இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1168மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை

(அதிகாரம்:படர்மெலிந்து இரங்கல் குறள் எண்:1168-)

பொழிப்பு (மு வரதராசன்): இந்த இராக்காலம் இரங்கத்தக்கது; எல்லா உயிரையும் தூங்கச் செய்துவிட்டு என்னை அல்லாமல் வேறு துணை இல்லாமலிருக்கின்றது.

மணக்குடவர் உரை: இவ்விரா அளித்தா யிருந்தது; உலகத்து வாழ்கின்ற உயிர்களெல்லாவற்றையும் துயிலப்பண்ணி என்னையல்லது வேறுதுணை யில்லையாக இருந்தது.
இது பிற்றை ஞான்று வினாவிய தோழிக்குத் தலைமகள் கண் உறங்குகின்றதில்லை யென்று சொல்லியது.

பரிமேலழகர் உரை: (இரவின் கொடுமை சொல்லி இரங்கியது.) இரா அளித்து - இரா அளித்தாயிருந்தது; மன் உயிர் எல்லாம் துயிற்றி என்னல்லது துணை இல்லை - உலகத்து நிலை பெறுகின்ற உயிர்களையெல்லாம் தானே துயிலப் பண்ணுதலான், என்னையல்லாது வேறு துணை உடைத்தாயிற்றில்லை.
('துயிற்றி' எனத் திரிந்து நின்ற வினையெச்சம், அவாய் நிலையான் வந்த உடைத்தாதலோடு முடிந்தது. 'துணையோடு ஒன்றுகின்ற உயிர்களெல்லாம், விட்டு இறந்துபடும் எல்லையேனாய என்னையே துணையாகக் கோடலின், அறிவின்று' என்பது பற்றி, 'அளித்து' என்றாள். இகழ்ச்சிக் குறிப்பு.)

இரா சாரங்கபாணி உரை: இவ்விராக்காலம் இரங்கத்தக்கது. ஏனென்றால் உலகத்தில் நிலைபெறுகின்ற உயிர்களை எல்லாம் துயிலச் செய்து தான் துயிலாது என்னையல்லாமல் வேறு துணை இன்றி நிற்றலால்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இரா அளித்து மன்னுயிர் எல்லாம் துயிற்றி .என்னல்லது துணை இல்லை.

பதவுரை: மன்-நிலைபேறு, மற்ற; உயிர்--உயிர்; எல்லாம்-அனைத்தும்; துயிற்றி-உறங்கப் பண்ணி, தூங்க வைத்து; அளித்து-இரங்கத்தக்கது, அருள் செய்து; இரா-இரவுப்பொழுது; என்-என்னை; அல்லது-அல்லாமல்; இல்லை-இல்லை; துணை-உதவி.


மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இவ்விரா அளித்தா யிருந்தது; உலகத்து வாழ்கின்ற உயிர்களெல்லாவற்றையும் துயிலப்பண்ணி;
பரிப்பெருமாள்: இவ்விரா அளித்த இராயிருந்தது; உலகத்து வாழ்கின்ற உயிர்களெல்லாவற்றையும் துயிலப்பண்ணி;
பரிதி: சகல சீவனும் பொசித்துத் துயில் கொள்ளச் செய்தாரோ............;
காலிங்கர்:( தோழி! உலகத்து மன்னப்பட்ட உயிர்கள் அனைத்தையும் துயிலப்பண்ணி அளிக்கத் தக்கது இற்றை இராக்காலம் என்கின்ற இது
பரிமேலழகர்: (இரவின் கொடுமை சொல்லி இரங்கியது.) இரா அளித்தாயிருந்தது; உலகத்து நிலை பெறுகின்ற உயிர்களையெல்லாம் தானே துயிலப் பண்ணுதலான்; [துயிலப்பண்ணுதலால் - தூங்கச் செய்தலால்]
பரிமேலழகர் குறிப்புரை: 'துயிற்றி' எனத் திரிந்து நின்ற வினையெச்சம், அவாய் நிலையான் வந்த உடைத்தாதலோடு முடிந்தது.

'உலகத்து உயிர்கள் அனைத்தையும் துயிலப்பண்ணி அளிக்கத் தக்கது இராக்காலம்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எல்லா உயிரையும் துயிலச் செய்து அருளியபின் இரவிற்கு', 'உலகத்திலுள்ள எல்லா உயிர்களையும் தூங்கவைத்துச் சுகமுண்டாக்கி அன்பு செய்யும் இராத்திரியானது தான் மட்டும் தூங்குவதில்லை', 'இரவானது இரங்கத்தக்கது. உலகத்திலுள்ள உயிர்களையெல்லாந் தூங்கச் செய்து', 'உலகத்து நிலைபெறுகின்ற உயிர்களையெல்லாம் துயிலச் செய்து அன்பு காட்டும் இரவுக்கும்' என்ற பொருளில் உரை தந்தனர்.

உலகத்து அனைத்து உயிர்களையும் துயிலச் செய்து அன்பு காட்டும் இரவு என்பது இப்பகுதியின் பொருள்.

என்னல்லது இல்லை துணை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: என்னையல்லது வேறுதுணை யில்லையாக இருந்தது.
மணக்குடவர் குறிப்புரை: இது பிற்றை ஞான்று வினாவிய தோழிக்குத் தலைமகள் கண் உறங்குகின்றதில்லை யென்று சொல்லியது.
பரிப்பெருமாள்: என்னையல்லது வேறுதுணையாக இருந்தாரில்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பிற்றை ஞான்று தோழிக்குத் தலைமகள் கண் உறங்குகின்றதில்லை யென்று சொல்லியது.
பரிதி: ......பெண்ணுக்கு யானலது துணையில்லையோ என்றவாறு.
காலிங்கர் ('என்னல' பாடம்): பின்னர் என்னை அல்லது தனக்கு வேறு ஒரு துணை இயல்பாயிற்று.
காலிங்கர் குறிப்புரை: எனவே இங்கு யானும் இராவுமே பிரியாது இருக்கின்றேம் என. இது மற்று என்னின் நீங்குவது எக்காலம் என்று இங்ஙனம் தன்னுடைய படர்மெலிவினை உரைத்தவாறாயிற்று என்று அறிக என்றவாறு.
பரிமேலழகர்: என்னையல்லாது வேறு துணை உடைத்தாயிற்றில்லை.
பரிமேலழகர் குறிப்புரை: 'துணையோடு ஒன்றுகின்ற உயிர்களெல்லாம், விட்டு இறந்துபடும் எல்லையேனாய என்னையே துணையாகக் கோடலின், அறிவின்று' என்பது பற்றி, 'அளித்து' என்றாள். இகழ்ச்சிக் குறிப்பு. [ஒன்றுகின்ற - பொருந்தியிருக்கின்ற]

'என்னையல்லது வேறுதுணையாக இருந்தாரில்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'என்னை யல்லது துணையில்லை', 'அதற்கு இப்போதெல்லாம் நான் ஒருத்திதான் துணை', 'என்னைத் தவிர வேறு துணையை உடைத்தாயிற்றில்லை', 'என்னைத் தவிர வேறு துணையில்லை. (நான் மட்டுமே விழித்துக் கொண்டிருப்பதால்)' என்றபடி பொருள் உரைத்தனர்.

என்னை விட்டால் வேறு துணை இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உலகத்து அனைத்து உயிர்களையும் துயிலச் செய்து அளித்து இரவுக்கு என்னை விட்டால் வேறு துணை இல்லை என்பது பாடலின் பொருள்.
'அளித்து' குறிப்பது என்ன?

'உலகமே உறங்கும்போது இரவும் நானும் மட்டுமே துயிலாமலிருக்கிறோம்' என்கிறாள் தலைவி.

இந்த இராப்பொழுது ஊரெல்லாம் துயில உதவிசெய்துவிட்டு, என்னையன்றி வேறு யாரும் தனக்குத் துணையில்லாமல் உள்ளதே என இரவுக்காக இரங்கிக்கூறுகிறாள் தலைமகள்.
காட்சிப் பின்புலம்:
கணவர் தொழில்முறை காரணமாக அயல் சென்றுள்ளார். அவரது பிரிவை ஆற்றமுடியாத மனைவிக்கு நாளும் துயரம் கூடிக் கொண்டே செல்கிறது. அவருடனிருந்து மகிழ்ந்த காதல் நிகழ்வுகள் தோன்றி தனியாக இருக்கும் தலைவியைத் துன்புறுத்துகின்றன; தான் துயரை மறைக்க நினைத்தாலும். நீர்வேண்டி இறைப்பவர்க்கு ஊற்று நீர் வருவது போல இது மிகுகின்றது என வருந்துகிறாள். இந்நோயை உண்டுபண்ணிய அவரிடம் சொல்லியனுப்பவும் நாண் தடுக்கிறது; காமம் ஒருபுறம், நாண் மறுபுறம் - இவற்றைத் தாங்கமுடியாதிருக்கிறது அவள் உடல்; கணவரின்றி கடல் அளவிலான காமத்துன்பத்தைத் தன்னால் எப்படிக் கடக்க முடியும்? காதலுடைய என்னிடமே இல்லம் திரும்பாமல் கடுமை காட்டுகிறாரே, பகைமைக்கண் என் செய்வரோ? இன்பகாலத்தில் கடல்போன்றிருந்த காமம் துன்பம் செய்யும்போது அதனினும் பெரிதாக உள்ளதே; விரைந்து செல்லும் காம நீரைக்கடந்து கரைகாண முடியாதவளாய் இரவில் உளேனே! இவ்வாறு தன் எண்ணங்களைத் தனிமையில் வாடும் தலைவி வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறாள்.

இக்காட்சி:
நள்ளிரவு. சுற்றிலும் இருட்டு; அதுவே தலைவிக்குத் துணையாக இருக்கிறது. உலகமே உறங்கிவிட்டது. பணி காரணமாகப் பிரிந்து சென்றுள்ள கணவரது நினைவு தோன்றி அவளை வருத்துகிறது. தன் தனிமையை எண்ணுகிறாள். இரவையும் நினைக்கிறாள். 'இந்த இரவு உலக உயிர்களையெல்லாம் அன்போடு துயிலச் செய்துவிட்டு தன்னைத் தனக்குத் துணையாக்கிக் கொண்டிருக்கிறதே! நானும் இருள் செறிந்துள்ள இந்த இரவுமே ஒன்றுக்கொன்று துணையாக இருக்கின்றோம்' என்கிறாள்.

'அந்தோ! இந்த இராப்பொழுதுக்கு வேறு துணையில்லை போலும்! உலகத்து உயிர்களை எல்லாம் தூங்கவைத்துவிட்டு தானொருத்தியைமட்டும் துணையாகக்கொண்டதாகலின் அது மிகவும் இரங்கத்தக்கதாயுள்ளது' என மொழிகிறாள் அவள். இரவு உலகத்தைத் துயிற்றிவிட்டுத் தான் உறங்காமல் கிடக்கிறது, நானும் என் கணவர் நினைவால் தூங்கமுடியாமல் இருக்கிறேன். எனவே இரவே எனக்குத் துணையானது; என்னைத் தவிர அதற்கு வேறு துணையில்லையாயிருக்கிறது. இங்ஙனம் தலைவி தன்னுடைய படர்மெலிவினை உரைக்கிறாள்.
துணையோடுள்ள உயிர்களையெல்லாம் விட்டுத் துணையற்ற என்னையே துணையாகக் கொள்ளுதலின் அறிவற்றது என்பாள் அளித்து என்றாள் என்று சில உரைகள் கூறின.
இரவு அறிவற்றது என்பதைவிட, இரவுக்கு வேறு துணை இல்லையோ என்று தலைவி இரவுக்காக இரங்கிக் கூறுகிறாள் என்பது அதிகாரத் தலைப்புக்கும் பொருந்துவதால் அது சிறந்த உரையாகிறது.

இக்குறட்கருத்தை ஒட்டிய குறுந்தொகைப் பாடல் ஒன்று உள்ளது. அது:
நள்ளென்றன்றே, யாமம்; சொல் அவிந்து,
இனிது அடங்கினரே, மாக்கள்; முனிவு இன்று,
நனந்தலை உலகமும் துஞ்சும்;
ஓர் யான் மன்ற துஞ்சாதேனே.
(குறுந்தொகை நெய்தல் 6 பொருள்: இடையிரவு செறிந்த இருளை உடையதாக இரா நின்றது; மனிதர் பேசுதலை ஒழித்து இனிமையாகத் துயின்றனர்; அகன்ற இடத்தை உடைய உலகத்தில் உள்ள எல்லாஉயிர்களும் வெறுப்பின்றித் துயிலா நிற்கும்; யான் ஒருத்தியே நிச்சயமாகத் துயிலேனாயினேன்.)
குறளில் வரும் தலைவியும் தனிமைத்துயருழப்பினும் உலகத்துயிர்கள் எல்லாவற்றையும் உறங்கப் பண்ணிய இரவு உறங்காது என்னைத் துணையாகக் கொண்டு வருத்துகின்றதே என்று தன்துயர் மறந்து இரவின் துயர்க்கு இரங்குவதாகக் குறள் கூறுகிறது. உலகம் உறங்குகிறது. தலைவி உறங்கவில்லை என்பதில் இருநூலும் ஒத்திருப்பினும் இரவுக்கு என்னல்லதில்லை துணை; 'அளித்து' எனத் தலைவி இரங்குவதாகக் குறள் கூறியிருப்பது நயம் பயப்பதாகும் (இரா சாரங்கபாணி).

'அளித்து' குறிப்பது என்ன?

'அளித்து' என்ற சொல்லுக்கு அளித்தாயிருந்தது, அளித்த இராயிருந்தது, அளிக்கத் தக்கது, இரங்கத்தக்கது, இரங்கத்தக்கதாயிருக்கிறது, அருளியபின், அன்பு செய்துவிட்டு, அன்பு காட்டும், அன்புடையதே, இரங்கத்தக்கதாயிருந்தது, ஓய்வு கொடுத்து என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'அளித்து' என்ற சொல்லுக்கு அrருள் செய்து என்பது நேர் பொருள். இச்சொல்லுக்கு அளித்தாயிருந்தது, அளிக்கத்தக்கது எனத் தொல்லாசிரியர்கள் பொருள் கூறினர். மற்றவர்கள் அருள்செய்து, இன்பத்தை அளித்து என்றபடி உரை செய்தனர். இவற்றுள் அளிக்கத்தக்கது என்ற பொருள் இரக்க மிகுதி காட்டுவதால் அதுவே சிறந்து நிற்கிறது.
இங்கு 'அளித்து' என்பது இரவானது உலகுக்கு அருள் செய்து அதாவது ஓய்வு கொடுத்துத் தூங்க வைக்கிறது; அது இரங்கத்தக்கது என்ற பொருளில் வந்துள்ளது.

'அளித்து' என்ற சொல் இங்கு இரங்கத்தக்கது என்ற பொருள் தருகிறது.

உலகத்து அனைத்து உயிர்களையும் துயிலச் செய்து அன்பு காட்டும் இரவுக்கு என்னை விட்டால் வேறு துணை இல்லை என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

இரவின் தனிமையைச் சுட்டித் தலைவி தன் தனிமையைப் படர் மெலிந்து இரங்கல்.

பொழிப்பு

உலகிலுள்ள எல்லா உயிர்களையும் துயிலச் செய்து அருளிய இரவிற்கு என்னை விட்டால் வேறு துணையில்லை.

.