சாதலின் இன்னாதது இல்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை
(அதிகாரம்:ஈகை
குறள் எண்:230)
பொழிப்பு (மு வரதராசன்): சாவதைவிடத் துன்பமானது வேறொன்றும் இல்லை. ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாத நிலை வந்தபோது அச்சாதலும் இனியதே ஆகும்.
|
மணக்குடவர் உரை:
சாதலின் மிக்க துன்பமில்லை. அதுவும் இனிதாம் இரந்து வந்தவர்க்குக் கொடுத்தல் முடியாவிடத்து.
இஃது ஈயாது வாழ்தலில் சாதல் நன்றென்றது.
பரிமேலழகர் உரை:
சாதலின் இன்னாதது இல்லை - ஒருவற்குச் சாதல் போல இன்னாதது ஒன்று இல்லை, அதூஉம் ஈதல் இயையாக் கடை இனிது - அத்தன்மைத்தாகிய சாதலும், வறியார்க்கு ஒன்று ஈதல் முடியாதவழி இனிது.
(பிறர்க்குப் பயன்படாத உடற்பொறை நீங்குதலான் 'இனிது' என்றார். இவை மூன்று பாட்டானும் ஈயாமையின் குற்றம் கூறப்பட்டது.)
வ சுப மாணிக்கம் உரை:
ஓர் ஏழைக்கு உதவ முடியாத போது விரும்பாச் சாவும் விரும்பத்தகும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
சாதலின் இன்னாதது இல்லை; அதூஉம் ஈதல் இயையாக் கடை இனிது .
பதவுரை: சாதலின்-இறத்தலைவிட; இன்னாதது-கொடியது; இல்லை-இல்லை; இனிது-நன்றானது; அதூஉம்-அதுவுங்கூட; ஈதல்-கொடுத்தல்; இயையாக்கடை-இணங்காதபோது, ஒவ்வாதபோது, முடியாதவழி.
|
சாதலின் இன்னாதது இல்லை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சாதலின் மிக்க துன்பமில்லை;
பரிதி: மரணம் என்று சொல்லுகிறது பாரமிகுதி;
காலிங்கர்: இவ்வுலகத்து ஒருவர் இனிது வாழாது இறந்துபடுதலின் இன்னாங்குடையது இல்லையன்றே;
பரிமேலழகர்: ஒருவற்குச் சாதல் போல இன்னாதது ஒன்று இல்லை;
'சாதலின் மிக்க துன்பமில்லை' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஒருவனுக்குச் சாவதுபோலத் துன்பம் தருவது வேறில்லை', 'சாவைக் காட்டிலும் துன்பம் தரக்கூடிய நிகழ்ச்சி வேறொன்றும் இல்லை', 'சாவது போலத் துன்பந்தரத் தக்கது இல்லை', 'சாதலைவிடத் துன்பம் தருவது வேறொன்றும் இல்லை', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
சாதல்போல் துன்பம் தருவது வேறு இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.
இனிததூஉம் ஈதல் இயையாக் கடை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதுவும் இனிதாம் இரந்து வந்தவர்க்குக் கொடுத்தல் முடியாவிடத்து.
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஈயாது வாழ்தலில் சாதல் நன்றென்றது.
பரிதி: அதிலும் நன்று கொடாமல் வீணாள் கழித்தல் என்றவாறு.
காலிங்கர்: மற்று அதுவும் இனிது பிறர்க்கு ஒன்று கொடுத்தல் கூடாத இடத்து என்றவாறு.
பரிமேலழகர்: அத்தன்மைத்தாகிய சாதலும், வறியார்க்கு ஒன்று ஈதல் முடியாதவழி இனிது.
பரிமேலழகர் குறிப்புரை: பிறர்க்குப் பயன்படாத உடற்பொறை நீங்குதலான் 'இனிது' என்றார். இவை மூன்று பாட்டானும் ஈயாமையின் குற்றம் கூறப்பட்டது.
'அதுவும் இனிதாம் இரந்து வந்தவர்க்குக் கொடுத்தல் முடியாவிடத்து' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஆனால் ஏழைக்குக் கொடுத்துதவ இயலாத இடத்து அச்சாதலும் இனியதாம்', 'ஈகைக் குணம் இல்லாதவனைப் பற்றிய அந்தச் சேதிகூட இன்பமுண்டாக்கும்', 'அதுவும், வறியவர்க்கு விரும்பிய தொன்றைக் கொடுக்க முடியாத இடத்தாயின் நல்லதே', 'அத்தன்மைத்தாகிய சாதலும் வறியார்க்கு ஒன்று ஈதல் முடியாத வழி இனிதாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
அதுவும் இனிதாகிறது இரந்துவந்தவர்க்கு உதவ உள்ளம் ஒவ்வாத போது என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
சாதல்போல் விரும்பத்தகாதது வேறு இல்லை; அதூஉம் இனிதாகிறது ஈதல் இயையாக் கடை என்பது பாடலின் பொருள்.
'ஈதல் இயையாக் கடை' குறிப்பது என்ன?
|
ஐயோ! இல்லையென்று வந்து கேட்டவர்க்கு ஒன்று கொடுக்க மனமில்லையே இச்செல்வர்க்கு.
பசிப்பிணி தீர்த்தலையே வள்ளுவர் ஈகை எனச் சிறப்பித்துரைக்கிறார். வறுமையுற்று பசித்து அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றவனுக்கு இச்சிறிய உதவியை எல்லோராலும் செய்ய முடியும் அதையும் செய்ய உள்ளமில்லாத ஒருவன் இவ்வுலகில் இருந்தென்ன போயென்ன என வள்ளுவர் இங்கு கேட்கிறார். 'மனமின்மையே ஈயாமைக்குக் காரணம் என்ற கருத்தால், கடமை செத்த நெஞ்சத்தவன் உடல் இருப்பது உலகிற்குப் பயனின்று என்ற எண்ணத்தால் சாதல் இனிது' என இடித்துரைப்பர் வள்ளுவர் என்பார் வ சுப மாணிக்கம்.
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை வைத்துஇழக்கும் வன்க ணவர்(பொருள்: பொருளைச் சேர்த்து வைத்து இழக்கும் கொடியவர்கள் பிறர்க்குக் கொடுத்து அவர்கள் மகிழ்தலால் எய்தும் இன்பத்தை அறியாரோ என்ன?) என இவ்வதிகாரத்து முற்குறள் (228) ஒன்றில் பொருள் இழப்பு உண்டாகும் என எச்சரிக்கப்பட்டது. இங்கோ அவன் உயிரையே விடலாம் என ஏசுகிறார். ஈகையென்ற தூண்டு விசை செல்வர்களிடம் பொருட்பயன் தராதவிடத்து, இறுதி நிலையாக அவர்களது உயிர் இழப்பே நன்று.
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும் (ஒப்புரவறிதல் 214 பொருள்: உலக நடையை அறிந்து தொண்டு செய்து வாழ்கிறவன் உயிரோடு கூடி வாழ்பவனாவான்; அதனை அறியாதவன் செத்தவர்களில் ஒருவனாகக் கருதப்பெறுவான்) என முந்தைய அதிகாரக் குறள் கூறிற்று. ஈகையைச் செய்யமாட்டாது- பிறர்க்குப் பயன்படாது- வாழ்வதைவிட சாதல் நல்லதாயிற்று.
|
'ஈதல் இயையாக் கடை' குறிப்பது என்ன?
'ஈதல் இயையா' என்றதற்கு இரந்து வந்தவர்க்குக் கொடுத்தல் முடியாத, கொடாமல் வீணாள் கழித்தல், பிறர்க்கு ஒன்று கொடுத்தல் கூடாத, வறியார்க்கு ஒன்று ஈதல் முடியாத, வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாத, வறுமையால் வந்து இரந்தவர்க்குப் பொருள் இசையாத, ஈதல் இயையாத, ஈதல் இயலாத, ஓர் ஏழைக்கு உதவ முடியாத, ஏழைக்குக் கொடுத்துதவ இயலாத, ஈகைக் குணம் இல்லாதவனைப் பற்றிய சாவுச் சேதி, வறியவன் விரும்பிய ஒன்றைக் கொடுக்க முடியாத, வறியவர்க்கு விரும்பிய தொன்றைக் கொடுக்க முடியாத, வறியார்க்கு ஒன்று ஈதல் முடியாத, ஓர் எளியவன் ஓரு பொருளைக் கேட்க அப்பொருளைத் தம்மால் கொடுக்க முடியாத, பசித்தவனுக்கு ஒன்று கொடுக்க முடியாத, வறியார்க்கொன்றீதல் இயலாத, பிறன் யாசிக்கும் போது அவனுக்கு உதவி செய்ய முடியாத, ஈதல் இயலாத என்று உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
ஈதல் என்பது வறியார்க்கொன்று கொடுப்பது என்ற பொருள் தருவது. இயையா என்ற சொல்லுக்குப் பல உரையாசிரியர்களும் (உதவ) முடியாத, (கொடுத்தல்) கூடாத, கொடுத்துதவ இயலாத என்றே பொருள் கொன்டனர். இவர்கள் உரைப்பது ஈவதற்கு முடியாத நிலையில் அம்முடியாமையை எண்ணித் துன்புற்றுக் கிடப்பதினும் இறந்தாலும் கூட இன்பமாய் அமையும் என்பதாக உள்ளது. தான் வறுமையுற்றதால் ஈயமுடியாத நிலையில் இருப்பதாகக் கூறும் இவர்கள் சாதல் நல்லது என்பதற்கு வறியவர்க்கு உதவமுடியாத வேளைகளில் உயிர்விட்டவர்கள் பற்றி பழம்நூல்களும் குறிப்பிடுகின்றன எனக் கூறி இன்மை உரைத்தார்க்கு அது நிறைக்கல் ஆற்றாக்கால், தன் மெய் துறப்பான் மலை (கலித்தொகை 43:26 பொருள்: மிடியாலே பொருளின்மையைச் சொன்னார்க்கு அப்பொருளை [அவர்க்கு] நிறைத்தலாற்றாதபொழுது தன்மெய்யைத் துறக்குமவன்மலை),
....ஈதல், இரந்தார்க்கு ஒன்று, ஆற்றாது வாழ்தலின், சாதலும் கூடுமாம் மற்று (கலித்தொகை 61: 11 பொருள்: தம்பால் இரந்தவர்களுக்கு யாதானு மொன்றை முகமாறாது ஈதலைநடத்தாது உயிர் வாழலிற் பின்னைச் சாதலுங்கூடும்) ஆகிய கலித்தொகை பாடல்களில் சொல்லப்படும் ஈதல் இல்லாது வாழ்தலின் சாதல் பற்றிய சான்றுகளைக் காட்டுவர். மேலும் மணிமேகலையின் ஆபுத்திரன், குமணன் ஆகியோர் பற்றிய செய்திகளையும் மேற்கோள் காட்டுவர். இன்னும் காளத்தி வள்ளல் வரலாற்றையும் சான்றிடுவர்.
இயையா என்றசொல் இணங்கு, பொருந்து எனவும் பொருள்படும். 'ஈதல் இயையா' என்பதற்கு ஈதலுடன் மனம் ஒவ்வாமை என்றும் பொருள் கொள்ளமுடியும். இது பொருளிருந்தும் மனம் இல்லாமையைக் குறிக்கும். இப்பொருள் கண்டவர்கள் ஈதல் இயையாக் கடை என்பதற்கு ஈதலை ஒவ்வாதவிடத்து, ஈதலுக்கு இணங்காத விடத்து எனப் பொருள் கொண்டு உரை செய்தனர். இவர்கள் ஈய மனமில்லாத செல்வர் சாகலாமே எனக் கூறினர், அத்தகையோர் உலகத்திலிருத்தல் தகாது என்பது குறிப்பு எனச் சொல்லி, 'ஈயாத புல்லரிருந்தென்ன போயென்ன, எட்டிமரம் காயாதிருந்தென்ன காய்த்துப் பலனென்ன' என்ற செய்யுளைச் சுட்டுவர்.
இவ்வாறாக இக்குறளுக்கு வறியார்க் கீயமுடியாத வறுமையுழத்தலினும் சாதல் நல்லது என்று ஒரு சாராரும் செல்வமிருந்தும் மனம் இல்லாமையால் கொடாதிருக்கும் கஞ்சர்கள் இறந்து படுவது நன்று என மற்றொரு சாராரும் உரை பகன்றுள்ளனர்.
அதிகாரப் போக்கை நோக்கும்போது இக்குறள் செல்வமிருந்தும் கொடுக்க மனம் இல்லாதவர்களைக் குறிப்பதாகவே கொள்ள முடிகிறது.
|
சாதல்போல் விரும்பத்தகாதது வேறு இல்லை; அதுவும் இனிதாகிறது இரந்துவந்தவர்க்கு உதவ உள்ளம் ஒவ்வாத போது என்பது இக்குறட்கருத்து.
வறுமைத் துயர் நீக்கும் ஈகைக்கு உள்ளம் இணங்கா நிலை மிகக் கொடியது.
சாவதுபோலத் விரும்பத்தகாதது வேறில்லை. இரந்துவந்தவர்க்கு கொடுத்துதவ மனமில்லாதபோது அச்சாதலும் இனியதாம்
|