ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை
வைத்துஇழக்கும் வன்க ணவர்
(அதிகாரம்:ஈகை
குறள் எண்:228)
பொழிப்பு (மு வரதராசன்): தாம் சேர்த்துள்ள பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்துவிடும் வன்கண்மை உடையவர் பிறர்க்குக் கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ?
|
மணக்குடவர் உரை:
கொடுத்த கொடையினால் பெற்றவர்க்கு வரும் முகமலர்ச்சியைக் கண்டறியாரோ? தாமுடைய பொருளைக் கொடாதே வைத்துப் பின் னிழக்கின்ற வன்கண்ணர்.
இஃது இடார் இழப்பரென்றது.
பரிமேலழகர் உரை:
தாம் உடைமை வைத்து இழக்கும் வன்கணவர் - தாம் உடைய பொருளை ஈயாது வைத்துப் பின் இழந்துபோம் அருளிலாதார், ஈத்து உவக்கும் இன்பம் அறியார்கொல் - வறியார்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து அவர் உவத்தலான் அருளுடையார் எய்தும் இன்பத்தினைக் கண்டறியார் கொல்லோ!
(உவக்கும் என்பது காரணத்தின்கண் வந்த பெயரெச்சம், அஃது இன்பம் என்னும் காரியப் பெயர் கொண்டது. அறிந்தாராயின், தாமும் அவ்வின்பத்தை எய்துவது அல்லது வைத்து இழவார் என்பது கருத்து.)
மயிலை சிவமுத்து உரை:
தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல் மறைத்து வைத்திருந்து முடிவில் இழந்துவிடும் கன்னெஞ்சம் படைத்தவர்கள் பிறர்க்குக் கொடுத்து அதனால் அடையும் மகிழ்ச்சியினை அறியமாட்டார்கள் போலும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
தாம்உடைமை வைத்து இழக்கும் வன்கணவர் ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல்?
பதவுரை:
ஈத்து-கொடுத்து; உவக்கும்-மகிழ்தலால்; இன்பம்-இன்பம்; அறியார் கொல்-அறியமாட்டாரோ?; தாம்-தாங்கள்; உடைமை-பொருள்; வைத்து-வைத்து; இழக்கும்-இழந்துபோம்; வன்கணவர்- கொடியவர்.
|
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கொடுத்த கொடையினால் பெற்றவர்க்கு வரும் முகமலர்ச்சியைக் கண்டறியாரோ?
பரிதி: கொடுத்து அதனால் வரும் இன்பம் அறியார் அவர் யார் என்னில்;
காலிங்கர்: வேண்டுநர் யாவருக்கும் கொடுத்து, அதனால் தனது மனம் மகிழும் இன்பத்தை அறியார் போலும்;
பரிமேலழகர்: வறியார்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து அவர் உவத்தலான் அருளுடையார் எய்தும் இன்பத்தினைக் கண்டறியார் கொல்லோ!
பரிமேலழகர் குறிப்புரை: உவக்கும் என்பது காரணத்தின்கண் வந்த பெயரெச்சம், அஃது இன்பம் என்னும் காரியப் பெயர் கொண்டது.
மணக்குடவர் 'கொடையினால் பெற்றவர்க்கு வரும் முகமலர்ச்சியைக் கண்டறியாரோ?' என்று இப்பகுதிக்கு உரை நல்கினார். பரிதியும் காலிங்கரும் கொடுத்ததினால் வரும் இன்பம் அறியார் போலும் என்றனர். பரிமேலழகர் 'கொடுத்து அவர் உவத்தலான் அருளுடையார் எய்தும் இன்பத்தினைக் கண்டறியார் கொல்லோ' என்று விரிவாகக் கூறினார்,
இன்றைய ஆசிரியர்கள் 'கொடுத்து மகிழும் இன்பத்தை அறியாரோ?', 'இரவலர்கட்குக் கொடுத்து அவர்கள் மகிழ்தலால் கொடைஞர்கள் எய்தும் இன்பத்தைக் கண்டறியாரோ?', 'ஏழைகளுக்குக் கொடுத்து மகிழ்ச்சி பெறும் இன்பத்தை அறியாததனால் அப்படிச் செய்கிறார்களோ?', 'பிறர்க்குக் கொடுப்பதனால் ஏற்படும் மகிழ்ச்சியால் அடையும் இன்பத்தை அறியமாட்டார்கள் போலும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
பிறர்க்குக் கொடுத்து மகிழும் இன்பத்தை அறியாரோ? என்பது இப்பகுதியின் பொருள்.
தாம்உடைமை வைத்துஇழக்கும் வன்கணவர்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தாமுடைய பொருளைக் கொடாதே வைத்துப் பின் னிழக்கின்ற வன்கண்ணர்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது இடார் இழப்பரென்றது.
பரிதி: உடைமையைத் தேடி வைத்துத் தானும் பொசியாமல் பாழே கெடுப்பவர் என்றவாறு. [பொசியாமல்-உண்ணாமல்; பாழே-வீணாக]
காலிங்கர்: யாரோ எனில், உடைமையாகிய பொருளினை வழங்காது ஈட்டிவைத்து இழந்து உயிர் கழியும் தறுகணாளர் என்றவாறு.
பரிமேலழகர்: தாம் உடைய பொருளை ஈயாது வைத்துப் பின் இழந்துபோம் அருளிலாதார்,
பரிமேலழகர் குறிப்புரை: அறிந்தாராயின், தாமும் அவ்வின்பத்தை எய்துவது அல்லது வைத்து இழவார் என்பது கருத்து.
'தாமுடைய பொருளைக் கொடாதே வைத்துப் பின் னிழக்கின்ற வன்கண்ணர்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பொருளைத் தேடி இழக்கும் கொடியவர்கள்', 'தம் பொருளை பிறர்க்கு வழங்காமல் வைத்திருந்து பின்னர் இழக்கும் கொடியவர்கள்', 'தம்முடைய செல்வத்தை அப்படியே வைத்துவிட்டு உயிரிழந்து போகிற இரக்கமற்றவர்கள்', 'தாம் கொண்டிருக்கும் பொருளைப் பிறர்க்குக் கொடுக்காது சேர்த்து வைத்துப் பின் இழந்துபோம் கொடியவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
தம்பொருளைச் சேர்த்து வைத்து இழக்கும் கொடியவர்கள் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
தம்பொருளைச் சேர்த்து வைத்து இழக்கும் கொடியவர்கள் ஈத்துவக்கும் இன்பம் அறியாரோ? என்பது பாடலின் பொருள்.
'ஈத்துவக்கும் இன்பம்' என்ற தொடர் குறிப்பது என்ன?
|
வறியவர்க்குக் கொடுக்காமல் மறைத்து வைத்துத் தமது பொருளைப் பிறரிடம் பறிகொடுக்கும் அருளற்றவர் ஈவதால் கிடைக்கும் மகிழ்ச்சியின் இன்பத்தை அறியமாட்டாரோ!
இன்பம்பெற உலகில் எண்ணற்ற வழிகள் உள்ளன. ஈவதிலும் ஒரு தனி இன்பம் உண்டு. ஆனால் பொருள் மேன்மேலும் சேர்வது கண்டு களிப்படையும் ஈரநெஞ்சம் இல்லாதவர்க்கு, ஈவதன் இன்பம் இருப்பது தெரியாது போலும். பொருளிருந்தும் பிறர்க்கு ஈவதற்கு மனமில்லாத அவர்கள், செல்வத்தை வறிதே வைத்திருந்து, பிறகு தீயாரிடம் இழந்து வருந்தப் போகின்றார்களே என இரங்கிச் சொல்கின்றது இப்பாடல்.
பொருள் வைத்திருந்தும் வறியார்க்கு ஒன்று ஈயாதவர்களை 'வன்கணவர்' அதாவது கொடியவர் என்று கூறுகிறார் வள்ளுவர். இது அவருடைய சினத்தின் வெளிப்பாடு.
ஈயானது தேனைச் சேர்த்து வைத்துக் கொண்டு தானும் உண்ணாது வலியவர் கவர்ந்து சென்று விடுவதத் தடுக்கவும் இயலாதது போல, பூட்டி வைத்திருந்தாலும் அப்பொருளைத் தீயார் கொள்ளலாம்; ஒரு பொருளை நிலையாக அழிவில்லாதபடி வைத்திருக்கவும் முடியாது; மண்ணைவிட்டுப் போகும்போது உடன் கொண்டு செல்லப்போவதுமில்லை. எப்படியென்றாலும் என்றேனும் இழந்துதானே தீர வேண்டும். அதை ஈந்து இன்பம் பெறலாமே எனக் கேட்கிறது பாடல்.
நாகை சொ தண்டபாணி 'ஒருமுறையேனும் கொடுத்து அதனால் வரும் இன்பத்தை நுகர்ந்தவர் பின்பு அது செய்யாமல் வைத்திழவார்' எனக் கூறுவார்.
ஏழைகளுக்குக் கொடுத்து அவ்வறியோர் மகிழ்வதால் அருளுடையார் அடையும் இன்பத்தை வன்கண்ணர் அறிந்தால், அவரும் அவ்வின்பத்தை அடைவதல்லாமல் பொருளைச் சேர்த்து வைத்து இழக்க மாட்டார் என்பது கருத்து.
|
'ஈத்துவக்கும் இன்பம்' என்ற தொடர் குறிப்பது என்ன?
'ஈத்துவக்கும் இன்பம்' என்றதற்குக் கொடுத்த கொடையினால் பெற்றவர்க்கு வரும் முகமலர்ச்சி, கொடுத்து அதனால் வரும் இன்பம், வேண்டுநர் யாவருக்கும் கொடுத்து, அதனால் தனது மனம் மகிழும் இன்பம், வறியார்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து அவர் உவத்தலான் அருளுடையார் எய்தும் இன்பம், பிறர்க்குக் கொடுத்து மகிழும் மகிழ்ச்சி, வறியார்க்குக் கொடுத்து அவ்வாறு கொடுப்பதனால் தமக்கு ஏற்படும் இன்பம், வறியார்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து மகிழும் இன்பம், கொடுத்து மகிழும் இன்பம், இரவலர்கட்குக் கொடுத்து அவர்கள் மகிழ்தலால் கொடைஞர்கள் எய்தும் இன்பம், ஈகையைப் பெற்றுக் கொண்ட ஏழைகளின் உவகையும், அதைக் கண்டு ஈகையைக் கொடுத்தவன் அடையக்கூடிய உவகையும் சேர்ந்த இன்பம். வறியவர்களுக்கு வேண்டியன கொடுத்து அவர்கள் மனமகிழ்வதைக் கண்டு இன்பமடைவது, பிறர்க்குக் கொடுப்பதனால் ஏற்படும் மகிழ்ச்சியால் அடையும் இன்பம், பிறர்க்குக் கொடுத்து அதனால் அடையும் மகிழ்ச்சி, பிறர்க்குக் கொடுத்து அதனால் அவர்க்குண்டாகும் முகமலர்ச்சியினால் தாம் அடையும் இன்பம், வறியார்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து மகிழும் இன்பம், (இல்லார்க்கு) ஈந்து (அவர் பெற்று) மகிழ்தலால் (ஈந்தார் அடையும்) இன்பம் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
'ஈத்துவக்கும் இன்பம்' என்ற தொடர்க்குக் கொடுப்பதால் பெறுபவர் இன்பத்தைக் கூறியது என்று சிலர் பொருள் கூறினர். இரவலர் மகிழ்வதைக் கண்டு ஈபவன் இன்பம் எய்துவது குறித்தது என்றனர் மற்றவர்கள். வறியவர் வாங்கிச் செல்லும்போது அவர் முகம் மலர்வதைக் காண்பதும் இன்பம்தான். எனினும் இக்குறள் முன்னர்க் கூறிய ஈதலால் கொடுப்பவன் எய்தும் இன்பத்தைப் பற்றியது.
ஈத்துவக்கும் இன்பம் கொடுப்பவனுக்கு இயல்பூக்க நிலையில் எழும். ஈகையினால் ஏற்படும் மனமகிழ்ச்சி ஈவோர் உள்ளார்ந்து இன்புறுவது. ஆதலால் 'உவக்கும்' என்று கூறி அதற்குப் பின்னர் 'இன்பம்' என்றும் அழைத்தார். கொடுப்பதனால் பெறும் இன்பத்தைப் பழகியவர்கள் அந்த இன்பத்தை இழக்க விரும்ப மாட்டார்கள்.
தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார்(கல்வி 399 பொருள்: தாம் இன்பம் அடைகின்றதுபோல உலகமும் இன்பம் அடைகிறதைக் கண்டு, கற்றவர் மேன்மேலும் கல்வியின்மேல் காதல் கொள்வர்) என்ற குறள் இங்கு ஒப்புநோக்கத் தகும்.
|
பொருளைச் சேர்த்து வைத்து இழக்கும் கொடியவர்கள் பிறர்க்குக் கொடுத்து அவர்கள் மகிழ்தலால் எய்தும் இன்பத்தை அறியாரோ என்ன? என்பது இக்குறட்கருத்து.
இரந்தோரின் சிரிப்பில் ஈகையாளன் இன்பம் காண்கிறான்.
தம் பொருளை வைத்திருந்து இழக்கும் கல்நெஞ்சர்கள், கொடுத்து அவர்கள் மகிழ்தலால் தாம் எய்தும் இன்பத்தை அறியாரோ?
|