இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0226



அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி

(அதிகாரம்:ஈகை குறள் எண்:226)

பொழிப்பு (மு வரதராசன்): வறியவரின் கடும்பசியைத் தீர்க்கவேண்டும்; அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப்பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.

மணக்குடவர் உரை: பொருளற்றாராது குணங்களையழிக்கும் பசியைப் போக்குக. அது செய்ய ஒருவன் தான் தேடின பொருள் வைத்தற்கு இடம் பெற்றானாம்.
இது பகுத்துண்ணப் பொருளழியாது என்றது.

பரிமேலழகர் உரை: அற்றார் அழிபசி தீர்த்தல் - வறியாரது மிக்க பசியை அறன் நோக்கித் தீர்க்க, பொருள் பெற்றான் ஒருவன் வைப்புழி அஃது - பொருள் பெற்றான் ஒருவன் அதனைத் தனக்கு உதவ வைக்கும் இடம் அவ்வறம் ஆகலான்.
(எல்லா நன்மைகளும் அழிய வருதலின், 'அழி பசி' என்றார். 'அறம் நோக்கி' என்பது எஞ்சி நின்றது. 'அற்றார் அழிபசி தீர்த்த' பொருள் பின் தனக்கே வந்து உதவும் என்பதாம்.)

சி இலக்குவனார் உரை: ஒன்றும் இல்லாத ஏழையின் மிக்க பசியைத் தீர்க்கவும்; அவ்வாறு தீர்த்தல் பொருளடைந்த ஒருவன் தன் பொருளை வைக்குமிடமாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி.

பதவுரை:
அற்றார்-பொருள் இல்லாதவர்; அழி-மிக்க; பசி-பசி; தீர்த்தல்-போக்குதல்; அஃது-அது; ஒருவன்-ஒருவன்; பெற்றான்-அடைந்தவன்; பொருள்-உடைமை; வைப்புழி-வைக்கும் இடம்.


அற்றார் அழிபசி தீர்த்தல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருளற்றாராது குணங்களையழிக்கும் பசியைப் போக்குக;
பரிதி: பொருளற்றாரது பசிதீர்த்தல்;
காலிங்கர்: தன்கைப்பொருள் அற்றாராகிய வறியோரது மிக்க பசியினைத் தீர்த்தல் யாது?
பரிமேலழகர்: வறியாரது மிக்க பசியை அறன் நோக்கித் தீர்க்க;
பரிமேலழகர் குறிப்புரை: எல்லா நன்மைகளும் அழிய வருதலின், 'அழி பசி' என்றார். 'அறம் நோக்கி' என்பது எஞ்சி நின்றது.

'பொருளற்றாராது குணங்களையழிக்கும் பசி தீர்த்தல்/பசியைப் போக்குக' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். 'அழிபசி' என்பதற்கு மணக்குடவரும் பரிமேலழகரும் குணங்களையழிக்கும் பசி என்ற பொருளில் உரை செய்தனர். காலிங்கர் 'மிக்க பசி' என்றுரைத்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஏழைகளின் பெரும் பசியைத் தீர்ப்பாயாக', 'ஏழையின் பெரும்பசியைப் போக்குக', 'ஏழைகளுக்கு அழிவு செய்யக்கூடிய அவர்கள் பசியைத் தீர்த்து வைப்பது', 'வறியவர்களது கெடுதிமிக்க பசியைத் தீர்க்க வேண்டும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பொருள் இல்லாதவரின் மிக்க பசியைப் போக்குக என்பது இப்பகுதியின் பொருள்.

அஃதொருவன்பெற்றான் பொருள்வைப் புழி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அது செய்ய ஒருவன் தான் தேடின பொருள் வைத்தற்கு இடம் பெற்றானாம்.
மணக்குடவர் குறிப்புரை: இது பகுத்துண்ணப் பொருளழியாது என்றது.
பரிதி: ஒருவன் பெற்ற பொருளைச் சேமிக்குமிடம் என்றவாறு.
காலிங்கர்: மற்றஃது பொருள் நசித்துப் போகாமை தனது நெஞ்சறிந்து மகிழ்ந்து தானே தன்கையால் எடுத்து வைப்ப தோரிடத்தினைப் பெற்றான் என்றவாறு.
பரிமேலழகர்: பொருள் பெற்றான் ஒருவன் அதனைத் தனக்கு உதவ வைக்கும் இடம் அவ்வறம் ஆகலான்.
பரிமேலழகர் குறிப்புரை: 'அற்றார் அழிபசி தீர்த்த' பொருள் பின் தனக்கே வந்து உதவும் என்பதாம்.

'ஒருவன் தான் தேடின பொருள் வைத்தற்கு இடம் பெற்றானாம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அதுதான் செல்வனுக்குச் சேமிப்பிடம்', 'செல்வம் பெற்றால் ஒருவன் தனக்குதவ வைக்கும் கருவூலம் பசிபோக்கும் உணவேயாம்', 'ஒருவன் தான் பெற்ற செல்வத்தை ஒரு இடத்தில் சேர்த்து வைப்பதாகும்', 'பொருள் தேடியவன் அப்பொருளைத் தனக்கு உதவும்படி வைக்கும் இடம் அதுவே' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அது பொருளைப் பெற்றவன் (தனக்கு உதவ) வைக்கும் இடமாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பொருள் இல்லாதவரின் அழிபசி தீர்த்தல்! அது பொருளைப் பெற்றவன் (தனக்கு உதவ) வைக்கும் இடமாகும் என்பது பாடலின் பொருள்.
'அழிபசி தீர்த்தல்' என்றால் என்ன'?

வறியவர்களின் கடும்பசியைத் தீர்ப்பது பொருள் பெற்றவன் சேமித்து வைக்கும் இடமாம்.
ஈகை அறத்தை ஒரு சேமிப்பாகக் கருதிச் செய் எனச் சொல்லப்படுகிறது. எதிர்காலப் பயன் கருதி, பின் தேவைக்கு உதவத் தக்க வகையில் சேமித்துவைத்துக் காக்குமாறு ஒருவர் தாம் ஈட்டிய செல்வத்தை வைக்கத்தக்க இடம் தேடுவார். மண்பானை, உண்டியல், படுக்கையறை, பாதாள அறை, இருப்புப்பெட்டி, வங்கிக்கணக்கு, வங்கி சேமிப்புப் பெட்டகம், வங்கி பெட்டகச் சேவை, வேறு நிதிவைப்புக் கருவிகள் முதலியவற்றில் இட்டு வைக்க எண்ணுவர். வள்ளுவர் கூறும் ஒரு இடமாவது வறியவரது கொடும்பசி தீர்த்தல் அதாவது உணவு ஈவது. அதுவே ஒரு நல்ல பொருள் வைப்பகம் என்கிறார் அவர். அந்த ஈகைக்கான செலவே ஒருவனது பாதுகாப்பான சேமிப்பு நிதி அதாவது பசித்தவர்க்குச் சோறிடுதல் வங்கியில் நிலை வைப்பாக வைத்தல் போன்றதாகும் என வைப்புழி என்பதை விளக்குவர்.
அறக்கடவுள் தரும் சேமக்காப்பு சேவை (Safe custody service) என வைப்புழியைச் சொல்லலாம். இச்சேவையில் வங்கிக்குத் தாமாகப்போய் வைத்த பொருளை வைத்தவர் திரும்ப எடுக்கவேண்டும். இங்கு அறக்கடவுள் அப்பொருளை அவர் விரும்பும்போது வைத்தவர்க்குத் திருப்பித்தருவார்.

உண்டி அதாவது உணவு கொடுத்தோர் உயிர் கொடுத்தோரேயாவார். பொருளைச் சேர்த்து வைக்கும் இடமாகப் பசியாற்றலை சொல்லிப் பசிப் பிணி மருத்துவர்களாய் ஈவோர் விளங்கவேண்டும் என்பது வள்ளுவரின் எண்ணம். அப்படிப் பயன்படுத்தாத செல்வம் எதற்குச் சமம் என்பதையும் அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றான் தமியள்மூத் தற்று (நன்றியில்செல்வம் 1007 பொருள்: பொருள் இல்லாத வறியவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவாதவனுடைய செல்வம், மிக்க அழகு பெற்றவள் தனியாக வாழ்ந்து முதுமையுற்றாற் போன்றது.) என்ற பாடல் வழி சொல்கிறார். ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் (கொன்றைவேந்தன் 4 பொருள்: கொடாதவருடைய சொத்தை கள்வர் முதலிய தீயவர் பறித்துச்செல்வர்) என்று பழமொழியும் கூறும்.

அற்றார் என்பது இல்லாதாரை அதாவது வறியவரைக் குறிக்கும் சொல். வைப்புழி என்பது வைக்கக்கூடிய இடம் எனப் பொருள்படும். வைப்புழி என்பது வைத்தற்குரிய இடம் அல்லது சேமித்து வைக்குமிடம் எனப் பொருள்படும். பரிமேலழகர் வைக்கப்பட்ட பொருள் தனக்கே வந்து உதவும் என்பதாம் என்பார். தனக்கே வந்து உதவுதல் என்று பரிமேலழகர் சொல்வதை 'தோட் கோப்பல் (தோளில் கோக்கப்படும் கட்டமுது போன்றதாம்) பயன் வடிவாக வந்து நல்லின்பம் தருதல்' என விளக்குவர்)

'அழிபசி தீர்த்தல்' என்றால் என்ன'?

'அழிபசி தீர்த்தல்' என்ற தொடர்க்குக் குணங்களையழிக்கும் பசியைப் போக்குக, பசிதீர்த்தல், மிக்க பசியினைத் தீர்த்தல், மிக்க பசியை அறன் நோக்கித் தீர்க்க, கடும்பசியைத் தீர்க்கவேண்டும், கொடிய பசியைத் தீர்த்தல், அழிக்கும் பசியை ஆற்றுவது, பெரும் பசியைத் தீர்ப்பாயாக, பெரும்பசியைப் போக்குக, பசியைத் தீர்த்து வைப்பது, நலங்களையெல்லாம் அழிக்கும் பசியை நீக்குக, கெடுதிமிக்க பசியைத் தீர்க்க வேண்டும், மிக்க பசியைத் தீர்க்கவும், கொடிய பசியைத் தீர்த்தல் வேண்டும், மிக்க பசியைத் தீர்க்கக் கடவன், கடும்பசியைத் தீர்க்க, வருத்தும் பசியை ஒருவன் தீர்ப்பானாக என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

அழிபசி என்பதற்குக் குணங்களை அழிக்கும் பசி என்றும் மிக்க பசி என்றும் இருதிறமாகப் பொருள் கண்டனர். 'பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்' என்று சொல்லப்பட்டது போல பசித்துன்பம் கொடியது. குணங்களை அழிக்கக்கூடியது. சமுதாயக் கேடுகளையும் உண்டாக்கக் கூடியது. மணிமேகலைக் காவியம் பசிப்பிணியின் கொடுமைகளை விளக்கமாக,
குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
நாண்அணி களையும் மாண்எழில் சிதைக்கும்
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி என்னும் பாவி
(மணிமேகலை: 11:76-80 பொருள்: தன்னாற் பற்றப்பட்டாருடைய உயர்குடிப் பிறப்பைக் கெடுக்கும்; சிறப்பினை அழிக்கும்; பற்றிய கல்வியாகிய பெரிய தெப்பத்தை நீக்கும்; நாணாகிய அணிகலனைப் போக்கும்; மாட்சிமைப்பட்ட அழகைக் குலைக்கும்; பூண் விளங்குகின்ற கொங்கைகளையுடைய மகளிரொடு பிறர் கடைவாயிலில் நிறுத்தும்; பசி நோய் என்று கூறப்படுகின்ற பாவி) எனப்பாடிற்று.
தீர்த்தல் என்ற சொல்லுக்கு 'தீர்க்க' என வியங்கோளாகக் கொண்டு பலர் உரை செய்தனர். தீர்த்தல் என்னும் தொழிற்பெயராக கொள்வார் பரிதி. 'தீர்த்தல் யாது' என எச்சமாக்குவர் கவிராசர். இவ்விலக்கண வேறுபாடுகளால் பொருள் பெரிதும் வேறுபடவில்லை.

அழிபசி தீர்த்தல் என்பதற்கு மிக்கபசி தீர்க்கவேண்டும் என்பது பொருள்.

பொருள் இல்லாதவரின் மிக்க பசியைப் போக்குக! அது பொருளைப் பெற்றவன் (தனக்கு உதவ) வைக்கும் இடமாகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பசிதீர்க்கும் ஈகைச்செயல் நற்பேறுகளைச் சேர்த்து வைக்கும் இடமாகும்.

பொழிப்பு

இல்லாதவரின் கொடும்பசியைப் போக்குக; அது பொருள் பெறுபவனுக்கு சேமிப்பு இடமாகும்.