நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்
(அதிகாரம்:நினைந்தவர்புலம்பல்
குறள் எண்:1203)
பொழிப்பு (மு வரதராசன்): தும்மல் வருவதுபோலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர்போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ?
|
மணக்குடவர் உரை:
அவர் நம்மை நினைப்பவர்போன்று நினையார் கொல்லோ: தும்மல் தோன்றுவதுபோன்று கெடாநின்றது.
தலைமகள் உலகத்துப் பெண்டிராயுள்ளார் கூறுவதொன்றை ஈண்டுக் கூறினாள்.
பரிமேலழகர் உரை:
(தலைமகனை நினைந்து வருந்துகின்ற தலைமகள் தோழிக்குச் சொல்லியது.) தும்மல் சினைப்பது போன்று கெடும் - எனக்குத் தும்மல் எழுவது போன்று தோன்றிக் கெடாநின்றது; நினைப்பவர் போன்று நினையார்கொல் - அதனால் காதலர் என்னை நினைப்பார் போன்று நினையாராகல் வேண்டும்.
(சினைத்தல்: அரும்புதல். சேய்மைக்கண்ணராய கேளிர் நினைந்துழி அந்நினைக்கப்பட்டார்க்குத் தும்மல் தோன்றும் என்னும் உலகியல்பற்றித் தலைமகன் எடுத்துக்கொண்ட வினை முடிவதுபோன்று முடியாமை யுணர்ந்தாள் சொல்லியதாயிற்று.
இரா சாரங்கபாணி உரை:
எனக்குத் தும்மல் வருவதுபோல் தோன்றி வரவில்லை. ஆதலால், தலைவர் என்னை நினைப்பார் போலக் காட்டி நினைக்க மாட்டாரோ?
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
தும்மல் சினைப்பது போன்று கெடும்; நினைப்பவர் போன்று நினையார்கொல்!
பதவுரை: நினைப்பவர்-நினைப்பவர், எண்ணுபவர்; போன்று-போல, ஒத்து; நினையார்-நினைக்கமாட்டார்; கொல்-(ஐயம்) போலும்; தும்மல்-தும்முதல்; சினைப்பது-அரும்புவது; போன்று-போல; கெடும்-அடங்கும், மறையும்.
|
நினைப்பவர் போன்று நினையார்கொல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவர் நம்மை நினைப்பவர்போன்று நினையார் கொல்லோ;
பரிப்பெருமாள்: அவர் நம்மை நினைப்பவர்போன்று நினையார் கொல்லோ:
பரிதி: நினைத்து நினையாரோ என் காதலர்;
காலிங்கர்: தோழீ! அவர் நம்மை இப்பொழுது சிறிது நினைப்பவர் போன்று எடுத்துப் பின்னும் நினையார் ஆயினர் போலும்;
பரிமேலழகர்: (தலைமகனை நினைந்து வருந்துகின்ற தலைமகள் தோழிக்குச் சொல்லியது.) அதனால் காதலர் என்னை நினைப்பார் போன்று நினையாராகல் வேண்டும்.
'அவர் நம்மை நினைப்பவர்போன்று நினையார் கொல்லோ' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அவர் என்னை நினைப்பதுபோல விட்டுவிடுவாரோ?', 'என் காதலர் என்னை நினைப்பது போல் இருந்து நினைக்கவில்லை எனத் தெரிகிறது', '(தலைவி கூற்று) ஆதலால் காதலர் என்னை நினைப்பதாகத் தொடங்கி நினைக்க மாட்டாரோ?', 'அதனால் காதலர் என்னை நினைப்பார் போன்று நினையாது இருத்தல் வேண்டும்' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
அவர் என்னை நினைப்பார் போன்று நினைக்க மாட்டாரோ? என்பது இப்பகுதியின் பொருள்.
தும்மல் சினைப்பது போன்று கெடும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தும்மல் தோன்றுவதுபோன்று கெடாநின்றது.
மணக்குடவர் குறிப்புரை: தலைமகள் உலகத்துப் பெண்டிராயுள்ளார் கூறுவதொன்றை ஈண்டுக் கூறினாள்.
பரிப்பெருமாள்: தும்மல் தோன்றுவதுபோன்று கெடாநின்றது.
பரிப்பெருமாள் குறிப்புரை: தலைமகள் உலகத்துப் பெண்டிராயுள்ளார் கூறுவதொன்றை ஈண்டுக் கூறினாள்.
இவ்வாறு செய்தலான் நினைப்பாரைப் போன்று நினையாராக வேண்டும் என்று தோழிக்குக் கூறியது.
பரிதி: அது தும்மல் வருவதுபோல் அடங்கும் என்றவாறு.
காலிங்கர்: என்னை காரணம் எனின், தும்மலானது என் முகத்திற்கு ஆகாதது வருமதுபோலத் தோன்றிப் பின் உள்ளடங்கிவிடும் என்றவாறு.
பரிமேலழகர்: எனக்குத் தும்மல் எழுவது போன்று தோன்றிக் கெடாநின்றது.
பரிமேலழகர் குறிப்புரை: சினைத்தல்: அரும்புதல். சேய்மைக்கண்ணராய கேளிர் நினைந்துழி அந்நினைக்கப்பட்டார்க்குத் தும்மல் தோன்றும் என்னும் உலகியல்பற்றித் தலைமகன் எடுத்துக்கொண்ட வினை முடிவதுபோன்று முடியாமை யுணர்ந்தாள் சொல்லியதாயிற்று. [சேய்மைக்கண்ணராய கேளிர் - தொலைவிடத்து உளராய உறவினர்]
'தும்மல் வருவதுபோல் தோன்றி அடங்கும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'தும்மல் வருவதுபோல நின்றுவிடுதலின்', 'அதனால்தான் எனக்கு வருவதுபோல் இருந்த தும்மல் வரவில்லை', 'எனக்குத் தும்மல் உண்டாவதுபோலத் தோன்றி இல்லையாகின்றது', 'எனக்குத் தும்மல் வருவது போன்று வராமல் இருந்து விட்டது' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
தும்மல் உண்டாவதுபோலத் தோன்றிப் பின் உள்ளடங்கிவிடும் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
என்னை நினைப்பார் போன்று நினைக்க மாட்டாரோ? அதனால்தான் தும்மல் சினைப்பது போன்று பின் உள்ளடங்கிவிடுகிறது என்பது பாடலின் பொருள்.
'சினைப்பது போன்று' என்பதன் பொருள் என்ன?
|
என் கணவர் என்னை நினைக்கக்கூட நேரமில்லாமல் ஓய்வின்றிப் பணியாற்றுகிறார் போலும்!
தும்மல் அரும்புவதுபோலத் தோன்றி மறைகின்றது எனக்கு. ஆதலால் காதல்கணவர் என்னை நினைக்கத் தொடங்கி நினைக்காது விடுகின்றாரோ?
காட்சிப் பின்புலம்:
தலைவர் கடமை காரணமாகப் பிரிந்தபின் காதலி ஆற்றமாற்றாளாகிறாள். எப்பொழுதும் அவரைப்பற்றியே எண்ணி ஏங்கிக் கொண்டிருக்கிறாள். பிரிவுக்கு முன் நிகழ்ந்தவைகளை நினைந்து ஆறுதல் பெற முயல்கிறாள்.
நினைத்தாலும் நீங்காத மகிழ்ச்சியைச் செய்வதால், உண்டால் அல்லாமல் களிப்பு தராத கள்ளைவிடக் காதல் இனிமையானது;
பிரிவில் கணவரோடுற்ற இன்பத்தை நினைத்துப் பிரிவால் உண்டாகும் துன்பத்தைப் போக்குகிறாள் தலைவி. காதல் எப்பொழுதும் இனிமை தருவதே எனக் கூறிக்கொண்டிருக்கிறாள்.
இக்காட்சி:
இப்பொழுது அவளுக்குத் தும்மல் தோன்றி அது வெளிப்படாமல் அரை குறையாக நின்றுவிடுகிறது.
'என்ன இது தும்மல் வருவது போல இருந்து, வராமல் போய் விட்டதே. அவர் நம்மை நினைக்கத் தொடங்கி பின் விட்டுவிட்டாரோ; அதனால்தான் என தும்மலும் உள்ளடங்கிவிட்டது போலும்!' தும்மல் வந்தால் 'தன்னை யாரோ ஒருவர் நினைக்கிறார்' என மாந்தர் நம்புவதை இன்றும் நாம் காண்கிறோம். உரிமையுடைய ஒருவரை ஆழமாக நினைத்தால் நினைக்கப்பட்டார்க்குத் தும்மலும் புரையேறுதலும் உண்டாகும் என்பது ஓர் நம்பிக்கை. உண்ணும்போதும், ஒன்றும் செய்யாமல் வாளா இருக்கும்போதும் எழும் தும்மலைப்பற்றியே இவ்வாறு கருதுவர். நீர்க்கோவையால் வரும் தும்மல் இதில் அடங்காது. நற்குறி, தீக்குறி என்பதைப் பொறுத்து அவை நமக்கு எதிர்வரும் இன்பங்களையும், துன்பங்களையும் அறிவிக்கும் என்பதும் நம்பிக்கை. இ்வற்றிற்கு அறிவியல் விளக்கம் ஏதும் இல்லை.
தும்மல் ஓர் நற்குறி தெரிவிக்கும் நிகழ்வு என்பதுபற்றி ஐந்திணை எழுபதில் ஓர் பாடல் உள்ளது. அது:
மன்ற முது மரத்து ஆந்தை குரல் இயம்ப,
குன்றகம் நண்ணி, குறும்பு இறந்து சென்றவர்
கள்ளிய தன்மையர் போலும்-அடுத்து அடுத்து
ஒள்ளிய தும்மல் வரும்.
(ஐந்திணை எழுபது (40) பொருள்: பொருள்வயிற் பிரிந்த நம்தலைவர், மன்றின் கண்ணுள்ள, ஆலமரத்தில் வாழும் ஆந்தையானது ஒலிக்க, அடுத்து அடுத்து நலமிகுந்த தும்மலானது நம்மிடத்துத் தோன்றியதால், களவின் கண் நம்மாட்டு அவர் கொண்ட கடுங்காதல் போன்று இஞ்ஞான்றுங் கொண்டு மீள்வர்போற் காண்கின்றது “ஒள்ளிய தும்மல்,” என்றமையின் நன்னிமித்தம் எனலாயிற்று. )
இக்குறட்பாவில் தொடங்கிய தும்மல் நின்றுவிடுவது சொல்லப்படுகிறது. தலைவர் வினை முடிந்து திரும்புதல் வேண்டும். செயல் முடிவது போல் தோன்றி முடியாமல் நீடித்துக் கொண்டு செல்லுதலால்தான் வராமல் இருக்கின்றார் போலும் என்று தலைவி ஆறுதலடைகின்ற வகையில் இப்பாடல் அமைந்துள்ளது.
வருத்தம் தரும் தும்மல் பற்றி இக்குறள் கூறுகிறது; 1312,1317,1318 ஆகிய குறட்பாக்களில் காதல் கொண்ட தலைவன் - தலைவி இருவர்க்கும் தும்மல் தரும் இடர்ப்பாடுகள் சுவையாகச் சொல்லப்பட்டுள்ளன.
|
'சினைப்பது போன்று' என்பதன் பொருள் என்ன?
'சினைப்பது போன்று' என்ற தொடர்க்குத் தோன்றுவதுபோன்று, வருவதுபோல், என் முகத்திற்கு ஆகாதது வருமதுபோலத் தோன்றி, எழுவது போன்று தோன்றி, வருவதுபோலிருந்து, வருவதுபோன்று தோன்றி, வருவதுபோல, வருவதுபோல் தோன்றி, வருவது போல இருந்து, வருவதுபோல் வந்து, உண்டாவதுபோலத் தோன்றி, வருவது போன்று, உண்டாவது போன்று என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
'சினைப்பது போன்று' என்பது அரும்புதல் போல என்ற பொருள் தருவது.
தொடங்கிய தும்மல் இடையில் நின்றுவிட்டதால் தலைவி 'அவர் நினைப்பவர்போல் காட்டி நினையாதவராய் இருக்கின்றாரோ, தலைவர் என்னை நினைப்பார் போன்று நினையாது இருத்தல் வேண்டும், நினைக்கத் தொடங்கியவர் அப்படியே மறந்து விட்டார் போலும், தன்னை மறக்க மாட்டேன் என்று கூறியவர் மறந்து விட்டாரோ?' எனப் பலவாறாக ஐயம்கொள்கிறாள் தலைவி,
அவர் தன்னைப்பற்றி நினைக்க முயல்வதாகவும், ஆனால், அந்த நினைவு நீடிக்கவில்லையே என்று எண்ணிப் புலம்புகிறாள்.
தொடர்ந்து 'அது தலைவர் தாம் செய்யச் சென்ற வினைமுடியாமையினால் தன்னை நினைக்கத் தொடங்கியும் நினையாது வேறு வினைகளில் ஈடுபட்டதனால் போலும்' எனத் தனக்குத்தானே தலைவி ஆறுதல் கூறினாள்.
'சினைப்பது போன்று' என்பதற்கு உண்டாவதுபோல என்பது பொருள்.
|
என்னை நினைப்பார் போன்று நினைக்க மாட்டாரோ? அதனால்தான் தும்மல் உண்டாவதுபோலத் தோன்றிப் பின் உள்ளடங்கிவிடுகிறது என்பது இக்குறட்கருத்து.
வந்த தும்மல் நின்றுவிட்டதே என்னும் தலைவியின் நினைந்தவர்புலம்பல்.
என்னை நினைப்பார் போலக் காட்டி நினைக்க மாட்டார் போலும்; அதனால்தான் தும்மல் வருவதுபோல தோன்றி நின்றுவிடுகிறது.
|