இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0221



வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறிஎதிர்ப்பை நீரது உடைத்து

(அதிகாரம்:ஈகை குறள் எண்:221)

பொழிப்பு (மு வரதராசன்): வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது. மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயனை எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மை உடையது.

மணக்குடவர் உரை: ஈகையாவது இல்லாதார்க்கு யாதானும் ஒன்றைக் கொடுத்தல்; இஃதொழிந்த கொடையெல்லாம் குறியெதிர்ப்பைக் கொடுத்த நீர்மையாதலையுடைத்து.
இது கொடுக்குங்கால் இல்லார்க்குக் கொடுக்கவேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை - ஒரு பொருளும் இல்லாதார்க்கு அவர் வேண்டியது ஒன்றைக் கொடுப்பதே பிறர்க்குக் கொடுத்தலாவது, மற்று எல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து - அஃதொழிந்த எல்லாக் கொடையும் குறியெதிர்ப்பைக் கொடுக்கும் நீர்மையை உடைத்து.
(ஒழிந்த கொடைகளாவன: வறியவர் அல்லாதார்க்கு ஒரு பயன் நோக்கிக் கொடுப்பன. குறியெதிர்ப்பாவது அளவு குறித்து வாங்கி அவ்வாங்கியவாறே எதிர் கொடுப்பது. 'நீரது' என்புழி, 'அது' என்பது பகுதிப்பொருள் விகுதி. பின்னும் தன்பால் வருதலின், 'குறியெதிர்ப்பை நீரது உடைத்து' என்றார். இதனால் ஈகையது இலக்கணம் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: ஈகை என்பது ஏழைகளுக்குக் கொடுப்பதே; பிறர்க்குச் செய்வது எதிர்பார்த்துக் கொடுப்பது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வறியார்க்கொன்று ஈவதே ஈகை; மற்று எல்லாம் குறிஎதிர்ப்பை நீரது உடைத்து.

பதவுரை:
வறியார்க்கு-இல்லாதவர்க்கு; ஒன்று-ஒருபொருள் (உணவு); ஈவதே-கொடுப்பதே; ஈகை-கொடை; மற்று-பிறுது; எல்லாம்-அனைத்தும்; குறிஎதிர்ப்பை-திரும்பப்பெறுதலைக் குறியாக உடையது-பிறிதொரு பயனை எதிர்பார்த்து(கொடுத்தல்); நீரது-தன்மையை; உடைத்து-உடையது.


வறியார்க்கொன்று ஈவதே ஈகை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஈகையாவது இல்லாதார்க்கு யாதானும் ஒன்றைக் கொடுத்தல்;
மணக்குடவர் குறிப்புரை: இது கொடுக்குங்கால் இல்லார்க்குக் கொடுக்கவேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: ஈகையாவது இல்லாதார்க்கு யாதானும் ஒன்றைக் கொடுத்தல்;
பரிப்பெருமாள் குறிப்புரை: இது கொடுக்குங்கால் இல்லார்க்குக் கொடுக்கவேண்டுமென்றது.
பரிதி: வறியவர்க்குக் கொடுப்பதே கொடை;
காலிங்கர்: வறியவர்க்கு எஞ்ஞான்றும் யாதானும் ஒன்றினைக் கொடுப்பதே கொடையாவது;
பரிமேலழகர்: ஒரு பொருளும் இல்லாதார்க்கு அவர் வேண்டியது ஒன்றைக் கொடுப்பதே பிறர்க்குக் கொடுத்தலாவது;

'ஈகையாவது இல்லாதார்க்கு யாதானும் ஒன்றைக் கொடுத்தல்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் 'அவர் வேண்டியதைக் கொடுப்பது' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஏழைக்கு அவர் வேண்டியதொன்றை வழங்குவதே ஈகையாம்', 'எதைக் கொடுத்தாலும் ஏழைகளுக்கு கொடுப்பதுதான் தானம்', 'ஒரு பொருளும் இல்லாத எளியவருக்கு, அவர் வேண்டியவற்றைக் கொடுப்பதே ஈகை யெனப்படும்', 'இல்லாதவர்க்கு ஒன்றினைக் கொடுப்பதே உண்மையான ஈதல் ஆகும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஈகை என்பது இல்லாதார்க்கு ஒன்றினைக் கொடுப்பதே ஆகும் என்பது இப்பகுதியின் பொருள்.

மற்று எல்லாம் குறிஎதிர்ப்பை நீரது உடைத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இஃதொழிந்த கொடையெல்லாம் குறியெதிர்ப்பைக் கொடுத்த நீர்மையாதலையுடைத்து.
பரிப்பெருமாள்: இஃதொழிந்த கொடையெல்லாம் குறியெதிர்ப்பைக் கொடுத்த நீர்மையாதலையுடைத்து.
பரிதி: மற்றதெல்லாம் வட்டிக்குக் கொடுப்பதை ஒக்கும்.
காலிங்கர்: மற்று இம்மைப்பயனும் மறுமைப்பயனும் கருதிக் கொடுப்பன எல்லாம் தமக்கோர் ஊதியம் குறித்துக் கொடுக்கின்றமையின் அதுகொடையல்ல என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: நீரது என்றது ஒப்புடைத்து என்றது.
பரிமேலழகர்: அஃதொழிந்த எல்லாக் கொடையும் குறியெதிர்ப்பைக் கொடுக்கும் நீர்மையை உடைத்து.
பரிமேலழகர் குறிப்புரை: ஒழிந்த கொடைகளாவன: வறியவர் அல்லாதார்க்கு ஒரு பயன் நோக்கிக் கொடுப்பன. குறியெதிர்ப்பாவது அளவு குறித்து வாங்கி அவ்வாங்கியவாறே எதிர் கொடுப்பது. 'நீரது' என்புழி, 'அது' என்பது பகுதிப்பொருள் விகுதி. பின்னும் தன்பால் வருதலின், 'குறியெதிர்ப்பை நீரது உடைத்து' என்றார். இதனால் ஈகையது இலக்கணம் கூறப்பட்டது.

'அஃதொழிந்த எல்லாக் கொடையும் குறியெதிர்ப்பைக் கொடுக்கும் நீர்மையை உடைத்து' என்றபடி மணக்குடவர், பரிப்பெருமாள், பரிமேலழகர் ஆகிய பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'மற்றதெல்லாம் வட்டிக்குக் கொடுப்பதை ஒக்கும்' எனக் கூறினார். காலிங்கர் 'மற்று இம்மைப்பயனும் மறுமைப்பயனும் கருதிக் கொடுப்பன எல்லாம் தமக்கோர் ஊதியம் குறித்துக் கொடுக்கின்றமையின் அதுகொடையல்ல' என்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிற எல்லாக் கொடையும் கடன் கொடுத்து வாங்குவது போன்ற தன்மை உடையது', 'மற்றதெல்லாம் பிரதிப் பிரயோசனத்தை எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மையுள்ளது', 'மற்றக் கொடைகளெல்லாம் கொடுக்கும் அளவு திரும்ப வாங்கும் கடன் போன்றன', 'பிறர்க்குக் கொடுப்பன எல்லாம் கடன் கொடுத்து மீண்டும் பெறுவதற்கு ஒப்புஆம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பிறர்க்குக் கொடுப்பன எல்லாம் பயன்கருதிக் கொடுத்தலுக்கு ஒப்பாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஈகை என்பது இல்லாதார்க்கு ஒன்றினைக் கொடுப்பதே ஆகும்; பிறர்க்குக் கொடுப்பன எல்லாம் குறிஎதிர்ப்பை நீரது ஆகும் என்பது பாடலின் பொருள்.
'குறிஎதிர்ப்பை நீரது' என்பதன் பொருள் என்ன?

'இல்லை' என்று வரும் வறியவர்க்கு உணவு கொடுப்பதே ஈகையாகும்; மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயனை எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மையுடையது.
ஈகை என்பது இல்லாதார்க்கு ஒன்று வழங்குதல் என வரையறை செய்யும் குறள். பசி என வந்து இரந்தோர்க்கு உணவு இடுதலை ஈகை என்ற சொல் குறிக்கிறது. வறியார் என்று சொல்லப்பட்டதால் ஈகையால் பசி அடங்கியவர்கள், ஈந்தவனுக்குத் திருப்பித் தருவதற்கு வகையற்றவர்கள் என்பது பெறப்படுகிறது. இருப்பினும் திருப்பித் தருவதற்கு ஏதுமற்றவர்களுக்குக் கொடுப்பதே ஈகை என்பதை வலியுறுத்த, அடுத்த அடியில், மற்றவர்களுக்குக் கொடுப்பது திரும்பப் பெறும் தன்மை கொண்டது அதாவது அவை ஈகையாகா என்றும் பாடல் கூறுகிறது. வறியவர் அல்லார்க்குக் கொடுப்பது எல்லாம் கொடுத்த பொருளைத் திரும்ப அடையும் வகையில் வழங்கப் பெறும் கடன் போன்றதே. இவ்வாறு ஈகையையும், பயன்கருதிக் கொடுத்தலையும் தெளிவாய்ப் பிரித்துக் காட்டுகிறது பாடல்.

இப்பாடலில் உள்ள ஒன்று என்ற சொல்லுக்கு யாதானும் ஒன்று, வேண்டியது ஒன்று, ஒரு பொருள், வேண்டியதொன்று, ஒன்று, உணவு, வேண்டும் பொருள், வேண்டியவை, பொருள்தேவை என்று உரையாசிரியர்கள் பொருள் கூறினர். வ சுப மாணிக்கம் ''ஒன்று' என்ற கிளவியான், ஆசான் சுட்டுவது பசிதீர்க்கும் உணவு. ...அப்பசியை மாற்றுவார்... (225) என்றும் அற்றார் அழிபசி தீர்த்தல்.... (226) என்றும் ஒன்றன் பொருளை விளங்கக் கூறுவர். ....இரப்பார்க்கு ஒன்று ஈவர்... (1035) என்ற உழவு அதிகாரத்துக் குறட்கண்ணும் இவ்வுணவுப் பொருள் அமைந்திருத்தலை நினைவு கூர்க' என்று 'ஒன்று' என்றதற்கு உணவு எனவும் பொருள் கொள்ளலாம் என நிறுவுவார்.
அதிகாரப் பாடல்கள் அனைத்தும் பசி தீர்த்தல் பற்றியே பேசுகின்றன. எனவே 'ஒன்று ஈவது' என்ற தொடர்க்கு 'யாதானும் ஒன்று அல்லது வேண்டியதொன்று கொடுத்தல்' என்பவற்றினும் உணவு அளித்தல் அதாவது பசி தீர்த்தல் என்ற பொருள் சிறக்கும். வள்ளுவம் எல்லாராலும் இயல்வதான அறம் விதிக்கும் பனுவல். அவ்வகையிலும் உணவு வழங்கல் என்பது ஏற்ற கருத்தாகிறது.

ஈபவரின் எண்ணத்தில் பயன் கருதாமை இருந்தாலும், இரப்போர்க்கு ஒன்றைக் கொடுத்ததால் அவர்க்குச் சமுதாயத்தில் பேரும் புகழும் கிடைக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. ஈகை புரிபவர் வள்ளல் என்று பாராட்டப்படுவர்.

'குறிஎதிர்ப்பை நீரது' என்பதன் பொருள் என்ன?

'குறிஎதிர்ப்பை நீரது' என்ற தொடர்க்குக் குறியெதிர்ப்பைக் கொடுத்த நீர்மையாதல், குறியெதிர்ப்பைக் கொடுக்கும் நீர்மை, வட்டிக்குக் கொடுப்பதை, இம்மைப்பயனும் மறுமைப்பயனும் கருதிக் கொடுப்பன எல்லாம் தமக்கோர் ஊதியம் குறித்துக் கொடுக்கின்றமையின், பயனை எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மை, அளவு குறித்துக் கொடுத்துத் திரும்ப வாங்கிக் கொள்வது, திரும்பிப் பெறும் குறிப்புடையன, எதிர்பார்த்துக் கொடுப்பது, கடன் கொடுத்து வாங்குவது போன்ற தன்மை, பிரதிப் பிரயோசனத்தை எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மை, கொடுக்கும் அளவு திரும்ப வாங்கும் கடன் போன்றன, கடன் கொடுத்து மீண்டும் பெறுவதற்கு ஒப்புஆம், பயனைக் கணக்குப் பார்க்கும் பண்டமாற்று மட்டுமே, கைம்மாறு கருதிய கொடுப்பெல்லாம் அளவு குறித்துக் கடன் கொடுக்கும் தன்மை, பலனை எதிர்பார்த்துச் செய்யும் தன்னலம் கருதிய செயலாம் தன்மை என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

குறியெதிர்ப்பு என்ற சொல் ஐசாரியை பெற்று குறியெதிர்ப்பை ஆனது என்பர்.
நீரது என்ற சொல் நீர்மை என்னும் பண்புப் பெயரை உணர்த்துவது. 'மை' விகுதி கெட்டு நீர் என நின்றது. நீர் என்னும் அப்பகுதியோடு அது என்னும் விகுதி சேர்ந்து தனக்கெனப் பொருளின்றி பகுதிப் பொருளையே உணர்த்தியமையின் 'அது' பகுதிப் பொருள் விகுதியாயிற்று என்பது இச்சொல்லின் இலக்கண விளக்கம்.
குறியெதிர்ப்பை என்பதற்கு ஒன்றைக் குறித்துக் கொடுக்கும் எதிர்ப்பை என்று பழைய உரை ஒன்று கூறுகிறது. 'குறியெதிர்ப்பை' என்பதற்கு 'அளவு குறித்துவாங்கி வாங்கியவாறே எதிர் கொடுப்பது' எனப் பரிமேலழகர் விளக்கம் தருகிறார்.
இச்சொல் சில இடங்களில் குறியாப்பு என இன்றும் வழக்கில் உள்ளது. குடித்தனம் செய்பவர்களுக்கு அரிசி, உப்பு, சர்க்கரை, காபிபொடி போன்ற குடும்பப் பொருள் தட்டுப்படும்போது அவற்றை மகளிர், ஓர் அளவு குறித்து வாங்கித் திரும்பவும் கொடுத்து விடுவார்கள். இதுவே 'குறியெதிர்ப்பை' என்ற சொல் குறிப்பது.

குறியெதிர்ப்பு என்றது 'ஒருவனுக்கு இவ்வளவு செய்தால் அவன் அவ்வளவு திருப்பி எனக்குச் செய்வான்' என்கிறதைக் குறித்துக் கொடுக்கிறதனால் அது எதிர் நலன் தேடுகிற கொடுத்தலாகிறது. அது ஒரு பயன் நோக்கிக் கொடுத்து வாங்கிக்கொள்ளும் முறையே ஆகும். 'மறுபடி எப்போதாவது உதவுவார்கள்' என்ற எதிர்பார்ப்புடன் கொடுப்பதும் இன்ன அறத்தைச் செய்தால் இன்ன நன்மை உண்டாகும் என்று முன்கூட்டியே ஊதியம் எதிர்பார்த்துச் செய்வதும் குறியெதிர்ப்பு நீர்மை கொண்டன, காலிங்கர் 'மற்று இம்மைப்பயனும் மறுமைப்பயனும் கருதிக் கொடுப்பன எல்லாம் தமக்கோர் ஊதியம் குறித்துக் கொடுக்கின்றமையின் அதுகொடையல்ல என்றவாறு' என்று இம்மை/மறுமைப் பயன் கருதியவற்றையும் குறியெதிர்ப்பையுள் அடக்கினார்.
ஈகை என்னும் பெயரில் கொடுப்பன எல்லாம் ஈகையாகா என்பது கருத்து.

..நெடுங் குறியெதிர்ப்பை நல்கியோர்க்கும்..(புறநானூறு 163:4 பொருள்: நெடுநாட்படக் குறித்த எதிர்ப்பைத் தந்தோர்க்கும்) என்று நெடுங்காலம் கழித்துத் தரும் குறியெதிர்ப்பு பற்றிப் புறப்பாடல் கூறுகிறது. ..குறித்து மாறு எதிர்ப்பை பெறாஅமையின்...(புறநானூறு 333:11 பொருள்: குறியெதிர்ப்பை பெறாமையால்) என்று மற்றொரு புறநானூற்றுப் பாடலும் குறியெதிர்ப்பைக் குறிப்பிடுகிறது. ...உயிர்க் குறியெதிர்ப்பை பெறல் அருங்குரைத்தே... (நற்றிணை 93:12 பொருள்: உயிரை மீட்டுத் தருதல் இனிப் பெறுதற்கரிய தொன்றாகுங்காண்) என்று நற்றிணையிலும் குறியெதிப்பு என்ற சொல் இடம் பெற்றுள்ளது.

ஈகை என்பது இல்லாதார்க்கு ஒன்றினைக் கொடுப்பதே ஆகும்; பிறர்க்குக் கொடுப்பன எல்லாம் பயன்கருதிக் கொடுத்தலுக்கு ஒப்பாகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

யாதேனும் எதிர்பார்த்துக் கொடுப்பது ஈகை ஆகாது.

பொழிப்பு

ஈகை என்பது இல்லாதார்க்குக்கு ஒன்று கொடுப்பதே; பிற எல்லாக் கொடையும் எதிர்பார்த்துக் கொடுப்பது.