இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1163காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து

(அதிகாரம்:படர்மெலிந்து இரங்கல் குறள் எண்:1163)

காத் தண்டும் சுமைகளும்
பொழிப்பு (மு வரதராசன்): துன்பத்தைப் பொறுக்காமல் வருந்துகின்ற என் உடம்பினிடத்தில் உயிரே காவடித்தண்டாகக் கொண்டு காமநோயும் நாணமும் இருபக்கமும் தொங்குகின்றன.

மணக்குடவர் உரை: வேட்கையும் நாணமும் என்னுயிரே காத்தண்டாகத் தூங்கா நின்றன, பொறுக்கமாட்டாத என்னுடம்பினுள்ளே நின்று.
(காத்தண்டாக- காவடித்தண்டாக: தூங்குதல்- தொங்குதல்) இது தலைமகள் மனநிகழ்ச்சி யிதுவென்று கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) காமமும் நாணும் - காமநோயும் அதனைச் செய்தவர்க்கு உரைக்கல் ஒல்லாத நாணும்; நோனா என் உடம்பின் அகத்து - தம்மைப் பொறாத என்னுடம்பின் கண்ணே; உயிர் காவாத் தூங்கும் - உயிர் காத்தண்டாக அதன் இரு தலையிலும் தூங்காநின்றன.
(பொறாமை மெலிவானாயது. தூங்கும் என்பது, ஒன்றினொன்று மிகாது இரண்டும் ஒத்த சீர என்பது தோன்ற நின்றது. 'தூது விடவும் ஒழியவும் பண்ணுவனவாய காம நாண்கள் தம்முள் ஒத்து உயிரினை இறுவியா நின்றன. யான் அவற்றுள் ஒன்றின்கண் நிற்கமாட்டாமையின், இஃது இற்றே விடும்' என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: காமத்தால் விளையும் துன்பத்தைத் தாங்க முடியாத என் உடம்பிலே காம நோயும் நாணமும் என் உயிரைக் காவடித் தண்டாகக் கொண்டு இரு பக்கமும் தொங்குகின்றன.


பொருள்கோள் வரிஅமைப்பு:
.காமமும் நாணும் நோனா என் உடம்பின் அகத்து உயிர்காவாத் தூங்கும்

பதவுரை: காமமும்-காதலும், காதல் நோயும்; நாணும்-வெட்கமும்; உயிர்-உயிர்; கா- காத்தண்டு; ஆ-ஆகும்படி;- தூங்கும்-தொங்குகின்ற; என்-எனது; நோனா-பொறுக்கமுடியாத, (வருத்தத்தைப்) பொறாத; உடம்பின்அகத்து-உடலின் உள்ளே, உடம்பின் கண்ணே.


காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வேட்கையும் நாணமும் என்னுயிரே காத்தண்டாகத் தூங்கா நின்றன;
மணக்குடவர் குறிப்புரை: காத்தண்டாக- காவடித்தண்டாக: தூங்குதல்- தொங்குதல்.
பரிப்பெருமாள்: வேட்கையும் நாணமும் என்னுயிரே காத்தண்டாகத் தூங்கா நின்றன;
பரிப்பெருமாள் குறிப்புரை: காத்தண்டாக- காவடித்தண்டாக: தூங்குதல்- தொங்குதல்.
பரிதி: காமமும் நாணும் உறுதியாக உயிர் காவாத் தூங்கும்;
காலிங்கர்: தோழீ! காதலர் பிரிவின்கண் பெருகிய காமநோயும் அது பிறர் அறிதற்கு நாணுவதோர் நாணமும் என்னும் இவை இரண்டும் எனது உயிரே காத்தண்டாக கனம் ஒக்கத் தூங்கா நிற்கும்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) காமநோயும் அதனைச் செய்தவர்க்கு உரைக்கல் ஒல்லாத நாணும் உயிர் காத்தண்டாக அதன் இரு தலையிலும் தூங்காநின்றன; [அதனை- காமநோயை; உரைக்கல் ஒல்லாத - சொல்லுதற்கு அமையாத; அதன் - உயிரின்; தூங்குதல் - தொங்குதல்]

''காமநோயும் அது பிறர் அறிதற்கு நாணுவதோர் நாணமும் உயிர் காத்தண்டாக அதன் இரு தலையிலும் தூங்காநின்றன'' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்; .

இன்றைய ஆசிரியர்கள 'காமமும் நாணமும் உயிர்காவடியின் இருபுறமும் தொங்குகின்றன', 'உயிரைக் காவடித் தண்டாக்கி ஒரு புறத்தில் காம வேதனையும் இன்னொரு புறத்தில் வெட்கமும் சமனாகத் தொங்கி இழுக்கின்றன. (அதனால் என் உயிர் வளைந்து ஒடிந்து விடும்போல் இருக்கிறது', 'உயிரே ஒரு காவடித்தண்டாக அதன் ஒரு முனையிற் காமமும் மற்றொரு முனையில் வெட்கமும் தொங்கிக் கொண்டிருக்கின்றன', 'காதல் நோயும் அதனை உண்டு பண்ணியவர்க்குச் சொல்லக்கூடாத நாணமும் உயிரைச் சுமக்கும் (கோலாகக் கொண்டு) இரு முனையிலும் தொங்கும்' என்ற பொருளில் உரை தந்தனர்.

உயிரே ஒரு காத்தண்டாக அதன் ஒரு முனையிற் காமமும் மற்றொரு முனையில் நாணமும் சுமைகளாகத் தொங்குகின்றன என்பது இப்பகுதியின் பொருள்.

என் நோனா உடம்பின் அகத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொறுக்கமாட்டாத என்னுடம்பினுள்ளே நின்று.
மணக்குடவர் குறிப்புரை: இது தலைமகள் மனநிகழ்ச்சி யிதுவென்று கூறியது.
பரிப்பெருமாள்: பொறுக்கமாட்டாத என்னுடம்பினுள்ளே நின்று.
பரிப்பெருமாள் குறிப்புரை: தலைமகள் கருத்தின் பொருட்டு, அவர் உள்வழிச் செல்வோம் என்ற தோழிக்குப் போக நினைக்கும் ஒருகால், 'அது பெண்மை அல்ல' என்று நினைத்துத்தவிரும் ஒருகால். இப்பொழுது என் மனநிகழ்ச்சி அது என்று தலைமகள் கூறியது.
பரிதி: காமத்தினாலே மெலிந்து ஆற்றா உடம்பில் என்றவாறு.
காலிங்கர்: தானேயும் நிலையின்றி வாடுகின்ற, இக்கனம் பொறுக்கலாத எனது உடலிடத்து என்றவாறு.
பரிமேலழகர்: தம்மைப் பொறாத என்னுடம்பின் கண்ணே; [தம்மை - காமநோய், நாண் என்னும் தம்மை]
பரிமேலழகர் குறிப்புரை: பொறாமை மெலிவானாயது. தூங்கும் என்பது, ஒன்றினொன்று மிகாது இரண்டும் ஒத்த சீர என்பது தோன்ற நின்றது. 'தூது விடவும் ஒழியவும் பண்ணுவனவாய காம நாண்கள் தம்முள் ஒத்து உயிரினை இறுவியா நின்றன. யான் அவற்றுள் ஒன்றின்கண் நிற்கமாட்டாமையின், இஃது இற்றே விடும்' என்பதாம். [இரண்டும் - காமநோயும் நாணும்; ஒத்தசீர் - தம்முள் ஒத்திருக்கும் தன்மையன; இறுவியாநின்றன - வருந்தாநின்றன; அவற்றுள் - காமம், நாண்களுள்; இஃது இற்றே விடும் -உயிர் இறந்தேபோம்]

'பொறுக்கமாட்டாத என் உடம்பின் கண்ணே' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பொறுக்காத என் உடம்பினுள்', 'காமத் துன்பத்தைப் பொறுக்க முடியாமல் தவிக்கிற என் உடம்பிலுள்ள', 'பிரிவினைத் தாங்கமுடியாத உடம்பின் அகத்துள்ள', 'அவைகளைப் பொறுக்க முடியாத என் உடலில்' என்றபடி பொருள் உரைத்தனர்.

(பிரிவினைத்) தாங்கமுடியாத என் உடம்பினுள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
(பிரிவினைத்) தாங்கமுடியாத என் உடம்பினுள் காமமும் நாணமும் உயிரே காவாத் தூங்கும் என்பது பாடலின் பொருள்.
'காவாத் தூங்கும்' என்றால் என்ன?

தனக்குக் காமவுணர்வு மிகுந்துகொண்டு போகிறது என்று கணவரிடம் சொல்ல இயலுமா தலைவிக்கு?

பிரிவினைத் தாங்கமுடியாது வாடிக்கொண்டிருக்கும் உடம்பினுள் உயிரே ஒரு காவடித்தண்டாக அதன் ஒரு தலையில் காமமும் மற்றொரு தலையில் வெட்கமும் சமச்சீர் சுமைகளாகத் தொங்குகின்றன.
காட்சிப் பின்புலம்:
கணவர் பணி காரணமாக நெடுந்தொலைவுப் பிரிவில் சென்றிருக்கிறார். அவர் அருகில் இல்லாமல் இருப்பது தலைவிக்கு ஆற்றவொண்ணா வேதனையைத் தருகிறது. அவருடனிருந்து மகிழ்ந்த காதல் நிகழ்வுகள் தோன்றி தனியாக இருக்கும் தலைவியைத் துன்புறுத்துகின்றன.
தனக்கு உண்டான துயரைத்தை யாரும் அறியவேண்டாம் எனக் கருதித் தனக்குள் அதை அடக்க முயல்கிறாள். ஆனால் அடக்க அடக்க துயரம் பெரிதாகிக்கொண்டுதான் போகிறது; இப்பொழுது என்ன செய்வது? இக்காம நோயைத் தந்த தலைவர்க்குச் செய்தி அனுப்பி ஆற்றாமையைத் தணிக்க அவரைத் திரும்ப அழைக்கலாமா என எண்ணம் ஓடுகிறது. உடனே 'கடமை காரணமாகச் சென்றவரைக் 'காதல்நோய்' எனச் சொல்லி வரச்சொல்வதா?' என பெண்மைக்கே அமைந்த நாண்குணம் தோன்றி அதைத் தடுக்கிறது. இவ்விருவகை நிலைகளுக்கு இடையே என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறாள் தலைவி.

இக்காட்சி:
தலைவர் பிரிவால் ஏற்கனவே உடல் இளைத்துள்ள தலைவியை பொறுக்கமுடியாத இரண்டு சுமைகள் அழுத்துகின்றன. உடல் மெலிவுக்கு மேலாகக் காமநோய் என்னும் ஒரு சுமை ஒருபக்கம் துன்புறுத்துகிறது. தன்னை வருத்தும் காமத்துயரைப் பயணம் சென்றுள்ள, அந்நோயை யுண்டாக்கியவரிடம் சொல்லிவிடலாமா என்றுகூட அவளுக்குத் தோன்றுகிறது. ஆனால் அவ்விதம் அவர்க்கு உரைப்பதற்கு அவள் அகத்தே உள்ள, பண்பாட்டோடு இயைந்து வளர்ந்த, நாண் என்னும் இயல்பான குணம் வந்து தடையாக நிற்கிறது. இந்த நாண் என்னும் பண்பும் இன்னொரு சுமையாக ஆகித் துயர்தருகிறது. அப்பொழுது சொல்கிறாள் 'காதல் நோய் ஒரு புறமும் அந்நோய் தன்னை வருத்தும் செய்தியைத் தன் கணவரிடம் கொண்டு சேர்ப்பதைத் தடுக்கும் நாண் என்னும் குணம் மறுபுறமும் என் உயிர்க்காவடியின் இரு முனைகளிலும் தொங்கி வதைக்கின்றன' என்று. காமம், நாணம் இவை இரண்டும் பொறுக்கமுடியாத சுமைகளாகத் தன் உடலில் உள்ளன என்கிறாள் தலைவி.

காமத்திற்கும் நாணத்திற்கும் இடையே நடைபெறும் போராட்டத்தை இக்குறள் அவள் உயிரானது காத்தண்டு போல காமம், நாணம் என இவ்விரண்டையும் பாரமாகச் சுமந்து கொண்டு தவிக்கிறது என்கிறது. காமம், நாணம் தரும் துயர்களை பின்னரும் தலைவி இருகுறள்களில், வேறு சூழ்நிலைகளில், கூறுவாள். அவை: காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே யானோ பொறேன்இவ் விரண்டு (நெஞ்சோடுகிளத்தல் 1247 பொருள்: நல்ல நெஞ்சே! ஒன்று காதல் விருப்பத்தை விடு; அல்லது நாணத்தை விட்டுவிடு; நானோ இவ்விரண்டினையும் ஒருங்கே பொறுத்துக் கொள்ளேன்) காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு (நிறையழிதல் 1251 பொருள்: நாணத் தாழ்ப்பாள் இட்ட மன உறுதிப்பாடு என்னும் கதவினை காமம் என்ற கோடாலி உடைத்துவிடும்)

'காவாத் தூங்கும்' என்றால் என்ன?

காவாத் தூங்கும் என்பது கா+ஆக+தூங்கும் என விரியும்.
'கா' என்ற சொல் சுமக்கும் கொம்பு அல்லது கோல் என்பதைக் குறிப்பது. இக்கோல் தண்டு என்றும் அறியப்படும். காத்தண்டை காவடித் தண்டு என்றும் அழைப்பர். (காவடி என்ற பெயரில் சமயப் பற்றாளர்கள் தாங்கள் வழிபடும் தெய்வத்துக்கு,, சிறப்பாக முருகக் கடவுளுக்குக், காணிக்கையாக, பால், பூக்கள், பன்னீர் போன்ற பொருட்களை 'கா' வின் இருபுறங்களிலும் வைத்துத் தெருக்களில் சுமந்து செல்வதை நாம் பல நிகழ்வுகளில் காண்கிறோம்.)
சுமை தாங்குவார் ஒரு கோலை அதாவது தண்டைத் தோளில் சுமந்து கொண்டு அதன் இரு புறங்களிலும் சுமக்க வேண்டியவைகளைக் கனம் ஒக்கத் தொங்க விட்டிருப்பர். சுமை ஒருபக்கம் மிகுந்து மற்றொரு பக்கம் குறைந்தால் சுமப்பவன் சமப்படுத்திச் சுமக்க முடியாமல்போகும் கோலின் இரு முனைகளிலும் சுமைகள் தொங்குவதால் கோல் வளைந்து காணப்படும். சுமை எல்லாம் அந்த ஒரு கொம்பு தாங்க வேண்டியுள்ளது. சுமைகள் மிகுதியினால் வளையும் கோல் முறியவும் கூடும்.
தூங்கும் என்ற சொல்லுக்கு தொங்குகின்றன என்பது பொருள்.
காவாத் தூங்கும் என்பது ஓர் உவமையாக வந்தது. இவ்வுவமையில் உயிர் காத்தண்டாகவும் காமம், நாண் இரண்டும் அதன் இரு முனைகளில்தொங்கும் சுமைகளாகவும் காட்டப்படுகின்றன. தலைவியின் உயிர் காதல் நோயினால் பெரிதும் வருந்துகின்றது. ஆனால் அதைக் காதலனிடம் கூடத் தெரிவிக்க நாணம் தடையாகிறது. காமம் நாணம் இவ்விரண்டனுள் எந்த ஒன்றையும் விடுதல் இயலாத நிலையில் தலைவி தவிக்கிறாள். பிரிவால் மெலிந்த உடல் இச்சுமைகளின் கனம் தாங்க முடியாமல் மேலும் துயருகின்றது. தண்டின் எப்பக்கத்திலும் சுமை இன்னும் சிறுது கூடினால் தண்டு ஒடிந்துவிடுவதுபோல உயிர் நீங்கிவிடும் எனக் குறிப்பால் சொல்கிறாள் தலைவி. காத்தண்டு சீராக இருக்கச் சுமைகள் சமன் செய்யப்படவேண்டும், அதுபோல தன் உயிர் கேடுறாமல் காக்கக் காமம், நாண் இவற்றைத் தலைவி சமன்செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறாள்.

கலித்தொகையில் இக்குறளில் சொல்லப்பட்ட கருத்துக் கொண்ட ஒரு செய்யுள் காணப்படுகிறது. அது:
நலிதரும் காமமும் கௌவையும் என்று, இவ்
வலிதின் உயிர் காவாத் தூங்கி, ஆங்கு, என்னை
நலியும் விழுமம் இரண்டு
கலித்தொகை 142 : 56-58):
(பொருள்: நலியும் காமமுங் கௌவையுமென்று சொல்லப்படும் இரண்டு விழுமம் உயிர் காவாக இரண்டு புறத்துந்தூங்கி என்னை நலியும்; இதனை இங்ஙனம் உயிர்மெலியுமளவும் வலிதிற் பொறுத்தேன்)
காமமும் நாணமும் தொங்குகின்றன என்று குறள் கூற தொங்குவன காமமும் கௌவையும் என்று நெய்தற்கலி கூறுகிறது.

'காவாகத் தூங்கும் என்றது 'சுமக்கும் தண்டாகக் கொண்டு தொங்குகின்றன' என்ற பொருள் தரும்.

பிரிவினைத் தாங்கமுடியாத என் உடம்பினுள் உயிரே ஒரு காத்தண்டாக அதன் ஒரு முனையிற் காமமும் மற்றொரு முனையில் நாணமும் தொங்குகின்றன என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

காதல் நோயும் நாணமும் பொறுக்க இயலாத அளவு என் உயிரை வருத்துகின்றன என்னும் தலைவியின் படர் மெலிந்து இரங்கல்.

பொழிப்பு

பிரிவின் துன்பத்தைத் தாங்க முடியாத என் உடம்பிலே காம நோயும் நாணமும் என் உயிரைக் காவடித் தண்டாகக் கொண்டு இரு பக்கமும் சுமைகளாகத் தொங்குகின்றன.