இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-1201 குறள் திறன்-1202 குறள் திறன்-1203 குறள் திறன்-1204 குறள் திறன்-1205
குறள் திறன்-1206 குறள் திறன்-1207 குறள் திறன்-1208 குறள் திறன்-1209 குறள் திறன்-1210

முன்பு கூடிய இன்பத்தினை நினைந்து காதலர் தனிமையில் சொல்லிக் கொள்ளுதல்.
- சி இலக்குவனார்

தலைவியை நினைந்து தலைவனும் தலைவனை நினைந்து தலைவியும் கூறி வருந்துதல். அங்கே காதலன் தலைவி தனக்குத் தந்த இன்பத்தை நினைத்து 'கள் உண்டால் மட்டுமே களிப்பைத்தருகிறது. காமம் நினைத்தாலே பெருமகிழ்வளிப்பது' என்கிறான். இங்கே காதலி 'காதலன் திரும்பி வரும்வரை மறையாமல் விளங்குவாயாக' என்று நிலவை வேண்டிப் புலம்புகிறாள். இன்பம் கருதிய புலம்பல் ஆனதால், பிரிவின் வருத்தம் கூறவரும் இவ்வதிகாரத்தில் அவலச் சுவை இல்லை.

நினைந்தவர்புலம்பல்

'புலம்பு' எனும் சொல்லுக்குத் தனிமை என்று தொல்காப்பியம் பொருள் கூறும். 'புலம்பு'க்குத் தனிமை எனும் பொருள் கொண்டால், தலைவி-தலைவன் இருவரும் தனித்திருத்தல் அல்லது தனிமை எய்துதல் என்று பொருள் கொள்ளலாம். இவ்வாறு இருவர்க்கும் பொதுவாதல் பற்றி 'அவர்' என்று பன்மைப்பாலாற் கூறப்பட்டது. பிரிந்த தலைவனும் தலைவியும், தனித்தனியாகத் தங்கள் பிரிவின் துன்பத்தை நினைந்து புலம்புதலைக் கூறும் அதிகாரம் இது. தனித்திருக்கும்போதுதான் நினைத்துப் புலம்ப முடியும். தலைமகன் தனிமையாக இருந்து காதலின்பத்தை பேசுதலும், தலைமகள் தனியாக இருந்து தலைவன் பற்றியே சிந்தித்தலும் காட்டப்பட்டன. தனிமைக் கூட்டுக்குள்ளிருந்தவாறே காதலர்கள் தம் துன்பங்களை நினைவுக்குக்கொண்டுவந்து வாய்விட்டுச் சொல்லிப் புலம்புகிறார்கள்.
நினைந்தவர் புலம்பல் என்பது அவர் நினைந்து புலம்பல் அதாவது அவரை நினைத்துப் புலம்பல் என்றும். புலம்பல் என்றால் வருத்தப்பட்டுச் சொல்லிக் கொள்வது எனவும் விளக்குவர்.
மணக்குடவர் இவ்வதிகார விளக்கத்தில் 'பிரிந்த தலைமகனை ஒழிவின்றி நினைந்த தலைமகளிர் துன்பமுறுதல்' என்று கூறி, 'நினைத்தவர் புலம்பல் என்று பாடமாயின், அதற்கு அவரை நினைத்துப் புலம்பல் என்று பொருளுரைத்துக் கொள்க' எனவும் சொன்னார். இவரது உரைப்படி அதிகாரம் முழுவதும் தலைவியின் கூற்று ஆகிறது. ஆனால் இவ்வதிகாரத்தை தலைவன் தலைவியர் இருவருக்கும் உரியதாகக் கொள்வதே பொருத்தம்.

நினைந்தவர்புலம்பல் அதிகாரப் பாடல்களின் சாரம்

  • 1201 ஆம்குறள் 'நினைத்தாலே இன்பம் உண்டாவதால் கள்ளைவிடக் காதலே இனிதாகும்' எனப் பிரிந்து கூடக் காத்திருக்கும் காதலன் கூறுவதைச் சொல்கிறது.
  • 1202 ஆம்குறள் பிரிவில் காதலர் ஒருவரையொருவர் நினைத்து துன்பம் வராமல் பார்த்துக்கொள்கின்றனர். காதல் இன்பம் எவ்வாற்றானும் இனியதே என்பதைக் கூறுவது.
  • 1203 ஆம்குறள் தும்மல் பாதியிலேயே நின்றுவிட்டது; அவர் என்னை நினைக்கத் தொடங்கி பின் விட்டுவிட்டாரோ? என்று காதலி கேட்பதைச் சொல்வது.
  • 1204 ஆம்குறள் 'எம் நெஞ்சத்தில் அவர் எப்பொழுதும் உள்ளதுபோல் அவர் உள்ளத்தில் நாமும் உள்ளவளாய் இருப்போமோ?' எனத் தலைவி ஆர்வமுடன் கேட்பதைச் சொல்கிறது.
  • 1205 ஆம்குறள் 'தன் நெஞ்சில் யாம் செல்லாமல் காத்துக்கொண்டவர் என் உள்ளத்தில் இடைவிடாது வருவதற்கு நாணம் கொள்ள மாட்டாரா?' எனத் தலைவி ஊடல்மொழியில் கேட்பதைச் சொல்வது.
  • 1206 ஆம்குறள் 'தலைவரோடு நான் உடனிருந்த நாட்களை நினைத்துக் கொள்வதால்தான் உயிரோடு உள்ளேன். அதனால் அன்றி, மற்று எதனால் வாழ்கின்றேன்?' என்று தலைவி சொல்வதைக் கூறுகிறது.
  • 1207 ஆம்குறள் 'காதலரை யான் என்றும் மறந்ததில்லை; மறப்பதை நினைத்தாலும் மனம் படபடக்கிறது. அவரை மறந்துவிட்டால் எனக்கு என்ன ஆகுமோ?' எனத் தலைவி கேட்பதைச் சொல்கிறது.
  • 1208 ஆம்குறள் 'எத்தனை முறை நான் நினைத்துக்கொண்டாலும் அவர் அதற்காகச் சினம் கொள்வதில்லை. எனக்கு அவர் செய்யும் பெருமையின் அளவு அது' எனத் தலைவி பெருமிதப்படுவதைச் சொல்கிறது.
  • 1209 ஆம்குறள் 'நாமிருவரும் ஓருவரே என்று முன்பு கூறியவரது அன்பின்மையை மிக நினைந்து என் இனிய உயிர் போய்க் கொண்டிருக்கிறது' எனத் தலைவி சொல்வதைக் கூறுவது.
  • 1210 ஆவதுகுறள் 'நிலவே வாழ்வாயாக! நினைவை விட்டு நீங்காராய்ப் பிரிந்து சென்றவரை நான் கண்ணினால் காணும்வரை மறையாது விளங்குவாயாக!' என தலைவி வேண்டுவதைச் சொல்வது.

நினைந்தவர்புலம்பல் அதிகாரச் சிறப்பியல்புகள்

தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் எம்நெஞ்சத்து ஓவா வரல் என்று தலைவி ஊடல் மொழியில் கூறுவது இனிமை பயக்கிறது.

மறப்பின் எவனாவன் மன்கொல் மறப்பறியேன் உள்ளினும் உள்ளஞ் சுடும் என்று மறப்பை அறியமாட்டேன்; அதை நினைத்தாலும் உள்ளம் கொந்தளிக்கிறது எனக் கூறுகிறாள் தலைவி. என்ன ஆழமான அன்பு அது!

காதலர் கண்ணில் தெரியும்வரை வானில் விளங்குவாயாக என நிலவை நோக்கி விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் படாஅதி வாழி மதி எனத் தலைவி கூறுவது கவிநயம் மிகுந்தது.




குறள் திறன்-1201 குறள் திறன்-1202 குறள் திறன்-1203 குறள் திறன்-1204 குறள் திறன்-1205
குறள் திறன்-1206 குறள் திறன்-1207 குறள் திறன்-1208 குறள் திறன்-1209 குறள் திறன்-1210