இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1167



காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்

(அதிகாரம்:படர்மெலிந்து இரங்கல் குறள் எண்:1167)

பொழிப்பு (மு வரதராசன்): காமம் என்னும் வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லை; நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன்

மணக்குடவர் உரை: காமமாகிய பெருக்காற்றினை நீந்திக் கரை காண்கின்றிலேன். அரையிருள் யாமத்தினும் உறங்காது யானேயுளேன் மற்று உறங்காதாரில்லை
இதுகாதலர் குறித்தநாள் வருந்துணையும் ஆற்றுமாறு என்னையென்று தலைமகள் தன்னுள்ளே சொல்லியது

பரிமேலழகர் உரை: ('காமக்கடல் நிறை புணையாக நீந்தப்படும்', என்றாட்குச் சொல்லியது) காமக் கடும்புனல் நீந்திக் கரை காணேன் - காமமாகிய கடல் நீந்தாதேனல்லேன், நீந்தியும் அதற்குக் கரை காண்கின்றிலேன்; யாமத்தும் யானே உளேன் - அக்காணாமைக் காலந்தான் எல்லோரும் துயிலும் அரையிருளாயிற்று, அவ்வரை இருட்கண்ணும் அதற்கு ஒரு துணையின்றி யானேயாயினேன், ஆயும் இறந்துபட்டுய்ந்து போகாது உளேனாகாநின்றேன், ஈதொரு தீவினைப்பயன் இருந்தவாறென்.
(கடுமை, ஈண்டு மிகுதிக்கண் நின்றது. உம்மை முன்னும் கூட்டப்பட்டது. யானே ஆயினேன் என்பது நீ துணையாயிற்றிலை என்னும் குறிப்பிற்று.)

வ சுப மாணிக்கம் உரை: காம வெள்ளத்து நீந்திக் கரை தெரியேன்; நடுச்சாமத்துத் தனியே விழித்துள்ளேன்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்; யாமத்தும் யானே உளேன்

பதவுரை: காம-காமமாகிய; கடும்-கடிய; புனல்-நீர்; நீந்தி-நீந்தி, கடந்து; கரை-கரை; காணேன்-காண்கின்றிலேன், தெரியவில்லை; யாமத்தும்-நடுச்சாமத்திலும்; யானே-நானே; உளேன்-இருக்கின்றேன்.


காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காமமாகிய பெருக்காற்றினை நீந்திக் கரை காண்கின்றிலேன்;
பரிப்பெருமாள்: காமமாகிய பெருக்காற்றினை நீந்திக் கரை காண்கின்றிலேன்;
காலிங்கர்: நெஞ்சே! நமது காதலர்மாட்டுக் கருத்துறப் பெருகிச் செல்கின்ற இக்காம நோயாகிய கடும்புனல் வெள்ளத்தை நீந்தி ஒருகால் கரை காணப் பெறேனாகி மற்று;
பரிமேலழகர்: ('காமக்கடல் நிறை புணையாக நீந்தப்படும்', என்றாட்குச் சொல்லியது) காமமாகிய கடல் நீந்தாதேனல்லேன், நீந்தியும் அதற்குக் கரை காண்கின்றிலேன்; [நிறை- மறை பிறர் அறியாமை, மறைந்ததாகிய ஒன்றைப் பிறர் அறியாமல் செய்தல்; நீந்தாதேன் அல்லேன் - இரண்டு எதிர்மறைவினையும் சேர்ந்து நீந்தினேன் என்னும் உடன்பாட்டுப் பொருளைத் தந்தன; அதற்கு - காமமாகிய கடலுக்கு]
பரிமேலழகர் குறிப்புரை: கடுமை, ஈண்டு மிகுதிக்கண் நின்றது. உம்மை முன்னும் கூட்டப்பட்டது.

'காம நோயாகிய கடும்புனல் வெள்ளத்தை நீந்திக் கரை காண்கின்றிலேன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காமமாகிய கடலை நீந்தியும் கரையைச் சென்று என்னால் அடைய முடியவில்லை', 'காம வேதனையாகிய பெரிய கடலில் விழுந்து நீந்தி நீந்திக் கரை காணாதவளாகிய', 'காமமாகிய கடலை நீந்தியும் அதற்குக் கரை காணாது வருந்துகின்றேன்', 'காதலாகிய விரைந்து செல்லும் நீரைக் கடந்து அதன் கரையைக் காண முடியாதவளாகின்றேன்' என்ற பொருளில் உரை தந்தனர்.

காமமாகிய வெள்ளத்தைக் கடந்து கரை காணமுடியாதவளாக இருக்கின்றேன் என்பது இப்பகுதியின் பொருள்.

யாமத்தும் யானே உளேன்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அரையிருள் யாமத்தினும் உறங்காது யானேயுளேன் மற்று உறங்காதாரில்லை.
மணக்குடவர் குறிப்புரை: இதுகாதலர் குறித்தநாள் வருந்துணையும் ஆற்றுமாறு என்னையென்று தலைமகள் தன்னுள்ளே சொல்லியது
பரிப்பெருமாள்: அரையிருள் யாமத்தினும் உறங்காதேன் யானேயுளளென மற்று உறங்காதாரில்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இதுகாதலர் குறித்தநாள் வருந்துணையும் ஆற்றுமாறு என்னையென்று தலைமகள் தன்னுள்ளே சொல்லியது
காலிங்கர்: அவ்விடையிருள் யாமத்தும் யானே உளேன். இனி இதற்கு உய்யுமாறு என்னை என்றவாறு.
பரிமேலழகர்: அக்காணாமைக் காலந்தான் எல்லோரும் துயிலும் அரையிருளாயிற்று, அவ்வரை இருட்கண்ணும் அதற்கு ஒரு துணையின்றி யானேயாயினேன், ஆயும் இறந்துபட்டுய்ந்து போகாது உளேனாகாநின்றேன், ஈதொரு தீவினைப்பயன் இருந்தவாறென். [அதற்கு - காமமாகிய கடலுக்கு; இறந்துபட்டு மடிந்து; உய்ந்து போகாது - அக்காமத் துன்பத்திலிருந்து தப்பித்துப் போகாது; உளேனாகா நின்றேன் - உயிரோடிக்கிறேன்]
பரிமேலழகர் குறிப்புரை: யானே ஆயினேன் என்பது நீ துணையாயிற்றிலை என்னும் குறிப்பிற்று. [நீ-தோழியே நீ; துணை ஆயிற்றிலை- துணை ஆயினாய் இல்லை]

'அரையிருள் யாமத்தினும் உறங்காது யானேயுளேன்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நள்ளிரவில் பிறரெல்லாம் உறங்க யான் மட்டும் இரவுக்குத் துணையாக இருக்கிறேன்', 'நான் இந்த நடுச்சாமத்தில் என் துணைவரின்றித் தனியே தத்தளித்துக் கொண்டிருக்கிறேன்', 'நான் இரவிலும் யாதொரு துணையும் இன்றித் தனித்திருக்கிறேன்', 'நள்ளிருள் இரவிலும் தனியாக யானே துணையின்றி உளேன்' என்றபடி பொருள் உரைத்தனர்.

நடுச்சாமத்திலும் நான் உறங்காமல் தனியாக விழித்துள்ளேன் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
காமமாகிய வெள்ளத்தைக் கடந்து கரை காணமுடியாதவளாக இருக்கின்றேன்; யாமத்தும் யானே உளேன் என்பது பாடலின் பொருள்.
'யாமத்தும் யானே உளேன்' குறிப்பது என்ன?

காதல்துன்பத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறாளாம் தலைவி.

காமமாகிய வெள்ளத்தைக் கடக்க நீந்தி நீந்திக் கரை காணாமல் தவிக்கின்றேன்; இந்த நள்ளிரவிலும், யான் உறங்காமல் தனியாக விழித்துள்ளேன்!
காட்சிப் பின்புலம்:
பணி காரணமாகத் தலைவர் மனைவியைப் பிரிந்து சென்றுள்ளார். பிரிவினைத் தாங்க முடியாதவளாயிருக்கிறாள் அவள். தனிமையிலிருக்கும் அவளுக்குக் கணவர் உடனிருந்தபோது மகிழ்ந்த காதல் நினைவுகள் தோன்றி துன்புறுத்துகின்றன. தான் உணரும் துன்பத்தை மற்றவர் காண நேர்ந்தால் அது அவள் நாணுக்கு ஏற்றதல்ல என்பதை உணர்ந்து அத்துன்பத்தை மறைக்க முயல்கிறாள். ஆனால் மறைக்க மறைக்க துன்பம் மேலும் மேலும் வெளிப்பட்டு மிகுந்துகொண்டே போகிறது; காதல்நோய் மேன்மேலும் கூடிச்செல்வதால் அதை மறைக்கும் ஆற்றல் இல்லாமல் இருக்கிறாள். தனக்குப் படர் நோய் செய்த கணவர்க்குச் செய்தி அனுப்ப முடியாமல் நாண் தடுக்கின்றது. காமம் ஒருபுறம்; நாணம் மற்றொரு புறம். இவ்விருவகை உணர்ச்சிகளுக்கு இடையே என்ன செய்வதென்று தெரியாமல் நிலைதடுமாறி நிற்கிறாள்; காமம், நாணம் இவை இரணடும் பொறுக்கமுடியாத சுமைகளாக தன் உடலில் உள்ளனவாக இருக்கின்றன என்கிறாள்; காதல் என்னும் கடல் இருக்கிறது. ஆனால் அதனை நீந்திக் கடக்கக் காவலுடன் கூடிய புணை இல்லை அவளிடம்; அன்பு காட்டும் தன்னிடமே இல்லம் திரும்பாமல் கடுமை காட்டுகிறாரே, பகைமைக்கண் என் செய்வரோ? என எண்ணுகிறாள்; இன்பகாலத்தில் கடல்போன்றிருந்த காமம் துன்பம் செய்யும்போது அதனினும் பெரிதாகப் படுத்துகிறதே! எனத் தனக்குள்ளே சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

இக்காட்சி:
நேரம் நள்ளிரவு. கணவரின்றித் தனியாய் இருக்கும் தலைவி உறங்கமுடியாமல் விழித்திருக்கிறாள். பிரிவு நீட்டிப்பதால் நாட்கள் செல்லச் செல்லப் பிரிவின் துயரம் தலைவிக்குக் கூடிக்கொண்டே இருக்கிறது. அவர் குறித்தநாள் வருந்துணையும் தன்னை வருத்தும் காதல்நோயை எப்படிக் கடந்து கரைசேர்வது என அறியாமல் துன்புறுகிறாள். 'வேகத்துடன் வரும் காம வெள்ளத்தை நீந்திக் கடந்து கரைசேர முயல்கிறேன், ஆனால் கரையைக் காணமுடியவில்லை; நடுச்சாமத்தில் தனியே விழித்திருக்கிறேன்' என்கிறாள் அவள். 'காதல் நோயால் என் தூக்கமும் தொலைந்தது. நள்ளிரவிலும் நான் மட்டுமே தனியாக இருப்பதாக உணர்கின்றேன். எப்பொழுது இத்துயர் நீங்குமோ?' எனப் புலம்புகிறாள். இங்கே காமத்துக்கு உருவகம் கடும் புனல் (காட்டாற்று வெள்ளம்); காமத்தை வெல்ல இயலாமை கரைசேர முடியாமையாம்.

குறளின் பிற இடங்களில் காமத்தின் பருமஅளவைக் குறிக்கக் கடலை ஒப்பிடுவார் வள்ளுவர். இரவில் காமம் தரும் துன்பம் வேகம் மிகுந்து, கடக்க முடியாததாகக் கடுமையாக இருப்பதால் அது இங்கு கடும்புனல் எனச் சொல்லப்படுகிறது, உறங்கமுடியாமல் நள்ளிரவில் தலைவி துயரம் கொள்வதைக் 'கரை காணமுடியாமல் இருக்கிறேன்' எனத் தலைவி கூறுவதாக உள்ளது.
கடும்புனல் என்பதற்கு நேர் பொருள் கடிய நீர் என்பது. இது விரைந்து செல்லும் வெள்ளம் என்பதைக் குறிக்கும். கடும்புனல் என்ற சொல்லாட்சி விரைந்து சுழன்று செல்லும் வெள்ளநீரில் சிக்கிக்கொள்வதைக் குறிக்க வந்தது. காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு நல்லாண்மை என்னும் புணை (நாணுத்துறவுரைத்தல் 1134 பொருள்: நாணம், நல்லாண்மை என்னும் புணையை காமம் என்னும் காட்டாற்றுப் பெருவெள்ளம் தள்ளிக்கொண்டு போய்விடுமே) எனப் பிறிதோரிடத்திலும் காமக் கடும்புனல் என்ற தொடர் ஆளப்பட்டது. காமக் கடும்புனல் என்பதன் கண் உள்ள கடுமை (கடும்) என்பது இங்குக் காம மிகுதியை உணர்த்தியது.
கடலை நீந்திக் கரை சேர்வதைவிடக் கடுமையானது சீறிவரும் வெள்ளத்தை எதிர்கொண்டு கரையேறுவது.

'யாமத்தும் யானே உளேன்' குறிப்பது என்ன?

'யாமத்தும் யானே உளேன்' என்றதற்கு அரையிருள் யாமத்தினும் உறங்காது யானேயுளேன் மற்று உறங்காதாரில்லை, அரையிருள் யாமத்தினும் உறங்காதேன் யானேயுளளென மற்று உறங்காதாரில்லை, அவ்விடையிருள் யாமத்தும் யானே உளேன் இனி இதற்கு உய்யுமாறு என்னை, எல்லோரும் துயிலும் அரையிருளாயிற்று அவ்வரை இருட்கண்ணும் அதற்கு ஒரு துணையின்றி யானேயாயினேன் ஆயும் இறந்துபட்டுய்ந்து போகாது உளேனாகாநின்றேன், எல்லோரும் உறங்கும் இந்த நள்ளிரவிலும் யான் ஒருத்தியே தன்னந்தனியளாக உறங்காதிருக்கின்றேன், நடுச்சாமத்துத் தனியே விழித்துள்ளேன், நள்ளிரவில் பிறரெல்லாம் உறங்க யான் மட்டும் இரவுக்குத் துணையாக இருக்கிறேன், இந்த நள்ளிரவில் (என் துணைவரின்றி) தனியே தத்தளித்துக் கொண்டிருக்கிறேன், நள்ளிரவிலும் எனக்குத் துணை யாருமின்றி யானாகவே உள்ளேன், நான் இரவிலும் யாதொரு துணையும் இன்றித் தனித்திருக்கிறேன், நள்ளிருள் இரவிலும் தனியாக யானே துணையின்றி உளேன், இந்த நள்ளிரவில் யாரும் துணை இல்லை. நான் மட்டும் தனித்திருக்கிறேன், மற்றெல்லாருந் தூங்கும் நள்ளிரவிலும் நடுக்கடலில் நானே தன்னந் தனியாகவிருந்து அலைசடிப்படுகின்றேன், யான் இந்த நடுநிசியிலும் அக்கடலில் தனியே இருக்கின்றேன் என்றபடி உரையாளர்கள் விளக்கம் தந்தனர்.

யாமம் என்ற சொல்லுக்கு அரையிருள் யாமம், இடையிருள் யாமம் எனத் தொல்லாசிரியர்கள் பொருளுரைத்தனர். இன்று அது நள்ளிரவு அல்லது நடுச்சாமம் எனப்படுகிறது. யானே என்ற சொல் நானே என்ற பொருள் தரும், உளேன் என்பது இருக்கிறேன் எனப்பொருள்படும். 'யாமத்தும் யானே உளேன்' என்பது யாரும் துணையாயில்லை என்னும் குறிப்பிற்று. யாமம் காமத்தைக் கூட்டுவிப்பது. விரைந்து ஓடும் வெள்ளநீர் அதில் அகப்பட்டாரை இழுத்துச் செல்வதுபோல், பிரிவில் உள்ளோர்க்குக் காமக் கடும்புனலை நீந்திக்கடப்பது கடினம். காதல்கணவர் துணையாக உடன் இல்லாத இரவின் தனிமை தலைவியைக் கொடுமைப்படுத்துகிறது. அது பொறுத்தற்கரியதாயிருக்கிறது. இரவின் அமைதியில் ஊரே உறங்கிக் கொண்டிருக்கும்பொழுது, காமவேதனையைத் துய்த்துக்கொண்டு வருந்துபவளுக்குத் தான் ஒருத்திமட்டுமே இவ்வுலகில் தன்னந்தனியளாக உறங்காதிருப்பது போன்ற கொடிய தனிமையுணர்ச்சி உண்டாகிறது. அதனால்தான், "யான் உளேன்" என்கிறாள்.

'யாமத்தும் யானே உளேன் என்ற தொடர்க்கு நள்ளிரவிலும் நானே நான் மட்டுமே உள்ளவள் போல் விழித்திருக்கிறேன் என்பது பொருள்.

காமமாகிய வெள்ளத்தைக் கடந்து கரை காணமுடியாதவளாக இருக்கின்றேன்; நடுச்சாமத்திலும் நான் உறங்காமல் விழித்துள்ளேன் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

காமவெள்ளத்தை நீந்திக் கடக்கமுடியாமல் உள்ளேன் என்னும் தலைவியின் படர் மெலிந்து இரங்கல்.

பொழிப்பு

காமமாகிய கடலை நீந்தியும் கரை தெரியேன்; நள்ளிரவில் தனியே விழித்துள்ளேன்.