இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1162கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்

(அதிகாரம்:படர்மெலிந்து இரங்கல் குறள் எண்:1162)

பொழிப்பு (மு வரதராசன்): இக் காமநோயைப் பிறர் அறியாமல் முற்றிலும் மறைக்கவும் முடியவில்லை; நோய் செய்த காதலர்க்குச் சொல்வதும் நாணம் தருகின்றது.

மணக்குடவர் உரை: இந்நோயை மறைக்கவும் அறிகின்றிலேன். இந்நோயைச் செய்தார்க்குச் சொல்லவும் நாணமாகாநின்றது என்றவாறு.
இது குறிப்பறிதற் பொருட்டுக் கூறிய தோழிக்குத் தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: 'ஈண்டையார் அறியாமல் மறைத்தல் ஆண்டையார் அறியத் தூது விடுதல் என்னும் இரண்டனுள் ஒன்று செயல் வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது). இந்நோயைக் கரத்தலும் ஆற்றேன்-இந்நோயை ஈண்டை அறியாமல் மறைத்தலும் வல்லேனாகின்றிலேன்; நோய் செய்தார்ககு உரைத்தலும் நாணுத் தரும் - ஆகாக்கால், நோய் செய்தவர்க்கு உரைக்க எனின், அதுவும் எனக்கு நாணினைத் தாரா நின்றது, இனி என் செய்கோ?
(ஒருகாலைக்கு ஒருகால் மிகுதலின், 'கரத்தலும் ஆற்றேன்' என்றும், சேயிடைச் சென்றவர்க்கு இது சொல்லித் தூதுவிட்டால் இன்னும் இருந்தேன் என்பது பயக்கும் என்னும் கருத்தால், 'நாணுத் தரும்' என்றும் கூறினாள்.)

சி இலக்குவனார் உரை: இக்காதல் நோயைப் பிறர் அறியாமல் மறைத்தலும் முடியாதவள் ஆகின்றேன். நோயை உண்டு பண்ணினவர்க்குச் சொல்லலும் நாணினைத்தரும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இந் நோயை கரத்தலும் ஆற்றேன்நோய் செய்தார்க்கு உரைத்தலும் நாணுத் தரும்.

பதவுரை: கரத்தலும்-மறைத்தலும்; ஆற்றேன்-செய்யும் ஆற்றலிலேன், வல்லேன் அல்லள்; இந்நோயை-இந்தத் துன்பத்தை; நோய்-துன்பம்; செய்தார்க்கு-செய்தவர்க்கு, தந்தவர்க்கு; உரைத்தலும்-சொல்லுதலும்; நாணு-வெட்கம்; தரும்-பயக்கும்.


கரத்தலும் ஆற்றேன்இந் நோயை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இந்நோயை மறைக்கவும் அறிகின்றிலேன்;
பரிப்பெருமாள்: இந்நோயை மறைக்கவும் அறிகின்றிலேன்;
பரிதி: காமநோயை மறைப்பதும் அறியேன்;
காலிங்கர்: தோழி! இங்ஙனம் பெருகிச் செல்லா நிறைபடா நோயையான் இனிப் பலர்க்குப் புலனாகாமை மறைத்தலும் அறியேன்;
பரிமேலழகர்: ('ஈண்டையார் அறியாமல் மறைத்தல் ஆண்டையார் அறியத் தூது விடுதல் என்னும் இரண்டனுள் ஒன்று செயல் வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது). இந்நோயை ஈண்டை அறியாமல் மறைத்தலும் வல்லேனாகின்றிலேன்; [ஆண்டையார்- தலைவர்]

'இந்நோயை மறைக்கவும் அறிகின்றிலேன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மறைக்க முடியவில்லை', 'இக்காம நோயை இங்குள்ளார் அறியாதவாறு மறைத்தலும் முடியவில்லை', (என் செய்வேன்?) இந்தக் காம வேதனையை அடக்கவும் முடிவதில்லை', 'இந்நோயினை மறைக்கவும் எனக்கு முடியவில்லை' என்ற பொருளில் உரை தந்தனர்.

பிரிவுத் துயரை மறைக்கவும் முடியாதிருக்கிறேன் என்பது இப்பகுதியின் பொருள்.

நோய் செய்தார்க்கு உரைத்தலும் நாணுத் தரும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இந்நோயைச் செய்தார்க்குச் சொல்லவும் நாணமாகாநின்றது என்றவாறு.
மணக்குடவர் குறிப்புரை: இது குறிப்பறிதற் பொருட்டுக் கூறிய தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிப்பெருமாள்: இந்நோயைச் செய்தார்க்குச் சொல்லவும் நாணமாகாநின்றது என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இவ்வாற்றாமையைத் தலைமகற்குச் சொல்லி விடுவோம் என்று தலைமகள் குறிப்பறிதற் பொருட்டுக் கூறிய தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிதி: ஈன நோய் செய்தார்க்கு உரைப்பேன் என்றலும் நாணந்தரும் என்றவாறு
காலிங்கர்: மற்று இப்படர் நோய் செய்தார்க்குச் சென்று ஒரு தூது உரைக்கக் கருதின் மற்று அடுவும் பெரியது ஓர் நாணுதலைத் தருமாயிராநின்றது. இனி என வினையும் யான் அறிகிலேன் என்றவாறு.
பரிமேலழகர்: ஆகாக்கால், நோய் செய்தவர்க்கு உரைக்க எனின், அதுவும் எனக்கு நாணினைத் தாரா நின்றது, இனி என் செய்கோ? [என் செய்கோ-என் செய்வேன்]
பரிமேலழகர்:குறிப்புரை ஒருகாலைக்கு ஒருகால் மிகுதலின், 'கரத்தலும் ஆற்றேன்' என்றும், சேயிடைச் சென்றவர்க்கு இது சொல்லித் தூதுவிட்டால் இன்னும் இருந்தேன் என்பது பயக்கும் என்னும் கருத்தால், 'நாணுத் தரும்' என்றும் கூறினாள். [ஒருகாலைக்கு ஒருகால்-ஒரு வேளைக்கு ஒரு வேளை; இது சொல்லி- காமநோய் ஒருகாலைக்கு ஒருகால் மிகுதலைச் சொல்லி; பயக்கும்-தோன்றும்]

'நோய் செய்தார்க்குச் சொல்ல நாண் தரா நின்றது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நோய் செய்தாருக்கு நாணம் விட்டு உரைக்கவும் முடியவில்லை', 'இதனை நோய் செய்தார்க்கு உரைத்தலும் நாணத்தைத் தருகின்றது. ஆதலால் உரைக்கவும் முடியவில்லை', 'இந்த நோயை உண்டாக்கி வைத்த என் காதலருக்குச் சொல்லியனுப்பலாமென்றாலும் வெட்கமாக இருக்கிறது', 'இந்நோயினை உண்டாக்கினவர்க்குத் தூதனுப்பி இதனைத் தெரிவிக்கவும் எனக்கு வெட்கமாயிருக்கின்றது' என்றபடி பொருள் உரைத்தனர்.

துயர்க்குக் காரணமான என் காதலருக்குச் சொல்வதும் வெட்கத்தைத் தருமே என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பிரிவுத் துயரை மறைக்கவும் முடியாதிருக்கிறேன்; துயர்க்குக் காரணமான என் காதலருக்குச் சொல்வதும் நாணுத் தருமே என்பது பாடலின் பொருள்.
'நாணுத் தரும்' என்றால் என்ன?

எப்படி மறைப்பேன்? என்னத்தைச் சொல்வேன்? நாளும் இந்நோய் மிகுந்துகொண்டே போகிறதே!

காமநோய் தரும் துயரை முழுவதும் மூடி மறைக்கவும் முடியவில்லை; நோய்தந்த காதலருக்குச் சொல்லி அனுப்பவும் நாணம் தடுக்கின்றதே!
காட்சிப் பின்புலம்:
தலைவர் தொழில்முறை காரணமாகப் பிரிந்து அயல் சென்றுவிட்டார். பிரிவை எண்ண எண்ணத் தலைவிக்குத் ஒருவேளைக்கு மறு வேளை துயரம் பெருகிக் கொண்டே செல்கிறது. பிரிவை ஆற்றமுடியவில்லை. கணவருடனிருந்து மகிழ்ந்த காதல் நிகழ்வுகள் தோன்றி தனியாக இருக்கும் தலைவியைத் துன்புறுத்துகின்றன. 'நான் இத்துயரை மறைக்க நினைத்தாலும். நீர்வேண்டி இறைப்பவர்க்கு ஊற்று நீர் வருவது போல இது மிகுகின்றதே!' என வருந்திக்கொண்டிருக்கிறாள்.

இக்காட்சி:
'கரத்தலும் ஆற்றேன்' அதாவது காதல்நோய் மேன்மேலும் மிகுதலால் அதை மறைக்கும் ஆற்றல் இல்லாமல் இருக்கிறேன் என்கிறாள் தலைவி. பிரிவில்வாடும் அவளுக்கு இங்குள்ளவர்களிடமிருந்து தன் துன்பத்தை மறைக்க முடியவில்லை. தூக்கமின்மையால் சோர்ந்த கண்கள், மெலிந்த பசலை உடல் போன்றன உள்ளம்/உடல் தன்மைகளை நன்கு வெளிப்படுத்துவதால், எப்படிப் பிறர் அறியாமல் அவளது துயரைக் காக்க முடியும்? காதல் நோயை ஊராரிடமிருந்து மறைக்க முடியவில்லை; சரி. இப்படர் நோய் செய்த கணவர்க்குச் செய்தி அனுப்பி ஆற்றாமை தீர்வதற்காக அவரைத் திரும்ப அழைக்கலாமா என எண்ணம் ஓடுகிறது. உடனே 'கடமை காரணமாகச் சென்றவரைக் 'காமநோய்' எனச் சொல்லி வரச்சொல்வதா?' என பெண்மைக்கே அமைந்த நாண்குணம் தோன்றி அதைத் தடுக்கிறது. காமம் ஒருபுறம்; நாணம் மற்றொரு புறம். இவ்விருவகை உணர்ச்சிகளுக்கு இடையே என்ன செய்வதென்று தெரியாமல் நிலைதடுமாறி நிற்கிறாள். அப்பொழுது அவள் இரங்கிச் சொல்வது: 'துயரத்தை மறைக்கவும் முடியவில்லை. துயர்க்குக் காரணமான காதல்கணவர்க்குச் சொல்வதற்கும் நாணம் தடுக்கிறது. ஏது செய்வேன் நான்?'
உடலியற்கையோடு ஒன்றுபட்டதாக உள்ள காமத்தின் ஆற்றலால் காதலுணர்ச்சி தாங்க முடியாத ஒன்றாக இருக்கிறது. நாண்பண்பு காரணமாக அதைக் கொழுநனிடம்கூட சொல்லிக் கொள்ள முடியவில்லை. பிரிவுதந்த கொடுமை முழுங்கவும் முடியாமல் மெல்லவும் முடியாத துயரநிலையை உண்டாக்கியது.

'நாணுத் தரும்' என்றால் என்ன?

நோய் செய்தார்க்கு உரைத்தலும் நாணுத் தரும் என்கிறாள் தலைவி. நோய் என்றது காதல்நோயை. காதல் நோய் இங்கு பிரிவுத் துயரமாம். காதலர்கள் எப்பொழுதும் ஒருவரைவிட்டு ஒருவர் அகலாமல் நெருக்கமாக இருப்பதையே விரும்புவர். அவர்கள் பிரிந்தகாலத்து உறும் மன வேதனையையே நோய் என்ற சொல் குறிக்கிறது. இந்தக் காதல் நோய் தந்த காதலனே அதற்கு மருந்துமாவான் என அவளுக்குத் தெரியும். எனவே பிரிவு வேதனையைத் தனக்கு உண்டாக்கி வைத்துத் தொலைவு சென்று இருக்கும் அவனுக்குச் சொல்லலாம் என நினைக்கிறாள். ஆனால் உடன் பிறந்த நாண் குணம் அவ்வாறு செய்யவிடாமல் குறுக்கிடுகிறது. நோய் செய்த காதலனுக்கு இதைச் சொல்லவும் வெட்கமாக இருக்கிறது எனத் தலைவி சொல்கிறாள்.
எல்லா உரிமையும் எடுத்துக்கொள்ளத்தக்கத் தன் கணவரிடம் தானுறும் நோயைச் சொல்வது ஏன் வெட்கம் தருகிறது? காதலன் அருகில் இருக்கும்போதும் அவனை நெருங்கிச் செல்வது ஒரு பெண்ணுக்கு நாணத்தையே தரும். அப்படியிருக்கும்போது அவன் தொலைவில் இருக்கும் சமயம், அவளது இயல்பான நாணத்தை விட்டு, அவனது கடமையை மறந்து, அவளது அருகில் வந்து இருக்க எப்படி உரைக்க முடியும்? எனவே நோய் செய்தார்க்கு உரைத்தலும் நாணுத் தரும் என்கிறாள் தலைவி.

நாணுத் தரும் என்ற தொடர்க்கு வெட்கத்தைத் தருமே என்பது பொருள்.

பிரிவுத் துயரை மறைக்கவும் முடியாதிருக்கிறேன்; துயர்க்குக் காரணமான என் காதலருக்குச் சொல்வதும் வெட்கத்தைத் தருமே என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

காமம் செய்யும் வன்மையை எப்படிக் காப்பேன் என்னும் தலைவியின் படர்மெலிந்து இரங்கல்.

பொழிப்பு

பிரிவுத் துயரை மறைக்கவும் முடியாதிருக்கிறேன்; துயர் தந்த காதலர்க்கு சொல்வதற்கும் நாண் தடுக்கிறதே.

பின்னூட்டங்கள் இட்டவரது தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும், குறள்.திறன் அவற்றிற்கு பொறுப்பேற்காது.