இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0224



இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு

(அதிகாரம்:ஈகை குறள் எண்:0224)

பொழிப்பு (மு வரதராசன்): பொருள் வேண்டும் என்று இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே) இரந்து கேட்கப்படுதலும் துன்பமானது.

மணக்குடவர் உரை: பிறன் ஒருவனா லிரக்கப்படுதலும் இன்னாது எவ்வளவு மெனின், இரந்து வந்தவன் தான் வேண்டியது பெற்றதனானே இனிதான முகங் காணுமளவும்.
இது கொடுக்குங்கால் தாழாது கொடுக்க வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: இரக்கப்படுதல் இன்னாது - இரத்தலேயன்றி இரக்கப்படுதலும் இனிது அன்று, இரந்தவர் இன்முகம் காணும் அளவு - ஒரு பொருளை இரந்தவர் அது பெற்றதனால் இனிதாகிய அவர் முகங் காணும் அளவும்;
(எச்ச உம்மையும் முற்று உம்மையும் விகாரத்தால் தொக்கன. இரக்கப் படுதல் - 'இரப்பார்க்கு ஈவல்' என்று இருத்தல். அதனை 'இன்னாது' என்றது. 'எல்லாம் இரப்பார்க்கு ஒன்று ஈயாமை' (நாலடி.145) கூடுங்கொல்லோ என்னும் அச்சம் நோக்கி. எனவே எல்லாப் பொருளும் ஈதல் வேண்டும் என்பது பெறப்பட்டது.)

தமிழண்ணல் உரை: ஒருவர் தம்மிடம் இரந்துநிற்க நேர்ந்தால், அதுவே ஒருவர்க்கு மிகவும் துன்பம் தருவதாக இருக்கும். அங்ஙனம் இரந்து நின்றவர்க்கு ஒன்றை ஈந்து, அதனால் அவர் முகம் இனிதாக மலர்தலைக் காணும்போதுதான் அத்துன்பம் நீங்கும். அதுவரை அங்ஙனம் இரந்து நிற்கப் பார்த்துக் கொண்டிருத்தல் துன்பமேயாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகம் காணும் அளவு.

பதவுரை:
இன்னாது-இனிதன்று; இரக்கப்படுதல்-ஏற்கப்படுதல்; இரந்தவர்-ஏற்றவர்; இன்-இனிய; முகம்-முகம்; காணும்-பார்க்கும்; அளவு-வரை.


இன்னாது இரக்கப் படுதல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறன் ஒருவனா லிரக்கப்படுதலும் இன்னாது எவ்வளவு மெனின்;
பரிதி: தேகி என்பது பொல்லாது; எவ்வளவும் என்னில்; [தேகி - கொடு என்று கேட்பவன்- இரவலன்]
காலிங்கர்: பிறரால் இரக்கப்படுதல் மிகவும் இன்னாங்கு உடைத்து; [இன்னாங்கு -துன்பம்]
பரிமேலழகர்: இரத்தலேயன்றி இரக்கப்படுதலும் இனிது அன்று;
பரிமேலழகர் குறிப்புரை: இரக்கப் படுதல் - 'இரப்பார்க்கு ஈவல்' என்று இருத்தல். அதனை 'இன்னாது' என்றது. 'எல்லாம் இரப்பார்க்கு ஒன்று ஈயாமை' (நாலடி.145) கூடுங்கொல்லோ என்னும் அச்சம் நோக்கி. எனவே எல்லாப் பொருளும் ஈதல் வேண்டும் என்பது பெறப்பட்டது.

'பிறன் ஒருவனா லிரக்கப்படுதலும் இனிது அன்று' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கேட்கவிடுதல் இனிமை ஆகாது', 'இரத்தலேயன்றி இரக்கப்படுதலும் துன்பம் தரும். (இரக்கப்படுதல்-இரப்பவர்க்கு ஈவேன் என்று இருத்தல்)', '(ஒருவன் அவர்களுக்கு) வெறும் அனுதாபப் பேச்சுக்கள் மட்டும் பேசுவது நல்லதல்ல', 'வறியவரால் இரக்கப்படுதல் துன்பந் தருவதாகும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இரக்கப்படுதலும் இனிது அல்ல என்பது இப்பகுதியின் பொருள்.

இரந்தவர் இன்முகம் காணும் அளவு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இரந்து வந்தவன் தான் வேண்டியது பெற்றதனானே இனிதான முகங் காணுமளவும்.
மணக்குடவர் குறிப்புரை: இது கொடுக்குங்கால் தாழாது கொடுக்க வேண்டுமென்றது.
பரிதி: எவ்வளவும் என்னில், தாதாவானவன் அவன் முகம் காணும் அளவும் என்றவாறு. [தாதாவானவன்- கொடுப்பவன்]
காலிங்கர்: மற்று தம்பால் வந்து இரந்தவரது இனியமுகம் காணும் அளவும் என்றவாறு.
பரிமேலழகர்: ஒரு பொருளை இரந்தவர் அது பெற்றதனால் இனிதாகிய அவர் முகங் காணும் அளவும்;
பரிமேலழகர் குறிப்புரை: எச்ச உம்மையும் முற்று உம்மையும் விகாரத்தால் தொக்கன.

'தம்பால் வந்து இரந்தவரது இனியமுகம் காணும் அளவும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கேட்பவரின் முகமலர்ச்சியைக் காணும் வரை', 'ஒரு பொருளை இரந்தவர் அப்பொருளைப் பெற்று மகிழும் இனிய முகம் காணுமளவு', 'பிச்சை கேட்டவர்கள் திருப்தியடைந்து அவர்களுடைய மகிழ்ந்த முகத்தைப் பார்க்கிற வரையிலும்', 'இரந்தவர் வேண்டிய பொருளைப் பெற்று முகமலர்ச்சி அடைதலைக் காணும் வரை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

இரந்தவர் பொருள் பெற்று முகமலர்ச்சி அடைதலைக் காணும் வரை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இரந்தவர் பொருள் பெற்று முகமலர்ச்சி அடையும் வரை இரக்கப்படுதலும் இனிது அல்ல என்பது பாடலின் பொருள்.
'இரக்கப்படுதல்' என்ற சொல்லின் பொருள் என்ன?

இரந்து கேட்பவரின் நிலை அறிவது துன்பம் தருவது; அவர் முகம் மலரும் அளவு விரைந்து அளித்திடுக.
பசியால் வாடும் ஒருவன் வேறு வழியின்று ஈகையாளனிடம் சென்று இரந்து நிற்கின்றான். தன் துயரக் கதைகளைச் சொல்கிறான். ஏற்பவனின் வறிய தோற்றமே துன்பம் தருவதுதான். அதுபோலவே அவன் கூறும் துயரக் கதைகளை கேட்டுத் 'தன்னைப் போன்ற ஒருவன் தன்னிடம் ஏக்கற்று நிற்கின்றானே, ஐயோ!' என்று இரப்பவர் நிலை கண்டு கொடுப்பவன் மேலும் துயரம் உறுகிறான். எதுவரை இத்துயரம் நீடிக்கும்? இரப்பவரின் முகத்தில் மலர்ச்சி தோன்றும் வரையில் இத்துன்பம் இருக்கும். எனவே இரப்பவன் மகிழ்ந்து ஏற்கும் அளவு விரைவில் கொடுத்து உதவுக எனச் சொல்கிறது பாடல்.

'ஈகையாளன் என்ன நினைக்கிறானோ? கொடுப்பானோ மாட்டோனோ' என்ற ஐயத்தால் கொடுப்பவன் ஈயும்வரை நீடிக்கும் இரக்கப்படுநிலை இரப்பவனுக்கு இன்னாததாகிறது என்றபடியும் உரைகள் உள.

'இரக்கப்படுதல்' என்ற சொல்லின் பொருள் என்ன?

'இரக்கப்படுதல்' என்ற சொல்லுக்குப் பிறன் ஒருவனால் இரக்கப்படுதல், பிறரால் இரக்கப்படுதல், இரந்து கேட்கப்படுதல், இரக்கம் காட்டுவது, அனுதாபம் பேசுவது, கொடுப்பவர்க்கு இரக்கப்படுதல், வறியவரால் இரக்கப்படுதல், இரப்போர் நிலைகண்டு மனம் இரங்குதல் என்று உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இச்சொல்லுக்கு மணக்குடவர், காலிங்கர், பரிமேலழகர் ஆகிய பழைய உரையாசிரியர்கள் குறள் நடையிலேயே வறியவரால் இரக்கப்படுதல் துன்பம் தருவது எனச் சொல்கின்றனர். பின்வந்த அனைவரும் ‘இரக்கப்படுதலை’ இரப்போர் நிலைகண்டு மனம் இரங்குதல் அல்லது வருத்தப்படுதல் என்பது போலத் தன் வினையாகக் கொண்டு இரங்குதல் என்னும் பொருளில் பொருள் கண்டுள்ளனர். ஆனால் இரங்குதல் என்று பொருள் கூறுதல் பிற்கால வழக்காகும் எனச் சொல்லி அப்பொருளை மறுப்பார் இரா சாரங்கபாணி.
'இரக்கப்படுதல்' என்ற சொல்லுக்குப் பரிமேலழகர் 'இரப்பார்க்கு ஈவல் என்று இருத்தல்' எனப் பொருள் கூறியுள்ளார். 'தன்பால் ஒருவன் இரக்க, தான் அவர்க்கு ஈயும் நிலையிலேனும் மறுக்கும் நிலையிலேனும் இருத்தல்' என்பது இச்சொல்லுக்கு நாகை சொ தண்டபாணி தரும் விளக்கம்.

'இரக்கப்படுதல்' என்ற சொல்லுக்கு இரந்து கேட்கப்படுதல் என்பது பொருள்.

இரந்தவர் பொருள் பெற்று முகமலர்ச்சி அடைதலைக் காணும் வரை இரக்கப்படுதலும் இனிது அல்ல என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஈகைபுரியும் வண்மையருக்கு இரந்து கேட்கப்படுதல் துன்பமே தரும்.

பொழிப்பு

இரந்தவரின் முகமலர்ச்சியைக் காணும் வரை இரக்கப்படுதலும் இனிமை ஆகாது.