தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல்
(அதிகாரம்:நினைந்தவர்புலம்பல்
குறள் எண்:1205)
பொழிப்பு (மு வரதராசன்): தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாது காவல் கொண்ட காதலர், எம்முடைய நெஞ்சில் தாம் ஓயாமல் வருவதைப்பற்றி நாணமாட்டாரோ!
|
மணக்குடவர் உரை:
தமது நெஞ்சின்கண் எம்மை யாம் செல்லாமல் காவல்கொண்டார் எமது நெஞ்சின்கண் ஒழியாதே வருதலைக் காணாரோ.
இது நினையாரோ நினைப்பாரோ என்று ஐயப்பட்ட தலைமகள் நினையாரென்று தெளிந்து கூறியது.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) தம் நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் - தம்முடைய நெஞ்சின்கண்ணே யாம் செல்லாமல் எம்மைக் காவல் கொண்ட காதலர்; எம் நெஞ்சத்து ஓவா வரல் நாணார்கொல் - தாம் எம்முடைய நெஞ்சின்கண் ஒழியாது வருதலை நாணார்கொல்லோ?
(ஒருவரைத் தம்கண் வருதற்கு ஒருகாலும் உடம்படாது, தாம் அவர்கண் பலகாலுஞ்சேறல் நாணுடையார் செயலன்மையின், 'நாணார்கொல்' என்றாள்.)
வ சுப மாணிக்கம் உரை:
தன் நெஞ்சில் என்னை வரவொட்டாதவர் என் நெஞ்சில் ஓயாது வர நாணவில்லையே.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் எம்நெஞ்சத்து ஓவா வரல்.
பதவுரை: தம்=தமது; நெஞ்சத்து-உள்ளத்தில்; எம்மை-என்னை; கடி கொண்டார்-(செல்லாமல்) காவல் கொண்டவர், வரவொட்டாதவர்; நாணார்-வெட்கமுறமாட்டார்; கொல்(ஐயம்); எம்-எமது; நெஞ்சத்து-உள்ளத்தில் ஓவா-ஒழியாமல், ஓயாது; வரல்-வருதல். .
|
தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தமது நெஞ்சின்கண் எம்மை யாம் செல்லாமல் காவல்கொண்டார்;
பரிப்பெருமாள்: தமது நெஞ்சின்கண் யாம் செல்லாமல் காவல்கொண்டார்;
பரிதி: தம் மனத்திலே இருக்க வொட்டாமல் முடுக்கினவர்;
காலிங்கர்: தமது நெஞ்சத்து யான் வாராமல் காவல் கொண்டு போனவர்;
காலிங்கர் குறிப்புரை: கடிகொண்டார் என்பது கரந்துபோனார் என்றது; கடிந்து போனார் என்றும் ஆம்.
பரிமேலழகர்: (இதுவும் அது.) தம்முடைய நெஞ்சின்கண்ணே யாம் செல்லாமல் எம்மைக் காவல் கொண்ட காதலர்;
'தமது நெஞ்சின்கண்ணே யாம் செல்லாமல் எம்மைக் காவல் கொண்டார்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'தம் நெஞ்சத்துள் எம்மைப் புகாமல் காவல் கொண்ட காதலர்', 'தம் மனத்திலிருந்து என்னை அடியோடு நீக்கிவிட்ட அவர்', 'தம்முடைய நெஞ்சில் நாம் செல்லாதபடி காவல் வைத்திருப்பவர்', 'தம்முடைய நெஞ்சில் யாம் செல்லாமல் எம்மைக் காவல் கொண்ட காதலர்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
தமது நெஞ்சத்துள் யாம் வாராமல் காத்துக் கொண்டவர் என்பது இப்பகுதியின் பொருள்.
நாணார்கொல் எம்நெஞ்சத்து ஓவா வரல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('காணார்கொல்' பாடம்): எமது நெஞ்சின்கண் ஒழியாதே வருதலைக் காணாரோ.
மணக்குடவர் குறிப்புரை: இது நினையாரோ நினைப்பாரோ என்று ஐயப்பட்ட தலைமகள் நினையாரென்று தெளிந்து கூறியது.
பரிப்பெருமாள்: எமது நெஞ்சின்கண் ஒழியாதே வருதலை நாணாரோ.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நினையாரோ நினைப்பாரோ என்று ஐயப்பட்ட தலைமகள் நினையாரென்று தெளிந்து கூறியது.
பரிதி: என் மனத்தில் இருக்கின்றாரே; ஆகவே நாணமில்லையோ என்றவாறு.
காலிங்கர்: மற்று என் நெஞ்சத்து ஒழிவிலராய் வருகின்ற இதனை நமக்கு இது தகாது என நாணாரோதான் என்றவாறு.
பரிமேலழகர்: தாம் எம்முடைய நெஞ்சின்கண் ஒழியாது வருதலை நாணார்கொல்லோ?
பரிமேலழகர் குறிப்புரை: ஒருவரைத் தம்கண் வருதற்கு ஒருகாலும் உடம்படாது, தாம் அவர்கண் பலகாலுஞ்சேறல் நாணுடையார் செயலன்மையின், 'நாணார்கொல்' என்றாள்.
'எம் நெஞ்சத்து ஒழியாது வருதலை நாணாரோ' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். மணக்குடவர்/பரிப்பெருமாள் 'காணார்' என்று பாடம் கொண்டதால் காணாரோ எனப் பொருள் உரைத்தனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'எம் நெஞ்சத்துள் ஓயாமல் அடிக்கடி வந்து புகுவதற்கு நாணமாட்டாரா?', 'என்னுடைய மனத்துக்குள் மட்டும் ஓயாது வந்து நுழைகிறாரே! அவருக்கு வெட்கமில்லையா?', 'எம்முடைய உள்ளத்துள் ஓயாது வருவதற்கு நாணமாட்டார் போலும்!', 'தாம் எம்முடைய நெஞ்சில் ஒழியாது வருவதற்கு நாணார் கொல்!' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
எம்முடைய உள்ளத்துள் ஓயாது வருவதற்கு நாணமாட்டார் போலும் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
தமது நெஞ்சத்துள் யாம் வாராமல் காத்துக் கொண்டவர், எம்முடைய உள்ளத்துள் ஓவா வரல் நாணமாட்டார் போலும் என்பது பாடலின் பொருள்.
'ஓவா வரல்' என்ற தொடர் குறிப்பது என்ன?
|
சென்ற இடத்தில் அவர் என்னை நினைக்கிறாரா என்று தெரியவில்லையே! -காதல்மனைவி
'யான் அவர் நெஞ்சுக்குள் போகக் கூடாது என்று வகைசெய்து கொண்டவர், என் உள்ளத்துள் ஓயாது வருவதற்கு வெட்கப்பட வேண்டாமா?' எனத் தலைவி கேட்கிறாள்.
காட்சிப் பின்புலம்:
தொழில் காரணமாகக் கணவர் அயல் சென்றிருக்கிறார்.
தனிப்பட்ட மனைவி எந்நேரமும் அவரை இடையறாது நினைக்கிறாள். 'நினைத்தாலும் நீங்காத பெருமகிழ்வைச் செய்வதால் உண்டால் மட்டுமே களிப்பு தரும் கள்ளினும் காதல் இனிமையானது; அவரை நினைத்தாலே பிரிவில் வரும் துன்பம் இல்லாமல் போய்விடுவதால் கூடினும் பிரிந்தாலும் காதல் எப்பொழுதும் மகிழவைத்துக்கொண்டே உள்ளது; தனக்குத் தும்மல் வருவதுபோன்று வராமல் போய்விட்டதே, அவர் தன்னை நினப்பார் போன்று நினையாது விட்டாரா?; என் நெஞ்சில் அவர் எப்பொழுதும் குடிகொண்டுள்ளார், அதுபோல் அவர் உள்ளத்தில் தாம் இருக்கிறோமோ இல்லையா? இவ்வாறு தலைவியின் மன ஓட்டங்கள் இருக்கின்றன.
இக்காட்சி:
தலைவிக்குப் பிரிவின் துயர் தாங்கமுடியவில்லை. எப்பொழுதும் கணவரையும் அவருடன் கழித்த காதல் நிகழ்வுகளையும் நினைத்துக் கொண்டிருக்கிறாள். அப்படி நினைப்பது அவள் துன்பத்தைக் குறைக்க உதவுகிறது. காலம் சென்றுகொண்டிருக்க அவர் தான் அவரை எந்நேரமும் நினைத்துக்கொண்டிருப்பதுபோல் அவரும் தன்னை நினைக்கின்றாரா என ஐயம் அவளிடம் எழுகிறது. அவர் தன்னை நினைத்ததால் எழுந்தது என்று தான் கருதிய தும்மலும் பாதியில் நின்றுவிட்டது (குறள் 1203).
பின்னர் அவளாகப் புனைவு செய்து அவரைச் சீண்டுவதுபோல 'நான் அவர் நெஞ்சுக்குள் நுழையாதபடி தடுத்துக்கொள்கிறார். ஆனால் என் நெஞ்சில் அடிக்கடி வந்து புகுந்து கொள்கிறாரே. அவர்க்கு வெட்கமிருக்காதா?' என ஊடல்மொழியில் மனத்துள் கேட்கிறாள்.
கடி கொண்டார்’ என்பதற்கு வரவொட்டாதவர், வாராமல் காவல் கொண்டார், முடுக்கினவர், கரந்து போனவர், கடிந்து போனவர், காப்பாற்றி வைத்திருக்கும் தலைவர் என்றவாறு உரைகாரர்கள் பொருள் கூறினர். இவற்றுள் வரவொட்டாதவர், வாராமல் காவல் கொண்டார், எனும் பொருள்கள் பொருத்தமானவை.
|
'ஓவா வரல்' என்ற தொடர் குறிப்பது என்ன?
ஓவா வரல்' என்ற தொடர்க்கு ஒழியாதே வருதல், ஒழிவிலராய் வருகின்ற, ஒழியாது வருதலை, ஓயாமல் வருவதை, இடையறாது வருவதற்கு, ஓயாது வர, ஓயாமல் அடிக்கடி வந்து, இடைவிடாது வருவதற்கு, ஓயாமல் வருகின்றாரே!, ஓயாது வருவதற்கு, ஒழியாது வருவதற்கு, இடைவிடாது வருவதற்கு, தடையின்றி வருவதற்கு என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
கணவர் கடமையில் கண்ணும் கருத்துமாய் உள்ளவர். பணி காரணமாகச் சென்றவர் வேலையிலேயே மூழ்கிவிடுவதால் அவர்க்குத் தலைவியை எந்த நேரமும் நினைக்க முடிவதில்லை. இது தலைவிக்கும் தெரியும். ஆனாலும் அவர் தன்னை எப்பொழுதும் நினைக்கவேண்டும் என எண்ணுகிறாள். கணவர் தன்னை நினைக்கிறாரா இல்லையா என்பதையறிய எந்தக் கருவியும் அன்றும் இல்லை, இன்றும் இல்லை; எனினும் தான் அவரை இடையறாது நினைப்பதை அவர் ஓயாது வருகிறார் என்று உரைத்து, அவர் தன்நெஞ்சில் தலைவியை நினையாரென்று தெளிந்தாள் போல் கூறுகிறாள். அவள் கூற்றில் உள்ள ஏக்க உள்ளம் இரங்கத்தக்கதாய் இருக்கிறது.
'ஓவா வரல்' என்பதற்கு ஓயாது வருதல் என்பது பொருள்.
|
தமது நெஞ்சத்துள் யாம் வாராமல் காத்துக் கொண்டவர், எம்முடைய உள்ளத்துள் ஓயாது வருவதற்கு நாணமாட்டார் போலும் என்பது இக்குறட்கருத்து.
அவர் என்னை நினைக்கமாட்டாராம், ஆனால் என் நெஞ்சில் மட்டும் ஓயாது வருவாராம் என்ற தலைவியின் நினைந்தவர்புலம்பல்.
தம் நெஞ்சத்துள் எம்மை வரவொட்டாதவர் எம் உள்ளத்துள் ஓயாமல் வர நாணவில்லையே.
|