தலைவன் பிரிவினை ஆற்றியிருத்தல் இயலாத தலைமகள், தலைவனை நினைந்து நினைந்து துன்புற்று வாடி வருந்திக் கூறல். படர்-நினைவு; மெலிந்து வாடி. இரங்கல் -வருந்திக் கூறல். நினைவால் வாடி வருந்திக் கூறல்.
- சி இலக்குவனார்
பணி காரணமாகக் கணவர் பிரிந்து சென்றிருக்கிறார். தலைவிக்குப் பிரிவைத் தாங்க முடியவில்லை. அவரை நாளும் நினைந்து துன்பத்தில் உழல்வதால் உடல் இளைத்து விடுகிறாள். அந்த நிலையில் அவளது கடலளவான காதல் வேதனைகளையும் இரவு தரும் துயரையும் கண்ணீர் வெள்ளமாய் காட்சி அளிப்பதையும் அவளே இரங்கல் குரலில் கூறுகிறாள்.
படர்மெலிந்து இரங்கல்
பிரிவின் துயரால் தலைவியின் உடல் மெலிந்தது. அடக்க முடியாத காதல் நோய் பற்றிக் கணவரிடம் தெரிவிக்கவும் நாணம் தடுக்கிறது. காதல், நாண் என்ற சுமைகளைத் தாங்கி உயிர் ஒடிந்துவிடும்போல் வேதனையுறுகிறாள். காதல் கொண்டவரே வீடு திரும்பாமல் கடுமை காட்டுகிறாரே, அவரின்றி கடல் அளவிலான காமத்துன்பத்தை எப்படி நீந்திக் கடப்பேன்? காதலுடைய என்னிடமே (விரைந்து வராமல்) கடுமை காட்டுகிறாரே, பகைமைக்கண் என் செய்வாரோ? ஏன் இப்பொழுதெல்லாம் நேரம் கடந்து விடிகிறது? கண்கள் அவர் முகம் காணாமல் கண்ணீர் வெள்ளத்தில் மிதக்கின்றனவே, என் உள்ளம்போல் அவற்றிற்கு அவர் இருக்குமிடம் செல்லமுடியவில்லையே! இத்தகைய எண்ண ஓட்டங்களும் நிகழ்வுகளும் அவள் உடலை மேலும் வருந்தச் செய்கின்றன.
பிரிவால் வாடும் தலைவி காதல்-நாண் இவற்றைச் சமன் நிலையில் வைக்கப் பெரும் பாடு படுகிறாள் என்பதைக் 'காத்தண்டு' என்ற பொருத்தமான உவமை மூலம் காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்... குறள் 1163 விளங்க வைக்கிறது.
'என்னைத் துணையாக கொண்ட இரவு எப்பொழுது நீங்கும்?' என்றும் 'இப்பொழுதெல்லாம் விடியும் நேரம் நீட்டிக்கின்றதே!' என்றும் இரவுப் பொழுதைக் கொண்டு துயரை இரங்கலாக வெளிப்படுத்தும் ..........இரா என்னல்லது இல்லை துணை (குறள் 1168), ..................இந்நாள் நெடிய கழியும் இரா (குறள் 1169) ஆகிய குறள்கள் இவ்வதிகாரத்துள் வருகின்றன.
'என் கண்களுக்கு மட்டும் ஆற்றல் இருந்தால், இங்கு கண்ணீர் வெள்ளத்தில் மிதக்காது, காதலரைச் சென்று பார்த்துக் கொண்டே இருக்குமே!' என்ற கவிதை (குறள் 1170)
. .............வெள்ளநீர் நீந்தல மன்னோஎன் கண் தலைவியின் துயரத்தை வெளிப்படுத்துவதோடு, காதலனைக் காண விழைவதையும் நன்கு காட்சிப்படுத்துகிறது.