இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0225



ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்

(அதிகாரம்:ஈகை குறள் எண்:225)

பொழிப்பு (மு வரதராசன்): தவ வலிமை உடையவரின் வலிமை பசியைப் பொறுத்துக் கொள்ளலாகும். அதுவும் அப்பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.

மணக்குடவர் உரை: பெரியாரது பெருமையாவது பசியைப் பொறுத்தல்: அதுவும் பெரிதாவது பிறர் பசியைத் தீர்ப்பாரது பெருமைக்குப் பின்பு.
இது தவம்பண்ணுவாரினும் தானம் பண்ணுவார் வலியுடைய ரென்றது.

பரிமேலழகர் உரை: ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் - தவத்தான் வலியார்க்கு வலியாவது தம்மையுற்ற பசியைப் பொறுத்தல், அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின் - அவ் வலிதான் அங்ஙனம் பொறுத்தற்கு அரிய பசியை ஈகையான் ஒழிப்பாரது வலிக்குப்பின்.
(தாமும் பசித்துப் பிறரையும் அது தீர்க்க மாட்டாதார் ஆற்றலின், தாமும் பசியாது பிறரையும் அது தீர்ப்பார் ஆற்றல் நன்று என்பதாம்.)

குன்றக்குடி அடிகளார் உரை: தவம் செய்வோரின் ஆற்றல் தமது பசியைப் பொறுத்துக் கொள்வதில் இருக்கிறது. இந்த ஆற்றல் பசித் துன்பத்தை ஈகையால் மாற்றுவார் ஆற்றலின் பின்னே வைத்து எண்ணப்படும். அதாவது பசியைப் பொறுத்தலிலும் பசியை மாற்றுவார் ஆற்றல் சிறப்புடையது. பசியைப் பொறுத்துக் கொள்ளும் ஆற்றல் என்பது பழக்கத்தினால் கூட எளிதாக அமையும். ஆனால் அறிவறிந்த ஆள்வினையால் பொருளீட்டி அப்பொருளின் மீது பற்று இல்லாமல் பசியால் வருந்துவோருக்கு வழங்கிப் பசியை மாற்றுவது என்பது எளிதில் வரக்கூடிய பண்பன்று. பசியைப் பொறுப்பாரிடம் விஞ்சியிருப்பது ஆற்றும் பண்பே. பசியை மாற்றுவோரிடம் ஆள்வினை பொருள் பற்றின்மை ஈகை ஆகிய முத்திறப் பண்புகள் சிறந்து விளங்குதல் அறிக.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்.

பதவுரை: ஆற்றுவார்-செய்யவல்லவர்க்கு; ஆற்றல்-வலிமை; பசி-பசி; ஆற்றல்-பொறுத்தல்; அப்பசியை-அந்தப் பசியை; மாற்றுவார்-ஒழிப்பவர்; ஆற்றலின்-வலியைவிட; பின்-பிறகு.


ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பெரியாரது பெருமையாவது பசியைப் பொறுத்தல்;
பரிதி: ஆற்றுவார் பசி ஆற்றலே பெரிது;
காலிங்கர்: தவம் மானம் முதலாகிய அனைத்துக் காரணங்களையும் தாம் இயற்றுகிற அறநெறிக்கு வழுவுதல் உண்டாகாமே அவற்றின் மதங்களை ஆற்றி ஒழுகுவாருடைய ஆற்றலின் மிக்க தவமாவது யாதோ எனில்; [மதங்களை-கொள்கைகளை]
பரிமேலழகர்: தவத்தான் வலியார்க்கு வலியாவது தம்மையுற்ற பசியைப் பொறுத்தல்;

'தவத்தான் வலியார்க்கு வலியாவது தம்மையுற்ற பசியைப் பொறுத்தல்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பசி பொறுத்தல் பேராற்றல்', 'தவவலிமையுடையார்க்கு வலிமையாவது தம்பசி பொறுத்தல்', 'தவம் செய்கிறவர்களின் சிறப்பு பசியைப் பொறுத்துக் கொள்ளும் திறமையில் அடங்கியது', 'தவம் வல்லவருக்கு வலிமையாவது பசிதாங்குதல்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பசி பொறுத்தல் ஆற்றலுடையவர் வலிமையில் பெரிது என்பது இப்பகுதியின் பொருள்.

அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதுவும் பெரிதாவது பிறர் பசியைத் தீர்ப்பாரது பெருமைக்குப் பின்பு.
மணக்குடவர் குறிப்புரை: இது தவம்பண்ணுவாரினும் தானம் பண்ணுவார் வலியுடைய ரென்றது.
பரிதி: அவன் சருகு பொசித்து தவசு பண்ணுவாரிலும் பெரியனாம்; எப்படி என்றால் சருகு பொசிப்பார் ஒருவரையும் பசியாற்றமாட்டார்; தன் ஆத்துமாவையும் ஒறுப்பர்; ஆகையால் இவனுக்கு அவர்கள் சரியல்லர் என்றவாறு..[பொசித்து-உண்டு; ஒறுப்பர்-வருத்துவர்]
காலிங்கர்: பசியை ஆற்றலாகின்ற பெருந்தவமானது வறியவர் வந்தால் அப்பசிப்பிணிக்கு மருந்தாகிய அமுதம்கொடுத்து மற்றதனை ஒழிப்பாரது புண்ணியத்திற்குப்பின் என்றவாறு.
பரிமேலழகர்: அவ் வலிதான் அங்ஙனம் பொறுத்தற்கு அரிய பசியை ஈகையான் ஒழிப்பாரது வலிக்குப்பின்.
பரிமேலழகர் குறிப்புரை: தாமும் பசித்துப் பிறரையும் அது தீர்க்க மாட்டாதார் ஆற்றலின், தாமும் பசியாது பிறரையும் அது தீர்ப்பார் ஆற்றல் நன்று என்பதாம்.

'அவ் வலிதான் அங்ஙனம் பொறுத்தற்கு அரிய பசியை ஈகையான் ஒழிப்பாரது வலிக்குப்பின்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அதனினும் பேராற்றல் பிறர் பசியை ஆற்றுவது', 'அவர் வலியும் தாங்க முடியாத பசியை ஈகையால் போக்குவாரது வலிமைக்கு அடுத்தபடிதான். (தவத்திலும் தானம் சிறந்தது)', 'அதுவும் கூட பிறர் பசியைத் தீர்த்து வைப்பவர்களின் திறமைக்குப் பிற்பட்டதுதான்', 'அவ் வலிமையும் அப்பசியைத் தமது ஈகையான் மாற்றுவாரது திறமைக்குப் பிற்பட்டதே' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அவர் ஆற்றலும் பிறர் பசியைப் போக்குவாரது வலிமைக்கு அடுத்தபடிதான் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பசி பொறுத்தல் ஆற்றுவார் வலிமையில் பெரிது; அவர் ஆற்றலும் பிறர் பசியைப் போக்குவாரது வலிமைக்கு அடுத்தபடிதான் என்பது பாடலின் பொருள்.
'ஆற்றுவார்' யார்?

நோற்பார் தம்பசி பொறுப்பவர்; ஈவார் பிறர்பசி போக்குபவர்.

பசி பொறுத்தலுக்குச் சிறந்த ஆற்றல் வேண்டும். அப்படிப் பசி தாங்குவோரது வலியினும் பசிநீக்கும் ஈவோரது ஆற்றல் பெரிது.
தனது உடலுக்குவரும் துன்பத்தைப் பொறுத்துக்கொள்பவன் தவ வலிமையுடையவன் என அறியப்படுவான். குறளிலேயே பிறிதோரிடத்தில் உற்றநோய் நோன்றல் தவத்தின் உருவாகக் கூறப்பட்டுள்ளது. பசி என்னும் உடல் துன்பத்தைப் பொறுப்பவன் தவ ஆற்றல் பெற்றவன். அப்படிப்பட்டவர்களின் வலிமை பெரிதென்றாலும், அவர்கள் தம் பசியைப் பொறுப்பதற்கே முயல்பராவர். ஆனால் ஈகைக் குணம் கொண்டவர்களோ பிறருடைய பசிப்பிணியையும் ஈகைச்செயல்களால் மாற்றும் பேராற்றல் பெற்றிருக்கின்றார்கள். ஆகையால் தவம் செய்வோரின் வலிமை ஈகையாளரின் ஆற்றலுக்கு அடுத்ததுதான்.
பிறர் பசி ஆற்றுவது வலிமை மிக்கது என்பதைச் சொல்ல வந்த குறள் இது. துறவிகள் தம் பசியை அடக்கி, வயிற்றைச் சிறுது சிறுதாகப் பசியாவாறு செய்யும் ஆற்றலை வளர்த்துக் கொள்கின்றனர். தவம் செய்பவருக்கு பசி பொறுத்தல் இயலும் என்றாலும் அவர்களால் பிற பசியைப் போக்க முடியாது. எனவே பசிப்பிணி நீக்கும் வள்ளண்மை உயர்ந்தது. தமது பசியை அடக்கும் வித்தையில் வல்லவரைவிட பிறர் பசியை போக்குவோரது ஆற்றல் பாராட்டற்குரியது என்கிறார் வள்ளுவர். பசி பொறுப்பாரினும் பசி தணிக்க உதவுபவர் பெரியவர்.

இதேபோன்ற பொருளும் சொல்லமைப்பும் உடைய மற்றொரு குறள் உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின் (பொறையுடைமை 160 பொருள்: உண்ணாது நோன்பிருப்பவர் பெரியவர்; அவர் பிறர் சொல்லும் வன்சொற்களைப் பொறுத்தார்க்கு அடுத்துதான்) என்பது.

ஒரே வகையான ஒலியுடைய சொற்கள் வெவ்வேறு பொருளை உணர்த்தும் நுட்பமான ஒலிநயக் கற்பனையோடு பொருந்திய சொல் விளையாட்டோடு அழகுற அமைந்துள்ள குறள்களில் இதுவும் ஒன்று என்பார் க த திருநாவுக்கரசு.

'ஆற்றுவார்' யார்?

'ஆற்றுவார்' என்ற சொல்லுக்குப் பெரியார், தவசு பண்ணுவார், மதங்களை ஆற்றி ஒழுகுவார், தவத்தான் வலியார், தவவலிமை உடையவர், தவசி, துறவி, தவம் செய்வோர், தவவலிமையுடையார், தவம் செய்கிறவர், துன்பத்தைத் தாங்குவார், தவம் வல்லவர், துன்பம் பொறுப்பார், தவம் இயற்றுவார் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

ஆற்றுவார் என்ற சொல்லுக்கு நேர் பொருள் பொறுப்பார் என்பது. இக்குறள் 'ஈகை' என்னும் பசியாற்றல் பண்பு பற்றிய அதிகாரத்தில் வருவது. இப்பாடலில் பசி பொறுப்பவர் பசித்துன்பம் நீக்குவாரோடு ஒப்பு நோக்கப் படுகின்றார். பசி தாங்குதல் என்றவுடன் அனைவரது நினைவிற்கும் தவம் செய்வோர் வருவர். தவம் செய்வார் என்று பாடலில் சொல்லப்படவில்லை. ஆனால் உரையாளர்களில் பெரும்பாலோர் ஆற்றுவார் என்ற சொல் தவசியைக் குறித்ததாகவே கொண்டு உரை பகன்றனர். உணவு உட்கொள்ளாமலேயே அல்லது உண்டிசுருக்கி வாழும் வலிமை சிலர்க்கு உண்டு. அவர்களில் துறவறம் மேற்கோண்டவர்களும் உண்டு. தவம் வல்லவருக்கு வலிமையாவது பசிதாங்குதல் என்பதால் அவர்களை ஆற்றுவார் என உரையாசிரியர்கள் சுட்டினர் போலும்.

குறளில் இன்னும் இரண்டு பாடல்கள் “ஆற்றுவார் ஆற்றல்” என்ற தொடரைத் தொடக்கமாகக் கொண்டுள்ளன: ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை (பெரியாரைப் பிழையாமை 891 பொருள்: மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல், காப்பவர் செய்து கொள்ளும் காவல் எல்லாவற்றிலும் சிறந்தது) ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை (சான்றாண்மை 985 பொருள்: ஆற்றலுடையவரின் ஆற்றலாவது பணிவுடன் நடத்தலாகும். அது சான்றோர் தம் பகைவரைப் பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும்.) இவ்விரண்டிலும், ஆற்றுவார் என்ற சொல் ஆற்றலுடையவர் என்ற பொதுப்பொருளிலே ஆளப்பட்டுள்ளது.

ஆற்றுவார் என்பது (பசி) பொறுப்பவர் குறித்தது.

ஆற்றலுடையவர் வலிமையில் பெரிது பசி பொறுத்தல்; அவர் ஆற்றலும் பிறர் பசியைப் போக்குவாரது வலிமைக்கு அடுத்தபடிதான் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஈகை என்னும் பசிப்பிணி‌ தீர்த்தல்‌ வன்மையிற்‌ சிறந்தது.

பொழிப்பு

பசி பொறுப்பவர் ஆற்றலுடையார்; அந்த வல்லமையும் பிறர் பசியைப் போக்குதற்கு அடுத்தபடிதான்.