ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி
(அதிகாரம்:குடிசெயல்வகை
குறள் எண்:1022)
பொழிப்பு (மு வரதராசன்): முயற்சி, நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.
|
மணக்குடவர் உரை:
முயற்சியும் நிரம்பின அறிவும் என்று சொல்லப்பட்ட இரண்டினாலும் வளருகின்ற வினையினாலே குடி உயரும்.
பரிமேலழகர் உரை:
ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின் நீள்வினையான் - முயற்சியும் நிறைந்த அறிவும் என்று சொல்லப்பட்ட இரண்டினையுமுடைய இடையறாத கருமச்செயலால்; குடி நீளும் - ஒருவன் குடி உயரும்.
(நிறைதல் - இயற்கையறிவு செயற்கையறிவோடு கூடி நிரம்புதல். ஆள்வினை, மடிபுகுதாமற் பொருட்டு. ஆன்ற அறிவு, உயர்தற்கு ஏற்ற செயல்களும் அவை முடிக்குந் திறமும் பிழையாமல் எண்ணுதற்பொருட்டு. இவை இரண்டு பாட்டானும் அச்செயற்குக் காரணம் கூறப்பட்டது.)
இரா சாரங்கபாணி உரை:
முயற்சியும் நிறைந்த அறிவும் என்று சொல்லப்பட்ட இரண்டினையும் உடைய இடையறாத தொழிலினால் ஒருவன் குடும்பம் உயரும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின் நீள்வினையால் நீளும் குடி.
பதவுரை: ஆள்வினையும்-(மேற்கொள்ளும்) முயற்சியும்; ஆன்ற-நிறைந்த; அறிவும்-அறிவும்; என-என்று சொல்லப்பட்ட; இரண்டின்-இரண்டினது; நீள்வினையால்-வளருகின்ற செயலால்; நீளும்-உயரும்; குடி-குடும்பம்.
|
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின் நீள்வினையால்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முயற்சியும் நிரம்பின அறிவும் என்று சொல்லப்பட்ட இரண்டினாலும் வளருகின்ற வினையினாலே;
பரிப்பெருமாள்: முயற்சியும் நிரம்பின அறிவும் என்று சொல்லப்பட்ட இரண்டினாலும் வளருகின்ற வினையினாலே;
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது ஒரு வினையைச் செய்யுங்கால் நல்லதும் தீயதும் அறிய வேண்டுதலின் அறிவு வேண்டுமென்று கூறப்பட்டது. வளருகின்ற வினையாவது, ஒரு வினையைச் செய்து முடித்தால் அவ்வளவிலே நின்று அமையாது பின்னும் ஒரு வினையைத் தொடங்குதல். மேல் குடி ஓம்பவேண்டும் என்றார்; அஃது ஓம்பும் ஆறு என்னை என்றார்க்கு இது கூறப்பட்டது.
பரிதி: உத்தியோகமும் அறிவுடைமையும் இந்த இரண்டு குணத்தினால்;
காலிங்கர்: குடிசெயல்வகைக்கு வேண்டும் ஆண்மைத் தொழிலும் அதற்கமைந்த அறிவுடைமையும் என உரைத்த இரண்டினது நெடுமுயற்சியால்;
பரிமேலழகர்: முயற்சியும் நிறைந்த அறிவும் என்று சொல்லப்பட்ட இரண்டினையுமுடைய இடையறாத கருமச்செயலால்;
பரிமேலழகர் குறிப்புரை: நிறைதல் - இயற்கையறிவு செயற்கையறிவோடு கூடி நிரம்புதல். ஆள்வினை, மடிபுகுதாமற் பொருட்டு. ஆன்ற அறிவு, உயர்தற்கு ஏற்ற செயல்களும் அவை முடிக்குந் திறமும் பிழையாமல் எண்ணுதற்பொருட்டு. இவை இரண்டு பாட்டானும் அச்செயற்குக் காரணம் கூறப்பட்டது.
'முயற்சியும் நிரம்பின அறிவும் என்று சொல்லப்பட்ட இரண்டினாலும் வளருகின்ற வினையினாலே' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'நீண்ட முயற்சியும் நிறைந்த அறிவும் என்ற இரண்டின் பெருஞ்செயலால்', 'விடாமுயற்சியும் விரிந்த அறிவும் ஆகிய இந்த இரண்டும் எப்போதும் சேர்ந்திருக்கக் காரியம் செய்தால்', 'சுறுசுறுப்பும் நிறைந்த அறிவும் ஆகிய இரண்டுங் கலந்த முயற்சி இடைவிடாது நெடிதிருக்கும் ஆயின்', 'முயற்சியும் நிறைந்த அறிவும் என்று சொல்லப்பட்ட இரண்டினையும் உடைய இடையறாத செயலால்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
முயற்சியும் நிறைந்த அறிவும் என்ற இரண்டினாலும் வளர்கின்ற செயலால் என்பது இப்பகுதியின் பொருள்.
நீளும் குடி:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குடி உயரும்.
பரிப்பெருமாள்: குடி உயரும்.
பரிதி: குடி தழைக்கும் என்றவாறு.
காலிங்கர்: நெடிது வாழும் தன் குடிமுழுதும் என்றவாறு.
பரிமேலழகர்: ஒருவன் குடி உயரும்.
'குடி உயரும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'குடி பெருகும்', 'குடித்தனம் நாளுக்கு நாள் உயர்வடையும்', 'குடியும் உயர்வு அடையும்', 'குடி உயரும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
குடி உயரும் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
முயற்சியும் நிறைந்த அறிவும் என்ற இரண்டினாலும் நீள்வினையால் குடி உயரும் என்பது பாடலின் பொருள்.
'நீள்வினையால்' என்றால் என்ன?
|
உடல் உழைப்பு, மூளைச் செயற்பாடு இவற்றை இடையறாது இயக்க குடி உயரும்.
முயற்சியும் நிறைந்த அறிவும் ஆகிய இரண்டினையும் உடைய இடையறாத செயற்பாடுகளால் ஒருவன் குடும்பம் உயரும்.
அறிவும் ஆள்வினையுமே குடிசெய்வதற்குத் தேவையான இரண்டு உயர்வாழ்வுப் பண்புகளை வள்ளுவர் இங்கு கூறுகிறார்.
ஆள்வினை:
ஆள்வினை என்பது முயற்சியைக் குறிப்பது. இச்சொல்லுக்கு ஆட்சி செய்தல் எனப் பொருள் கொண்டு வினையை ஆளுதல் என்பதாகவும் விளக்குவர். கடினமாக உழைத்து ஓர் செயலை நிறைவேற்ற முயலும் ஆற்றலைக் குறிப்பது ஆள்வினையாம்.
ஊக்கமுடைமை ஆள்வினையுடன் நெருங்கிய தொடர்புடையது.
ஊக்கமுடைமை செயல் ஆற்றுவதில் மன எழுச்சி கொள்வதாம்; ஆள்வினை என்பது அச்செயலை முடியுமாறு முயலுதலையும் தான் செய்யும் தொழிலைத் தனக்கு கட்டுபட்டதாகச் செய்து கொள்ளும் தன்மையையும் குறிப்பது.
மனஊக்கமும், செயலூக்கமும், இணைந்து மெய்ம்முயற்சியான ஆள்வினை உண்டாகிறது.
உயிர் வாழ்வுக்குச் செல்வம் வேண்டியிருந்தாலும் அதை ஈட்டுதற்கு முதற்கண் வேண்டுவது தன்முயற்சியே.
வேலை செய்வதில் கருத்துடன் இருப்பவனிடமே செல்வமும் சேரும். ஆள்வினை சோம்பலை நீக்கச் செய்யும். தளராது தொடர்ந்து செயல் முனைப்புக்காட்டுவது பெருவலிமைகொண்ட ஊழையும் ஒதுங்கி நிற்கச் செய்யும் என்பது வள்ளுவம்.
ஆன்ற அறிவு:
குடிசெய்வார் நோக்கம் நிறைவேற கடின உழைப்பு மட்டும் போதாது; குறைந்த ஆற்றலில் நிறைந்த வேலைகளைச் செய்து முடிக்கும் திறனும் வேண்டும். ஆழ்ந்த அறிவுடைமைதான் இதற்கு உதவமுடியும்.
உழைப்பாற்றலோடு அறிவையும் இணைக்கும்போது சிறந்த விளைவுகள் உண்டாகும்; ஆன்ற அறிவு என்பது நிறைந்த அறிவு என்ற பொருள் தரும். அறிவானது இயற்கையறிவு அதாவது இயல்பில் அமைந்த அறிவு, மற்றும் செயற்கையறிவு அதாவது கல்வி கேள்விகளால் உண்டாய நல்லறிவு இவற்றைக் குறிக்கும். இவற்றுடன் பட்டறிவு வாய்க்கப்பெற்றால் கூடுதல் பயன் உண்டாகும். இவ்வறிவுகளின் துணையுடன் குடி உயர்தற்கு ஏற்ற செயல்களை வகுத்து அவை முடிக்குந் திறங்களையும் சூழ்ந்து செயல்படுவர் குடிசெய்வார்.
'இஃது ஒரு வினையைச் செய்யுங்கால் நல்லதும் தீயதும் அறிய வேண்டுதலின் அறிவு வேண்டுமென்று கூறப்பட்டது' என்பார் பரிப்பெருமாள்.
கவிராசர் 'நிறைந்த அறிவாவது-சுபாவமாய் இருக்கிற அறிவுடனே பிறிதொன்றைக் கண்டு அறிகிறதுமாம்' என ஆன்ற அறிவுக்கு விளக்கம் தருவார்.
நீளும் குடி என்ற தொடர் குடி உயரும் என்ற பொருள் தருவது.
குடி உயரப்பாடுபடும் பலரும் முயற்சியால்தான் உருவாகிறார்கள். உடலுழைப்பு பெரும்பயன் பெற நிரம்பிய அறிவையும் எடுத்துக்காட்டுகிறார் வள்ளுவர்.
முயற்சியும் அறிவும் குடிசெய்வார் யாவர்க்கும் வேண்டப்படுவனவே. அவர் திறம் ஓங்க இடைவிடா முயற்சியும் ஆழ்ந்தகன்ற அறிவும் தொடர் செயற்பாடுகளும் வேண்டும் என்று கூறப்பட்டது.
|
'நீள்வினையால்' என்றால் என்ன?
பழம் ஆசிரியர்களுள் மணக்குடவரும் பரிப்பெருமாளும் 'என இரண்டின் நீள்வினையின் நீளுங்குடி' எனப் பாடம் கொண்டிருப்பர் போலும்.
பரிப்பெருமாள் 'வளருகின்ற வினையாவது, ஒரு வினையைச் செய்து முடித்தால் அவ்வளவிலே நின்று அமையாது பின்னும் ஒரு வினையைத் தொடங்குதல்' என விரிவுரையில் நீள்வினைக்கு விளக்கமும் கூறுகிறார்.
இவர்களது உரை முயற்சியும், நிறைந்த அறிவும் ஆகிய இரண்டினாலும் இடைவிடாமல் அதாவது ஓயாது தொடர்ந்து இடையீடின்றி ஒரு செயலைப் பிறிதொரு செயல் தொடரச் செயல்பட்டு வந்தால் குடி உயரும் என்ற கருத்தைத் தருகிறது.
மற்றவர்கள் அனைவரும் 'என இரண்டின் நீள்வினையான் நீளுங்குடி' என இணைத்து இரண்டினையுமுடைய இடையறாத கருமச்செயலால் குடிஉயரும் என்கின்றனர்.
'நீள்வினையால்' என்ற தொடர் வளருகின்ற வினையினாலே என்ற பொருள் தரும்.
|
முயற்சியும் நிறைந்த அறிவும் என்ற இரண்டினாலும் வளர்கின்ற செயலால் குடி உயரும் என்பது இக்குறட்கருத்து.
ஒன்று முடிந்தபின் அடுத்தது எனத் தொடர்ந்து வினையாற்றுவதாக குடிசெயல்வகை இருக்கவேண்டும்.
முயற்சியும் நிறைந்த அறிவும் என்று சொல்லப்பட்ட இரண்டினாலும் வளர்கின்ற செயலால் குடும்பம் உயரும்.
|