இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1207



மறப்பின் எவனாவன் மன்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளஞ் சுடும்

(அதிகாரம்:நினைந்தவர்புலம்பல் குறள் எண்:1207)

பொழிப்பு (மு வரதராசன்: (காதலரை) மறந்தறியாமல் நினைத்தாலும் உள்ளத்தைப் பிரிவுத் துன்பம் சுடுகின்றதே! நினைக்காமல் மறந்துவிட்டால் என்ன ஆவேனோ?

மணக்குடவர் உரை: அவரை மறந்தால் என்னாவன் கொல்லோ: மறப்பறியேனாய் நினைக்கவும் இக்காமம் நெஞ்சத்தைச் சுடாநின்றது.
இது சீரியன உள்ளிப் பூரியன மறத்தல் வேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) மறப்பு அறியேன் உள்ளினும் உள்ளம் சுடும் - அவ்வின்பத்தை மறத்தலறியேனாய் இன்று உள்ளாநிற்கவும் பிரிவு என் உள்ளத்தைச் சுடாநின்றது; மறப்பின் எவனாவன் - அங்ஙனம் பிரிவாற்றாத யான் மறந்தால் இறந்து படாது உளேனாவது எத்தால்?
(மறக்கப்படுவது அதிகாரத்தான் வந்தது. 'மன்' ஈண்டும் அதுபட நின்று ஒழியிசையாயிற்று. கொல்: அசைநிலை.)

இரா சாரங்கபாணி உரை: காதலரை மறக்க இயலாதேனாய் இன்று அவரை நினைத்தாலும் இக்காமம் நெஞ்சத்தைச் சுடும். அவரை மறப்பின் என்ன ஆவேனோ? (இறப்பேன் என்பது கருத்து)


பொருள்கோள் வரிஅமைப்பு:
மறப்பறியேன் உள்ளினும் உள்ளஞ் சுடும்; மறப்பின் எவனாவன் மன்கொல்.

பதவுரை: மறப்பின்-மறந்தால்; எவன் - என்ன? ஆவன்-ஆவேன்; மன்-(ஒழியிசை); கொல்-(அசைநிலை); மறப்பு-நினைவு ஒழிதல், மறத்தல்; அறியேன்-அறியமாட்டேன்; உள்ளினும்-நினைத்தாலும்; உள்ளம்-நெஞ்சம்; சுடும்-சுடும், கொதிக்கும்.


மறப்பின் எவனாவன் மன்கொல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவரை மறந்தால் என்னாவன் கொல்லோ;
பரிப்பெருமாள்: அவரை மறந்தபொழுது. என்னாவன் கொல்லோ;
பரிதி: மறந்தால் உயிர்வாழேன்;
காலிங்கர்: தோழீ! யான் அவர் திறம் ஒருகால் மறப்பேன் ஆயின் எவன் ஆவேன் கொல்லோ?
காலிங்கர் குறிப்புரை: மற்கொல் என்றது அசைச்சொல். யான் என் ஆவன் என்றதனான் இறந்துபாடு உடையனாவன் அன்றிப் பிறிதொன்று ஆவதில்லை என்பது கருத்தென்று அறிக.
பரிமேலழகர்: (இதுவும் அது.) அங்ஙனம் பிரிவாற்றாத யான் மறந்தால் இறந்து படாது உளேனாவது எத்தால்?
பரிமேலழகர் குறிப்புரை: மறக்கப்படுவது அதிகாரத்தான் வந்தது. 'மன்' ஈண்டும் அதுபட நின்று ஒழியிசையாயிற்று. கொல்: அசைநிலை.

'அவரை ஒருகால் மறப்பேன் ஆயின் எவன் ஆவேன் கொல்லோ?' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கூட்டத்தை மறந்தால் என்னாவேன்?', 'அவரை மறந்தால் நான் என்ன கதியடைவேனோ என்ற அச்சத்தால் நான் அவரை மறப்பதேயில்லை', 'அப்படியானால் அவ்வின்பத்தை நான் மறந்துவிட்டால் நான் எவ்வாறாவேன்? என்ன நிலை யடைவேன்?', 'அங்ஙனம் பிரிவைப் பொறுக்கமுடியாத யான் அவரை மறந்தால் என்ன ஆவேன்?', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நான் அவரை மறந்தால் என்ன ஆவேனோ? என்பது இப்பகுதியின் பொருள்.

மறப்பறியேன் உள்ளினும் உள்ளஞ் சுடும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மறப்பறியேனாய் நினைக்கவும் இக்காமம் நெஞ்சத்தைச் சுடாநின்றது.
மணக்குடவர் குறிப்புரை: இது சீரியன உள்ளிப் பூரியன மறத்தல் வேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிப்பெருமாள்: மறப்பறியேனாய் நினைக்கவும் இக்காமம் நெஞ்சத்தைச் சுடாநின்றது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது சிறியன உள்ளிப் பெரியன மறத்தல் வேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிதி: ஆகையால் மறப்பறியேன்; மறப்பன் என்று நினைப்பினும் நாயகரிடமுள்ள காமாக்கினியானது எந்நெஞ்சுக்குள்ளே பற்றி எழும் என்றவாறு.
காலிங்கர்: மறப்பு அறியேன்; ஆதலால் எப்பொழுதும் அகத்து உள்ளியக் கண்ணும் உள்ளுகின்ற உள்ளம் பின்னும் குளிர்தலின்றிச் சாலக் கொதிக்கும்.
பரிமேலழகர்: அவ்வின்பத்தை மறத்தலறியேனாய் இன்று உள்ளாநிற்கவும் பிரிவு என் உள்ளத்தைச் சுடாநின்றது.

'மறத்தலறியேனாய் உள்ளவும் என் உள்ளத்தைச் சுடாநின்றது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். மணக்குடவர்/பரிப்பெருமாள், பரிதி ஆகியோர் 'காமம் சுடும்' என்றும் பரிமேலழகர் 'பிரிவு சுடும்' என்றும் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மறவேன்; பிரிவினை நினைப்பினும் உள்ளம் கொதிக்கும்', 'மறப்பதைப் பற்றி நினைத்தாலும் என் நெஞ்சம் கொதிக்கிறது', 'அவர்பால் நுகர்ந்த இன்பத்தை மறக்க அறியாத காலத்தும், பிரிவினை நினைத்தவுடன் என் உள்ளம் கொதிக்கின்றது', 'அவரை மறத்தல் அறியேனாய் அவர் பிரிவை நினைத்தாலும் என் நெஞ்சைச் சுடும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

மறக்க மாட்டேன்; நினைத்தாலும் என் நெஞ்சு வேகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அவரை மறக்க மாட்டேன்; உள்ளினும் என் நெஞ்சு வேகும்; மறந்தால் என்ன ஆவேனோ? என்பது பாடலின் பொருள்.
'உள்ளினும்' குறிப்பது என்ன?

அவரை மறக்கத் தெரிந்ததில்லை; நினைந்து கொண்டிருப்பதும் முடியாதிருக்கிறதே!

தலைவரை மறந்தால் என்ன ஆவேனோ? மறப்பதற்கும் முடியவில்லை; அவரை மறக்க நினைத்தாலும், அதுவும் என் உள்ளத்தைச் சுடுகின்றதே! என்கிறாள் தலைவி.
காட்சிப் பின்புலம்:
பணி தொடர்பாகத் தலைவர் பிரிந்து சென்றிருக்கிறார். பிரிவின் ஆற்றாமையால் தலைவி துன்புறுகிறாள். அவள் உடல் மெலிகிறது. பசலை படர்கிறது. தூக்கம் தொலைந்தது. 'நான் அவருடன் இருந்த நாள்களை நினைந்துதான் உயிர்வாழ்கின்றேன்; அதுவும் இல்லாவிட்டால் நான் எதற்காக உயிர் வாழவேண்டும்?' எனத் தலைவி புலம்பிக்கொண்டிருக்கிறாள்.

இக்காட்சி:
பிரிவுக்கு முன் காதலருடன் இருந்த நிகழ்ச்சிகளே தலைவியின் நினைவில் எப்பொழுதும் வந்து நிற்கின்றன. அவரது நினைவே அவளுக்குத் துணையாய் நிற்கிறது என எண்ணுகிறாள். அவரை மறந்தால் என்னாகும் என்ற எண்ணமும் எழுகிறது. அதற்குப் பதிலிறுக்கும் வண்ணம், 'மறத்தல் என்ற கேள்விக்கே இடம் இல்லை. அவரை யான் என்றும் மறந்ததில்லை; மறப்பதை நினைத்தாலும் மனம் படபடக்கிறது. அவரது நினைவு எழ எழ உள்ளம் வேதனையால் வெந்து போகிறது. மறந்துவிடலாமா? மறந்தால் நான் என்ன ஆவேனோ?' என்று பதறுகிறாள் தலைவி.

'தலைவரை மறவாது இருப்பதனாலேயே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். பிரிவுத் துன்பம் மிகக் கொடியது. அவர் நினைவாக, என்றும் உடனிருப்பவராகக் கருதிக் கொண்டு வாழ்ந்து வருகின்றேன். மறப்பதை நினைத்தாலும் உள்ளம் வருந்தும். மறந்தால் அப்பொழுதே இறந்து படுவேன். அவரை நினைப்பதைத் தவிர என் உயிர்க்கு வேறென்ன வேண்டும்?' என்பன காதலியின் மனஓட்டங்கள்.

'உள்ளினும்' குறிப்பது என்ன?

'உள்ளினும்' அதாவது நினைத்தாலும் உள்ளம் சுடுகின்றது எனச் சொல்கிறாள் தலைவி. நினைப்பினும் என்று எதைக் குறிப்பிடுகிறாள் அவள்?
இதை உரையாளர்கள் 'தலைவரையும் காமத்தையும் நினைத்தாலும்', 'இன்பத்தையும் பிரிவையும் உள்ளவும்', 'மறப்பன் என்று நினைப்பினும்', 'மறத்தலைப் பற்றி நினைத்தாலும்', 'அவர் தெய்வப் புணர்ச்சியிற் பிரியேன் என்று சொல்லிய வாய்மையை நினைப்பினும்', 'கூடி வாழ்ந்த காலத்து இன்பத்தை நினைத்துப் பார்த்தாலும்', 'பிரிவினை நினைப்பினும்', 'அவரை நினைத்தாலும்', எனப் பலவாறாக விளக்கினர். 'இவற்றுள் 'மறத்தலைப் பற்றி நினைத்தாலும்' என்பது சிறக்கும்.

'உள்ளினும்' என்பதற்கு நினைப்பினும் என்பது சொற்பொருள்.
'ஏன் அவரைப் பற்றியே எந்தநேரமும் நினைத்து உடம்பைக் கெடுத்துக் கொண்டிருக்கிறாய்? எல்லாவற்றையும் மறந்து ஓய்வுகொள்' எனத் தலைவிக்கு நல்லுரை கூறுகிறார்கள். ஆனால் அவளோ 'அவரை மறப்பது எவ்வாறென்று யான் அறிந்திலேனே' என்று புலம்புகிறாள். மேலும் 'அவருடன் சேர்ந்திருந்த பொழுதுகளை எப்படி மறக்க முடியும்? அவற்றை நினைத்துப் பார்க்கும்பொழுதே என் உள்ளம் கொதிப்படைகிறது. அவரையும் மறந்தேனானால் எனக்கு என்ன ஆகுமோ?' எனச் செய்வதறியாமல் தவிக்கிறாள் அவள்.

'உள்ளினும்' என்றதற்கு மறப்பதை நினைப்பினும் என்பது பொருள்.

அவரை மறக்க மாட்டேன்; மறப்பதைப் பற்றி நினைத்தாலும் என் நெஞ்சு கொதிக்கும்; மறந்தால் என்ன ஆவேனோ? என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அவரை மறப்பது என்பதை நினைக்கவே இயலாது எனத் தலைவி நினைந்தவர்புலம்பல்.

பொழிப்பு

காதலரை மறந்தால் என்னாவேனோ? மறக்கவே மாட்டேன்; ஆனால் நினைத்தாலும் உள்ளம் சுடுகிறதே.