இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1209



விளியும்என் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து

(அதிகாரம்:நினைந்தவர்புலம்பல் குறள் எண்:1209)

பொழிப்பு (மு வரதராசன்): 'நாம் இருவரும் வேறு அல்லேம்' என்று அடிக்கடி சொல்லும் அவர் இப்போது அன்பு இல்லாதிருத்தலை மிக நினைந்து என் இனிய உயிர் அழிகின்றது.

மணக்குடவர் உரை: நம்முள் நாம் வேறல்லமென்று சொன்னவர் அருளின்மையை மிகவும் நினைந்து எனது உயிர் அழியா நின்றது.
இது தலைமகன் நினையானென்று தெரிந்து தலைமகள் தோழிக்குக் கூறியது.

பரிமேலழகர் உரை: (தலைமகன் தூது வரக் காணாது வருந்துகின்றாள், வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது) வேறு அல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து - முன்பெல்லாம் நாம் இருவரும் வேறல்லம் என்று சொல்லுவாரது அளியின்மையை மிகவும் நினைந்து: என் இன்னுயிர் விளியும்-எனது இனிய உயிர் கழியாநின்றது. (அளியின்மை - பின் வருவாராகலுமாய்ப் பிரிதலும், பிரிந்து வாராமையும், ஆண்டு நின்றுழித் தூது விடாமையும் முதலாயின. பிரிவாற்றல் வேண்டும் என வற்புறுத்தாட்கு, 'என்னுயிர் கழிகின்றது பிரிவிற்கு அன்று; அவரன்பின்மைக்கு' என எதிர்அழிந்து கூறியவாறு)

சி இலக்குவனார் உரை: நாம் இருவரும் வேறு அல்லம் என்று சொல்லுவாரது இரக்கமின்மையை நினைந்து எனது இனிய உயிர் போகின்றது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வேறல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து என் இன்னுயிர் விளியும்.

பதவுரை: விளியும்-கழியா நின்றது, அழியும்; என்-எனது; இன்னுயிர்-இனிய உயிர்; வேறு-பிறர்; அல்லம்-ஆகமாட்டோம்; என்பார்-என்று சொல்லுபவர்; அளி-தண்ணளி, அருள், அன்பு; இன்மை-இல்லாதிருத்தல்; ஆற்ற-மிகவும்; நினைந்து-எண்ணி.


விளியும்என் இன்னுயிர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எனது உயிர் அழியா நின்றது;
பரிப்பெருமாள்: எனதாகிய இன்னுயிர் அழியா நின்றது;
பரிதி ('அழி' பாடம்): அவர் சொன்ன சொல்லை நினைந்து அழியாய் நெஞ்சே!
காலிங்கர் ('விழியுமென்' பாடம்): தோழீ! யான் என்னை செய்வது! என் இன்னுயிரானது ஒரு காலைக்கு ஒரு காலைக் கழியும்;
பரிமேலழகர்: (தலைமகன் தூது வரக் காணாது வருந்துகின்றாள், வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது) எனது இனிய உயிர் கழியாநின்றது. [வற்புறுத்தும்-தூது வரும், அஞ்ச வேண்டாம் என்று உறுதிமொழி கூறும்; கழியா நின்றது = வருந்துகின்றது]

'எனது உயிர் அழியா நின்றது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'என் உயிர் போகும்', 'என் இனிய உயிர் போய்க் கொண்டிருக்கிறது', 'என் சீவன் குறைகின்றது', 'எனது இனிய உயிர் கழிந்தொழிக்கின்றது' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

என் இனிய உயிர் நீங்கிக் கொண்டிருக்கிறது என்பது இப்பகுதியின் பொருள்.

வேறல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நம்முள் நாம் வேறல்லமென்று சொன்னவர் அருளின்மையை மிகவும் நினைந்து.
மணக்குடவர் குறிப்புரை: இது தலைமகன் நினையானென்று தெரிந்து தலைமகள் தோழிக்குக் கூறியது.
பரிப்பெருமாள்: நம்முள் நாம் வேறல்லேம் என்று சொன்னவரது அருளின்மையை மிகவும் நினைந்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தலைமகன் நினையானென்று தேறிய தலைமகள் ஆற்றாமையால் தோழிக்குக் கூறியது.
பரிதி: என் விழியும் உன் உயிரும் வேறல்ல என்று இருந்தவர் பிரிந்தார் என்றவாறு.
காலிங்கர் ('வேறல்ல' பாடம்): யாதனால் எனின் அன்று அருளுடன் அளித்து யாம் இருதலைப்புள்ளின் ஓர் உயிர்போல மெய் இரண்டு ஆயினும் உயிர் வேறு அல்ல என்பவர்மாட்டு அதற்கு ஏற்பப் பின்னொரு தண்ணளியில்லாமையை மிகவும் நினைந்து நினைந்து என்றவாறு.
பரிமேலழகர்: முன்பெல்லாம் நாம் இருவரும் வேறல்லம் என்று சொல்லுவாரது அளியின்மையை மிகவும் நினைந்து. [அளியின்மை - அருளில்லாமை]
பரிமேலழகர் குறிப்புரை: அளியின்மை - பின் வருவாராகலுமாய்ப் பிரிதலும், பிரிந்து வாராமையும், ஆண்டு நின்றுழித் தூது விடாமையும் முதலாயின. பிரிவாற்றல் வேண்டும் என வற்புறுத்தாட்கு, 'என்னுயிர் கழிகின்றது பிரிவிற்கு அன்று; அவரன்பின்மைக்கு' என எதிர்அழிந்து கூறியவாறு. [எதிரழிந்து- (தோழிக்கு) எதிரே வருந்தி]

'நம்முள் நாம் வேறல்லமென்று சொன்னவர் அருளின்மையை மிகவும் நினைந்து' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நாம் ஒருவர் என்று சொன்ன காதலரின் கொடுமையை மிக எண்ணி', 'முன்பெல்லாம் நாமிருவரும் ஓருயிர், வேறு இல்லை என்று கூறுவாரது அன்பின்மையை மிக நினைந்து', 'என்னுடன் இருக்கும்போது, உன்னுயிரும் என்னுயிரும் வேறல்ல என்று சொல்லும் என் காதலர் என்னருகில் இல்லாதிருப்பதை நினைந்து நினைந்து', 'முன்பு நாமிருவரும் வெவ்வேறாக மாட்டோமென்று சொன்னவரது இரக்கமில்லாத் தன்மையை மிக நினைத்து' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

நாமிருவரும் வேறுவேறானவர் அல்லர் என்று சொன்னவரது அருளின்மையை நினைந்து நினைந்து என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நாமிருவரும் வேறல்லம் என்பார் அருளின்மையை நினைந்து நினைந்து என் இனிய உயிர் நீங்கிக் கொண்டிருக்கிறது என்பது பாடலின் பொருள்.
'வேறல்லம் என்பார்' என்ற தொடரின் பொருள் என்ன?

'நாமிருவரும் ஓருவரே' என்று அவர் முன்பு கூறியது என்ன ஆயிற்று? ஏன் இன்னும் திரும்பி வரவில்லை?' எனக் கேட்கிறாள் தலைவி.

'நாம் இருவரும் வேறு வேறு அல்ல' என்பவர் என்னுடன் அருகில் இல்லாத அன்பின்மையை எண்ணியெண்ணி என்னுடைய இனிய உயிர் நீங்கிக் கொண்டிருக்கின்றது.
காட்சிப் பின்புலம்:
தலைவர் கடமை காரணமாகச் சென்றிருக்கிறார். பின் வருவாராகவே பிரிந்துள்ளார். ஆனால் அவரிடமிருந்து இப்பொழுது எந்தச் செய்தியும் இல்லை. தலைவி அவரை எந்நேரமும் நினைத்துக் கொண்டேயிருக்கிறாள்.
நினைத்தாலும் பெரு மகிழ்ச்சியைத் தருவதால் பருகினால் அல்லாமல் களிப்புச் செய்யாத கள்ளைவிடக் காமம் இனிமையானது; பிரிவுகாலத்தில் காமத்தை நினைத்தால் நினைப்பவர்க்குப் பிரிவுத்துன்பம் இல்லையாம். எனவே காதல், கூடினும் பிரியினும் இனிமையே தருவது; தனக்குத் தும்மல் வருவதுபோன்று வராமல் இருந்துவிட்டது, கணவர் தன்னை நினப்பார் போன்று நினையாது விட்டாரா?; தன் நெஞ்சில் தலைவர் எப்பொழுதும் குடிகொண்டுள்ளார், அதுபோல் அவர் உள்ளத்தில் தாம் இருக்கின்றோமோ இல்லையா?; அவர் நெஞ்சுக்குள் நான் நுழையாதபடி தடுத்துக்கொள்கிறார். ஆனால் என் நெஞ்சில் அடிக்கடி வந்து புகுந்து கொள்கிறாரே. அவர்க்கு வெட்கமிருக்காதா?; அவரோடு கூடியிருந்தபொழுது எய்திய இன்பத்தை நினைத்துக்கொண்டு பிரிவுத்துன்பத்திலும் உயிர் வாழ்கிறேன்; மற்றபடி நான் எதற்காக வாழவேண்டும்?; அவரைப் பிரிந்ததை நினைத்தாலும் அது என் நெஞ்சைச் சுடுகிறது. அவ்விதம் அவரை நினைக்காமல் இருக்கும் நான் அவரை மறந்தால் என்ன ஆவேன்?; எத்தனை முறை நான் அவரை நினைத்துக்கொண்டாலும் அதற்காக அவர் சினம் கொள்வதில்லை. இது அவர் எனக்குச் செய்யும் சிறப்பு.
இவ்வாறு தலைவி தன் கூற்றுக்களாலும் வினாக்களைத் தொடுத்தும் எந்நேரமும் கணவரை நினைவில் வைத்துகொண்டே இருக்கிறாள்.

இக்காட்சி:
முன்பு நாமிருவரும் வேறல்லெம் என்று கூறிய தலைவர் இன்று அருள் தருவார் அல்லார் ஆகிவிட்டாரே. அவரது அன்பின்மையை நினைத்து நினைத்து என் இனிய உயிர் போய்க் கொண்டிருக்கிறது என்கிறாள் மனைவி. தலைவரே தன்னுடைய உயிர் என்று கருதும் அவள் அவர் நினைவுடன்தான் உயிர் வாழ்வதாகச் சொல்கிறாள். தலைவரை எண்ணும் போது அவளுக்கு சோர்வும் வெறுப்பும் மிகுந்துவிட்டன. காதலர் முன்பு சொன்ன மொழியும் நினைவுக்கு வருகிறது. 'நாமிருவரும் வேறல்லம்' என்று சொல்லிக்கொள்பவர் இன்னும் திரும்பி வரவில்லை; ஒரு செய்தியும் இல்லை. அவரது இக்கொடுமையை நினைத்து நினைத்து தன் உயிரும் தேய்கிறது என இப்பொழுது கூறுகிறாள் தலைவி.

'வேறல்லம் என்பார்' என்ற தொடரின் பொருள் என்ன?

'வேறல்லம் என்பார்' என்ற தொடர்க்கு 'நம்முள் நாம் வேறல்லமென்று சொன்னவர்', 'என் விழியும் உன் உயிரும் வேறல்ல என்று இருந்தவர்', 'யாம் இருதலைப்புள்ளின் ஓர் உயிர்போல மெய் இரண்டு ஆயினும் உயிர் வேறு அல்ல என்பவர்', 'முன்பெல்லாம நாம் இருவரும் வேறல்லம் என்று சொல்லுவார்', 'நாமிருவரும் வேறுவேறு அல்லம்; ஓருயிரானோம் என்று கூறினார்', 'நாம் ஒருவர் என்று சொன்ன காதலர்', 'நாமிருவரும் ஓருயிர், வேறு இல்லை என்று கூறுவார், 'உன்னுயிரும் என்னுயிரும் வேறல்ல என்று சொல்லும் என் காதலர்', 'நீயும் நானும் வேறானவர் அல்லர் என்ற துணைவர்', 'நாமிருவரும் வெவ்வேறாக மாட்டோமென்று சொன்னவர், 'நாம் இருவரும் வேறு அல்லம் என்று சொல்லுவார், 'நீ வேறு நான் வேறு அல்ல என்று அன்று (காதல் மயக்கத்தில்) சொன்னவர்', 'நான் உயிர் என்றும், நீ உடல் என்றும் கூறினார்', 'நாமிருவரும் வேறல்ல என்று சொன்னவர், 'நம் உயிர் வேறு அல்ல; ஒன்றே என்று முன்பு சொன்ன அவர்', 'நாம் ஒருவரே; வேறு வேறு அல்லர். எனக்கூறிய காதலர்' எனப் பலவாறாகப் பொருள் கூறினர். இவை அனைத்தும் ஒரே கருத்தையே தருகின்றன.

நாமிருவரும் வேறுவேறு அல்லம்; ஒருவர்தாம் என்று கூறுபவர் இப்பொழுது அன்பு காட்டாமல் இருப்பதை மிகவும் நினைக்கிறேன்; அதனால் என் உயிரும் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிக்கொண்டே வருகிறது எனத் தலைவி தன் கணவரை நினைத்துப் பேசுகிறாள்.
நாம் வேறல்லம் என்று கூறும் இக்கருத்துக் கொண்ட பாடல் ஒன்று கலித்தொகையிலும் காணப்படுகிறது.
.........பண்டு நாம்
வேறு அல்லம் என்பது ஒன்று உண்டால்; அவனொடு
மாறு உண்டோ, நெஞ்சே! நமக்கு?
(கலித்தொகை 62:17-9 பொருள்: முன்பு யானும் அவளும் வேறல்லமென்பதொன்று அவனிடத்துண்டாயிருக்குமாயின், நெஞ்சே அவனோடு நமக்கு இனி மாறுபாடுண்டோவென உடம்பட்டுக்கூறினாள்)

'வேறல்லம் என்பார்' என்பதற்கு நம்முள் நாம் வேறல்லேம் என்று சொல்பவர் என்பது பொருள்.

நாமிருவரும் வேறுவேறானவர் அல்லர் என்று சொன்னவரது அருளின்மையை நினைந்து நினைந்து என் இனிய உயிர் நீங்கிக் கொண்டிருக்கிறது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கணவரே தன்னுடைய உயிர் என்று தலைவி நினைந்தவர்புலம்பல்.

பொழிப்பு

நாம் இருவரும் வேறுவேறு அல்லம் என்று சொன்ன தலைவரின் அருளின்மையை மிகவும் நினைந்து என் உயிர் போகும்.