குடி என்பது குடும்பம், குலம், இனம், நாடு எனப் பல்வேறு அளவுள்ள மக்கள் வகுப்புகளைக் குறிக்கும் சொல்லாக உள்ளது.
பல குடிகளின் தொகுதி குலம் என்று அறியப்படுவது. குலம் என்ற சொல்லை இத்தொகுதியில் ஆளப்படவில்லையாதலால், குடி என்பது இங்கு குடும்பத்தை மட்டும் குறிப்பதாகக் கொள்வர். குடும்பம் என்னும் சொல் குறளில் இவ்வதிகாரத்தில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
சமுதாயத்தில் மிக முக்கியமான கூறாகத் திகழ்வது குடும்பம். குடும்பம் தாய், தந்தை, குழந்தைகள் ஆகியோரைக் கொண்ட ஒரு குழுவாகும். குழந்தைகளைப் பெற்று அவர்களை வளர்ப்பதற்காக ஏற்பட்ட திட்டவட்டமான தொடர்புகளின் பால் உறவமைந்த குழுவே குடும்பம்.
உயர்த்தல் என்பது தான் பிறந்த குடியை ஒழுக்கத்தாலும் பண்பாட்டாலும் பொருளாதாரம், அரசியல் நிலை போன்றவற்றாலும் உயரச்செய்தலாம்.
ஒரு குடும்பத்தின் முதலுறுப்பினர் கணவன் மனைவி ஆகிய இருவர் ஆவர். இவர்களே குடும்பச் சுமை தாங்கிகள். இவ்விருவருள் ஆற்றலுடையார் குடிக்கடன் ஆற்றுவார்.
அவர் குடும்பச் சுமை மட்டுமல்லாமல், சமூகத்தின் கொடிய வழக்கங்கள் முதலானவற்றிற்கும் ஈடுகொடுத்துத் தாங்கிக் கொள்வராகவும் இருப்பார். குடிசெய்வார் குடிதாங்குவார் எனவும் கூறப்படுகிறார். இவரே குடியின் பெருமையை உயர்த்துவதற்கு பெருமுயற்சி கொள்பவராவார்.
இவர் மடுத்தவாய் எல்லாம் பகடன்னான்....... (இடுக்கணழியாமை 624 பொருள்: தடையாய இடங்களில் எல்லாம் முனைந்து இழுக்கும் காளை போன்றவன்....) என்றாற்போல கடும் உழைப்பை மேற்கொண்டு குடியை உயரச் செய்வார்.
உலகமாவது பல் குடும்பத் தொகுதி. சமுதாயத்தில் வாழ்கின்ற மக்கள் குடும்பம் குடும்பமாக வாழ்கின்றனர். சமூக அமைப்பில் மிகப்பழமையான வடிவம் குடும்பம். பல குடும்பங்கள் இணைந்ததே சமூகம். குடும்பத்தினால் உறவின்முறை முதலிய தொடர்புகள் உண்டாகின்றன. ஒரு சமுதாயத்தின் குடும்ப அமைப்பினை அறிவதன் மூலம் அச்சமுதாயத்தின் பண்பாட்டினை அறிந்து கொள்ளமுடிகிறது என்பதால் குடும்பம் பற்றிய சிந்தனையும் இன்றியமையாததாகிறது.
தனிக்குடும்பம் உலகத்தின் ஒரு கூறாதலால் தன்குடி காப்பவனை ஒருவகையில் உலகைக் காப்பவனாக ஒப்புநோக்கவேண்டும். குடிசெய்வான் தன் குடும்பப்பொறுப்பை வாழ்வின் இயல்பு என எண்ணி அதைத் தாங்குவான். குடும்பம் காக்கப்படவில்லையென்றால் அக்குடி பிறர் சுமையாக ஆகிவிடும். போர் அதனால் உண்டாகும் உயிரிழப்புகள் இவற்றால்தாம் ஒரு நாடு காக்கப்படுகிறது, அது கொல்லாண்மை; தன் மெய்யை வருத்திப் பொருள் குவித்து குடும்பம் காப்பதால், அதற்கு 'நல்லாண்மை' எனப்பெயர் சூட்டி இன்புறுவார் வள்ளுவர்.
குடிதாங்குகை ஒருவன் பிறப்புக்கடன் என்ற கருத்தால், குடிசெயலை, 'கருமம் செய்' என்று குறள் கூறும் (வ சுப மாணிக்கம்).
'உலகம் முழுதும் ஒரு குடும்பமாய் நெருங்கிச் சுருங்கி வருவதையும் உணர வேண்டும். உணர்ந்தபின், 'குடிசெயல்வகை' என்பதற்கு ஈடாக 'நாடு செயல்வகை' என்று பொருள் கொண்டு கற்றால் இந்த அதிகாரம் இக்காலத்தார்க்கும் சிறந்த கருத்துகளை உணர்த்த வல்லதாய் விளங்கக் காணலாம்' என்பார் மு வரதராசன்.
ஒருவன் தன் குடும்பத்துக்காக கடும் உழைப்பை மேற்கொள்வது, தன் குடியை உயரச்செய்தற்பொருட்டுத் தான் பல துன்பங்களைத் தாங்குவது இவை பற்றி இவ்வதிகாரம் சிறப்பாகப் பேசுகிறது. எனவே ஆள்வினையுடைமை (விடாமுயற்சி), ஊக்கமுடைமை, மடியின்மை (சோம்பல் இல்லாமை), இடுக்கணழியாமை (முயற்சியில் பொருளிழப்பு, மெய் வருத்தம், தோல்வி போன்ற துன்பங்கள் வந்த பொழுது, அதற்கு மனங்கலங்காமை) போன்ற பல அதிகாரங்களில் விரித்துரைத்த செய்திகளே மீண்டும் 'குடிசெயல்வகை'யில் சொல்லப்பட்டுள்ளனபோல் தோன்றும். குடிசெயலில் தயங்காது செயற்படுதல் வேண்டும் என்பதற்காகவே வள்ளுவர் அவற்றை இங்கும் வலியுறுத்துகிறார். தாம் உண்டு மகிழ்வதைவிட, குடிசெயல்வகையில் மகிழ்வதும், உண்பதை விட உண்பிக்க உண்பதுவுமே சிறப்பும் உயர்வுமாகும்.
குடிசெயல் பணியில் ஈடுபடுவதையும் அதைக் 'கைதூவேன்' ((முடிக்காமல்) கையொழியேன்) என இடையீடின்றி முடித்தலையும் மேற்கொள்ளும் கருமப் 'பெருமை'யைக் காட்டிலும் சிறந்த 'பீடி'ல்லை.
கடுமுயற்சி விரிவான அறிவுநோக்கு ஆகியன கொண்டு குடி உயர்ந்து விளங்கச் செய்யமுயல்வார் குடிடிசெய்வார்.
கடவுளும் அவருக்குத் தானாக முன்வந்து உதவுவார்.
அவரது குறிக்கோள் தானாகவே நிறைவேறும்.
இந்த உலகம் முழுவதும் அவரைச் சார்ந்திருக்கும்; உலகத்தார் அவரைச் சுற்றமாகக் கொள்வர்.
குடிசெய்வார் தன் குடும்பத்தை ஆளும் தன்மையைத் தனக்கு உளதாக்கி கொண்டு நல்லாண்மையுடன் ஆள்வார்.
அவர் போர்வீரர்போல் செயல்படுவார்; குடி உயர்த்தும் முயற்சியில் எதிர்கொள்ளும் எவ்வகையான தாக்குதல்களையும் தாங்கிக் கொள்வார்.
எல்லாத் துன்பங்களையும் ஏற்றுக் கொள்வார்.
குடி செய்வார்க்கு இல்லை பருவம், மடி, மானம்.
குடிதாங்கக்கூடிய நல்லவர் இல்லாத குடும்பம் இடையூறுகள் அதனைப்பற்றி அழிக்க முழுதும் கெடும்.
இவை இவ்வதிகாரப்பாடல்கள் தரும் செய்திகளாகும்.