உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது
(அதிகாரம்:நினைந்தவர்புலம்பல்
குறள் எண்:1201)
பொழிப்பு (மு வரதராசன்): நினைந்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால் (உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும்) கள்ளைவிடக் காமம் இன்பமானதாகும்.
|
மணக்குடவர் உரை:
தம்மாற் காதலிக்கப்பட்டவரை நினைத்தாலும் அது நீங்காத பெருங்களிப்பைத் தரும்: ஆதலால் கள்ளினும் காமம் இனிது.
பரிமேலழகர் உரை:
(தூதாய்ச் சென்ற பாங்கனுக்குத் தலைமகன் சொல்லியது.) உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்- முன் கூடிய ஞான்றை இன்பத்தினைப் பிரிந்துழி நினைத்தாலும் அதுபொழுது பெற்றாற்போல நீங்காத மிக்க மகிழ்ச்சியைத் தருதலால்; கள்ளினும் காமம் இனிது - உண்டுழியல்லது மகிழ்ச்சி செய்யாத கள்ளினும் காமம் இன்பம் பயத்தல் உடைத்து.
(தன் தனிமையும், தலைமகளை மறவாமையும் கூறியவாறு)
இரா சாரங்கபாணி உரை:
நினைத்தாலும் நீங்காத பெரும் மகிழ்ச்சியைத் தரும் காமமானது குடித்தால் அல்லது மகிழ்ச்சியைத் தராத கள்ளைக் காட்டிலும் இனியது.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால், கள்ளினும் காமம் இனிது.
பதவுரை: உள்ளினும்-நினைத்தாலும்; தீரா-நீங்காத; பெருமகிழ்-மிக்க களிப்பு; செய்தலால்-உண்டுபண்ணுவதால், தருதலால்; கள்ளினும்-கள்ளைக் காட்டிலும்; காமம்-காதல்; இனிது-இனிமையானது, நன்றானது.
|
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்மாற் காதலிக்கப்பட்டவரை நினைத்தாலும் அது நீங்காத பெருங்களிப்பைத் தரும் ஆதலால் ;
பரிப்பெருமாள்: தம்மாற் காதலிக்கப்பட்டவரை நினைத்தாலும் அது நீங்காத பெருங்களிப்பைத் தருதலால்;
பரிதி: நாயகர் நினைக்குந்தோறும் களிப்புக் கொடுப்போராதலால்;
காலிங்கர்: தோழி! யான் அவரோடு கழிய நுகர்ந்து களியாது இங்ஙனம் உள்ளிச் செல்லினும் செல்லாப் பெருங்களி செய்தலால்;
பரிமேலழகர்: (தூதாய்ச் சென்ற பாங்கனுக்குத் தலைமகன் சொல்லியது.) முன் கூடிய ஞான்றை இன்பத்தினைப் பிரிந்துழி நினைத்தாலும் அதுபொழுது பெற்றாற்போல நீங்காத மிக்க மகிழ்ச்சியைத் தருதலால்;
'காதலிக்கப்பட்டவரை /நாயகரை/ அவரோடு கழிய நுகர்ந்ததை/ கூடிய இன்பத்தினை நினைத்தாலும் பெருங்களிப்பைத் தரும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். தலைவி தானே கூறிக் கொள்ளுதலாக மணக்குடவரும் தலைவி தோழிக்குக் கூறியதாகப் பரிப்பெருமாளும் காலிங்கரும் தூதாய்ச் சென்ற பாங்கனுக்குத் தலைமகன் சொல்லியதாக பரிமேலழகரும் உரை செய்தனர். பரிதி தலைவி கூற்றாகக் கொண்டார்.
இன்றைய ஆசிரியர்கள் 'நினைத்தாலும் நீங்காத மகிழ்ச்சி தருதலால்', 'மனத்தில் நினைத்தாலும் ஓயாத நல்ல மகிழ்ச்சியை உண்டாக்குவதால்', 'முன் துய்த்த இன்பத்தைப் பிரிவு காலத்தில் நினைத்தாலும், நீங்காது மிக்க மகிழ்ச்சியைத் தருவதால்', 'நினைத்தாலும் நீங்காத பெரு மகிழ்ச்சியைச் செய்தலால்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
நினைத்தாலும் நீங்காத பெரு மகிழ்ச்சியை அளிப்பதலால் என்பது இப்பகுதியின் பொருள்.
கள்ளினும் காமம் இனிது:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கள்ளினும் காமம் இனிது
பரிப்பெருமாள்: கள்ளினும் மிக்ககாமம் இனிது.
பரிப்பெருமாள் குறிப்புரை: நினைவு மகிழ்ச்சியைத் தாரா நின்றமையால் என் மனம் காதலரை ஒழிவின்றி நினையா நின்றது என்று தோழிக்குக் கூறியது.
பரிதி: கள்ளினும் காமம் இனிது என்றவாறு.
காலிங்கர்: உண்டால் களிதரலின்றி உள்ளினால் களிதரல் இல்லாத கள்ளினும் இக்காமம் பெரிதும் இனிது என்றவாறு.
பரிமேலழகர்: உண்டுழியல்லது மகிழ்ச்சி செய்யாத கள்ளினும் காமம் இன்பம் பயத்தல் உடைத்து.
பரிமேலழகர் குறிப்புரை: தன் தனிமையும், தலைமகளை மறவாமையும் கூறியவாறு.
'கள்ளினும் இக்காமம் பெரிதும் இனிது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'கள்ளைக் காட்டிலும் காமம் இன்பமானது', 'கள்ளை உண்டு வருகிற களிப்பைவிடக் காமத்தை நினைத்து வருகிற களிப்பு மேலானது', 'உண்டபொழுது மட்டும் மகிழ்ச்சி தருங் கள்ளைப் பார்க்கிலும் காமம் இனிது', 'உண்டால் அல்லாமல் மகிழ்ச்சி செய்யாத கள்ளைவிடக் காதல் இனிமையானது' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
கள்ளினும் காதல் இனிமையானது என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
நினைத்தாலும் தீராப் பெருமகிழ்ச்சியை அளிப்பதலால் கள்ளினும் காதல் இனிமையானது என்பது பாடலின் பொருள்.
'தீராப் பெருமகிழ்' என்றால் என்ன?
|
காதல் நினைவுகள் எத்துணைக் களிப்பூட்டுகின்றன!
நினைத்தாலும் நீங்காத பெருமகிழ்ச்சியைச் செய்வதனால், உண்டால் மட்டுமே களிப்பைத் தரும் கள்ளினும் காமம் இனிமையானதாம்.
காட்சிப் பின்புலம்:
கடமை காரணமாகத் தலைவன் அயல் சென்றிருக்கிறான். அவனது பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தலைவி உடல் மெலிவுற்று, நிறம் மாறி உறக்கம் இழந்து வருந்தி துன்பம் மிகுந்து காட்சியளிக்கிறாள். உலகத்து மகளிர்-ஆடவர் மணவாழ்வு எப்படியெப்படியெல்லாம் அமைகிறது என்பது பற்றி எண்ணித் தன் உள்ளத்து உணர்வுகளை உரைத்துக் கொண்டிருக்கிறாள். தனிமையால் வருந்தும் துன்ப மிகுதியைச் சொல்லும் முன் அதிகாரமான தனிப்படர்மிகுதியில் தலைவர் விரைந்து வந்து அருள்செய்வார் என்பது நடக்குமா என்று காதலி சிந்தித்துக்கொண்டிருந்தாள்.
இக்காட்சி:
தனிமையில் வாடும் காதலி-காதலன் இருவரும் பிரிவதற்குமுன் துய்த்த காமத்தை நினைவிற் கொண்டுவந்து 'கள் உண்டால் மட்டுமே களிப்பைத்தருகிறது. காமம் நினைத்தாலே பெருமகிழ்வளிப்பது' என்கின்றனர்.
இருவரும் தாம் கூடி இருந்தபோது உண்டான அன்பின் நெருக்கம், உறவின் கலத்தல், உள்ளப்புணர்ச்சி ஆகியவற்றை எண்ணுகின்றனர். பிரிவு துன்பந்தான். ஆனால், அப்பிரிவிலும் கடந்த கால நினைவுகள் அவர்களுக்குப் பெருமகிழ்வு தருகின்றன. முன் துய்த்த இன்பத்தை இப்பொழுது தனித்திருக்கும்போது நினைக்க நினைக்க அது இருவருக்கும் நீங்காத பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. நினைத்த அளவில் நீங்காத மகிழ்ச்சியளிக்கும் ஆற்றல் காதலுக்கு உண்டு. நேற்று காதலர்கள் சேர்ந்திருந்ததை நினைத்தாலும், இன்று கூடப்போவதை எண்ணினாலும் நாளை அவர்கள் இணையப்போவதை உள்ளினாலும் எஞ்ஞான்றும் காதலர்கள் ஒருவடோருவர் என ஒன்றாக இருப்பது என்பது மிகுந்த களிப்பை உண்டாக்கக்கூடியது.
இக்களிப்பை கள்ளுண்பதுடன் ஒப்பு நோக்குகிறது இப்பாடல். காமமும் கள்ளும் நுகரும்போது இன்பம் தந்து மயக்கும் தன்மையன.
கள் உண்டார்க்கே களிப்பைத் தருகிறது. முன்பு கள் குடித்ததையோ அல்லது குடிக்கவேண்டும் என்று எண்ணும்போதோ இனிமையான உணர்வு உண்டாவதில்லை.
ஆனால் காதல் நிகழ்வுகள் நினைக்கும் போதெல்லாம் மகிழ்ச்சியைத் தரவல்லது. இங்கு, காதலர்கள் சேர்ந்து இருந்ததை மனதில் நினைத்த அளவிலேயே மகிழ்ச்சிப் பெருக்கு ஏற்படுகிறது என்கிறார்கள். அந்த மகிழ்ச்சியும் நீங்காது நின்று இன்பம் தருகிறது. உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் கள்ளைவிட, நினைத்தாலே நெஞ்சினிக்கச் செய்யும் காதல் இன்பம், மிகையான களிப்புத் தருவதாகும்.
தலைவி தானே கூறிக் கொள்வதாக மணக்குடவரும் தலைவி தோழிக்குக் கூறியதாகப் பரிப்பெருமாளும் தூது போன பாங்கருக்குத் தலைவன் உரைத்ததாகப் பரிமேலழகரும் காட்சி அமைத்தனர்.
இப்பாடல் காதல் இன்பத்தை உள்ளும் தலைவன் தலைவி இருவருக்கும் பொருந்தும். அங்கே காதலன் மனைவி தனக்குத் தந்த இன்பத்தை நினைக்கிறான். இங்கே காதலி புலம்புதல் இடையும் மகிழ்வடைகிறாள். அதாவது இருவருமே காமம் துய்த்ததை நினைந்து நினைந்து உவகை கொள்கின்றனர்.
கள்ளினால் பெறும் இன்பத்தைச் சொல்லி, அதைவிட இனியது காமம் என்று ஒப்புமை காட்டும் குறள்கள் மூன்று. 'கள் உண்டவருக்குத்தான் மயக்கம்தரும்; ஆனால் காதலோ கண்வழிக்கண்ட உடனேயே மயக்கத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது' (1090) என்றும் 'உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற்கு உண்டு' (1281) என்றும் பிற இடங்களில் குறள் கூறும்.
|
'தீராப் பெருமகிழ்' என்றால் என்ன?
'தீராப் பெருமகிழ்' என்றதற்கு நீங்காத பெருங்களிப்பு, செல்லாப் பெருங்களி செய்தல், நீங்காத மிக்க மகிழ்ச்சி, நீங்காத மகிழ்ச்சி, நீங்காத பெரும் மகிழ்ச்சி, முடிவற்ற பெருமகிழ்ச்சி, ஓயாத நல்ல மகிழ்ச்சி, நீங்காது மிக்க மகிழ்ச்சி என உரையாசிரியர்கள் பொருள் தருவர்.
தம்மாற் காதலிக்கப்பட்டவரை நினைத்தாலும் அது நீங்காத பெருங்களிப்பைத் தருதலால் கள்ளினும் மிக்ககாமம் இனிது என்கிறது பாடல்.
கள் குடிப்பது தன்னை மறந்து களிப்படையவே என்பதைக் 'பெருமகிழ் செய்தலாற் கள்ளினும் காமம் இனிது' என்ற பகுதி அறிவிக்கிறது. அதைக் குடிக்கத் தொடங்கும்போது சுவையற்ற வெறுக்கத்தக்க உணர்வே உண்டாகும்; குடித்தபின் மயக்க உணர்வில் ஏதோ வேறு உலகத்தில் திரிவதுபோல் தெரியும். அதைக் கள்ளுண்பவர்கள் பெருமகிழ்வாக எண்ணுவர். எனினும்
நினைத்த அளவில் மகிழ்ச்சியளிக்கும் விந்தை கள்ளுக்கு ஒருபோதும் கிடையாது. அந்த வியத்தகு ஆற்றல் அதாவது நினைக்குந்தொறும் உள்ளத்தில் நீங்காது நின்று நிறைந்த இன்பத்தைத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கும் தன்மை காதலுக்கு இருக்கிறது என நயம்பட உரைக்கப்பட்டது.
'தீராப் பெருமகிழ்' என்பதற்கு 'நீங்காத மிக்க மகிழ்ச்சி' என்பது பொருள். காதல் துய்ப்பை நினைக்க நினைக்க அது நெஞ்சினுள் நீங்காது நிறைந்து நின்று பெரு மகிழ்ச்சியைச் செய்கிறது என்பது.
|
நினைத்தாலும் நீங்காத பெரு மகிழ்ச்சியை அளிப்பதலால் கள்ளினும் காதல் இனிமையானது என்பது இக்குறட்கருத்து.
நினைத்து மட்டுமே இன்பமடைய வேண்டிய நிலைமையை உணர்ந்த நினைந்தவர்புலம்பல்.
நினைத்தபோதும் நீங்காத மகிழ்ச்சி தருதலால் கள்ளைக் காட்டிலும் காதலின்பம் இனிமையானது.
|