இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0222



நல்லாறு எனினும் கொளல்தீது மேல்உலகம்
இல்லெனினும் ஈதலே நன்று

(அதிகாரம்:ஈகை குறள் எண்:222)

பொழிப்பு (மு வரதராசன்): பிறரிடமிருந்து பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது. மேலுலகம் இல்லையென்றாலும் பிறர்க்குக் கொடுப்பதே நல்லது.



மணக்குடவர் உரை: ஒருவன்மாட்டுக் கொள்ளல் நன்மை பயக்கும் நெறியெனினும் கோடல் தீது: ஒருவர்க்குக் கொடுத்தாற் பாவ முண்டெனினும் கொடுத்தல் நன்று.
கொள்வோ ரமைதி யறிந்து கொடுக்கவேண்டுமெனினும் இது வரையாது கொடுத்தலாதலால் யாதொருவாற்றானுங் கொடை நன்றென்பது கூறிற்று.

பரிமேலழகர் உரை: கொளல் நல் ஆறு எனினும் தீது - ஏற்றல் வீட்டுலகிற்கு நல்ல நெறி என்பார் உளராயினும் அது தீது, மேல் உலகம் இல் எனினும் ஈதலே நன்று - ஈந்தார்க்கு அவ்வுலகு எய்துதல் இல்லை என்பார் உளராயினும் , ஈதலே நன்று.
('எனினும்' என்பது இரு வழியும் அங்ஙனம் கூறுவார் இன்மை விளக்கி நின்றது. பிரிநிலை ஏகாரத்தால் பிற அறங்களின் ஈதல் சிறந்தது என்பது பெற்றாம். நல்லது கூறுவார் தீயதும் உடன் கூறினார்.)

குன்றக்குடி அடிகளார் உரை: பிறரிடத்தில் வாங்குவது வீட்டுலகைத் தரும் நல்ல வழி என்றாலும் பெற்றுக் கொள்ளுதல் தீதேயாம். வீட்டுலகத்தை அடையமுடியாது என்றாலும் ஈதலே நன்று. இரந்து ஏற்பது இழிவன்று, வீட்டுலகம் கிடைக்கும் என்ற புறநெறி வழக்கு மறுத்தது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கொளல் நல்ஆறு எனினும் தீது; மேல் உலகம் இல் எனினும் ஈதலே நன்று.

பதவுரை:
நல்-நல்ல; ஆறு-நெறி; எனினும்-என்றாலும்; கொளல்-ஏற்றல்; தீது-கொடிது; மேல்உலகம்-உயர்வாகிய உலகம் (வீட்டுலகம்); இல்லெனினும்-இல்லை என்றாலும்; ஈதலே-கொடுத்தலே; நன்று-நன்மையுடையது.


நல்லாறு எனினும் கொளல்தீது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவன்மாட்டுக் கொள்ளல் நன்மை பயக்கும் நெறியெனினும் கோடல் தீது;
பரிதி: ('நல்லார் எனினும்' - பாடம்): இவர் கையால் ஏற்றால் புண்ணியம் உண்டு என்று சொன்னாலும் ஏற்பது பொல்லாது;
காலிங்கர்: தாம் பிறரொருவர்மாட்டுச் சென்று ஏற்றுக் கொள்ளுவது நல்வழி என்று அறநூல் சொல்லினும் இரத்தல் மிகவும் தீது;
பரிமேலழகர்: ஏற்றல் வீட்டுலகிற்கு நல்ல நெறி என்பார் உளராயினும் அது தீது,

ஒருவன்மாட்டுக் கொள்ளல் நன்மை பயக்கும் நெறியெனினும்/அறநூல் சொல்லினும்/நல்ல நெறி என்பார் உளராயினும், கோடல் தீது என்றபடி மணக்குடவர், காலிங்கர், பரிமேலழகர் ஆகியோர் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி நல்லாறு என்பதற்கு நல்லார் எனப் பாடம் கொண்டதால் வேறுபாடாக 'இவர் கையால் ஏற்றால் புண்ணியம் உண்டு என்று சொன்னாலும் ஏற்பது பொல்லாது' எனப் பொருள் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'வீட்டுநெறி என்றாலும் வாங்குவது தீது', 'தானம் வாங்குவது நல்ல நெறியே என்றாலும் பிறரிடம் ஏற்பது தீமையே', 'நல்ல நோக்கத்தோடு செய்வதானாலும் ஏழைகளிடமிருந்து வாங்கிக் கொள்வது தீய காரியம்', 'ஏற்பது வீட்டுலகிற்கு நல்லவழி யென்று சொல்லினும் அஃது இழிவானதே', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பிறரொருவரிடம் சென்று இரந்து பெற்றுக் கொள்ளுவது நல்வழி என்று சொல்லப்பட்டாலும் ஏற்றுக் கொள்வது தீயது என்பது இப்பகுதியின் பொருள்.

மேல்உலகம் இல்லெனினும் ஈதலே நன்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவர்க்குக் கொடுத்தாற் பாவ முண்டெனினும் கொடுத்தல் நன்று.
மணக்குடவர் குறிப்புரை: கொள்வோ ரமைதி யறிந்து கொடுக்கவேண்டுமெனினும் இது வரையாது கொடுத்தலாதலால் யாதொருவாற்றானுங் கொடை நன்றென்பது கூறிற்று.
பரிதியார்: இவர் கையிலே கொடுத்தால் நரகம் என்றாலும் கொடுத்தலே நன்று என்றவாறு.
காலிங்கர்: மற்றுப் பிறர் ஒருவருக்குக் கொடுத்த அதனால் மறுமைப்பயன் இல்லை எனினும் ஈதலே நன்று என்றவாறு.
பரிமேலழகர்: ஈந்தார்க்கு அவ்வுலகு எய்துதல் இல்லை என்பார் உளராயினும், ஈதலே நன்று.
பரிமேலழகர் குறிப்புரை: 'எனினும்' என்பது இரு வழியும் அங்ஙனம் கூறுவார் இன்மை விளக்கி நின்றது. பிரிநிலை ஏகாரத்தால் பிற அறங்களின் ஈதல் சிறந்தது என்பது பெற்றாம். நல்லது கூறுவார் தீயதும் உடன் கூறினார்.

'ஒருவர்க்குக் கொடுத்தாற் பாவ முண்டெனினும்/அதனால் மறுமைப்பயன் இல்லை எனினும்/அவ்வுலகு எய்துதல் இல்லை என்பார் உளராயினும் கொடுத்தல் நன்று' என்றபடி முறையே மணக்குடவர், காலிங்கர், பரிமேலழகர் ஆகிய பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி நல்லார் என்று பாடம் கொண்டதால் 'இவர் கையிலே கொடுத்தால் நரகம் என்றாலும் கொடுத்தலே நன்று' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'வீடில்லை என்றாலும் கொடுப்பது நல்லது', 'ஈகையால் வீட்டுலக இன்பம் பெற இயலாது என்றாலும் ஒருவர்க்கு வழங்குதலே நல்லது', 'மோட்சலோகம் கிடைக்காது என்றாலும் ஏழைகளுக்குக் கொடுப்பதே நல்ல காரியம்', 'ஈகையினால் மேலுகம் கிடைப்பதில்லை என்றாலும் அது சிறந்ததே' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மேலுகம் கிடைப்பதில்லை என்றாலும் ஈகையே சிறந்தது என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
பிறரொருவரிடம் சென்று இரந்து பெற்றுக் கொள்ளுவது நல்வழி என்று சொல்லப்பட்டாலும் ஏற்றுக் கொள்வது தீயது; மேலுகம் கிடைப்பதில்லை என்று சொல்வார்களானாலும் ஈகையே சிறந்தது என்பது பாடலின் பொருள்.
'இரப்பது நல்லாறு', 'ஈவோர்க்கு மேலுலகம் இல்லை' என்றிவற்றை யார் யார் சொன்னார்கள்?

இரந்து வாங்கிக் கொள்ளுவது அறவழி என்று சொல்லப்பட்டாலும் அப்படிப் பெற்றுக் கொள்வது தீயது; கொடுப்போர்க்கு மேலுலகம் கிடைக்காது என்று எவர் சொன்னாலும் ஈகை புரிவதே நல்லது.
'கொளல் தீது' என இரவின் இழிவைப் புலப்படுத்தி, ஈதலின் இன்றியமையாமையை வலியுறுத்துகிறது இப்பாடல். இரந்து உயிர்வாழ்தல் ஒரு 'அறநெறி' என்பது ஒரு சாராரின் சமய நம்பிக்கை. ஆனால் இரப்பது நல்லதோர் நெறி முறையே எனச் சொல்லப்பட்டாலும் கூட, இரந்து வாழ்தல் தீமையே ஆகும் என்கிறார் வள்ளுவர். ஈதல் மேலுலகத்தைத் தராது போனாலும் அவ்வீதலைச் செய்தலே நன்று என்று இக்குறளின் இரண்டாம் பகுதி சொல்கிறதாதலால், அம் மேலுலகத்தைத் தரும் நல்ல நெறியாயினும் கொள்ளுதல் தீது என்றும் முதல்பகுதியை வாசிக்கலாம். ஏற்றலைப் பொருளீட்டும் வழியாக வைத்துக் கொண்டிருப்பது அதாவது உழைக்க முடிந்தும் உழைக்காமல் பொருள் பெறுவது போன்றவை அறமாகாது என்று சொல்ல வந்தது இக்குறள் என்று கருத்து உரைப்பாரும் உண்டு.
அதுபோலவே பாடலின் பிற்பகுதியான ஈகை செய்தால் மேலுலகம் கிடைக்கும் என்பதுவும் சமய நம்பிக்கையே. ஈபவர்களுக்கு அவர்கள் விரும்பிய பலன் கிடைக்கும் என்பது அந்நம்பிக்கை. ஆனால்.ஈகை புரிவது மாந்தர் கடமை; அறத்திற்காக அறம் செய்யவேண்டும் மேலுலகம் கிடைக்க வேண்டும் என்ற குறியெதிர்ப்புடன் ஈகை செய்வது கூடாது என்பது வள்ளுவர் கருத்து. அதனால்தான் 'ஈதலே நன்று' என்று கொடையின் சிறப்பை இங்கு பிரிநிலைஏகார மொழிநடை (பிரிநிலையாவது பலவற்றினின்றும் ஒன்றைப் பிரித்துக்காட்டி நிற்றல்).கொண்டு அழுத்தி உணர்த்துகிறார் வள்ளுவர். இன்னொரு வகையில் சொல்வதானால் மேலுலகம் (சொர்க்க லோகம்) என்ற 'ஊதியம்' கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் ஈதலே நன்று.
மேலுலகம் இல்லாமல் போனாலும் ஈதலே நன்று என ஏன் சொல்லப்பட்டது? அந்த விண்ணுலகம் கற்பனையில் உருவாக்கப்பட்டதுதான். அது உண்டென ஒருவர் ஏற்கிறாரோ இல்லையோ, அதை நம்பியவர்க்குத்தான் வாழ்வு, நம்பாதவர்க்கு உயிர் வாழ்வு இல்லை என்பதாக இல்லை. மேலுலக வாழ்வு வள்ளுவருக்கு இன்றியமையாதது அன்று. மேலுலகத்தையும் ஒதுக்கித் தள்ளும் உரம் கொண்டவர் வள்ளுவர். அவர் மனிதப் பண்புக்கே முதன்மை தருபவர். இவ்வுலக அறமான ஈதல் மெய்யானது. அதைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று கூறுவதால் அவர் இந்த அறத்தை மாந்தரின் மிக முக்கியமான குணமாகக் கருதுகிறார். இப்பகுதிக்கு விளக்கமாக தெ பொ மீ 'பிராமணக் கொள்கையிலும் புத்தக் கொள்கையிலும் பகவத்கீதையிலும் வரும் அறநிலை, ஊதியக் கருத்திற்கு முழுதும் அடிமையானது போலக் குறளின் அறநிலையோ அடிமை ஆகவில்லை. "நன்மைக்கு என்றே நன்மை செய்ய வேண்டும்" என்ற அறிவு ஏற்கனவே இங்கு விளங்கக் காண்கிறோம். பல குறள்களினூடே இது ஒளிர்கின்றது" என்று சொல்லி அறத்திற்காக அறம் செய்க என்பதைச் சொல்லவே இக்குறள் உண்டானது என்பார்.

இங்கு ஒரு குறட்பாவிலேயே ஏற்பது கூடாது எனவும் ஈதல் செய்யவேண்டும் என்றும் கூறப்படுகிறது. சங்கச் சான்றோரும் இதே வழியில் அறம் கூறிச் சென்றிருக்கின்றனர்.
"ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று"
(புறநானுறு 204 பொருள்: ஈயெனச் சொல்லி இரத்தல் இழிந்தது; அவ்வீயென்றதனெதிர் ஈயேனென்று சொல்லி மறுத்தல் அவ்விரத்தலினும் இழிந்தது; ஒருவன் இரப்பதன்முன்னே அவன்குறிப்பை முகத்தானுணர்ந்து இதனைக் கொள்வாயாகவென்று சொல்லித் தான் இரந்துகொடுத்தல் ஒருவற்கு உயர்ந்தது; அதனை அவன் அவ்வாறு கொடுப்ப அதனெதிர் கொள்ளேனென்று சொல்லி மறுத்தல் அக்கொடையினும் உயர்ந்தது) என்று புறப்பாட்டு சொல்லிற்று.
'ஏற்பது இகழ்ச்சி' (ஆத்திசூடி 8 பொருள்: ((ஒருவரிடத்திலே போய்) இரப்பது பழிப்பாகும்) என்றும் அதே மூச்சில் அடுத்து 'ஐயமிட்டு உண்' (ஆத்திசூடி 9 பொருள்: (பிச்சையை (இரப்பவர்களுக்குக்) கொடுத்து நீ உண்ணு) என்றும் ஒளவையாரும் முரண்பட்டுத் தோற்றமளிக்கும் அறிவுரை பகன்றுள்ளார்.
கம்பரும்
வெள்ளியை ஆதல் விளம்பினை; மேலோர்
வள்ளியர் ஆக வழங்குவது அல்லால்
எள்ளுவ என் சில? இன் உயிரேனும்
கொள்ளுதல் தீது; கொடுப்பது நன்றால் (பால காண்டம், வேள்விப்படலம்: 29)

(பொருள்: நீ வெள்ளறிவுடையனாதலின், உன் இயற்கைக்கேற்ப சொல்லினை; மேன்மைக் குணம் உடைய பெரியோர்கள் தாம் வள்ளமை உடையோராயின் தமது இனிய உயிரையே என்றாலும் கொள்வோர்க்குக் கொடுப்பாரே அல்லாமல் சில கூறி பரிகசிப்பரோ? பிறர்பால் ஏற்றல் தீமை, ஈதலே நன்மையாகும்.) என்று ஏற்றல் தீது என்றும் ஈதல் நன்று என்றும் தமது பாட்டில் அமைத்தார்.

இக்குறளுக்குப் பரிதியார் கூறியுள்ள உரை புதிதானது: "இவர் கையால் ஏற்றால் புண்ணியம் உண்டு என்று சொன்னாலும் ஏற்பது பொல்லாது; இவர் கையிலே கொடுத்தால் நரகம் என்றாலும் கொடுத்தலே நன்று." ஈகை என்பது ஈவார் நிலையையும் ஏற்பார் தகுதியையும் நோக்காது வரையாது வள்ளன்மை யாதலின் இவருரை இங்கு பொருந்தாது என்பார் தண்டபாணி தேசிகர். நல்லாறு என்பதை நல்லார் என்று பரிதியார் பாடம் கொண்டிருக்கலாம் என்று சொல்வர்.

திருக்குறள் கருத்துக்களை நன்கு உணர்ந்த ஜெர்மனி நாட்டு மெய்யியல் அறிஞர் சுவைட்சர் தனது 'இந்திய சிந்தனை வளர்ச்சி' என்ற நூலில் 'இந்தியாவில் பிறநூலார் சிந்தனைகள் பல, 'வாழ்க்கை மறுப்புச் சிந்தனைகள்' (Negative) அடிப்படையில் அமைய வள்ளுவர் சிந்தனைகள் முழுவதும் வாழ்க்கை உடன்பாட்டுச் சிந்தனைகள் (Affirmative) ஆகும்' என்றார். குறளில் மேலுலகம் மறுபிறப்பு என இவ்வுலகிற்கு அப்பாற்பட்ட கருத்துக்களும் ஆங்காங்கு இடம் பெறுகின்றன என்றாலும் திருவள்ளுவர் சிந்தனையெல்லாம் இவ்வுலக வாழ்வு பற்றியனவே. அம் மேலுலகச் சிந்தனைகளும் இவ்வுலக நல்வாழ்வை வலியுறுத்தற் பொருட்டே எடுத்தாளப்படுகின்றன. அறம் கூறியவர் அனைவரும் அறம் செய்வதால் ஒரு பயனுண்டு, புண்ணியமுண்டு என ஒரு பயன் கருதியே கூறியுள்ளனர். திருவள்ளுவர் ஒருவர்தான், இக்குறள் வழி, அறத்திற்காக அறத்தைச் செய்க என வலியுறுத்தியுள்ளார். சுவைட்சருக்குப் பிடித்த குறட்பா இது.

'நல்லாறு', 'மேலுலகம் இல்' என்றிவற்றை யார் யார் சொன்னார்கள்?

'நல்லாறு எனினும் கொளல் தீது, மேலுலகம் இல் எனினும் ஈதலே நன்று' என்னும் இப்பாடலிலுள்ள இரண்டு வாக்கியங்களிலும் உள்ள 'எனினும்' என்பது கொளல் நல்லாறு எனச் சொல்லப்பட்டாலும் அது தீது, ஈதலுக்குப் பயனாக மேலுகமில்லை என்று சொல்லுவார் உளராயினும் ஈதலே நன்று என்ற பொருள் தருமாறு வந்துள்ளன. யார் அப்படிச் சொல்பவர்கள்?
தொல்லாசிரியரான காலிங்கர் 'தாம் பிறரொருவர்மாட்டுச் சென்று ஏற்றுக் கொள்ளுவது நல்வழி என்று அறநூல் சொல்லினும் இரத்தல் மிகவும் தீது; மற்றுப் பிறர் ஒருவருக்குக் கொடுத்த அதனால் மறுமைப்பயன் இல்லை எனினும் ஈதலே நன்று' என்று இவற்றைப் பொதுவாக அறநூல்கள் சொல்வதாகக் குறிப்பிடுகிறார்.
'அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கத்து, ஏற்றலை அறநூல் மரபாகக் கூறப்படுதல் நோக்குக' என்று வைதீக அறநூல்களையே சுட்டுகிறார் தண்டபாணி தேசிகரும். சி. இலக்குவனார் "கொடுத்தலால் வீடு அடைதல் போன்றே பெறுதலாலும் வீடு அடையலாம் என்ற கொள்கை பரப்பப்பட்டு வந்தது. ஆனால் வள்ளுவர் “நல்லாறு எனினும் கொளல் தீது; மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று: என்கிறார். “வீடு (மோட்சம்) கிட்டாது என்றாலும் கொடு; வீடு கிடைக்குமென்றாலும் வாங்காதே” என்பது எத்தகைய புரட்சிக் கொள்கையாகும் என்பதை எண்ணுமின்!" என்கின்றார். தமிழண்ணலும் தானம் பெறுதலையும் ஒரு வாழ்க்கைநெறியாகக் கூறுவாரை மறுப்பது இது என்று இக்குறளுக்கு நுண்ணுரை பகன்றுள்ளார். குன்றக்குடி அடிகளார் 'எந்தச் சூழ்நிலையிலும் கொள்ளுதல் தீது; கொடுப்பது நன்று. கொடுத்தலைத் தாழ்த்தியும் கொள்ளுதலை உயர்த்தியும் அறநூல் கூறுமானால் அஃது அறநூலன்று. அது பொய்ம்மையான சாத்திரம் என்று அறிக. இது பிறர் மதம் மறுத்தது' என்றார்.
வைதிக நெறியில் சொல்லப்பட்டுள்ள 'தானம் கொள்ளல் அறம் ஆகும்' என்ற கோட்பாட்டையே இக்குறள் நல்லாறாகச் சுட்டுகிறது என்பது திறனாய்வாளர்களது முடிபு. வைதீக அறநூலில் 'ஏற்றல்' கூறப்பட்டுள்ளது; இன்றும் அது மரபுக்காகவேனும் பின்பற்றப்படுவதும் உண்டு. 'தானம்' வாங்கினால் வீடு பேறு அடையலாம் என்ற பழங்கருத்தே இங்கே 'நல்லாறு எனினும்' என்று சொல்லப்பட்டுள்ளது என்கின்றனர் இவர்கள். இவற்றையெல்லாம் நோக்கும்போது ஈதல் என்பது பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட்ட தானத்தைக் குறிப்பதாகக் கருத இடமுண்டு. அப்படியான தானம் பெறுவது, வைதீக வழக்கப்படி நல்லநெறி என்று சொல்லப்பட்டாலும், அந்தத் தானத்தை ஏற்பது தவறானது என்பதை, நல்லாறு எனினும்கொளல் தீது என்று அறிவுறுத்தி, அதற்கு எதிர்நிலையில், மேல் உலகம் இல(லை) எனினும், ஈதலே நன்று என்று, ஈகையை மேல உலகைவிடச் சிறந்ததாகக் காட்டினார் வள்ளுவர்.

பிறரொருவரிடம் சென்று இரந்து பெற்றுக் கொள்ளுவது நல்வழி என்று சொல்லப்பட்டாலும் ஏற்றுக் கொள்வது தீயது; மேலுகம் கிடைப்பதில்லை சொல்வார்களானாலும் ஈகையே சிறந்தது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அறத்தை அறத்திற்காகச் செய்க என்பதை ஈகை அறத்தின் வழி வலியுறுத்தும் பாடல்.

பொழிப்பு

நல்ல நெறியே என்று யாராவது சொன்னாலும் பெறுவது தீது; மேலுலகம் இல்லை என்று சொல்லப்பட்டாலும் கொடுப்பது நல்லது.