இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1027



அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை

(அதிகாரம்:குடிசெயல்வகை குறள் எண்:1027)

பொழிப்பு (மு வரதராசன்): போர்க்களத்தில் பலரிடையில் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அஞ்சாத வீரரைப்போல், குடியில் பிறந்தவரிடையிலும் தாங்கவல்லவர்மேல்தான் பொறுப்பு உள்ளது.

மணக்குடவர் உரை: போர்க்களத்துச் செல்வார் பலருளராயினும் போர்தாங்கல் வன்கண்ணர்மாட்டே உளதானாற்போல, ஒருகுடியிற் பிறந்தார் பலருளராயினும் குடியோம்பல் வல்லவர்கண்ணதே குடியாகிய பாரத்தைப் பொறுத்தல்.

பரிமேலழகர் உரை: அமரகத்து வன்கண்ணர் போல - களத்தின்கண் சென்றார் பலராயினும் போர்தாங்குதல் வன்கண்ணர் மேலதானாற் போல; தமரகத்தும் பொறை ஆற்றுவார் மேற்றே - குடியின் கண் பிறந்தார் பலராயினும் அதன் பாரம் பொறுத்தல் அது வல்லார் மேலதாம்.
(பொருட்கு ஏற்க வேண்டும் சொற்கள் உவமைக்கண் வருவிக்கப்பட்டன. நன்கு மதிப்பிடுவார் அவரே என்பதாம். இவை மூன்று பாட்டானும் அது செய்வார் எய்துஞ் சிறப்புக் கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: போர்க்களத்திற்குச் சென்றார் பலராயினும், போரைத் தாங்குவது சிறந்த வீரர் பொறுப்பாதல் போல, ஒரு குடும்பத்தில் பிறந்தார் பலராயினும் அதன் பாரத்தைத் தாங்குதல் அவர்களுள் ஆற்றலுடையார் பொறுப்பாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை.

பதவுரை: அமர்-போர்; அகத்து-இடையில்; வன்கண்ணர்-வீரமுடையவர்; போல-போன்றது; தமர்-தம்மைச் சேர்ந்தவர், சுற்றத்தார், குடும்பத்திலுள்ளார்; அகத்தும்-இடையிலும்; ஆற்றுவார்-செய்யவல்லார்; மேற்றே-மேலதே; பொறை-சுமை.


அமரகத்து வன்கண்ணர் போல:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: போர்க்களத்துச் செல்வார் பலருளராயினும் போர்தாங்கல் வன்கண்ணர்மாட்டே உளதானாற்போல; [தாங்கல்-எதிர்த்து வெல்லுதல்]
பரிப்பெருமாள்: போர்க்களத்துச் செல்வார் பலருளராயினும் போர்தாங்குதல் வன்கண்ணர்மாட்டே உளதானாற்போல;
பரிதி: சமர்பூமியிலே மாற்றானை வெல்வார் போல; [சமர்பூமி-போர்க்களம்; மாற்றானை - பகைவனை]
காலிங்கர்: 'ஆர்த்தார்' எல்லாம் போருக்குரியரல்லர்' என்னும் பழமொழி வழக்கினால் அமரிடத்து அஞ்சாது நின்று எறிந்து ஆசு அழியாமல் தாங்கும் தறுகண்ணாளரைப் போல; [ஆர்த்தார்- ஆரவாரித்தார்; ஆசு-பற்றுக்கோடு; தறுகண்ணாளர் - வன்கண்மையுடையவர்]
பரிமேலழகர்: களத்தின்கண் சென்றார் பலராயினும் போர்தாங்குதல் வன்கண்ணர் மேலதானாற் போல; [களத்தின்கண் - போர் செய்யுமிடத்தில்]

'போர்க்களத்துச் செல்வார் பலருளராயினும் போர்தாங்கல் வன்கண்ணர்மாட்டே உளதானாற்போல' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'போரில் பொறுப்பு பெருவீரரையே சாரும்', 'போர்க்களத்தில் (வெற்றி பெறும் பொறுப்பெல்லாம்) தைரியமுள்ளவர்கள் மேலேயே இருப்பதைப் போல', 'போரில் அதனை நன்கு நடத்தி வெல்லுங் கடமை வீரரைச் சார்ந்ததுபோல', 'போரில் அஞ்சாமையை உடையார் போரைத் தாங்குதல் போல' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

போர்க்களத்தில் பொறுப்பெல்லாம் வீரச்செருக்கு மிகுந்தாரைச் சார்ந்தது போல என்பது இப்பகுதியின் பொருள்.

தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருகுடியிற் பிறந்தார் பலருளராயினும் குடியோம்பல் வல்லவர்கண்ணதே குடியாகிய பாரத்தைப் பொறுத்தல்.
பரிப்பெருமாள்: ஒருகுடியிற் பிறந்தார் பலருளராயினும் குடியோம்ப வல்லவன் கண்ணதே குடியாகிய பாரத்தைப் பொறுத்தல்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது ஒரு குடிப்பிறந்தார் பலர் உளர் ஆயினால் அவருள் மூத்தவருக்குக் கடனோ எல்லார்க்கும் கடனோ என்று ஐயுற்றாற்குக் கூறப்பட்டது.
பரிதி: தம் உற்றார்மேல் வருகிற துன்பங்களைச் செயித்து, அழிகிற குடியைத் தாங்குவார்க்கன்றோ, பெருமை உண்டாயது என்றவாறு.
காலிங்கர்: தமர் இடத்து ஒன்றுற்ற இடத்துத் தள்ளாமல் பற்றித் தாங்கவல்லவர் யாவர்; மற்று அவர்மேலதேயாகும் குடிப்பாரம் அனைத்தும் என்றவாறு.
பரிமேலழகர்: குடியின் கண் பிறந்தார் பலராயினும் அதன் பாரம் பொறுத்தல் அது வல்லார் மேலதாம். [அதன் பாரம் - குடியின் பாரம்; அது வல்லார் - பாரத்தைப் பொறுத்தல் வல்லார்]
பரிமேலழகர் குறிப்புரை: பொருட்கு ஏற்க வேண்டும் சொற்கள் உவமைக்கண் வருவிக்கப்பட்டன. நன்கு மதிப்பிடுவார் அவரே என்பதாம். இவை மூன்று பாட்டானும் அது செய்வார் எய்துஞ் சிறப்புக் கூறப்பட்டது. [அவரே - குடியின் பாரத்தைப் பொறுப்பவரே; அதுசெய்வார்- தாம் பிறந்த குடியை உயரச் செய்வார்]

'குடியின் கண் பிறந்தார் பலராயினும் அதன் பாரம் பொறுத்தல் அது வல்லார் மேலதாம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வீட்டுச்சுமை தாங்கவல்லார்மேலே விழும்', 'ஒரு குடும்பத்திலும் (அதை வலிமையுள்ளதாக்கும்) பொறுப்பெல்லாம் (அக்குடும்பத்தில்) திறமையுள்ளவர்கள் மேலேயே இருக்கும்', 'குடும்பத்திலும் வலி உடையார் மேல் அதனைத் தாங்கும் பொறுப்பு ஏற்பட்டு இருக்கின்றது', 'சுற்றத்தாரிடையிலும் தாங்குதற்குரியார் மேலதே குடியினது பாரம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

குடும்பத்திலும் பொறுப்பு அதன் சுமை தாங்கவல்லார் மேலேயே இருக்கின்றது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
போர்க்களத்தில் பொறுப்பெல்லாம் வீரச்செருக்கு மிகுந்தாரைச் சார்ந்தது போல தமரகத்தும் பொறுப்பு அதன் சுமை தாங்கவல்லார் மேலேயே இருக்கின்றது என்பது பாடலின் பொருள்.
'தமரகத்தும் ஆற்றுவார்' யார்?

குடிசெய்வான் தன் குடும்பத்தை ஓர் படைத்தலைவன் போல நடத்திச் செல்வான்.

அமரகம் என்ற சொல் போர்க்களம் என்ற பொருளில் பயிலப்பட்டுள்ளது.
போர்க்களத்திலே உள்ள பலருள்ளும் எதற்கும் அஞ்சாத கடுமறவர்க்கே போர்வீரர்களை நடத்திச்செல்லும் தலைமை அமைவதுபோலக் குடியிலுள்ள எல்லோரினும் அக்குடும்பச் சுமையைத் தாங்கி முன்னெடுக்கும் வல்லவர் மேலேயே குடும்பப் பொறுப்பு எல்லாம் வந்து சேரும்.
போர்க்களத்தில் முனைமுகத்து நின்று போரைத் தாங்கும் படைத்தலைவன்போல், குடியிலுள்ளோரில் யார் குடும்பச் சுமையை ஏற்று அதை உயரச்செய்யும் வகையில் செயலாற்றுவானோ அவனே குடிசெய்யும் கடமைக்குரியவனாகிறான். அவன் தன் முன்னுள்ள குடும்பப் பொறுப்பையும் சுமையையும் உணர்ந்தவனாயிருப்பான். அவன் தன் முயற்சியாலும் அறிவாலும் தன் குடிப்பெருமையை உயர்த்துவான்.
யாரால் குடிசெய்ய இயலும் என்பதற்கு விளக்கமாக அமைந்த குறள் இது.

'தமரகத்தும் ஆற்றுவார்' யார்?

'தமரகத்தும் ஆற்றுவார்' என்ற தொடர்க்கு ஒருகுடியிற் பிறந்தார் பலருளராயினும் குடியோம்பல் வல்லவர். தம் உற்றார்மேல் வருகிற துன்பங்களைச் செயித்து அழிகிற குடியைத் தாங்குவார், தமர் இடத்து ஒன்றுற்ற இடத்துத் தள்ளாமல் பற்றித் தாங்கவல்லவர், குடியின் கண் பிறந்தார் பலராயினும் அதன் பாரம் (பொறுத்தல்) வல்லார், ஒருகுடியிற் பிறந்தார் பலருளராயினும் குடியோம்ப வல்லவன், குடியின்கட் பிறந்தார் பலர்மேற் பாரத்தையும் மாற்றித் தாம் (பொறுக்க) வல்லார், குடியில் பிறந்தவரிடையிலும் தாங்கவல்லவர், ஒரு குடியின்கண் பிறந்தவர் பலராயினும் குடியின் பாரம் தாங்கவல்லவர், வீட்டுச்சுமை தாங்கவல்லார், ஒரு குடும்பத்தில் பிறந்தார் பலராயினும் அதன் பாரத்தைத் தாங்கும் ஆற்றலுடையார், அக்குடும்பத்தில் திறமையுள்ளவர், குடும்பக் களத்தும் பொறுப்பைத் தாங்குவார், குடும்பத்திலும் வலி உடையார், சுற்றத்தாரிடையிலும் தாங்குதற்குரியார், சுற்றத்தார் பலருள்ளும் அந்தக் குடும்பப் பாரத்தைத் தாங்கி நடத்தும் பொறுப்பு வாய்ந்தவர், குடும்பத்தில் தாங்க வல்லவர், குடியிற் பிறந்தார் பலராயினும், அதை முன்னேற்றும் பொறுப்பைச் செய்யவல்லவர், சுற்றத்தாரின் துன்பத்தை நீக்கித் தாங்குபவர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

தமரகத்து ஆற்றுவர் என்ற தொடர்க்குச் சொற்கள் வருவிக்காமல் பொருள் கொள்ள இயலவில்லை. எனவே பரிமேலழகர் 'பொருட்கு ஏற்க வேண்டும் சொற்கள் உவமைக்கண் வருவிக்கப்பட்டன' என்றார். அவ்வகையில் ஒருகுடியிற் 'பிறந்தார் பலருளராயினும்', 'அதன் பாரம் பொறுத்தல்' ஆகியன வருவிக்கப்பட்டன.
'தமர்' என்ற சொல் சங்க இலக்கியங்களிலும் பரவலாகப் பயிலப்பட்டுள்ளது. இது சுற்றத்தார் அல்லது உறவினர் என்ற பொருளைத் தருவது. ஒரு குடும்பத்தில் சூழ்ந்துள்ளவர்கள் என்றதால் அது குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரையும் குறிக்கும். தமரகத்தும் ஆற்றுவர் என்பது அக்குடியில் பிறந்தவரிடையிலும் ஆற்றுவாரை அதாவது குடும்பச் சுமையைத் தாங்குவாரைச் சுட்டுவதாக உள்ளது.

இக்குறளுக்கான உரையில், 'இஃது ஒரு குடிப்பிறந்தார் பலர் உளர் ஆயினால் அவருள் மூத்தவருக்குக் கடனோ, எல்லார்க்கும் கடனோ என்று ஐயுற்றார்க்கு அது தாங்குவார் மேற்றே பொறை' எனக் கூறப்பட்டது என விளக்கம் கூறினார் பரிப்பெருமாள். இவ்வுரை சங்கப்பாடல் ஒன்றின் கருத்தையொட்டி அமைகிறது. அப்பாடல்:
..... பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்,
சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்;
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்,
மூத்தோன் வருக என்னாது, அவருள்
அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும்;
(புறநானூறு 183 பொருள்: தன் வயிற்றில் பிறந்த உடன்பிறப்புக் கொண்ட பலரில் சிறப்புப் பெற்றிருப்பவனிடம் தாயின் மனமும் திரிந்து செல்லும். ஒரே குடியில் பிறந்த பலரில் மூத்தவனை வருக என அழைக்காமல் அவர்களில் அறிவுடையவன் வழியில் அரசாட்சியும் நடைபெறும்) என்பது. இது நாடாண்ட மன்னன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் எழுதியது. ஒரு குடிப்பிறந்த பல்லோருள்ளும் மூத்தவனே என்று கருதாமல் யார் குடும்பப் பாரந் தாங்க வல்லவனோ அவனிடம் அக்குடியாட்சி சென்று சேரும் என்பது இதன் கருத்து.
ஒரு குடியில் பொதுவாக மூத்தவனிடம் பொறுப்புகள் சென்றமையும். ஆனால் சில குடும்பங்களில், மூத்தது மோழை இளையது காளை என்ற பழமொழிக்கேற்ப, மூத்தவன் மன உறுதியில்லாமல், பொறுப்புகளை எடுத்துச் செய்யும் விருப்பும் துணிவுமில்லாமல் இருந்தால் அவனுக்குப் பின்னுள்ள இளையவன் ஆற்றலோடு செயல்படும்போது தலைமைப் பொறுப்பு இளையவனிடமே சென்று சேரும். அவன் குடியுயரப் பாடுபடுவான்.
அதுபோலவே குடும்பத்தில் பெண் ஆற்றலுடையாராக இருந்தால் அவள் குடும்பச் சுமை தாங்கி ஆவாள்.

'தமரகத்தும் ஆற்றுவார்' என்ற தொடர் குடும்பத்திலும் (சுமை) பொறுப்பார் என்ற பொருள் தரும்.

போர்க்களத்தில் பொறுப்பெல்லாம் வீரச்செருக்கு மிகுந்தாரைச் சார்ந்தது போல குடும்பத்திலும் பொறுப்பு அதன் சுமை தாங்கவல்லார் மேலேயே இருக்கின்றது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தன் குடியிற் பிறந்தாரைத் தாங்கி நடத்தும் வல்லமை ஒரு குடிசெயல்வகையாம்.

பொழிப்பு

போர்க்களத்தில் பொறுப்பெல்லாம் தலைமையேற்றுச் செல்லும் வீரரைச் சார்ந்தது போல குடும்பத்திலும் பொறுப்பு அதன் சுமை தாங்கவல்லார் மேலேயே இருக்கின்றது.