லுவர்', 'உலகத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் அது குற்றமாகும் என்பதை உணர வேண்டும்', 'அதுவே உலகத்தார் எல்லார்க்கும் வசையாகுமென்று அறிஞர் சொல்லுவர்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உலகத்து எத்தகையோர்க்கும் இகழ்ச்சியாகுமென்று சொல்லுவர் என்பது இப்பகுதியின் பொருள்.

இசையென்னும் எச்சம் பெறாஅ விடின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: புகழாகிய ஒழிபு பெறாவிடின்.
மணக்குடவர் குறிப்புரை: மேல் புகழில்லாதாரை யிகழ்பவென்றார் அவர் குற்றமில்லா ராயின் இகழப்படுவரோவென்றார்க்கு வேறு குற்றம் வேண்டா, புகழின்மைதானே யமையுமென்றார்.
பரிதி: கீர்த்தியுடனே வாழ அறியாதார் பெறுவது எஃது என்னில்.
காலிங்கர்: மற்றுயாது பெறாவிடின் எனில் புகழ் என்று எடுத்து ஏத்திச் சொல்லப்படுகிற பெரும் செல்வத்தைப் பெறாத இடத்து என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: எச்சம் என்பது செல்வம்.
பரிமேலழகர்: புகழ் என்னும் எச்சம் பெறலாயிருக்க, அது பெறாது ஒழிவாராயின்.
பரிமேலழகர் குறிப்புரை: 'எச்சம்' என்றார், செய்தவர் இறந்து போகத் தான் இறவாது 'நிற்றலின' இகழப்படுதற்குப் பிறிதொரு குற்றம் வேண்டா என்பது கருத்து.

புகழாகிய ஒழிபு/பெரும் செல்வம்/எச்சம் பெறாவிடின் என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பின் நிலைக்கும் புகழை ஒருவன் பெறாவிடின்', 'புகழ் என்கிற எச்சமாகிய குழந்தையைப் பெறாவிட்டால்', 'புகழ் என்ற மிச்சத்தை சம்பாதிக்க முயலாவிட்டால்', 'நமக்குப் பின் நிற்பதாகிய புகழ் என்னும் சிறப்பை ஒருவன் பெறாதொழியின் அல்லது புகழென்னும் பிள்ளையைப் பெறாவிடின்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

இறந்தபின் எஞ்சி நிற்பதாய புகழைப் பெறாவிட்டால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இசையென்னும் எச்சம் பெறாவிட்டால் உலகத்து எத்தகையோர்க்கும் இகழ்ச்சியாகுமென்று சொல்லுவர் என்பது பாடலின் பொருள்.
'இசையென்னும் எச்சம்' குறிப்பது என்ன?

உலகத்தில் யாராயிருந்தாலும் நற்பெயர் இல்லாமல் இறந்துவிட்டால் அது அவர்க்குப் பழியாகவே அமையும்.

ஒருவன் தான் மறைந்த பின்னும் தன்புகழ் விளங்கி நிற்குமாறு வாழாமற் போனால் அவன் வாழ்ந்த வாழ்க்கையை மக்கள் பழிப்பர். இப்பாடல் ஒருவன் நற்குணங்களால் புகழ் பெறுவது பற்றியது. ஒருவன் எவ்வளவு செல்வம் பெற்றவனாகவோ அல்லது செல்வாக்கு செலுத்தியவனாகவோ இருந்திருந்தாலும் அவன் இறந்தபின் சுடுகாட்டிலேயே அவனது நிறைகுறை பற்றி மற்றவர் பேசத் தொடங்குவர். இறந்தவன் நல்லவனாயிருந்தால் இவன் இன்ன இன்ன நல்லன செய்தான்; இவனுக்கா சாவு வரவேண்டும்? என்று மனமுருகிப் பேசுவர். மறைந்தவன் யாருக்கும் நன்மை செய்யாமல் போனவனாயிருந்தால் இவன் இவ்வளவு உடைமைகள் சேர்த்து என்ன பயன்? ஒருவருக்கும் ஒன்றும் செய்யவில்லை. இவன் இருந்தாலும் ஒன்றுதான் செத்தாலும் ஒன்றுதான் எனப் பழித்துப் பேசுவர். அவனுக்கு மிஞ்சுவது இந்த கெட்டபெயர்தான். இந்த இரண்டாமவன் போன்றோரையே வள்ளுவர் பழி எய்துவர் என்கிறார். இறந்தபின் ஒருவன் நல்லவகையில் பேசப்பட வேண்டும். புகழை விட்டுச் சென்றவன் போற்றிப் பேசப்படுவான். வாழ்ந்து முடிந்தபின் எஞ்சி நிற்பதாகிய புகழினைப் பெறாத ஒருவனின் வாழ்க்கையை உலகோர் பழியாகத்தான் கருதுவார்கள். இசையில்லா வாழ்வு வசையாகும்.

ஒருவன் புகழ் பெறாதவனாக இருக்கலாம். ஆனால் அவன் ஒரு குற்றமும் செய்யவில்லை. பின் ஏன் இகழப்படவேண்டும்? மணக்குடவர் சொல்கிறார்: வேறு குற்றம் வேண்டா, புகழின்மைதானே அமையும். பரிமேலழகர் புகழில்லாதவன் இகழப்படுவதற்குப் புகழில்லாமையே காரணமாய் இருத்தலின் அவனுக்கு நிந்தை உண்டாவதற்கு ஏதுவான வேறொரு குற்றம் வேண்டாம் என்கிறார். புகழோடு வாழ்ந்தவர் மற்றவர்க்கும் வழிகாட்டியாக அமைந்து போற்றிப் புகழப்படுவார். அதற்கு மாறாக, புகழ் இல்லாவிட்டால் போகிறது என்றவர்கள் மற்றவர்களுக்குப் பயன் தராமல் இருந்த இடம் தெரியாமல் மறைவதால் இகழ்ச்சிக்கு உரியவர் ஆகிறார். நற்பெயரை ஈட்டவேண்டும். அவ்வாறு செய்யாமல் வாழ்ந்தால் அவர்களது வாழ்க்கை பழியுடைய இழிவான வாழ்க்கையாகவே அமைந்துவிடும் என்று கூறுகிறார் வள்ளுவர்.

'இசையென்னும் எச்சம்' குறிப்பது என்ன?

'இசையென்னும் எச்சம்' என்ற தொடர்க்குப் புகழாகிய ஒழிபு, கீர்த்தி, புகழ் என்கிற செல்வம், புகழ் என்னும் எச்சம், புகழ் என்னும் பிள்ளை, தமக்குப்பின் நிற்பதாகிய இசையென்னும் சிறப்பு, தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகிய புகழ், பின் நிலைக்கும் புகழ், புகழ் என்கிற எச்சமாகிய குழந்தை, புகழ் என்ற மிச்சம், புகழ் என்னும் வைப்பு, புகழ் மக்களைப் போல எஞ்சி நிற்பது என்னும் கருத்துப்பட நின்றது, என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

எச்சம் என்ற சொல் இறக்கும்போது எஞ்சி (மிகுந்து) நிற்பது என்ற பொருளில் வந்தது. 'இசையென்னும் எச்சம்' என்றது விட்டுச்செல்வதைக் குறிக்கும், இசையென்னும் எச்சம் பெறாஅ விடின் என்றதால் இசையில்லை என்றால் வசை அதாவது பழி மிஞ்சும் எனப் பொருள்படும்.
எச்சம் என்ற சொல்லுக்கு எஞ்சியிருப்பது, புகழ், பிள்ளை என்றெல்லாம் உரைகொள்வர்; இச்சொல்லுக்கு மக்கள் என்ற பொருளையே சில உரையாசிரியர்கள் விரும்புகின்றனர் எனத் தெரிகிறது.
தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப் படும் (நடுவுநிலைமை114 பொருள்: நடுவுநிலைமை உடையவர், என்பதும் நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர் எச்சத்தால் அறியப்படும்) என்ற குறள் நடையில் அமைந்த பாடல் இது.

'இசையென்னும் எச்சம்' என்பதற்குப் 'புகழ் எனப்படும் எஞ்சி நிற்பது' என்பது பொருள்.

இறந்தபின் எஞ்சி நிற்பதாய புகழைப் பெறாவிட்டால் உலகத்து எத்தகையோர்க்கும் இகழ்ச்சியாகுமென்று சொல்லுவர் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

புகழ்மிஞ்சாமல் சென்ற வாழ்வு பழிக்கப்படும்.

பொழிப்பு

புகழ் என்கிற எச்சத்தைப் பெறாவிட்டால் அஃது ஒருவனுக்கு பழி என்று சொல்லுவர்.