துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்
(அதிகாரம்:படர்மெலிந்து இரங்கல்
குறள் எண்:1165)
பொழிப்பு (மு வரதராசன்): (இன்பமான) நட்பிலேயே துயரத்தை வரச்செய்ய வல்லவர், (துன்பம் தரும் பகையை வெல்லும்) வலிமை வேண்டும்போது என்ன ஆவாரே?
|
மணக்குடவர் உரை:
மென்மை செய்ய வேண்டும் நட்டோர்மாட்டே துன்பம் வருதலைச் செய்கின்றவர், வன்மை செய்ய வேண்டுமிடத்து யாங்ஙனஞ் செய்கின்றாரோ?
இது பகைதணி வினையின்கண் பிரிந்த தலைமகனது கொடுமையை உட்கொண்டு தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
பரிமேலழகர் உரை:
(தூது விடாமை நோக்கித் தோழியோடு புலந்து சொல்லியது) நட்பினுள் துயர் வரவு ஆற்றுபவர் - இன்பஞ்செய்தற்குரிய நட்பின்கண்ணே துன்பவரவினைச் செய்ய வல்லவர்; துப்பின் எவனாவர் கொல் - துன்பம் செய்தற்குரிய பகைமைக்கண் என் செய்வர் கொல்லோ?
(துப்புப் பகையுமாதல், 'துப்பெதிர்ந்தோர்க்கே யுள்ளாச் சேய்மையன் நட்பெதிர்ந் தோர்க்கே அங்கை யண்மையன்' (புறநா.380) என்பதனானும் அறிக. அப்பகைமை ஈண்டுக் காணாமையின், 'அவர் செய்வது அறியப் பெற்றிலேம்' என்பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது. துயர் வருதலை விலக்கலாயிருக்க அது செய்கின்றிலை எனப் புலக்கின்றமையின், துயர் வரவு செய்தாளாக்கியும் பிறளாக்கியும் கூறினாள்.)
இரா சாரங்கபாணி உரை:
இன்பம் செய்யும் நட்பிடத்துத் துன்பம் வரச் செய்ய வல்லவர் துன்பம் செய்யும் பகையிடத்து என்னாவர்? (மிகுந்த துன்பம் செய்வர்).
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
நட்பினுள் துயர்வரவு ஆற்றுபவர் துப்பின் எவனாவர் மன்கொல்?
பதவுரை: துப்பின்-பகைமைக்கண்; எவன் -என்ன; ஆவர்-ஆகுவார், ஆவார்கள்; (மன்--ஒழியிசை); கொல்-(ஐயம்); துயர்-துன்பம்; வரவு-வருகை, வருதல்; நட்பினுள்-நட்பின்கண்; ஆற்றுபவர்-செய்யவல்லவர்.
|
துப்பின் எவனாவர் மன்கொல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('துப்பில்', 'எவன் செய்வர்' பாடம்): வன்மை செய்ய வேண்டுமிடத்து யாங்ஙனஞ் செய்கின்றாரோ?
பரிப்பெருமாள்: வன்மை செய்ய வேண்டுமிடத்து யாங்ஙனஞ் செய்கின்றாரோ?
பரிதி: துப்பாகிய காமத்து வலியினாலே என்னமாம்; .
காலிங்கர் ('எவன் செய்வர்' பாடம்): பகைவர் மாட்டு வலிசெய்யும் பொழுது யாதினைச் செய்வார் கொல்லோ; .
பரிமேலழகர்: (தூது விடாமை நோக்கித் தோழியோடு புலந்து சொல்லியது) துன்பம் செய்தற்குரிய பகைமைக்கண் என் செய்வர் கொல்லோ?
பரிமேலழகர் கருத்துரை: துப்புப் பகையுமாதல், 'துப்பெதிர்ந்தோர்க்கே யுள்ளாச் சேய்மையன் நட்பெதிர்ந் தோர்க்கே அங்கை யண்மையன்' (புறநா.380) என்பதனானும் அறிக. அப்பகைமை ஈண்டுக் காணாமையின், 'அவர் செய்வது அறியப் பெற்றிலேம்' என்பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது. [அவர் - பகைவர்]
இப்பகுதிக்கு 'வன்மை செய்ய வேண்டுமிடத்து யாங்ஙனஞ் செய்கின்றாரோ'' என மணக்குடவர்/பரிப்பெருமாள் உரைசெய்தனர் துன்பம் செய்தற்குரிய பகைவர் மாட்டு யாதினைச் செய்வர் கொல்லோ' என்ற பொருளில் காலிங்கரும் பரிமேலழகரும் உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள 'பகைவர்க்கு என்னதான் செய்ய மாட்டார் ', '(என் காதலர்) என்னிடத்தில் ஏதேனும் வருத்தமுற்றுப் பிரியம் இல்லாதவராகிவிட்டால் இன்னும் எவ்வளவு துன்பம் உண்டாக்குவாரோ தெரியவில்லை', 'பகையுள்ளபோது எப்படிப்பட்டவராய் இருப்பார்களோ?', ' துன்பம் செய்தற்குரிய பகைமைக்கண் என் செய்வர் கொல்லோ?', என்ற பொருளில் உரை தந்தனர்.
பகைமைக்கண் என் செய்வாரோ? என்பது இப்பகுதியின் பொருள்.
துயர்வரவு நட்பினுள் ஆற்று பவர்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மென்மை செய்ய வேண்டும் நட்டோர்மாட்டே துன்பம் வருதலைச் செய்கின்றவர்,
மணக்குடவர் குறிப்புரை: இது பகைதணி வினையின்கண் பிரிந்த தலைமகனது கொடுமையை உட்கொண்டு தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
பரிப்பெருமாள்: மென்மை செய்ய வேண்டும் நட்டோர்மாட்டே துன்பம் வருதலைச் செய்கின்றவர்,
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பகைதணி வினையின்கண் பிரிந்த தலைமகனது கொடுமையை உட்கொண்டு தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
பரிதி: காம இன்பமாகிய நட்பிலும் துயராற்றுபவர்க்கு என்றவாறு.
காலிங்கர்: துயர் வரவினை நட்டார் மாட்டுச் செய்கின்றவர் என்றவாறு.
பரிமேலழகர்: இன்பஞ்செய்தற்குரிய நட்பின்கண்ணே துன்பவரவினைச் செய்ய வல்லவர்;
பரிமேலழகர் கருத்துரை: துயர் வருதலை விலக்கலாயிருக்க அது செய்கின்றிலை எனப் புலக்கின்றமையின், துயர் வரவு செய்தாளாக்கியும் பிறளாக்கியும் கூறினாள். [அது துயர் வருதலை விலக்கல்; புலக்கின்றமையின் - பிணங்குகின்றமையால்]
'நட்டோர்மாட்டே துன்பம் வருதலைச் செய்கின்றவர்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'துயரத்தை உறவினர்க்குச் செய்ய வல்லவர்', 'என்னிடத்தில் காதலுள்ளவராக இருக்கும் போதே எனக்கும் இவ்வளவு துன்பம் வரச் செய்துவிட்டாரே!', 'நட்புள்ளபோதே துன்பம் வரும்படி செய்ய வல்லவர்கள்', 'இன்பம் செய்தற்குரிய நட்பின்கண்ணே துன்பவரவினைச் செய்யவல்லவர்' என்றபடி பொருள் உரைத்தனர்.
காதல் கொண்டவர்க்கே துன்பம் செய்ய வல்லவர் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
காதல் கொண்டவர்க்கே துன்பம் செய்ய வல்லவர் துப்பின் என் செய்வாரோ? என்பது பாடலின் பொருள்.
'துப்பின்' என்றால் என்ன?
|
காதலியான என்னையே கலக்கமுறச் செய்கிறாரே பகைவரை என்ன பாடுபடுத்துவாரோ!
என் மீது காதல் மிகக் கொண்டவர் எனக்கே துன்பம் வருமாறு செய்யும்போது பகையில் என்ன கொடுமை செய்வாரோ எனச் சொல்கிறாள் தலைவி.
காட்சிப் பின்புலம்:
பணி காரணமாக கணவர் பிரிந்து சென்றிருக்கிறார். தலைவிக்குப் பிரிவின் துன்பத்தை எத்துணை அடக்க முயன்றாலும் அது அடங்காமல் மிகுதிப்படுகிறது. அவரை எந்த நேரமும் நினைந்து துன்பத்தில் உழல்வதால் உடல் இளைத்து விடுகிறாள். தன் துயரத்தை வெளியில் தெரிவிக்கவும் நாணம் தடுக்கிறது. காமம், நாண் ஆகிய சுமைகளைத் தாங்கி உயிர் ஒடிந்துவிடும்போல் துன்புறுகிறாள். காதலரின்றி கடல் அளவிலான காமத்துன்பத்தை எப்படிக் கடக்க முடியும்? என்று தன் துயரத்தைத் தனக்குள்ளேயே வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறாள்.
இக்காட்சி:
ஏன் அவர் இன்னும் திரும்பி வரவில்லை என்று பிரிவை ஆற்றமாட்டாமல் கணவன் மீது எரிச்சல் கொள்கிறாள் மனைவி. அவர் ஏன் மாறுபாடாக நடந்து கொள்கிறார் எனத் தனக்குத்தானே வினவிக் கொள்கிறாள். காதலியான எனக்கு இவ்வளவு துயரம் செய்கிறாரே! பகைவர்க்கு என்ன கொடுமை செய்வாரோ என்ற காட்சி தோன்றுகிறது அவளுக்கு.
பொதுவாகத் தலைவன் பிரிவு தூது, போர், பொருளீட்டல் போன்ற காரணங்களுக்காகப் பிரிந்து செல்வான். 'காதலிக்குத் தரும் துயரே இத்துணை என்றால் பகைவரிடம் என்றால் எத்துணையோ?' என்று பாடல் சொல்வதால் கணவன் போர்ப்பணிக்காகப் பிரிந்து சென்றிருப்பவன் என்ற குறிப்புப் பொருளை அது தருவதாக உள்ளது. மேலும் தன் கணவனது போர் ஆற்றலைச் சொல்லி அவள் பெருமைப்படுவதைச் சொல்வதாகவும் இருக்கிறது இப்பாடல்.
இக்குறட்கருத்தை சிலபல மாறுதல்களுடன் வேறுவகையில் நோக்கிய உரைகளாவன:
- என்னிடத்தில் காதலுள்ளவராக இருக்கும் போதே எனக்கு இவ்வளவு துன்பம் வரச் செய்துவிட்டாரே! என்னிடத்தில் ஏதேனும் வருத்தமுற்று என் மீது காதல் இல்லாதவராக ஆகிவிட்டால் இன்னும் எவ்வளவு துன்பம் உண்டாக்குவாரோ தெரியவில்லை.
- உடுக்கை இழந்தவர் கைபோல உதவ வேண்டியது நட்பின் இயல்பு. ஆனால், இவரோ நம்முடன் நட்புடைய வாயிருந்தும் நமக்குத் துயர் தருதலைச் செய்கின்றார். துன்பம் வரும் காலத்தில் இவரைப் பற்றுக் கோடாகக் கொண்டால் நமக்குப் பயன் இல்லை.
- என்னுடன் கூட இருந்து என மனநிலைமையை நன்கு உணர்ந்தவர் என் காதலர். அவர் பிரிவால் நான் எவ்வளவு துன்பப்படுவேன் என்பதும் அவர்க்குத் தெரியும். அப்படி உணர்ந்தவர் என்னைவிட்டுப் பிரிந்திருக்கும்போது, பிறர் போய் என் நிலைமையைச் சொன்னால் என்ன நன்மை உண்டாகும்? அதனால் ஒரு பயனும் இல்லை என்று காதலி வருந்துகிறாள்.
|
'துப்பின்' என்றால் என்ன?
துப்பின் என்பது துப்பு+ இன் என விரியும்.
துப்பு என்ற சொல்லுக்கு பகை, வன்மை, பற்றுக்கோடு என்னும் பொருள்கள் கூறப்பட்டன.
(துன்பம் செய்தற்குரிய) பகைமைக்கண் (என்ன செய்வார்களோ?) என்ற பொருளிலும், வன்மை செய்ய வேண்டும் இடத்து (யாங்ஙனஞ் செய்கின்றாரோ) என்ற பொருளிலும்,
(துன்பம் வரும் காலத்தில்) இவரைப்) பற்றுக் கோடாகக் கொண்டால் (நமக்குப் பயன் இல்லை) என்ற பொருளிலும் துப்பின் என்பது விளக்கப்பட்டது.
இவற்றுள் பகைமைக்கண் என்பதே பொருத்தம்.
பரிமேலழகர் மேற்கோள் காட்டும் பாடல் துப்பெதிர்ந்தோர்க்கே யுள்ளாச் சேய்மையன் நட்பெதிர்ந் தோர்க்கே அங்கை யண்மையன் (புறநானூறு 380) என்பது. இதன் பொருள்: அவன் வலிமையோடு போரிட வந்தவர்க்கு நினைவுக்கும் எட்டாத தொலைவில் உள்ளவன்; நட்புடன் வந்தவர்க்கு உள்ளங்கை போல அண்மையில் உள்ளவன்.
அப்புறப்பாடலில் துப்பு என்ற சொல் பகை என்ற பொருளிலே ஆளப்பட்டுள்ளது.
'துப்பின்' என்றதற்கு பகைமைக்கண் என்பது பொருள்.
|
காதல் கொண்டவர்க்கே துன்பம் செய்ய வல்லவர் பகைமைக்கண் என் செய்வாரோ? என்பது இக்குறட்கருத்து.
என்னையே இவ்வளவு துன்புறச் செய்கின்றவர், வன்மை காட்ட வேண்டிய பகையிடத்து எவ்வளவு கொடியதாய் நடந்துகொள்வாரோ? எனத் தலைவி படர் மெலிந்து இரங்கல்.
நட்புள்ள காதலிக்குத் துன்பம் செய்ய வல்லவர், பகையிடத்து என்ன செய்வாரோ?
|