இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1202எனைத்தொன்று இனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று இல்

(அதிகாரம்:நினைந்தவர்புலம்பல் குறள் எண்:1202)

பொழிப்பு (மு வரதராசன்): தாம் விரும்புகின்ற காதலர் தம்மை நினைத்தலும் பிரிவால் வரக்கூடிய துன்பம் இல்லாமற் போகின்றது! அதனால் காமம் எவ்வளவாயினும் இன்பம் தருவதே ஆகும்.

மணக்குடவர் உரை: காமம் யாதொன்றினானும் இனியதே காண்; தாம் விரும்பப்படுவாரை நினைக்க வருவதொரு துன்பம் இல்லையாயின்.
இது நீ இவ்வாறு ஆற்றாயாகின்றது துன்பம் பயக்குமென்ற தோழிக்குத் தலைமகள் மறுத்துக் கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) தாம் வீழ்வார் நினைப்ப வருவது ஒன்று இல் - தம்மால் விரும்பப் படுவாரைப் பிரிவின்கண் நினைத்தால் அந்நினைவார்க்கு அப்பிரிவின் வருவதோர் துன்பம் இல்லையாம்; காமம் எனைத்து இனிது ஒன்றே காண் - அதனால் காமம் எத்துணையேனும் இனிதொன்றே காண்.
(புணர்ந்துழியும் பிரிந்துழியும் ஒப்ப இனிது என்பான், 'எனைத்தும் இனிது' என்றான். சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. தான் ஆற்றிய வகை கூறியவாறு.)

நாமக்கல் இராமலிங்கம்ம் உரை: காம நினைப்பு வேறு எந்த நினைப்பைக் காட்டிலும் இன்பமுண்டாக்குவது கண் கூடு; ஏனெனில் தம் காதலரை நினைத்த மாத்திரத்தில் (அது உண்டாக்கும் இன்பம் போல்) வேறு எதுவும் (நினைத்த மாத்திரத்தில்) இன்பமுண்டாக்குவதில்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
எனைத்தொன்று இனிதேகாண் காமம்தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன்று இல்.

பதவுரை: எனைத்துஒன்று-எந்த ஒன்றினும், எதனினும்; இனிதே காண்- இனியதாகிறது பார்!; காமம்-காதல்; தாம்-தாம், தம்மால்; வீழ்வார்-விரும்பப்படுபவர்; நினைப்ப-நினைத்தால்; வருவது ஒன்று இல்-வருகின்றது ஒன்றும் இல்லை, வருகின்ற துன்பம் ஒன்றும் இல்லை.


எனைத்தொன்று இனிதேகாண் காமம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காமம் யாதொன்றினானும் இனியதே காண்;
பரிப்பெருமாள்: காமம் யாதொன்றினானும் இனியது ஒன்றே;
பரிதி: எல்லாவற்றிலும் இனியது காமம்;
காலிங்கர்: நெஞ்சே! எவ்வாற்றானும் இனியது ஒன்றே காண் இக்காமம் ஆகின்றது;
பரிமேலழகர்: (இதுவும் அது.) அதனால் காமம் எத்துணையேனும் இனிதொன்றே காண்.

'எவ்வாற்றானும் இக்காமம் இனியது ஒன்றே காண்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எந்த அளவிற்கும் இனியது காமம்', 'மற்ற எந்தப் பொருளும் அதைப்போல நினைத்தவுடனே இன்பம் உண்டாக்குவதில்லை', '(தலைவன் கூற்று) எவ்வளவு சுருங்கிய கால அளவினதாயிருந்தாலும் காமம் இனிமை பயக்குந் தன்மை யுடையதே', 'ஆதலால் காதல் கூடினும் பிரியினும் இனிமையே தருவது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

எவ்வாற்றானும் இனியதாகிறதே காதல்! என்பது இப்பகுதியின் பொருள்.

தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன்று இல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தாம் விரும்பப்படுவாரை நினைக்க வருவதொரு துன்பம் இல்லையாயின்.
மணக்குடவர் குறிப்புரை: இது நீ இவ்வாறு ஆற்றாயாகின்றது துன்பம் பயக்குமென்ற தோழிக்குத் தலைமகள் மறுத்துக் கூறியது.
பரிப்பெருமாள்: தாம் விரும்பப்படுவாரை நினைக்க வருவதொரு துன்பம் இல்லைகாண்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நீ இவ்வாறு ஆற்றாயாகின்றது துன்பம் பயக்குமென்ற தோழியை மறுத்துத் தலைமகள் கூறியது.
பரிதி: அஃது எப்படி என்றால் தாம் விரும்பினாரை நினைக்கின் சுகந்தருமாகலின் என்றவாறு.
காலிங்கர்: என்னை எனில் பண்டு எய்திய காலத்து இனிமை அன்றி இங்ஙனம் எய்தாக் காலத்தும் தாம் வீழ்வாரை இனிவந்து எய்துவர் என்று இங்ஙனம் நினைப்பவும் அதனாலும் வருவது ஓர் துன்பம் இன்மை என்றவாறு.
பரிமேலழகர்: தம்மால் விரும்பப் படுவாரைப் பிரிவின்கண் நினைத்தால் அந்நினைவார்க்கு அப்பிரிவின் வருவதோர் துன்பம் இல்லையாம்;
பரிமேலழகர் குறிப்புரை: புணர்ந்துழியும் பிரிந்துழியும் ஒப்ப இனிது என்பான், 'எனைத்தும் இனிது' என்றான். சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. தான் ஆற்றிய வகை கூறியவாறு. [தான் ஆற்றிய வகை - தலைமகன் தான் பொறுத்திருந்த முறைமை]

தாம் விரும்பப்படுவாரை நினைக்க துன்பம் வருவது இல்லை என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காதலர் நினைத்தால் துன்பம் ஒன்றும் வராது', 'காமம் என் காதலரை நினைத்தவுடனே இன்பம் உண்டாக்குகிறது', 'தாம் விரும்புகின்றவரை நினைந்தால் துன்பமொன்றுந் தோன்றுவதில்லை', 'தம்மால் விரும்பப்படும் காதலரைப் பிரிவின்கண் நினைத்தால் நினைப்பவர்க்குப் பிரிவால் வருவதோர் துன்பம் இல்லையாம்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

தாம் காதல் கொண்டாரை நினைத்தால் துன்பம் ஒன்றும் வராது என்பது இப்பகுதியின் பொருள்.

.

நிறையுரை:
எனைத்தொன்று இனியதாகிறதே காமம்! தாம் காதல் கொண்டாரை நினைத்தால் துன்பம் ஒன்றும் வராது என்பது பாடலின் பொருள்.
'எனைத்தொன்று' குறிப்பது என்ன?

காமம்துய்த்ததை நினைந்து கொண்டால் எப்பொழுதும் இன்பமே.

தாம் விரும்புகின்ற காதலரை நினைத்துக் கொண்டாலே பிரிவுத் துன்பம் தெரிவதில்லை. அதனால் காதல் எவ்வழியிலும் இனியதேயாம்.
காட்சிப் பின்புலம்:
பணி காரணமாகப் பயணம் சென்றிருக்கிறார் கணவர். அவரது பிரிவு தாங்கமுடியாத தலைவி வேதனையுறுகிறாள். உடல் மெலிந்து பசலையுற்றுப் பொலிவிழந்து தோற்றமளிக்கிறாள். பிரிவில் காதல் நிகழ்வுகள் பெருமகிழ்வு தருகின்றன. கணவரது அணிமை இல்லாமல் தவிக்கும் தலைவி அவர் பிரிவதற்குமுன் துய்த்த காமத்தை நினைவிற் கொண்டுவந்து 'கள் உண்டால் மட்டுமே களிப்பைத்தருகிறது. காமம் நினைத்தாலே பெருமகிழ்வளிப்பது' என்று சொல்லிக்கொண்டிருக்கிறாள்.

இக்காட்சி:
சென்ற குறள் (1201) இருவருமே காமம் துய்த்ததை நினைந்து நினைந்து உவகை கொள்கின்றனர் என்றது. அங்கு அது தீராத இன்பம் என்று சொல்லப்பட்டது; இங்கு காதல் செய்த கணவரை நினைக்க துன்பம் இல்லை எனக் கூறப்படுகிறது. பிரிவு துன்பம் தருவதுதான். அப்பிரிவிலும் கடந்த கால நினைவுகள் தலைவிக்குப் பெருமகிழ்வு தருகின்றன. அவள் கூறுகிறாள்: 'காதலர் இல்லாவிடில் என்ன? அவர் நினைவு எனக்கு இன்பம் தருகிறதே; நினைத்த அளவில் நீங்காத மகிழ்ச்சியளிக்கும் ஆற்றல் காமத்துக்கு உண்டு' என்கிறாள். வேறு எதுவும் நினைத்த அளவிலே இன்பமுண்டாக்குவதில்லை.' தாம் விரும்புபவரை நினைத்தாலும் பிரிவினால் வரும் துன்பம் தோன்றாமையான் காமம் எவ்வழியும் இனிமைதான். காதல் கூடினும் பிரியினும் இனிமையே தருகிறது.
முன் துய்த்த இன்பத்தை இப்பொழுது தனித்திருக்கும்போது நினைக்க நினைக்க அது இருவருக்கும் நீங்காத பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. நினைத்த அளவில் நீங்காத மகிழ்ச்சியளிக்கும் ஆற்றல் காதலுக்கு உண்டு. நேற்று காதலர்கள் சேர்ந்திருந்ததை நினைத்தாலும், இனி கூடப்போவதை எண்ணினாலும் எஞ்ஞான்றும் காதலர்கள் ஒருவடோருவர் என ஒன்றாக இருப்பது என்பது மிகுந்த இன்பம் தருவதே. இவ்வாறு தலைவனோடுற்ற இன்பத்தை நினைத்துப் பிரிவுத் துன்பத்தைப் போக்குகிறாள் தலைவி.

'நினைப்ப' என்பதற்கு காதலர் நினைத்தால் என்றும் தலைவி நினைக்கும்போது என்றும் இருதிறமாக உரை செய்தனர். இருவரும் நினைப்ப எனக் கொள்வது பொருத்தமாகும்.
‘வருவதொன்று இல்’ என்பதற்கு வருகிற துன்பம் இல்லை என்பது பொருள். அவ்வாறு நினைத்தாலே வரும் இன்பம் வேறொன்றும் இல்லை என்பது கருத்து.
வீரசோழியம் என்ற இலக்கண நூலுக்கு உரை கண்ட பெருந்தேவனார்,
எனைத்தொன் றினிதேகாண் கமாந்தாம் வீழ்வார்
நினைக்க வருவதுஒன் றுண்டு
என்று இக்குறளைச் சுட்டுகின்றார் (வீரசோழியம் - 152 உரை). இவர் காட்டும் குறளில் சிறிது வேறுபாடு உள்ளது. ‘நினைக்க வருவது ஒன்று உண்டு’ என்பது பெருந்தேவனார் கொண்ட பாடம். ஆனால் பரிமேலழகர் 'நினைப்ப வருவது ஒன்று இல்' என்று பாடம் கொண்டுள்ளார். இவ்வுரையையும் பரிமேலழகர் உரையையும் பயின்ற ஒருவர் “இல் என்று பாடம் ஓதித் துன்பம் எதிர்நிலை எழுவாயாகக் கொண்டார் பரிமேலழகர். இனிதே என முன்னர் நிறுத்தினமையானும் துன்பம் இல்லா வழி எல்லாம் இன்பமே உளது என்பது சாத்தியம் ஆகாமையானும், புணர்ந்துழியும் பிரிந்துழியும் இனிமையுண்மை கூறலே நாயனார் கருத்து ஆதலானும், அஃது சிறப்பன்று என மறுக்க. அன்றியும் உண்டு என்பதே பழம் பிரதிகளின் பாடமுமாம்”. என்று பரிமேலழகர் உரையை மறுத்து ஓர் குறிப்பு தந்துள்ளார். இது மு வை அரவிந்தன் நூலில் குறிக்கப்பட்டுள்ள செய்தி.

'எனைத்தொன்று' குறிப்பது என்ன?

'எனைத்தொன்று' என்றதற்கு யாதொன்றினானும், எவ்வாற்றானும், எத்துணையேனும், எந்த அளவிற்கும், எவ்வளவாயினும், யாதொரு வகையினாலும், எத்துணையானும், வேறு எதைவிடவும், எவ்வளவினது என்றாலும், எவ்வளவு சிறியது என்றாலும், எவ்வளவு சுருங்கிய கால அளவினதாயிருந்தாலும், கூடினும் பிரியினும், எந்த நிலையிலும், எவ்வகையிலும், எத்தனை முறையானாலும், எவ்வழியும் எனப் பலவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'எனைத்துஒன்று' என்ற தொடர் இங்கு எந்த ஒன்றினும் அதாவது எதனினும் என்ற பொருள் தருவது. 'எந்த ஒன்றானாலும் என்னும் வழக்கு நடை ‘எனைத்தொன்றும்’ என இலக்கியத்தில் ஆட்சி பெறுகிறது' என்பார் இரா சாரங்கபாணி. காதல் கூடுங்கால் இன்பம் தருகின்றது. அவரில்லாமல் பிரிந்திருந்து காத்திருக்கும்போதும் பழைய நிகழ்வுகளின் நினைவுகளால் இன்பம் உண்டாகின்றது. ஆகவே, எவ்வழியினும் இன்பம் தருவது காதல். ஆதலின், காதலின்பம் யாவற்றினும் சிறந்ததாகிறது.
தனிமையிலிருக்கும்போது காதலர் ஒருவரையொருவர் நினைந்து, தாம் துய்த்த காம இன்பத்தை எண்ணி, பிரிவுத் துன்பம் வராமல் பார்த்துக்கொள்கின்றனர்.

'எனைத்தொன்று' என்ற தொடர்க்கு எவ்வழியினும் என்பது பொருள்.

எவ்வாற்றானும் இனியதாகிறதே காதல்! தாம் காதல் கொண்டாரை நினைத்துக்கொண்டால் துன்பம் ஒன்றும் வராது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

காதல்கொண்டதை எந்தவகையில் நினைத்தாலும் இனிக்குதே என்னும் நினைந்தவர்புலம்பல்.

பொழிப்பு

எவ்வாற்றானும் காதலின்பம் இனியது காண்! தம்மால் விரும்பப்படுபவரை நினைத்தால் பிரிவுத் துன்பம் தோன்றுவதில்லை.