இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0223



இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன்உடையான் கண்ணே உள

(அதிகாரம்:ஈகை குறள் எண்:223)

பொழிப்பு (மு வரதராசன்): `யான் வறியவன்’ என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடிப்பிறப்பு உடையவனிடம் உண்டு.

மணக்குடவர் உரை: இரந்துவந்தார்க்கு இலனென்னா நின்ற துன்பத்தைக் கூறாது ஈதலும் குடிப்பிறந்தான்மாட்டே யுளதாம்.
இது கொடுக்குங்கால் மறாது கொடுக்க வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: 'இலன் என்னும் எவ்வம் உரையாமை - யான் வறியன் என்று இரப்பான் சொல்லும் இளிவரவைத் தான் பிறர்கண் சொல்லாமையும், ஈதல் - அதனைத் தன்கண் சொன்னார்க்கு மாற்றாது ஈதலும், உள குலன் உடையான் கண்ணே- இவை இரண்டும் உளவாவன குடிப் பிறந்தான் கண்ணே.
(மேல் தீது என்றது ஒழிதற்கும் நன்று என்றது செய்தற்கும் உரியவனை உணர்த்தியவாறு. இனி இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல் என்பதற்கு, அவ்விளிவரவை ஒருவன் தனக்குச் சொல்வதற்கு முன்னே அவன் குறிப்பறிந்து கொடுத்தல் எனவும், அதனைப் பின்னும் பிறனொருவன்பால் சென்று அவன் உரையா வகையால் கொடுத்தல் எனவும், யான் இதுபொழுது பொருளுடையேன் அல்லேன் 'எனக் கரப்பார்' சொல்லும் இளிவரவைச் சொல்லாது கொடுத்தல் எனவும் உரைப்பாரும் உளர். அவர் 'ஈதல்' என்பதனைப் பொருட்பன்மை பற்றி வந்த பன்மையாக உரைப்பர்.)

வ சுப மாணிக்கம் உரை: இல்லை என்ற துயரை எடுத்துரைக்கும் முன்பே கொடுக்குங்குணம் குடிப்பிறந்தவனிடம் உண்டு.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலன்உடையான் கண்ணே உள.

பதவுரை:
இலன்-இல்லாதவன்; என்னும்-என்கின்ற; எவ்வம்-துயரம்; உரையாமை-சொல்லாதிருத்தல்; ஈதல்-கொடுத்தல்; குலன்-நற்குடிப்பண்பு; உடையான்கண்ணே-உடையவனிடத்தில்; உள-இருக்கின்றன.


இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இரந்துவந்தார்க்கு இலனென்னா நின்ற துன்பத்தைக் கூறாது ஈதலும்;
மணக்குடவர் குறிப்புரை: இது கொடுக்குங்கால் மறாது கொடுக்க வேண்டுமென்றது. [மறாது-மறுக்காமல்]
பரிப்பெருமாள்: இரந்துவந்தார்க்கு இலனென்னா நின்ற துன்பத்தைக் கூறாது ஈதலும்;
பரிப்பெருமாள் குறிப்புரை: இல்லை என்று சொல்வதன் முன்னே குறிப்பறிந்து கொடுத்தல் எனினும் அமையும். இது கொடுக்குங்கால் மறாது கொடுக்க வேண்டும் என்பது.
பரிதி: தன்னிடத்திலே ஏற்றவன் பிறத்தியிலே போய் எனக்கு என்று சொல்லாதவாறு மிடிதீரக் கொடுப்பது; [மிடி தீர - வறுமை ஒழிய]
காலிங்கர்: மற்று எவ்வாற்றானும் தம்மாட்டு வந்தோர் யாவர்; மற்றவர் 'எமக்கு வகையிலோம்' என்று சொல்லும் இத்துயருறு சொல்லினைச் செவிகேட்பச் சொல்லுதற்கு முன்னமே கொடுத்தல்; .
காலிங்கர் குறிப்புரை: எவ்வம் என்பது துயரம்.
பரிமேலழகர்: யான் வறியன் என்று இரப்பான் சொல்லும் இளிவரவைத் தான் பிறர்கண் சொல்லாமையும் அதனைத் தன்கண் சொன்னார்க்கு மாற்றாது ஈதலும்;
பரிமேலழகர் குறிப்புரை: மேல் தீது என்றது ஒழிதற்கும் நன்று என்றது செய்தற்கும் உரியவனை உணர்த்தியவாறு. இனி இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல் என்பதற்கு, அவ்விளிவரவை ஒருவன் தனக்குச் சொல்வதற்கு முன்னே அவன் குறிப்பறிந்து கொடுத்தல் எனவும், அதனைப் பின்னும் பிறனொருவன்பால் சென்று அவன் உரையா வகையால் கொடுத்தல் எனவும், யான் இதுபொழுது பொருளுடையேன் அல்லேன் 'எனக் கரப்பார்' சொல்லும் இளிவரவைச் சொல்லாது கொடுத்தல் எனவும் உரைப்பாரும் உளர். அவர் 'ஈதல்' என்பதனைப் பொருட்பன்மை பற்றி வந்த பன்மையாக உரைப்பர்.

'இரந்துவந்தார் தன் துயரைச் சொல்வதற்கு முன்னே அவன் குறிப்பறிந்து கொடுத்தல்' என மணக்குடவர், பரிப்பெருமாள், காலிங்கர் ஆகியோர் கூற, 'அதனைப் பின்னும் பிறனொருவன்பால் சென்று அவன் உரையா வகையால் கொடுத்தல்' எனப் பரிதி பொருள் உரைத்தார் எனவும், என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். 'யான் வறியன் என்று இரப்பான் சொல்லும் இளிவரவைத் தான் பிறர்கண் சொல்லாமையும் அதனைத் தன்கண் சொன்னார்க்கு மாற்றாது ஈதலும்' என்பது பரிமேலழகர் உரை.

இன்றைய ஆசிரியர்கள் 'இரந்து வந்தார்க்கு என்னிடம் இல்லை என்னும் துன்பச் சொல்லைக் கூறாமல் ஈதல்', 'இல்லை என்ற துன்பந்தரும் சொல்லைச் சொல்லாதிருப்பதும் கூடியதை உடனே கொடுப்பதும்', 'இரப்பவனுக்கு யான் வறியன் என்னும் இழிவான சொல்லைச் சொல்லாமல் கொடுத்தல். (இலன் என்னும் எவ்வம் உரையாமை என்னுஞ் சொற்றொடர்க்குப் பல பொருள் கூறப்படும். இரப்பவன் தான் வறிஞன் என்ற இழிவான சொல்லைச் சொல்வதற்கு முன்னே குறிப்பறிந்து கொடுத்தவெனவும், தன்னிடத்தில் இரந்தவன் மற்றொருவனிடஞ் சென்று தான் வறிஞனென்று உரையாதபடி மிகுதியாகக் கொடுத்தல் எனவும், கொடுப்பவனை வறியவனென்று மற்றவர்களிடஞ் சென்று இரப்பவன் இகழ்ந்துரையாதபடி கொடுத்த லெனவும் பொருள் கூறுவார்கள்.)', 'பிறரிடம் சென்று இல்லை என்று சொல்லும் துன்பம் தரும் உரையைச் சொல்லாமையும், தம்மிடம் வந்து இல்லை என்று சொன்னார்க்குக் கொடுத்தலும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இல்லாதவன் என்ற துயரத்தை உரைக்கும் முன்பே கொடுத்தல் என்பது இப்பகுதியின் பொருள்.

குலன்உடையான் கண்ணே உள:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குடிப்பிறந்தான்மாட்டே யுளதாம்.
பரிப்பெருமாள்: குடிப்பிறந்தான்மாட்டே யுளதாம்.
பரிதி: குடிப்பிறந்தார்க்கு வரவித்தை என்றவாறு. [வரவித்தை - மேலான வித்தை]
காலிங்கர்: யாவர்மாட்டுளவோ எனில், குலமரபுடையோன்மாட்டே உளவாம் என்றவாறு.
பரிமேலழகர்: இவை இரண்டும் உளவாவன குடிப் பிறந்தான் கண்ணே.

'குடிப் பிறந்தான் கண்ணே உள' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நற்குடிப் பண்பு உடையானிடத்தே உள்ளன. (ஈதலில் பலவகை இருத்தலின் 'உள' எனப் பன்மை முடிவு பெறும். ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே உள' என்னும் குறளை ஒப்பு நோக்குக.)', 'நல்ல இனத்தைச் சேர்ந்தவனிடத்தில்தான் உண்டு', 'நல்ல குடிப்பிறந்தாரிடத்தே காணப்படும் செய்கையாம்', 'நற்குடிப் பிறந்தாரிடம் உளவாம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நற்குடிப் பண்பு உடையவனிடத்தே உள்ளன என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இல்லாதவன் என்ற துயரத்தை உரைக்கும் முன்பே கொடுத்தல் குலன் உடையவனிடத்தே உள்ளன என்பது பாடலின் பொருள்.
குலன் உடையவன் இங்கு எப்படி வந்தான்?

இரந்து வருவோனது குறிப்பறிந்து ஈதல் நற்குடிப் பண்பு உடையவரிடத்தில் உள்ளது.
ஈதல் என்பது வறியோர்க்குக் கொடுத்தல். தான் ஈகை உள்ளம் கொண்டவன் என்பதை அறிந்து இல்லாதவன் ஒருவன் தன்னிடம் இரக்க வருகிறான். அவன் நிலையைப் பார்த்ததும், அவன் பசிப்பிணி போக்க உதவி கேட்க வந்தவன் என்று, தெரிந்துவிடுகிறது. நல்லகுடிப்பண்பு கொண்டவர் அவன் வறுமையினை அறிந்து அவன் தன் துயரத்தைச் சொல்லத் தொடங்குமுன் கொடுத்துவிடுவர் என்கிறது பாடல். வறுமையின் கீழ்மையை உணர்வோர் மானத்திற்கு அஞ்சி எளிதில் சென்று இரக்கமாட்டார். ஆனாலும் பசிதீர வேறு வழிதெரியாமல் உதவி பெற முடிவுசெய்து ஈகையாளரிடம் செல்கிறார். ஈபவர் நல்ல குடிப்பண்பு கொண்டவராயிருந்தால், இரக்கின்ற காட்சிக்கு இடம் இல்லாதபடி குறிப்பால் அறிந்து கொடுத்து உதவுவர்.

'இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்' என்ற முதலடிக்கான விளக்கத்தில் பரிமேலழகர் தனது விரிவுரையுடன் பிறரது மூன்று உரைகளையும் குறித்துள்ளார். அவை வேறுவேறு பொருள்களைத் தருவனவாக உள்ளன. அவை:
1. 'இரப்பவன் தனக்கு வயிற்றிற்கில்லை என்று கூறிய சொல்லை ஈபவன் பிறரிடம் சொல்லாமலும், கேட்டபவருக்கு மறுக்காமல் கொடுத்தலும், கொடை' என்பது பரிமேலழகர் உரை. அவர் குறிப்பிடும் மற்ற மூன்று உரைகளாவன:
2. 'உண்பதற்கு வகையில்லை' என்ற துன்பம் தரும் மொழியை இரப்பவன் ஒருவன் தனக்குச் சொல்லுவதற்கு முன்னே, அவன் குறிப்பறிந்து பொருளைக் கொடுத்தல். இது காலிங்கர் மற்றும் பரிப்பெருமாள் உரைகளை ஒட்டியுள்ளது. இவ்வுரை ஒத்த சங்கப்பாடல் வரிகள் முன்னம் முகத்தின் உணர்ந்து, அவர் இன்மை தீர்த்தல் வன்மையானே (புறநானூறு 3:25 பொருள்: அவர் மனக்குறிப்பை அவர் முகத்தால் அறிந்து அவருடைய வறுமையைத் தீர்க்க வல்ல தன்மையான்) என்னும் புறப்பாடல் அடிகளிலும் இல்லது நோக்கி, இளிவரவு கூறாமுன் நல்லது வெஃகி, வினை செய்வார் (பரிபாடல் 10: 87-88 பொருள்: இரப்போருடைய வறுமையை உணர்ந்து அவர் ஈமின் எனத் தம்மை இரந்து கூறுதற்கு முன்பே, அவர்க்கு வேண்டுவன ஈதலைச் செய்யாநிற்பர்) என்ற பரிபாடல் அடிகளிலும் உள்ளன.
3. இரப்பவன், துன்பம் தரும் மொழியை, மறுபடியும் பிறன் ஒருவனிடம் போய் அவன் சொல்லாதவாறு மிகுதியாகப் பொருள் கொடுத்தல். பரிதி இவ்விதம் உரை கூறியுள்ளார். நிற் பாடிய வயங்கு செந் நாப் பின் பிறர் இசை நுவலாமை, ஓம்பாது ஈயும் ஆற்றல் எம் கோ! (புறநானூறு 22:31-33 பொருள்: நின்னைப் பாடிய விளங்கிய செவ்விய நாப் பின்னைப் பிறருடைய புகழைச் சொல்லாமற் பாதுகாவாது கொடுக்கும் வலியையுடைய எங்கோவே!) என்ற வரிகள் இக்கருத்தை ஒட்டி யுள்ளன.
4. யான் இப்போது பொருளுடையன் அல்லேன் என்று இரந்து வந்தவரிடம் தன் பொருளை மறைத்துக் கூறும் துன்பம் தரும் சொல்லைச் சொல்லாது பொருளைக் கொடுத்தல். இது மணக்குடவர் உரை போன்றது.
குறளின் இறுதிச் சொல்லான 'உள' என்னும் பன்மை வினை முற்றுக்கு எழுவாயாக 'ஈதல்' என்ற ஒருமைச் சொல்லே உள்ளதால், 'இலன் என்னும் எவ்வம் உரையாமையும் ஈதலுமாகிய இரு செயலும் குலனுடையான் கண் உள' என 'உம்மை' விரித்துப் பொருள் கொண்டுள்ளார் பரிமேலழகர். மற்றவர்கள் உரைகளில் 'ஈதலில் பலவகை உள்ளன; அவற்றைக் கொள்ளவேண்டும் என்பதனைக் குறிக்க, 'ஈதல் என்பதனைப் பொருட்பன்மை பற்றி வந்த பன்மையாக உரைப்பர்' என்று பரிமேலழகரே விளக்கமும் தந்தார்.

குலன் உடையவன் இங்கு எப்படி வந்தான்?

இரந்தான் முகக்குறிப்பறிந்து பொருளைக் கொடுத்தல், கொடுப்பவன் தன்னுடைய இல்லாமையைக் காட்டிக்கொள்ளாமல் ஈவது, இரந்தவன் 'தன்னிடம் இல்லை' என்று ஏற்க வந்தான் என்று பிறரிடம் சொல்லாமல் இருப்பது, பிறர் ஒருவரிடம் சென்று மேலும் தன் துன்பத்தை அவன் கூறி இரவாமல் இருக்க மிகுந்த பொருள் கொடுப்பது இவை அனைத்தும் மேன்மையானவர்கள் மட்டும் கொண்டிருக்கும் பண்புகளாகும். மேற்கூறிய அனைத்து உரைகளுமே ஒவ்வொரு வகையில் ஈபவர் நல்ல குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதைச் சுட்டுவதாகவே உள்ளன. வெளிப்பகட்டுக்காவும் தன்னை ஓர் புரவலன் என்று உலகுக்கு உரக்கச் சொல்லிக் கொள்வதற்காகவும் ஈகை புரிபவர் ஆரவாரத்தன்மை கொண்டவர்கள் ஆவர். அவர்கள் ஈவோராய் இருந்தாலும், பெருந்தகைமை இல்லாமல், ஏற்பானை ஏதோ ஒருவகையில் இழிவு படுத்தியே கொடுப்போராயிருப்பர்.

இல்லாதவன் என்ற துயரத்தை உரைக்கும் முன்பே கொடுத்தல் நற்குடிப் பண்பு உடையவனிடத்தே உள்ளன என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

இரப்பவனது குறிப்பறிந்து ஈகை செய்தல் உயர்ந்த குணம்.

பொழிப்பு

இரந்து வந்தார் தன்னிடம் இல்லை என்ற துயரை எடுத்துரைக்கும் முன்பே கொடுத்தல் நற்குடிப் பண்பு உடையவனிடத்தே உண்டு.