இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனின் பெரிது
(அதிகாரம்:படர்மெலிந்து இரங்கல்
குறள் எண்:1166)
பொழிப்பு (மு வரதராசன்): காமம் மகிழ்விக்கும்போது அதன் இன்பம் கடல் போன்றது; அது வருத்தும்போது அதன் துன்பமோ கடலைவிடப் பெரியது.
|
மணக்குடவர் உரை:
காமப்புணர்வினால் நமக்குவரும் இன்பம் கடல்போலப் பெரிது; பிரிவினான். அஃது அடுங்காலத்து வருந்துன்பம் அக்கடலினும் பெரிது.
இஃது இன்பமுற்றார் துன்பமுறுதல் உலகியலென்று ஆற்றுவித்த தோழிக்கு ஆற்றலரிதென்று தலைமகள் கூறியது.
பரிமேலழகர் உரை:
('காமத்தான் இன்பமுற்றார்க்கு அதனினாய துன்பமும் வரும்', என்ற தோழிக்குச் சொல்லியது.) காமம் இன்பம் கடல் - காமம் புணர்வால் இன்பஞ்செய்யுங்கால் அவ்வின்பம் கடல் போலப் பெரிதாம்; மற்று அஃது அடுங்கால் துன்பம் அதனிற் பெரிது - இனி அது தானே பிரிவால் துன்பஞ் செய்யுங்கால், அத்துன்பம் அக்கடலினும் பெரிதாம்.
('மற்று' வினைமாற்றின்கண் வந்தது. 'அடுங்கால்' என வந்தமையின், மறுதலை யெச்சம் வருவிக்கப்பட்டது. பெற்ற இன்பத்தோடு ஒத்து வரின் ஆற்றலாம்; இஃது அதனது அளவன்று என்பது கருத்து.)
வ சுப மாணிக்கம் உரை:
காம இன்பம் கடலாகும்; வருத்தும்போது காமத்துன்பம் கடலினும் பெரிதாகும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
காமம் இன்பம் கடல் மற்று அஃதடுங்கால் துன்பம் அதனின் பெரிது.
பதவுரை: இன்பம்-மகிழ்ச்சி; கடல்-கடல்; மற்று-ஆனால், (அற்று- போன்றது); காமம்-காதல்; அஃது-அது; அடுங்கால்--வருத்தும்போது, துன்பம் செய்யும்போது; துன்பம்-துயரம்; அதனின்-அதனைக் காட்டிலும்; பெரிது-பெரியது.
|
இன்பம் கடல்மற்று (அற்று) காமம் :
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('கடலற்றுக்' பாடம், 'காமமற்று' பாடம்): காமப்புணர்வினால் நமக்குவரும் இன்பம் கடல்போலப் பெரிது;
பரிப்பெருமாள் ('காமமற்று' பாடம்): காமப்புணர்வினால் நமக்குவரும் இன்பம் கடல்போலப் பெரிது;
பரிதி: காம இன்பம் கடல் நீரையொக்கும். .
காலிங்கர் ('கடலற்றுக்' பாடம்): நெஞ்சே! இக்காமம் ஆகின்ற இதுதான் நாம் அவரோடு கூடி வாழுங்காலத்துப் பெருகும் இன்பம் கடல் அனைத்து, இனி;
பரிமேலழகர்: ('காமத்தான் இன்பமுற்றார்க்கு அதனினாய துன்பமும் வரும்', என்ற தோழிக்குச் சொல்லியது.) காமம் புணர்வால் இன்பஞ்செய்யுங்கால் அவ்வின்பம் கடல் போலப் பெரிதாம், இனி; [அதனின் ஆய - அக்காமத்தினால் உண்டாய]
'காதலரோடு கூடி வாழுங்காலத்துப் பெருகும் இன்பம் கடல்போலப் பெரிது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'காமம் முயக்கத்தால் இன்பம் செய்யும்போது அவ்வின்பம் கடல்போல் பெரிதாம்', '(காதலர் தன்னுடன் இருக்கும்போது) எனக்கு வரும் காம உணர்ச்சி மிகப் பெரிய இன்பக் கடலாக இருந்தது', 'காமத்தினால் வரும் இன்பம் கடல் போலப் பெரிது', 'காதல் இன்பஞ் செய்யுங்கால் கடல் போன்றது' என்ற பொருளில் உரை தந்தனர்.
காமத்தினால் உண்டாகும் இன்பம் கடல் அளவாம் என்பது இப்பகுதியின் பொருள்.
அஃதடுங்கால் துன்பம் அதனின் பெரிது:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிரிவினான் அஃது அடுங்காலத்து வருந்துன்பம் அக்கடலினும் பெரிது.
மணக்குடவர் குறிப்புரை: இஃது இன்பமுற்றார் துன்பமுறுதல் உலகியலென்று ஆற்றுவித்த தோழிக்கு ஆற்றலரிதென்று தலைமகள் கூறியது.
பரிப்பெருமாள்: பிரிவினான் அஃது அடர்க்கும்காலத்து வருந்துன்பம் அக்கடலினும் பெரிது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இன்பமுற்றார் துன்பமுறுதல் உலகியலென்று ஆற்றுவித்த தோழிக்கு இன்பத்தளவாயின் ஆற்றலாகும். துன்பம் மிகுதலான் யான் ஆற்றலரிதென்று தலைமகள் கூறியது.
பரிதி: அதனினும் துன்பம் எழுகடல் எனச் சொல்லப்படும் என்றவாறு.
காலிங்கர்: இன்பத்தை அடும் காலமாகிய பிரிவுக் காலத்துத் துன்பமானது அக்கடலினும் சாலப் பெரிது என்றவாறு.
பரிமேலழகர்: மற்று அஃது அடுங்கால் துன்பம் அதனிற் பெரிது - அது தானே பிரிவால் துன்பஞ் செய்யுங்கால், அத்துன்பம் அக்கடலினும் பெரிதாம்.
பரிமேலழகர் குறிப்புரை :('மற்று' வினைமாற்றின்கண் வந்தது. 'அடுங்கால்' என வந்தமையின், மறுதலை யெச்சம் வருவிக்கப்பட்டது. பெற்ற இன்பத்தோடு ஒத்து வரின் ஆற்றலாம்; இஃது அதனது அளவன்று என்பது கருத்து. [ஒத்துவரின் - (துன்பம்) சமமாக வந்தால்; ஆற்றலாம் -பொறுத்தல் கூடும்; இஃது அதன் அளவன்று - இத்துன்பம் அவ்வின்பத்தின் அளவன்று]
'பிரிவுக் காலத்துத் துன்பமானது அக்கடலினும் சாலப் பெரிது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அக்காமமே பிரிவால் துன்பம் செய்யும்போது அத்துன்பம் கடலைவிடப் பெரிதாம்', 'அவர் என்னுடன் இல்லாத இப்போது எனக்கு வரும் காம உணர்ச்சி அந்த இன்பக் கடலைவிடப் பெரிய துன்பக் கடலாக இருக்கிறது', 'பிரிவினால் அது துன்புறுத்தும்போது அத்துன்பம் கடலினும் பெரிதாம்', 'துன்பம் செய்யுங்கால் கடலைவிடப் பெரிதாம்' என்றபடி பொருள் உரைத்தனர்.
அது பிரிவுக் காலத்தில் தரும் துன்பம் அதனினும் பெரிது என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
காமத்தினால் உண்டாகும் இன்பம் கடல் அளவாம்; அது அடுங்கால் துன்பம் அதனினும் பெரிது என்பது பாடலின் பொருள்.
'அடுங்கால் துன்பம்' குறித்தது என்ன?
|
காதலர் உடன் இல்லாதபோது காமத்தின் தாக்குதல் கடலினும் பெரிது.
காமம் துய்க்கும்போது இன்பம் கடலளவு; ஆனால், பிரிவில் அக்காமத்தின் தாக்கம் கடலை விடப் பெரிது.
காட்சிப் பின்புலம்:
கடமை காரணமாகத் தலைவன் மனைவியைப் பிரிந்து சென்றுள்ளான். தலைவிக்குப் பிரிவைத் தாங்க முடியவில்லை. அவனை நாளும் நினைந்து துன்பத்தில் உழல்வதால் உடல் இளைத்து விடுகிறாள். தன் துயரத்தை வெளியில் தெரிவிக்கவும் நாணம் தடுக்கிறது. காமம், நாண் ஆகிய சுமைகளைத் தாங்கி உயிர் ஒடிந்துவிடும்போல் வேதனையுறுகிறாள். காதலரின்றி கடல் அளவிலான காமத்துன்பத்தை எப்படிக் கடக்க முடியும்? காதல் கொண்டவரே வீடு திரும்பாமல் என்னிடம் கடுமை காட்டுகிறாரே, பகைவரை என்ன பாடு படுத்துவார்? எனப் போர்ப்பணியில் சென்றுள்ள கணவனை நினைத்துக் கொண்டிருக்கிறாள்.
இக்காட்சி:
பிரிவை ஆற்றமுடியாத தலைவி அவன் நினைவால் உடல்மெலிந்து வாடுகிறாள். பிரிவு வருத்தும் துன்பக்கடலில் தத்தளிக்கும் தலைவி மகிழ்ச்சியான இன்பக்கடலில் நீந்திய பொழுதையும் நினைத்துப் பார்க்கிறாள். காமம் கடலளவு மகிழ்ச்சியைத் தந்தமையையும் உணர்கிறாள்.
ஆனால் அதே காமம், அவன் உடன் இல்லாத இந்த வேளையில், தரும் துன்பம் அதைவிட அளவிடமுடியாததாக இருக்கிறதே என்று துயருற்றுச் சொல்கிறாள். காமத்துன்பம் ஆற்றவொண்ணாதது. இன்பக் கடலாயிருந்த காமம் பிரிவால் அதைவிடப் பெரிய துன்பக்கடல் ஆயிற்று. துன்பம் இன்பத்தினும் மிகுத்திருப்பதால் தன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்கிறாள் மனைவி. காமம் என்ற சொல் குறளில் காதலின்பத்திற்கே சிறப்பான பெயர். காதலின்பம் கடல் போன்ற மிகப்பெரிய அளவினதுதான். காமம் எவ்வளவு இன்பம் தந்ததோ அதனினும் பெரிய துன்பம் காதலன் உடன் இல்லாமல் இருக்கும்போது தரவல்லதாக இருக்கிறதே! என வருந்திக் கூறுகிறாள்.
.................................................. கனைஇக் காமம்
கடலினும் உரைஇ, கரை பொழியும்மே. (அகநானூறு 128 பொருள்: காமம் செறிந்து கடலைக் காட்டினும் பரவி கரைகடந்து செல்லும்;) என்று அகநானூற்றுப் பாடலும்
காமத்தைக் கடலுக்கு ஒப்பிட்டு அது கரையினுள் அடங்குவதன்று எனச் சொல்றது.
'கடலற்றுக் காமற் றஃதடுங்கால்' என்பது மணக்குடவர் பாடம். இதன்படி இக்குறளை
இன்பம் கடலற்றுக் காமற் றஃதடுங்கால்
துன்பம் அதனின் பெரிது
என்று வாசிக்க வேண்டும். இது பரிமேலழகர் பாடத்தினும் சிறப்பாக உள்ளது.
|
'அடுங்கால் துன்பம்' குறித்தது என்ன?
'அடுங்கால் துன்பம்' என்ற தொடர்க்கு அடுங்காலத்து வருந்துன்பம், அடர்க்கும்காலத்து வருந்துன்பம், துன்பம், இன்பத்தை அடும் காலமாகிய பிரிவுக் காலத்துத் துன்பமானது, பிரிவால் துன்பஞ் செய்யுங்கால், வருத்தும்போது அதன் துன்பமோ, பிரிவால் வருந்துங்காலத்து, வருத்தும்போது காமத்துன்பம், பிரிவால் துன்பம் செய்யும்போது, (என் காதலர் என்னவிட்டுப் பிரிந்திருக்கிற இப்போது) அந்தக் காம உணர்ச்சி வந்து வருத்துகின்றபோது, பிரிவால் வருந்தும்போது, பிரிவினால் அது துன்புறுத்தும்போது, துன்பம் செய்யுங்கால், பிரிவால் துன்பஞ் செய்யும்பொழுது, துன்பப்படுத்தும்போது என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
காம இன்பம் கடல் அளவினது. காமத்துன்பம் கடலினும் பெரிது என்பதைச் சொல்வது இக்குறள்.
தலைவனைக் கூடுங்கால் அடைகின்ற இன்பம் கடல் போன்றது. தலைவன் இல்லாத காலத்து காமத்தால் அடைகின்ற துன்பமோ அக்கடலைவிடப் பெரியது.
அடுங்கால் என்ற சொல் வருத்தும்போது என்ற பொருள் தருவது. பரிப்பெருமாள் அடுங்கால் என்பதற்கு அடர்க்கும்காலத்து எனப் பொருள் தருகிறார். அடர்க்கும் என்ற சொல்லுக்கு வருத்துதல் என்பதோடு தாக்குதல், கொல்லுதல் என்ற பொருளும் உண்டு. அடுங்கால் துன்பம் என்பது காமம் என்ற சொல்லைத் தழுவி இங்கு அமைந்துள்ளது. எனவே காமம் வருத்தும் துன்பம் என்பது இத்தொடரின் பொருள் ஆகிறது. காமம் மகிழ்ச்சிதானே கொடுக்கும். அது எப்படித் துன்பம் தரும்? இப்பாடல் பிரிவுக்காலத்தில்l உண்டாகும் காதல் நினைவுகள் பற்றிப் பேசுவது. காதலன் உடன் இல்லாதவேளை, உண்டாகும் காமவேதனை ஏற்படுத்தும் வருத்தத்தைச் சொல்வது இத்தொடர்.
காலிங்கர் 'இக்காமம் ஆகின்ற இதுதான் நாம் அவரோடு கூடி வாழுங்காலத்துப் பெருகும் இன்பம் கடல் அனைத்து; இனி இன்பத்தை அடும் காலமாகிய பிரிவுக் காலத்துத் துன்பமானது அக்கடலினும் சாலப் பெரிது' என 'இன்பத்தைக் கொல்லும்' என்று உரை தருகிறார்.
'அடுங்கால் துன்பம்' என்ற தொடர்க்கு (காமம்) வருத்தும்போது வரும் துன்பம் என்பது பொருள்.
|
காமத்தினால் உண்டாகும் இன்பம் கடல் அளவாக இருக்கிறது; அது பிரிவுக் காலத்தில் தரும் துன்பம் அதனினும் பெரிது என்பது இக்குறட்கருத்து.
கூடியகால இன்பமானாலும் பிரிவிலுறு துன்பமானாலும் காமம் கட்டுக்குள் அடங்குவதில்லை என்று தலைவி படர்மெலிந்து இரங்கல்.
காம இன்பம் கடலளவு ஆகும்; வருத்தும்போது காமத்துன்பம் கடலினும் பெரிதாம்.
|