இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0227பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்
தீப்பிணி தீண்டல் அரிது

(அதிகாரம்:ஈகை குறள் எண்:227)

பொழிப்பு (மு வரதராசன்): தான் பெற்ற உணவைப் பலரோடும் பகுத்து உண்ணும் பழக்கம் உடையவனைப் பசி என்று கூறப்படும் தீய நோய் அணுகுதல் இல்லை.

மணக்குடவர் உரை: பகுத்து உண்டலைப் பழகியவனைப் பசியாகிய பொல்லா நோய் தீண்டுத லில்லை.
இஃது ஒருவன் பிறர்க்கீயா தொழிகின்றமை ஈந்தால் பொருள் குறையும். அதனாலே பசியுண்டாமென் றஞ்சியன்றோ? அவ்வாறு நினைத்தல் வேண்டா. பகுத்துண்ணப் பசிவாராதென்று கூறிற்று.

பரிமேலழகர் உரை: பாத்து ஊண் மரீஇயவனை- எஞ்ஞான்றும் பகுத்து உண்டல் பயின்றவனை, பசி என்னும் தீப்பிணி தீண்டல் அரிது - பசி என்று சொல்லப்படும் தீய நோய் தீண்டல் இல்லை.
(இவ்வுடம்பில் நின்று ஞான ஒழுக்கங்களை அழித்து அதனால் வரும் உடம்புகட்கும் துன்பஞ்செய்தலின், 'தீப்பிணி' எனப்பட்டது. தனக்கு மருத்துவன் தான் ஆகலின், பசிப்பிணி நணுகாது என்பதாம். இவை ஆறு பாட்டானும் ஈதலின் சிறப்புக் கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: தனக்குள்ளதைப் பங்கிட்டு உண்ணும் வழக்கம் உடையவனைப் பசி என்று சொல்லப்படும் தீய நோய் நெருங்குதல் இல்லையாம். (பசித்திருக்கும் நிலை ஏற்படாது)


பொருள்கோள் வரிஅமைப்பு:
பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும் தீப்பிணி தீண்டல் அரிது.

பதவுரை:
பாத்து-பகுத்து; ஊண்-உண்ணுதல்; மரீஇயவனை-தழுவுவனை அல்லது பயின்றவனை; பசி-பசி; என்னும்-என்கின்ற; தீப்பிணி-கொடிய நோய்; தீண்டல் அரிது-உண்டாகாது.


பாத்தூண் மரீஇ யவனை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பகுத்து உண்டலைப் பழகியவனை;
பரிதி ('பார்த்தூண் மரீஇயவனை' - பாடம்): பசித்தவர் உண்டோ என்று பார்த்துக் கூட்டிக் கொண்டுவந்து பசியாற்றுவானை;
காலிங்கர்: அங்ஙனம் தான் தனித்துண்ணாது பிறர்க்கும் பகுத்துண்ணும் பகுத்தூணினையே எஞ்ஞான்றும் மருவி வருகின்றவனை;
பரிமேலழகர்: எஞ்ஞான்றும் பகுத்து உண்டல் பயின்றவனை;

'பகுத்து உண்டலைப் பழகியவனை' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'பார்த்தூண்' எனப் பாடம் கொண்டதனால் 'பசித்தவர் உண்டோ என்று பார்த்துக் கூட்டிக் கொண்டுவந்து பசியாற்றுவானை' எனப் பொருள் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பகுத்துக் கொடுத்து உணவருந்தியவனை', 'விருந்து சுற்றம் முதலியவரோடு பகுத்துண்ணும் பழக்கமுடையவனை', 'பசித்து வந்த பிறருக்கும் பங்கு கொடுத்தும் பசியாற்றிவிட்டுப் பின் உண்கின்றவனை', 'தன் உணவை வறியவர் முதலியவர்கட்குப் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்ணும் இயல்புடையவனை', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பங்கிட்டுக் கொடுத்து உண்ணும் பழக்கம் உடையவனை என்பது இப்பகுதியின் பொருள்.

பசிஎன்னும் தீப்பிணி தீண்டல் அரிது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பசியாகிய பொல்லா நோய் தீண்டுத லில்லை.
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஒருவன் பிறர்க்கீயா தொழிகின்றமை ஈந்தால் பொருள் குறையும். அதனாலே பசியுண்டாமென் றஞ்சியன்றோ? அவ்வாறு நினைத்தல் வேண்டா. பகுத்துண்ணப் பசிவாராதென்று கூறிற்று.
பரிதி: இம்மை மறுமைக்கும் பசிப்பிணி தீண்டாது என்றவாறு.
காலிங்கர்: மற்றுப் பசி என்று சொல்லப்படும் கொடுந்தீயாகிய பிணி எஞ்ஞான்றும் தீண்டுதலரிது என்றவாறு.
பரிமேலழகர்: பசி என்று சொல்லப்படும் தீய நோய் தீண்டல் இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: இவ்வுடம்பில் நின்று ஞான ஒழுக்கங்களை அழித்து அதனால் வரும் உடம்புகட்கும் துன்பஞ்செய்தலின், 'தீப்பிணி' எனப்பட்டது. தனக்கு மருத்துவன் தான் ஆகலின், பசிப்பிணி நணுகாது என்பதாம். இவை ஆறு பாட்டானும் ஈதலின் சிறப்புக் கூறப்பட்டது.

'பசி என்று சொல்லப்படும் தீய நோய் தீண்டல் இல்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தீய பசிநோய் என்றும் தீண்டாது', 'பசி என்னும் கொடிய நோய் பற்றாது', 'பசி என்னும் கொடிய துன்பம் தொடுதல் கூட முடியாது', 'பசி என்று சொல்லப்படும் தீய நோய் தீண்ட மாட்டாது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பசி என்று சொல்லப்படும் கொடிய நோய் தீண்டல் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பங்கிட்டுக் கொடுத்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று சொல்லப்படும் கொடிய நோய் தீண்டல் இல்லை என்பது பாடலின் பொருள்.
பாத்தூணுக்கும் பசி தீண்டாமைக்கும் என்ன இயைபு?

பகுத்துண்ணும் வாழ்வு பொருந்தியவனை பசி என்னும் கொடிய நோய் தாக்குதலில்லை.
தன்னுடையதை, இல்லாதவரோடு பகிர்ந்து உண்ணுவதைப் பழக்கமாகக் கொண்டவனைப் பசி என்னும் தீய நோய் ஒருக்காலும் தீண்டாது. முன்னர் பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல் (இல்வாழ்க்கை 44 பொருள்: பழிவந்துவிடுமோ என்று அஞ்சியும் பகுத்து உண்டலையும் உடைய இல்வாழ்க்கை எக்காலத்திலும் இடரின்றிப் பயணிக்கும்) என்று பாத்தூண் பற்றிக் கூறப்பட்டது. அங்கு 'வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல' எனச் சொல்லப்பட்டது. இங்கு 'பசியென்னும் தீப்பிணி தீண்டல் அரிது' எனச் சொல்லப்படுகிறது. பின்னரும் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. (கொல்லாமை 322 பொருள்: தம்மிடம் உள்ளவற்றைப் பகுத்துக் கொடுத்துத் தாமும் உண்டு பல உயிர்களையும் துன்புறாமல் காத்தல், நூல் ஆசிரியர்கள் திரட்டிக் கூறிய அறங்களுள் முதன்மையானதாகும்) என்று பாத்தூண் சிறப்பித்துக் கூறப்படும்.
பசியாற்றல் என்னும் ஈகைச் செயல் பசியின் கொடுமையிலிருந்து ஒருவனைக் காக்கும் என்ற அறம் சார்ந்த கருத்து சொல்லப்படுகிறது.

'பாத்தூண்' என்ற சொல்லுக்கு பகுத்து உண்டல்(வறியவர் முதலியோர்க்குப் பங்கிட்டு உண்ணுதல்), பசித்தவர் உண்டோ என்று பார்த்து, தான் தனித்துண்ணாது பிறர்க்கும் பகுத்துண்ணும், எஞ்ஞான்றும் பகுத்து உண்டல், தான் பெற்ற உணவைப் பலரோடும் பகுத்து உண்ணும், பகுத்திட்டு உண்ணுதல், தன்னிடம் உள்ளதைப் பிறர்க்கும் பகுத்துக்கொடுத்துத் தானும் உண்ணுதல், பலரோடும் பகுத்துண்டு, பகுத்துக் கொடுத்து உணவருந்தல், விருந்து சுற்றம் முதலியவரோடு பகுத்துண்ணும், பசித்து வந்த பிறருக்கும் பங்கு கொடுத்தும் பசியாற்றிவிட்டுப் பின் உண்கின்றது, தன்னிடத்துள்ள உணவைப் பகுத்துண்ணும், தன் உணவை வறியவர் முதலியவர்கட்குப் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்ணும், தனக்குள்ளதைப் பங்கிட்டு உண்ணும், தான் பெற்ற உணவைப் பலருக்கும் சமமாகப் பங்கிட்டுத் தந்து உணவு கொள்தல், பங்கிட்டு உண்ணுதல், எப்போதும் பலரொடும் பகிர்ந்துண்டல், தனக்குக் கிடைத்த உணவைப் பங்கிட்டுக் கொடுத்து உண்ணுதல், பகுந்து கொடுத்து உண்ணுதல் என்று உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
பாத்தூண் என்ற சொல் ஈதற்கடமையையும் துய்க்கும் உரிமையையும் ஒருங்கே குறிக்கிறது என்பர். 'பாத்தூண்' என்றதற்குத் தான் தனித்துண்ணாது பிறர்க்கும் பகிந்து அளித்து உண்ணுதல் என்பது பொருள்.
பசி ஏன் தீப்பிணி என்று சொல்லப்பட்டது என்பதற்கு நாகை சொ தண்டபாணி 'பசி யாக்கையின் அகத்துறுப்பு புறத்துறுப்புக்களைக் கட்டி வைத்தாற்போலப் பிணித்தலானும், உள்ளத்தின் எழுச்சியையும் அறிவின் வளர்ச்சியையும் தடுத்தலானும் தீப்பிணி என்றார்' என விளக்கம் தந்தார்.

பாத்தூணுக்கும் பசி தீண்டாமைக்கும் என்ன இயைபு?

பகுத்துண்டு வாழ்ந்தோர் பொருளாதாரத் தாழ்வுற்று வறுமையால் வாடி மீண்டும் தலையெடுக்க முடியாமல் அழிவதை அங்கொன்றும் இங்கொன்றுமாக நாம் உலகில் பார்க்கத்தான் செய்கிறோம். அப்படிப்பட்டோரைக் கண்டவர்களுக்கு, ஒருமுறை பொருட்கேடு உற்றால், இந்த உலகத்தில் மீண்டு வருவது அருமை என்பதால், ஈகை அறத்தின் மேல் நம்பிக்கை உண்டாகாமல் போகலாம். அத்தகையோர் நம்பிக்கை தளராமல் பசியாற்றும் பணியைத் தொடர ஊக்குவிக்கவே, பசி தீர்த்தல் என்னும் அறச் செயலால், ஈகை புரிந்தோனுக்கு வறுமையாலோ, அன்றி வேறு காரணங்களாலோ உண்ண உணவு இல்லையாயின், அவர்கள்முன்னர் செய்த அறம் அவனைக் காக்கும் என இக்குறள் கூறுகிறது.
ஏன் ஈகையாளனைப் பசிப்பிணி தீண்டல் அரிது என்பதற்கு உரையாசிரியர்கள் விளக்கங்களாவன:
மணக்குடவர் 'இஃது ஒருவன் பிறர்க்கீயா தொழிகின்றமை ஈந்தால் பொருள் குறையும். அதனாலே பசியுண்டாமென் றஞ்சியன்றோ? அவ்வாறு நினைத்தல் வேண்டா. பகுத்துண்ணப் பசிவாராதென்று கூறிற்று'.
பரிமேலழகர் 'தனக்கு மருத்துவன் தான் ஆகலின், பசிப்பிணி நணுகாது' என்றார். தனக்கு மருத்துவன் (மருந்தின் தன்மையை அறிந்து கொடுப்பவன்) தான் என்பது:
எமக்குத் துணையாவார் யாவர்?’ என்று எண்ணி,
தமக்குத் துணையாவார்த் தாம் தெரிதல் வேண்டா;
பிறர்க்குப் பிறர் செய்வது ஒன்று உண்டோ? இல்லை;-
தமக்கு மருத்துவர் தாம்
(பழமொழி நானூறு 56 (149) பொருள்: எமக்கு ஓர் இடர் வந்தால் அதனைக் களைந்து துணை செய்வோர் வேண்டுமென்று நினைத்து தமக்கு உதவிசெய்வோரைத் தாம் ஆராய்தல் வேண்டா, பிறர் ஒருவருக்குப் பிறரால் செய்யத்தக்கது ஒன்று உண்டோ?, துணை யாவாரைக் கண்டிடினும் ஒரு சிறிதும் நன்மை விளைதல் இல்லை, தம் நோயைத் தடுப்பார் தாமே யாவர்) என்ற பாடலின் கருத்தைக் கொண்டது.
இதையே 'பிறர் நோயைத் தீர்க்க வல்லான் தன் நோயைத் தீர்க்கவல்லனாதல் சொல்லாதே யமையும் ஆதல் போலப் பிறர் பசியைத் தீர்ப்பவன் தன்பசியையும் போக்குவன் என்பதாம்' என விளக்குவார் நாகை சொ தண்டபாணி.
குன்றக்குடி அடிகளார் 'பகுத்துண்ணும் பழக்கமுடையோருக்குப் பலரை உண்பிப்பதிலேயே உண்டது போன்ற மனநிறைவு ஏற்படும் அதனால் 'பசியென்னும் தீப்பிணி தீண்டலரிது' என்றார். மேலும் பகுத்து உண்பவரின் பசியை மற்றவர்கள் தாங்க மாட்டாது போற்றுவர். அதனாலும் தீண்டலரிதாகும்' என விளக்கம் செய்தார்.
குழந்தை 'பகுத்துண்பவனுக்குப் பலரும் உதவுவ ராகையால் பசி நோய் வருத்துதல் இல்லை' என்பார்.
'பகுத்து உண்டு என்பதாலேயே பிறர்க்கும் கொடுத்துத் தானும் உண்டல் பெறப்பட்டது. அங்ஙனம் பகுத்துண்ணும்போது தன்பங்கு குறையுமோ என்று ஐயுறாது கொடுதுண்க. அங்ஙனம் உண்டபோது உளதாம் மனநிறைவே பசியை இவன் மாட்டணுகவிடாது என்பது கருத்தாதல் காண்க' என்பார் தண்டபாணி தேசிகர்-

பங்கிட்டுக் கொடுத்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று சொல்லப்படும் கொடிய நோய் தீண்டல் இல்லை என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பசிதீர்க்கும் ஈகையாளனுக்குப் பசி தெரிவதில்லை.

பொழிப்பு

பகுத்துக் கொடுத்து உண்ணும் பழக்கமுடையவனைப் பசி என்னும் கொடிய நோய் தீண்டாது.