யாமும் உளேம்கொல் அவர்நெஞ்சத்து எம்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்
(அதிகாரம்:நினைந்தவர்புலம்பல்
குறள் எண்:1204)
பொழிப்பு (மு வரதராசன்): எம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே! (அது போலவே) யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கின்றோமோ?
|
மணக்குடவர் உரை:
அவர் நெஞ்சத்து யாமும் உளேங்கொல்லோ: எம்முடைய நெஞ்சின்கண் எப்பொழுதும் அவர் உளராகா நின்றார்.
ஓஒ என்பது மிகுதிப்பொருளின்கண் வந்ததாதலான், எப்பொழுதும் என்னும் பொருளதாயிற்று.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) எம் நெஞ்சத்து அவர் ஓ உளரே - எம்முடைய நெஞ்சத்து அவர் எப்பொழும் உளரேயாய் இராநின்றார்; அவர் நெஞ்சத்து யாமும் உளேங்கொல் - அவ்வகையே அவருடைய நெஞ்சத்தும் யாமும் உளமாதுமோ, ஆகேமோ?
(ஓகார இடைச்சொல் ஈண்டு இடைவிடாமை உணர்த்தி நின்றது. 'உளமாயும், வினை முடியாமையின் வாராராயினாரோ, அது முடிந்தும் இலமாகலின் வாராராயினாரோ?' என்பது கருத்து.)
தமிழண்ணல் உரை:
ஓ! எம்முடைய நெஞ்சத்தில் அவர் எப்பொழுதும் நன்றாக இருக்கின்றாரே! அவ்வாறெனில் அதைப்போல அவர் நெஞ்சத்தில் யான் இருக்கவேண்டுமே; இருக்கின்றேனா? இருப்பேனா? ஆர்வ நெஞ்சத்தின் அவல வெளிப்பாடு.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
எம்நெஞ்சத்து அவர் ஓஒ உளரே; அவர்நெஞ்சத்து யாமும் உளேம்கொல்?
பதவுரை: யாமும்-நாங்களும்; உளேம்-உள்ளேம்ஆவம்; கொல்-(ஐயம்); அவர்-அவர்; நெஞ்சத்து-உள்ளத்தில்; எம்-எமது; நெஞ்சத்து-உள்ளத்தின்கண்; ஓஒ-(இடைவிடாமை), நீங்காது; உளரே-இருக்கின்றனரே; அவர்-அவர் (இங்கு தலைவர் குறித்தது).
|
யாமும் உளேம்கொல் அவர்நெஞ்சத்து:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவர் நெஞ்சத்து யாமும் உளேங்கொல்லோ;
பரிப்பெருமாள்: அவர் நெஞ்சத்து யாமும் உளேங்கொல்லோ:
பரிதி: யாமும் நாயகர் மனத்தில் இருப்போம்;
காலிங்கர்: தோழீ! இக்காலம் அவர் நெஞ்சகத்து யாமும் உளேம் போலும்!
பரிமேலழகர்: (இதுவும் அது.) அவ்வகையே அவருடைய நெஞ்சத்தும் யாமும் உளமாதுமோ, ஆகேமோ? [உளம் ஆதுமோ - உள்ளம் ஆகின்றோமோ?]
'அவர் நெஞ்சத்து யாமும் உளேங்கொல்லோ' என்ற ஐயத்துடன் தலைவி கேட்பதாக மணக்குடவர்/பரிப்பெருமாள், பரிமேலழகர் ஆகியோர் இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர். பரிதியும் காலிங்கரும் 'யாமும் அவர் அவர் நெஞ்சகத்து உளேம் போலும்!' என்றபடி உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அவர் நெஞ்சில் நான் இருக்கின்றேனா?', 'நாமும் அவர் நெஞ்சத்தில் அவ்வாறு குடியிருப்போமா?', 'அப்படி நாமும் அவர் உள்ளத்தில் இருக்கின்றோமோ?', 'அவ்வாறே அவர் நெஞ்சில் யாம் இருக்கின்றோமோ இல்லையோ?' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
யாமும் அவர் அவர் நெஞ்சகத்து உள்ளேமோ? என்பது இப்பகுதியின் பொருள்.
எம்நெஞ்சத்து ஓஒ உளரே அவர்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எம்முடைய நெஞ்சின்கண் எப்பொழுதும் அவர் உளராகா நின்றார்.
மணக்குடவர் குறிப்புரை: ஓஒ என்பது மிகுதிப்பொருளின்கண் வந்ததாதலான், எப்பொழுதும் என்னும் பொருளதாயிற்று.
பரிப்பெருமாள்: எம்முடைய நெஞ்சின்கண் எப்பொழுதும் அவர் உளராகா நின்றார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: ஓஒ என்பது மிகுதிப்பொருளின்கண் வந்ததாதலான், எப்பொழுதும் என்னும் பொருளதாயிற்று.
அவரும் முன்பு நம்மோடு ஒத்த அன்பினர் ஆதலானே எம்மைப்போல அவரும் நினைப்பரோ என்று தோழியொடு சொல்லியது.
பரிதி: அவர் எம்மனத்தில் சதாகாலத்திலும் இருக்கிறபடியால் என்றவாறு.
காலிங்கர்: என்னெனின் என் நெஞ்சத்து எப்பொழுதும் அவர் உளராயிருக்கின்றனர்; இஃது என்ன வியப்போ என்றவாறு.
பரிமேலழகர்: எம்முடைய நெஞ்சத்து அவர் எப்பொழும் உளரேயாய் இராநின்றார்.
பரிமேலழகர் குறிப்புரை: ஓகார இடைச்சொல் ஈண்டு இடைவிடாமை உணர்த்தி நின்றது. 'உளமாயும், வினை முடியாமையின் வாராராயினாரோ, அது முடிந்தும் இலமாகலின் வாராராயினாரோ?' என்பது கருத்து. [இடைவிடாமை - நடுவே நீங்காமை]
'எம் நெஞ்சத்து எப்பொழுதும் அவர் உளராயிருக்கின்றனர்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'என் நெஞ்சிலோ அவர் நன்றாக இருக்கின்றார்', 'எம்முடைய நெஞ்சத்தில் அவர் எப்பொழுதுமே குடியிருக்கிறார்', 'நம்முடைய மனத்தில் அவர் எப்போதும் இருப்பாரே யாவர்', 'எம்முடைய நெஞ்சில் எப்பொழுதும் அவர் உளராய் இருக்கின்றார்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
எம் உள்ளத்திலோ அவர் நன்றாக இருக்கின்றார் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
எம் உள்ளத்திலோ அவர் நன்றாக இருக்கின்றார்; யாமும் உளேம்கொல் அவர்நெஞ்சத்து? என்பது பாடலின் பொருள்.
'யாமும் உளேம்கொல்' என்ற தொடர் குறிப்பது என்ன?
|
'எப்போதும் என் நெஞ்சத்தில் அவர் இருக்க, நானும் இடைவிடாது அவர் உள்ளத்தில் இருக்கின்றேன் தானே?' -தலைவி
என் நெஞ்சில் கணவர் எப்போதுமே உள்ளார்; அது போலவே, அவருடைய உள்ளத்தில், நானும் நீங்காமல் இருக்கின்றேனா?
காட்சிப் பின்புலம்:
தொழில் காரணமாகப் பிரிந்து சென்றிருக்கும் கணவரை இடைவிடாது நினைந்து கொண்டிருக்கிறாள் தலைவி. அவ்விதம் நினைத்துக் கொள்வதால் பிரிவின் துன்பம் தோன்றுவதில்லை என்று காதல் கொண்டோர் உணர்வர்.
தானும் கணவரும் கூடிக் காமம் துய்த்ததை பிரிவு காலத்தில் நினைந்து நினைந்து உவகை கொள்கின்றனர் இருவரும். அது அவர்களுக்குத் தீராத இன்பம் தந்தது;
காதல்கொண்டவருடன் காமம் செய்ததை நினைக்கப் பிரிவுத் துன்பம் தோன்றுவது இல்லை;
இனி, தலைவிக்குத் தும்மல் வருவதுபோன்று வராமல் போய்விட்டது. அச்சமயத்தில் தன் கணவர் தன்னை நினப்பார் போன்று நினையாது விட்டாரா? எனச் சிறுது ஏமாற்றம் அடைந்தவளாய் இருக்கிறாள்.
இக்காட்சி:
எம் நெஞ்சத்தில் அவர் எப்பொழுதும் உள்ளாரே! அதுபோல் அவர் உள்ளத்தில் நாமும் உள்ளவராய் இருப்போமோ?
'எம் நெஞ்சத்தில் அவர் எப்பொழுதும் உள்ளதுபோல் அவர் உள்ளத்தில் நாமும் உள்ளவளாய் இருப்போமோ?' எனத் தலைவி ஆர்வமுடன் கேட்கிறாள்.
என் நெஞ்சில் அவர் எப்பொழுதும் குடிகொண்டுள்ளார், அதுபோல் அவர் உள்ளத்தில் தாம் இருக்கிறோமோ இல்லையா?; தாம் சொல்லாமலேயே தம் நெஞ்சில் தன்னைக் கொண்டுள்ளவர் தன்னுடைய நெஞ்சிற்குள் வருவதற்கு வெட்கப்படுவாரா என்ன?' என்பது அவளே இறுக்கும் பதில். தானும் அவர் நெஞ்சகத்து உள்ளேமோ இல்லையோ என்பது தெரிந்திலாமல் உழன்று கிடந்த தலைவியின் உள்ளம் அவர் எப்பொழுதும் தன் நெஞ்சில் தன்னைக் குடிவைத்துள்ளார் என்பதில் ஐயமில்லை எனத் தெளிவும் பெறுகிறாள். 'ஓஓ! எம் நெஞ்சத்து உளரே அவர்' என்ற கூற்றில் காதல் பொங்குவது புலனாகிறது
இதே அதிகாரத்து முற்குறளில் (1203) நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும் (பொருள்: என்னை நினைப்பார் போன்று நினைக்க மாட்டாரோ? அதனால்தான் தும்மல் உண்டாவதுபோலத் தோன்றிப் பின் உள்ளடங்கிவிடுகிறது) என்றாள் தலைவி.
அவளுக்குத் தும்மல் வந்து பாதியிலேயே நின்று விடுகிறது. அவர் நினைப்பதாலேயே தும்மல் வந்தது என்கிறாள். ஏன் அது அரைகுறையாக நின்றுவிட்டது என்பதையும் எண்ணத் தொடங்குகிறாள். தம் உள்ளத்தில் அவர் எப்பொழுதும் குடிகொண்டிருக்கிறார். அதுபோல் தாமும் அவர் நெஞ்சில் இருக்கின்றோமோ இல்லையோ என்பது தெரியவில்லையே என மனம் ஆதாரமற்ற ஐயத்தால் ஊசலாடுகிறது. இது அன்புகொண்டோரின் காதலின் ஆழத்தை வெளிப்படுத்துவதாக அமைகிறது.
ஏன் அவ்விதம் எண்ணம் தோன்றுகிறது? பரிமேலழகர் 'வினை முடியாமையின் வாராமல் இருக்கின்றாரா? வினை முடிந்தும் வாராமல் இருக்கின்றாரா? எனக்குப் புரியவில்லையே' என இதை விளக்கினார்.
‘ஓஓ’ என்னும் இடைச் சொல்லுக்கு உரையாளர்கள் அனைவரும் எப்பொழுதும் என்ற பொருளிலேயே உரை கண்டனர். 'இடைவிடாமல் அதாவது நடுவே நீங்காமை.', 'ஓயாமல்', 'எந்நேரமும்' என்று அதற்கு விளக்கம் தந்தனர். இவ்விடைசொல் அவள் உள்ளத்தில் பொங்கும் காதலை முழக்குகிறது என்பர்.
|
'யாமும் உளேம்கொல்' என்ற தொடர் குறிப்பது என்ன?
'யாமும் உளேம்கொல்' என்றதற்கு யாமும் உளேங்கொல்லோ, யாமும் நாயகர் மனத்தில் இருப்போம், அவர் நெஞ்சகத்து யாமும் உளேம் போலும்!, அவருடைய நெஞ்சத்தும் யாமும் உளமாதுமோ ஆகேமோ?, யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கின்றோமோ?, அவர் நெஞ்சத்தில் யான் இருக்கவேண்டுமே; இருக்கின்றேனா? இருப்பேனா?, அவர் நெஞ்சில் நான் இருக்கின்றேனா?, நாமும் அவர் நெஞ்சத்தில் அவ்வாறு குடியிருப்போமா?, அவர் நெஞ்சத்தில் நானும் இருக்கிறேனா?, அவர் நெஞ்சத்தில் நாமும் உள்ளவராய் இருப்போமோ?, நாமும் அவர் உள்ளத்தில் இருக்கின்றோமோ?, அவர் நெஞ்சில் யாம் இருக்கின்றோமோ இல்லையோ?, யாமும் அவர் உள்ளத்தில் இருக்கின்றேமோ, இல்லேமோ? தெரியவில்லையே!, அவரது நெஞ்சத்தில் நானும் இருப்பேனா? என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
யாமும் உளேம்கொல் என்ற தொடர்க்கு யாமும் இருக்கின்றோமா? என்பது நேரிய பொருள்.
பரிதி இதில் உள்ள கொல் என்பதை அசைநிலையாகக் கொண்டு 'யாமும் நாயகர் மனத்தில் இருப்போம்' என உரை வரைந்தார். காலிங்கர் உரையும் இதைத் தழுவியது போன்று
'அவர் நெஞ்சகத்து யாமும் உளேம் போலும்!' என்று பொருள் கூறினார். இவர்கள் இருவர் உரையும் பொருத்தமானதே. இவை காதலியின் களங்கமற்ற உள்ளத்தைக் காண்பிப்பதாக அமைகிறது. ஆனால் அதிகாரத் தலைப்பான 'நினைந்தவர்புலம்பல்' என்பதற்கு இயைய அவல நிலையைச் சுட்ட இதில் ஒன்றும் இல்லை எனக் கருதி மற்ற உரையாசிரியர்கள் அனைவரும் தலைவியின் மனதில் ஐயம் தோன்றுவதாகவே உரை செய்தனர் போல் தோன்றுகிறது.
'யாமும் உளேம்கொல்' என்பதற்கு அவர் நெஞ்சில் நான் இருக்கின்றேனா? என்பது பொருள்.
|
எம் உள்ளத்திலோ அவர் நன்றாக இருக்கின்றார்; யாமும் அவர் நெஞ்சகத்து உள்ளேமோ? என்பது இக்குறட்கருத்து.
சென்ற இடத்தில் கணவர் தன்னைத் தன் நெஞ்சில் நிறுத்திஉள்ளாரோ இல்லையோ என்று தலைவி நினைந்தவர்புலம்பல்.
.
என் உள்ளத்திலோ அவர் நன்றாக இருக்கின்றார்; யாமும் அவர் நெஞ்சத்தில் அவ்வாறு உள்ளேமோ?
|