இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1206



மற்றுயான் என்னுளேன் மன்னோ அவரொடுயான்
உற்றநாள் உள்ள உளேன்

(அதிகாரம்:நினைந்தவர்புலம்பல் குறள் எண்:1206)

பொழிப்பு (மு வரதராசன்): காதலராகிய அவரோடு யான் பொருந்தியிருந்த நாட்களை நினைத்துக்கொள்வதால்தான் உயிரோடிருக்கின்றேன்; வேறு எதனால் உயிர்வாழ்கின்றேன்?

மணக்குடவர் உரை: யான்அவரோடு புணர்ந்த நாள் இன்பத்தை நினைத்தலானே உயிர் வாழ்கின்றேன் அல்லது யாதொன்றினான் யான் உளேனாய் வாழ்கின்றேன்;
இது தலைமகன் தலையளியை நினைந்து ஆற்றாளாயின தலைமகளை நோக்கி நீ இவ்வாறு நினைந்திரங்கல் உயிர்க்கு இறுதியாகுமென்ற தோழிக்கு அவள் கூறியது.

பரிமேலழகர் உரை: (அவரோடு புணர்ந்த ஞான்றை இன்பத்தை நினைந்து இறந்துபாடெய்தா நின்றாய்; அது மறத்தல் வேண்டும் என்றாட்குச் சொல்லியது.) யான் அவரொடு உற்ற நாள் உள்ள உளேன் - யான் அவரோடு புணர்நத ஞான்றை இன்பத்தை நினைதலான் இத் துன்ப வெள்ளத்தும் உயிர் வாழ்கின்றேன்; மற்று யான் என்னுளேன் - அது இன்றாயின், வேறு எத்தால் உயிர் வாழ்வேன்?
(நாள்: ஆகுபெயர். 'உயிர் வாழ்வதற்கு வேறும் உள, அவை பெற்றிலேன்' என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. அவை அவன்தூது வருதல், தன்தூது சேறல் முதலாயின. 'அவை யாவும் இன்மையின், இதுவல்லது எனக்குப் பற்றுக் கோடு இல்லை', என்பது கருத்து.)

வ சுப மாணிக்கம் உரை: அவரோடு கூடியிருந்த நாட்களை நினைப்பதால் வாழ்கின்றேன்; வேறு எதனால் வாழ்கின்றேன்?


பொருள்கோள் வரிஅமைப்பு:
அவரொடுயான் உற்றநாள் உள்ள உளேன்; மற்றுயான் என்னுளேன் மன்னோ.

பதவுரை: மற்று-பின் அதாவது 'அன்றாயின் வேறென்ன'; யான்-நான்; என்உளேன்-எதனால் உயிரோடு உள்ளேன்; மன்னோ-(ஒழியிசை); அவரொடு-அவருடன்; யான்-நான்; உற்ற-கூடியிருந்த; நாள்-நாள்; உள்ள-நினைக்க; உளேன்-உயிர் வாழ்கின்றேன்.


மற்றுயான் என்னுளேன் மன்னோ:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அல்லது யாதொன்றினான் யான் உளேனாய் வாழ்கின்றேன்;
பரிப்பெருமாள்: அல்லது யாதொன்றினான் யாதனான் உளேனாய் வாழ்கின்றேன்;
பரிதி: நான் நாயகர் மனத்தில் எப்படி யிருந்தேனோ;
காலிங்கர்: தோழீ! அல்லது வேறு யான் என்பற்றி உள்ளேன் ஆகின்றேன்;
பரிமேலழகர்: (அவரோடு புணர்ந்த ஞான்றை இன்பத்தை நினைந்து இறந்துபாடெய்தா நின்றாய்; அது மறத்தல் வேண்டும் என்றாட்குச் சொல்லியது.) அது இன்றாயின், வேறு எத்தால் உயிர் வாழ்வேன்? [புணர்ந்த ஞான்றை - கூடிய காலத்து; இறந்துபாடு எய்தாநின்றாய்- பெருந்துன்பத்தை (இறப்பது போன்றதை) அடைகின்றாய்; அது - அவரோடு புணர்ந்த ஞான்றை இன்பத்தை நினைத்தல். ]

'அல்லது யாதொன்றினான் நான் உள்ளேன் ஆகின்றேன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அஃது இல்லாவிட்டால் வேறு எதனால் உயிர் வாழ முடியும்?', 'அதனால் அன்றி, மற்று எதனால் உயிரோடும் உள்ளேன்?', 'நான் எப்படி உயிர் வாழ்கின்றே னென்றால்', 'அது இன்றாயின் வேறு எதனால் உயிர் வாழ்வேன்' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அதுவல்லாமல் நான் எதற்காக உயிர் வாழ்கின்றேன்? என்பது இப்பகுதியின் பொருள்.

அவரொடுயான் உற்றநாள் உள்ள உளேன்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யான்அவரோடு புணர்ந்த நாள் இன்பத்தை நினைத்தலானே உயிர் வாழ்கின்றேன்.
மணக்குடவர் குறிப்புரை: இது தலைமகன் தலையளியை நினைந்து ஆற்றாளாயின தலைமகளை நோக்கி நீ இவ்வாறு நினைந்திரங்கல் உயிர்க்கு இறுதியாகுமென்ற தோழிக்கு அவள் கூறியது.
பரிப்பெருமாள்: யான்அவரோடு புணர்ந்த நாட்களை நினைத்தலானே உயிர் வாழ்கின்றேன்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தலைமகன் தலையளியை நினைத்து ஆற்றாளாயின தலைமகளை நோக்கி நீ இவ்வாறு நினைந்திரங்கல் உயிர்க்கு இறுதியாகுமென்ற தோழிக்கு அவள் கூறியது.
பரிதி: நாயகரைக் கூடிய அன்று முதல் இன்றளவும் நாயகர் என் மனத்திலிருக்கிறார்; நான் எப்படி அவர் மனத்தில் இருந்தேனோ....... என்றவாறு.
காலிங்கர்: அங்ஙனம் நெஞ்சு சுடினும் யான் அவரோடு இன்புற்ற நாள்களை நினைய நினைய மற்று அது பற்றுக்கோடாக ஆற்றியுள்ளேன் ஆகின்றேன்.
காலிங்கர் குறிப்புரை: எனவே இவள் தூதுவிடுதல் பயன் என்றவாறு.
பரிமேலழகர்: யான் அவரோடு புணர்நத ஞான்றை இன்பத்தை நினைதலான் இத் துன்ப வெள்ளத்தும் உயிர் வாழ்கின்றேன்.
பரிமேலழகர் குறிப்புரை: நாள்: ஆகுபெயர். 'உயிர் வாழ்வதற்கு வேறும் உள, அவை பெற்றிலேன்' என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. அவை அவன்தூது வருதல், தன்தூது சேறல் முதலாயின. 'அவை யாவும் இன்மையின், இதுவல்லது எனக்குப் பற்றுக் கோடு இல்லை', என்பது கருத்து. [முதலாயின என்றமையின், காதலர் வருந் தேரொலி கேட்டல், காதலர் வருதல் முதலியவற்றையும் கொள்ளலாம்; அவை -அவன் தூது வருதல், தன் தூது செல்லுதல் முதலாயின]

'யான்அவரோடு புணர்ந்த நாள் இன்பத்தை நினைத்தலானே உயிர் வாழ்கின்றேன்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவரோடு நான் கூடி முயங்கிய இன்ப நாளை நினைத்தலான் பிரிவு நாளிலும் உயிர் வாழ்கின்றேன்', 'துணைவரோடு யான் இனிதாகக் கூடியிருந்த நாளை நினைத்துக் கொள்வதால்தான் உயிரோடு உள்ளேன்', 'அவரோடுகூடியின்பம் நுகர்ந்த நாளை நினைப்பதாற் பிழைத்திருக்கின்றேன்', 'நான் அவரோடு கூடியபொழுது அடைந்த இன்பத்தை நினைத்தால் இத்துன்ப மிகுதியினும் உயிர் வாழ்கிறேன்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

யான் அவருடன் இருந்த நாள்களை நினைந்து நினைந்து மற்று அதனால் உயிர்வாழ்கின்றேன் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
யான் அவருடன் உற்றநாள் உள்ள மற்று அதனால் உயிர்வாழ்கின்றேன்; அதுவல்லாமல் நான் எதற்காக உயிர் வாழ்கின்றேன்? என்பது பாடலின் பொருள்.
'உற்றநாள் உள்ள' என்பதன் பொருள் என்ன?

ஆகா! தலைவரோடு கூடியிருந்த நாட்களை நினைப்பதுவே இனிமையாக இருக்கின்றதே!

'அவரோடு இன்பமாயிருந்த நாட்களின் நினைவாலேயே உயிருடன் இருக்கிறேன்; வேறு எதற்காக என்னால் உயிர் வாழ முடியும்?' எனக் கேட்கிறாள் தலைவி.
காட்சிப் பின்புலம்:
கடமை காரணமாகக் கணவர் பிரிந்து சென்றுள்ளார். அவரும் தலைவியும் ஒருவரையொருவர் நினைத்துக் கொண்டு பிரிவுத் துன்பம் மிகாமல் பார்த்துக்கொள்கின்றனர். 'நினைத்தாலும் நீங்காத பெருமகிழ்வைச் செய்வதால் உண்டால் மட்டுமே களிப்பு தரும் கள்ளினும் காதல் இனிமையானது; அவரை நினைத்தாலே பிரிவில் வரும் துன்பம் இல்லாமல் போய்விடுவதால் கூடினும் பிரிந்தாலும் இனிமையாகவே உள்ளது; தனக்குத் தும்மல் வருவதுபோன்று வராமல் போய்விட்டபொழுது, அவர் தன்னை நினப்பார் போன்று நினையாது விட்டாரா?; என் நெஞ்சில் அவர் எப்பொழுதும் குடிகொண்டுள்ளார், அதுபோல் அவர் உள்ளத்தில் தான் இருக்கிறோமோ இல்லையா?; தான் சொல்லாமலேயே தன் நெஞ்சில் என்னைக் கொண்டுள்ளவர் என்னுடைய நெஞ்சிற்குள் வருவதற்கு வெட்கப்படுவாரா என்ன?' இவ்வாறு தலைவியின் எண்ண ஓட்டங்கள் இருக்கின்றன.

இக்காட்சி:
பிரிவுத் துன்பம் ஆற்றாளாகி,நான் ஏன் வாழ்கிறேன் எனத் தனக்குத்தானே கேட்கத் தொடங்குகிறாள் தலைமகள். அவளுக்கு அதற்கான விடையும் கிடைத்தது. 'அவர் பிரிந்து சென்ற போதிலும் அவரை எப்பொழுதும் நினைத்துக் கொண்டேதானே இருக்கின்றேன். அவரோடு கூடி வாழ்ந்த நாட்களை நினைப்பதில் ஆறுதல் கிடைக்கிறது. அவரையும் அவருடன் இருந்து இன்பம் துய்த்ததையும் நினைப்பதாலே நான் உயிருடன் இருக்கிறேன்' என உரைக்கிறாள் அவள். தான் உயிர் வாழ்வதே கணவர் நினைவாலே மட்டும் தான். அவர் தந்த இன்ப நினைவின்றேல் எப்படி உயிர் வாழ்வேன்? என்று துன்ப உணர்வு மிகுந்த நேரத்தில் அவள் உயிருடன் இருப்பதற்கான கார'ணத்தினைக் கூறுகின்றாள். அவர் நினைவாகத் தான் இருப்பதாகவும் அதுவும் இல்லையென்றால், மற்று எதனால் வாழவேண்டும்? என்று மேலும் அவள் புலம்புகிறாள்.

'உற்றநாள் உள்ள' என்பதன் பொருள் என்ன?

'உற்றநாள் உள்ள' என்ற தொடர்க்கு புணர்ந்த நாள் இன்பத்தை நினைத்தலானே, புணர்ந்த நாட்களை நினைத்தலானே, அன்று முதல் இன்றளவும் நாயகர் என் மனத்திலிருக்கிறார், இன்புற்ற நாள்களை நினைய நினைய, புணர்நத ஞான்றை இன்பத்தை நினைதலான், பொருந்தியிருந்த நாட்களை நினைத்துக்கொள்வதால்தான், கூடி வாழ்ந்த காலத்து இன்பத்தை நினைப்பதற்கு மட்டுமே, கூடியிருந்த நாட்களை நினைப்பதால், கூடி முயங்கிய இன்ப நாளை நினைத்தலான், இன்பமுற்ற நாட்களை எண்ணி, இனிதாகக் கூடியிருந்த நாளை நினைத்துக் கொள்வதால்தான், கூடியின்பம் நுகர்ந்த நாளை நினைப்பதால், கூடியபொழுது அடைந்த இன்பத்தை நினைப்பதால், கூடியிருந்து குளிர்ந்த நாட்களை நினைத்து நினைத்து, கூடிய காலை யின்பத்தை இடைவிடாது நினைத்தலாலேயே, கூடி வாழ்ந்த இன்பத்தை எண்ணுவதால் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

தலைவரோடு கூடி இருந்த நாட்களின் நினைவுகளே தான் உயிர்த்திருக்கப் போதுமானது என்கிறாள் தலைவி. அவ்வின்ப நினைவுகளே வாழ்வதற்கான பற்றுக்கோடாக உள்ளது; வேறு எதனால் நான் இருக்கிறேன்? எனவும் கூறுகிறாள் அவள்.

'உற்றநாள் உள்ள' என்பதற்கு 'கூடி இன்புற்ற நாட்களை நினைப்பதால்' என்பது பொருள்.

யான் அவருடன் கலந்திருந்த நாள்களை நினைந்து நினைந்து மற்று அதனால் உயிர்வாழ்கின்றேன்; அதுவல்லாமல் நான் எதற்காக உயிர் வாழ்கின்றேன்? என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தலைவனுடன் கூடியிருந்த இனிய நாட்களை நினைத்தே என் உயிர் வாழ்கிறது என்ற தலைவியின் நினைந்தவர்புலம்பல்.

பொழிப்பு

நான் என் காதலருடன் கூடியிருந்த நாட்களை நினைப்பதால் உயிரோடு உள்ளேன்; வேறு எதனால் வாழ்கிறேன்?