'இல்லை' என்று வருபவர்க்கு 'இல்லை' என்று கூறாது, அவரது பசிப்பிணி தீர்க்கும் அறச்செயலே ஈகையாகும்.
ஒரு பொருளும் இல்லாத வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுத்துதவுவதை அது குறிக்கும். மற்றவர்க்குக் கொடுப்பது எல்லாம் பயனை எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மையுடையது. பசி தீர்த்தல் என்ற இந்த அறத்தை வள்ளுவர் இன்றியமையாத குணமாகக் கருதுகிறார். 'பசி என்னும் தீப்பிணி' 'அற்றார் அழிபசி' என்ற தொடர்களால் பசியைக் குறிப்பிட்டார். சங்க காலத்திலும் சிறு குடி பண்ணன் போன்ற வண்மையாளரை புலவர் 'பசிப்பிணி மருத்துவன்' என்று கூறிப் புகழ்ந்தனர். அக்காலத்தில் பகிர்ந்துண்ணல், கொடை, பரிசில், உணவிடல் என்ற பலநிலைகளில் சமூக வழக்கிலிருந்த ஈகை, குறள் காலத்தில் வறியவனின் பசி தீர்த்தல் என்ற பொருளில் இறுக்கம் பெற்றது என்பர். விருந்தோம்பல் என்பதும் அன்று ஈகையைச் சார்ந்ததாகவே கருதப்பட்டது என அறிகிறோம். ஈகை என்பது தனி உயிர்த் துன்பம் நீக்கும் சிறப்புக் கொடை.
புகழ் என்ற அதிகாரத்தில் வள்ளுவர் 'ஈதல் இசைபட வாழ்தல்' என்று ஈதலால் புகழ் பெறலாம் என்று ஈகையைப் புகழோடு இணைத்துச் சொல்வார்.
ஈகை என்று வள்ளுவர் சிறப்பித்து உரைப்பது வயிற்றீகை. அது இயல்பூக்க நிலையில் உண்டாவது. இல்லை என்ற துயரை எடுத்துரைக்கும் முன்பே கொடுக்கப்படுவது. அது எதையும் எதிர்பார்த்துச் செய்வதில்லை. 'இம்மைச் செய்தது மறுமைக்காம்' என்று புதிதாய் அன்று கூறப்பட்ட வினைக் கொள்கையைப் புலவர் மரபு ஏற்றதில்லை.
இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்' எனும்
அற விலை வணிகன் ஆஅய் அல்லன்;
பிறரும் சான்றோர் சென்ற நெறி என,
ஆங்குப் பட்டன்று, அவன் கைவண்மையே (புறநானூறு 134 பொருள்: ஆய் அறம் செய்யும் வணிகம் அல்லன். தன் பணத்தை இந்த உலகில் முதலீடு செய்து மறு உலகில் அதன் ஊதியத்தைப் பெறுவதில்லை. சான்றோர்களின் மரபார்ந்த வழியில் அவன் வாரி வழங்குகின்றான்) என்று சங்கப்புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் முழங்கினார். அறம் அறத்திற்காகச் செய்யப்படவேண்டும். ஈகை ஈர உள்ளத்துடன் ஈகைக்காகச் செய்யப்படுவது.
வறியவர்க்குக் கொடுப்பதில் ஒரு மகிழ்ச்சியான இன்பம் இருக்கின்றது; இதை ஏன் ஈயாதவன் உணர்வதில்லை என வியக்கிறார் வள்ளுவர்.
ஈயாமல் செல்வத்தைச் சேர்த்து வைப்பவர் இகழப்படுகிறார். நிரப்பிய உணவைத் தனித்து உண்பது, இரப்பதைவிட பார்வைக்கு அருவருப்பானது, எனச் சொல்லப்படுகிறது.
சாதலை எவரும் விரும்புவதில்லை; ஆனால் கண்முன் பசித்தவன் இருக்க அவன் துயர் தீர்க்க முடியாத நிலையில் சாதலை ஒருவன் விரும்பலாம் எனவும் கூறப்படுகிறது.