இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1029



இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு.

(அதிகாரம்:குடிசெயல்வகை குறள் எண்:1029)

பொழிப்பு (மு வரதராசன்): தன் குடிக்கு வரக்கூடிய குற்றத்தை வராமல் நீக்க முயல்கின்ற ஒருவனுடைய உடம்பு துன்பத்திற்கே இருப்பிடமானதோ?

மணக்குடவர் உரை: சுற்றத்தார்மாட்டு உளதாகிய குறையை மறைக்கக் கருதுவான் உடம்பு துன்பத்திற்குக் கொள்கலமாம்.

பரிமேலழகர் உரை: குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு - மூவகைத் துன்பமும் உறற்பாலதாய தன் குடியை அவை உறாமற் காக்க முயல்வானது உடம்பு; இடும்பைக்கே கொள்கலங் கொல் - அம்முயற்சித் துன்பத்திற்கே கொள்கலமாம் அத்துணையோ? அஃது ஒழிந்து இன்பத்திற்கு ஆதல் இல்லையோ?
('உறைப் பெயல் ஒலைபோல, மறைக்குவன் பெரும நிற் குறித்து வருவேலே' (புறநா.290) என்புழியும் மறைத்தல் இப்பொருட்டாயிற்று. 'என்குடி முழுதும் இன்புற்றுயரவே நான் இருமையும் எய்துதலான் இம்மெய் வருத்த மாத்திரம் எனக்கு நன்று' என்று முயலும் அறிவுடையான், அஃதொரு ஞான்றும் ஒழியாமை நோக்கி, 'இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ' என்றார். இது குறிப்பு மொழி. இவை இரண்டு பாட்டானும் அவர் அது செய்யும் இயல்பு கூறப்பட்டது.)

தமிழண்ணல் உரை: தன் குடும்பத்தின் குறைகளை நீக்கி அது துன்பமுறாமல் காக்க முயல்பவனது உடம்பு, அதற்காகவே உழைத்து உழைத்துத் தேய்தலால், அத் துன்பத்திற்கே கொள்கலமாய் ஆகிவிடுமோ? அத்தகையவனது தியாகவுணர்வை வியக்கும்விதம் இது. குற்றம் மறைத்தல்- குடும்பத்திற்கு ஏற்படும் அழிவை நீக்கிக் காப்பாற்றுதல்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ.

பதவுரை: இடும்பைக்கே-துன்பத்திற்கே; கொள்கலம்-கொள்கின்ற ஏனம்; கொல்லோ-(ஐயம்); குடும்பத்தை-குடியை; குற்றம்-குறை, குற்றம், துன்பம்; மறைப்பான்-வராமற் காக்க முயல்பவன்; உடம்பு-உடல்.


இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: துன்பத்திற்குக் கொள்கலமாம்.
பரிப்பெருமாள்: துன்பத்திற்குக் கொள்கலமாம்.
பரிதி: துன்பத்திற்கெல்லாம் இருப்பிடம் என்றவாறு.
காலிங்கர்: எஞ்ஞான்றும் வருத்தத்திற்கே கொள்கலம் கொல்லோ;
பரிமேலழகர்: அம்முயற்சித் துன்பத்திற்கே கொள்கலமாம் அத்துணையோ? அஃது ஒழிந்து இன்பத்திற்கு ஆதல் இல்லையோ?

'துன்பத்திற்குக் கொள்கலமாம்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் 'அம்முயற்சித் துன்பத்திற்கே கொள்கலமாம். அத்துணையோ? அஃது ஒழிந்து இன்பத்திற்கு ஆதல் இல்லையோ?' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'துன்பத்தின் உறைவிடமோ?', 'துன்பத்திற்கே இருப்பிடமானதோ?', 'துன்பங்களையே போட்டு வைக்கும் பாத்திரமோ என்னமோ தெரியவில்லை', 'முயற்சித் துன்பத்திற்கே ஏனமாகும் போலும்!' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

துன்பங்களையே போட்டு வைக்கும் ஏனமோ? என்பது இப்பகுதியின் பொருள்.

குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சுற்றத்தார்மாட்டு உளதாகிய குறையை மறைக்கக் கருதுவான் உடம்பு.
பரிப்பெருமாள்: சுற்றத்தார்மாட்டு உளதாகிய குறையை மறைக்கக் கருதுவான் உடம்பு.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் ஒழியாது கருமம் செய்தல் பெருமை என்றார்; அது துன்பம் ஆக்கும் என்றார்க்குத் துன்பத்திற்கு நாணல் ஆகாது; அதனால் புகழாதலான் என்று கூறப்பட்டது.
பரிதி: தன் குடியையும் குலத்தையும் இரட்சிப்பான் குடும்பத்தின் குற்றம் மறைப்பவன்.
காலிங்கர்: தன் குடியாகிய குடும்பத்தை வந்துற்ற குற்றத்தைமாய்த்துப் பாதுகாப்பவனது உடம்பானது.
காலிங்கர் குறிப்புரை: எனவே தம் குடி தாங்குதல்பொருட்டு வருந்துகின்றவனே ஆண்மகனாவான் என்று அவனை வியந்துரைத்தல் கருத்து என்றவாறு.
பரிமேலழகர்: மூவகைத் துன்பமும் உறற்பாலதாய தன் குடியை அவை உறாமற் காக்க முயல்வானது உடம்பு. [மூவகைத் துன்பம்- தன்னைப் பற்றி வருவனவும் பிற உயிர்களைப் பற்றி வருவனவும் தெய்வத்தைப் பற்றி வருவனவும் என மூவகையால் வரும் துன்பங்கள்]
பரிமேலழகர் குறிப்புரை: 'உறைப் பெயல் ஒலைபோல, மறைக்குவன் பெரும நிற் குறித்து வருவேலே' (புறநா.290 இதன் பொருள்: மழை பெய்தலை (மேலே விழவொட்டாது) ஓலைக் குடையானது காப்பது போன்று காப்பாற்றுவன் (என்று) பெருமானே உன்னைக் கருதி வருவேன் என்பது) என்புழியும் மறைத்தல் இப்பொருட்டாயிற்று. 'என்குடி முழுதும் இன்புற்றுயரவே நான் இருமையும் எய்துதலான் இம்மெய் வருத்த மாத்திரம் எனக்கு நன்று' என்று முயலும் அறிவுடையான், அஃதொரு ஞான்றும் ஒழியாமை நோக்கி, 'இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ' என்றார். இது குறிப்பு மொழி. இவை இரண்டு பாட்டானும் அவர் அது செய்யும் இயல்பு கூறப்பட்டது. [இப்பொருட்டாயிற்று- துன்பம் வராமல் காத்தல் என்னும் பொருளதாயிற்று; நான் இருமையும் எய்துதலான் - நான் இம்மைப் பயன் மறுமைப் பயன் என்னும் இரண்டையும் அடைதலால்; அவர் - குடிசெய்வார்; அது செய்யும் இயல்பு - குடியை உயரச் செய்தலின் திறம்]

'தன் குடியாகிய குடும்பத்தை வந்துற்ற குற்றத்தைமாய்த்துப் பாதுகாப்பவனது உடம்பானது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'குடும்பத்தைக் குற்றப்படாமல் காப்பவனது உடம்பு', 'தன் குடும்பத்தினைத் துன்பமுறாமல் காக்க முயல்வானது உடம்பு', '(தான் பிறந்த) குடும்பத்துக்கு தீங்கு வந்து விடாதபடி பாதுகாக்கிற ஒருவனுடைய உடம்பு', 'குடும்பத்திற்கு குற்றம் வராதபடி காக்கின்றவனது உடம்பு' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தன் குடும்பம் குற்றப்படாதவாறு காக்கின்றவனது உடம்பு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தன் குடும்பம் குற்றப்படாதவாறு காக்கின்றவனது உடம்பு துன்பங்களையே போட்டு வைக்கும் ஏனமோ? என்பது பாடலின் பொருள்.
'குற்றம் மறைப்பான்' குறிப்பது என்ன?

குடும்பநலத்துக்காக உழைக்கும்போது உடம்புகொள்ளமுடியாத அளவு துன்பமுற வேண்டியிருக்கும்.

தன் குடும்பம் குற்றம் அடையாமல் காக்க முயல்பவனின் உடம்பு, முயற்சித் துன்பங்களையெல்லாம் தாங்கிக் கொள்ளும் இருப்பிடமோ?
குடிசெய்வானது உழைப்பு மிகக் கடுமையானதாக் இருக்கும். 'இவன் கொண்டுள்ளது உடம்பா அல்லது துன்பங்களை இட்டுவைக்கும் கலமா?', 'துன்பத்தை தாங்குவதற்காகவே பிறப்பெடுத்தவனா இவன்?' எனப் பிறர் வியக்கும் அளவுக்கு குடியை முன்னேற்ற முயல்வான் உழைப்பான். குடும்பத்தை மேன்மையுறச் செய்யும் முயற்சியில் அவனுறும் இன்னல்கள் பலப்பல. தன் குடும்பத்திலுள்ளோர் மீது எத்துன்பமும் வந்துவிடக்கூடாது என்று மெய்வருத்தம் பாராது ஓயாமல் உழைப்பான் அவன்; உழைப்பின் கடினங்களையெல்லாம் அவன் உடம்புதான் தாங்கிக் கொள்கிறது; இவற்றால் துன்பங்களைப் போட்டுவைக்கும் கலம்போல அவன் உடம்பு ஆகிவிடுகிறது.
இலக்கம் உடம்புஇடும்பைக்கு... (இடுக்கணழியாமை 627 பொருள்: உடம்பு துன்பத்திற்கு இலக்கானது.....) என்று உடலே துன்பத்துக்கு இலக்கு என்று முன்பு குறள் சொல்லியது. இங்கு 'உடம்பு துன்பத்திற்கே இருப்பிடமானதோ?' எனக் கேட்கிறது. உடல்தான் அத்துணைத் துன்பங்களுக்கும் இலக்கு ஆகி இருப்பிடமாகவும் ஆகிறது. உடம்பு என்று சொல்லப்பட்டாலும் அது உடல் அளவினால் மட்டுமன்றி மன அளவினால் அடையத்தக்க துன்பங்களையும் குறிக்கும்.

தன் குடும்பத்துக்காக கடுமையாக உழைப்பதும் தன் குடி துன்புறாதிருத்தல்பொருட்டுத் தான் பல துன்பங்களைத் தாங்குவதும் குடிசெய்வான் விருப்புடன் ஏற்றுக்கொண்டவையாகும். இவ்வாறு குடிக்குத் தலைமையேற்று உழைப்பவன் குடும்பம் குற்றமே பொருந்தாதவண்ணம் பாதுகாப்பான். தன் குடி உயரச்செய்வதற்காக, தான் எந்த இன்பத்தையும் நுகராமல், அல்லும் பகலும் அயராது பாடு படுவான்; இடுக்கண் உற்றவிடத்து அஞ்சமாட்டான். ஒரு குடும்பம் நடத்துவதில் எத்தனையோ இடையூறுகள் நேர்வதுண்டு. வருவாய்ப் பற்றாக்குறை, எதிர்பாராத பொருள் இழப்பு, குடும்ப உறுப்பினரிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு உண்டாகும் பூசல் இவற்றையெல்லாம் கட்டிக்காத்து குற்றம் நேராவண்ணம் குடும்பத்தைத் தாங்கும் பொறுப்பு குடிசெய்வானுக்கு உள்ளது. அதனால் குடியைத் தாக்க வருந்துன்பம் அனைத்தையும் தன்மீது ஏந்திக் குடித்துன்பம் காப்பவனாகிறான். ஓயாத உழைப்பு, உதவுதலால் வந்த துன்பம் என அவனது வாழ்க்கை துன்பத்திலேயே சுழன்று அல்லற்படலாம். ஆயினும், இழப்புகளையும் துன்பங்களையும் காட்டி அவன் குடிசெயலிலிருந்து விலகமாட்டான். குடும்பத்துக்குள் குறைவுநேரக்கூடாது என்பதற்காக அவன் தாங்கிக்கொள்ளும் துன்பங்களைக் கண்ட வள்ளுவர் 'ஆ! இத்தகைய ஆற்றல் பெற்ற குடிசெய்வானது உடல் இடும்பைக்கே கொள்கலமா?' என்று வியக்கிறார்.
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்தூன்றும் தூண் (ஆள்வினையுடைமை 615 பொருள்: இன்பம் நுகர்தலை விரும்பாதவனாகித் தான் கொண்ட தொழிலைச் செய்வதில் இன்பம் காண்கின்றவன் தன் சுற்றத்தின் துன்பம் நீக்கி அவர்களை நிலைபெறுத்துந் தூணாவான்) என்று கேளிர்க்காக மிகுதியும் உழைத்துத் துன்பம் துடைப்பவன் பற்றி முன்வந்த குறள் ஒன்று கூறியது இங்கு நினைக்கத்தக்கது.
குடிசெய்வானது உழைப்பையும் தன்மறுப்பையும் போற்றிப்பாடப்பட்ட குறளிது.

'கொள்கலம் என்றது கிண்ணம், ஏனம், தட்டம், கலம், குவளை முதலியவற்றைக் குறிக்கும் சொல். இவை பொருள்களை வைத்துப் பேணற்கு உரியவை. பேழை, நிலைப்பேழை, அட்டளை முதலியவையும் அத்தகையவற்றுள் பரியவை. பொருள்களைத் தன்கண் வைத்துப் பேணும் அவற்றின் பொருள் அறிந்து 'கொள்கலம்' எனப் பெயரிட்டனர். 'அணி, ஆடை, சாந்து முதலியன பெய்கலமும் பிழாவும் பிறவும் 'கொள்கலம்' என்று அகரமுதலிகள் கூறும். பொருள்களைக் கொள்ளும் கலமாகச் சுட்டப்பெற்ற கொள்கலம், பண்பின் கொள்கலம், சால்பின் கொள்கலம், அன்பின் கொள்கலம் எனப் பண்பியல் சுட்டுவதாகவும் வழக்கில் ஊன்றியுள்ளது' (இரா இளங்குமரன்).
இப்பாடலிலுள்ள 'கொல், ஓ' என்னும் சொற்கள் இரக்கக் குறிப்பை உணர்த்துவனவாகும்.
'குடும்பம்' என்பது சமுதாயத்தின் ஒரு அங்கமாகும். இது எல்லாச் சமுதாயங்களிலும் உள்ள அடிப்படையான அமைப்பு. குடி என்ற பொருளைத் தரும்வகையில் குடும்பம் என்ற சொல்லை அமைத்துள்ளார் வள்ளுவர் இங்கு. இச்சொல் குறளில் இந்த ஓர் இடத்தில் மட்டுமே கையாளப்பட்டுள்ளது. இச்சொல் முதன்முதலில் குறளில் தான் நேரடியாகப் பயின்று வருகிறது என்பர்.

'குற்றம் மறைப்பான்' குறிப்பது என்ன?

'குற்றம் மறைப்பான்' என்றதற்குக் குறையை மறைக்கக் கருதுவான், குற்றம் மறைப்பவன், குடும்பத்தை வந்துற்ற குற்றத்தைமாய்த்துப் பாதுகாப்பவன், மூவகைத் துன்பமும் உறற்பாலதாய தன் குடியை அவை உறாமற் காக்க முயல்வான், குற்றத்தைப் போக்கடிக்கப் பாடுபடுகிறவன், குடும்பம் உற்ற குற்றத்தை நீக்குவான், குற்றத்தை வராமல் நீக்க முயல்கின்றவன், தன் குடும்பத்தின் குறைகளை நீக்கி அது துன்பமுறாமல் காக்க முயல்பவன், தனது குடும்பத்தைச் சார்ந்த குற்றத்தை நீக்கும் தொழிலில் ஈடுபடுவான், குடும்பத்தைக் குற்றப்படாமல் காப்பவன், குடும்பத்தினைத் துன்பமுறாமல் காக்க முயல்வான், குடும்பத்தை குற்றம் (வந்துவிடாமல்) பாதுகாப்பவன், குடும்பத்திற்குக் குற்றம் வராமல் அகற்றுதற்கு முயல்பவன், குடும்பத்திற்கு குற்றம் வராதபடி காக்கின்றவன், தனது குடும்பத்தை வரும் துன்பங்களிலிருந்து தடுப்பான், தன் குடும்பத்துக்கு நேரக்கூடிய குற்றத்தை வரவொட்டாமல் தடுத்து அதனால் நேரும் துன்பங்களையெல்லாம் தாங்கிக் கொள்ளுபவன், குடும்பத்தின் குறைகள் தெரியாமல் காத்து ஓயாமல் உழைப்பவன், அடிமைத்தனம் அறியாமை வறுமை என்னும் மூவகை நிலைமையாலும் தன்குடிக்கு வருந்துன்பங்களை நீக்கப் பாடுபடும் குடிசெயல் தலைவன், குடும்பத்தின் இன்னல்களைப் போக்க வல்லவன் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

பரிமேலழகர் குற்றம் என்பதற்குத் துன்பம் எனவும் மறைப்பான் என்பதற்குக் காப்பான் எனவும் பொருள் கண்டு குற்றம் மறைத்தல் என்பதற்குத் துன்பம் பிறர்மீது தாக்கா வண்ணம் தடுத்து மறைத்துக் கொள்ளுதல் அதாவது காத்துக் கொள்ளுதல் என்று பொருளுரைத்தார். மறைத்தல்-காத்தல் என்றதற்குச் சங்கப்பாடல் ஒன்றை மேற்கோளாகவும் காட்டுகிறார் அவர். அப்பாடல் வரி: உறைப்புழி யோலை போல மறைக்குவன் பெருமநிற் குறித்துவரு வேலே (புறநானூறு 290) இதன் பொருள்: மழை பெய்தலை, மேலே விழவொட்டாது, பனைஓலைக் குடையானது காப்பது போன்று காப்பாற்றுவன் (என்று) பெருமானே உன்னைக் கருதி வருவேன் என்பது.
... தம்வயின் குற்றம் மறையா வழி (புல்லறிவாண்மை 846 பொருள்:...தம்மிடத்துள்ள குற்றத்தை ஒழிக்காத போது) என்ற குறட்பாவில் குற்றம் மறைத்தல் என்பது குற்றம் தன்கண் நிகழவொட்டாது தடுத்தலைக் குறிப்பதாக உள்ளது.
குடும்பத்திற்கு நேரக்கூடிய துன்பங்களை நீக்கி குடியிலுள்ளோர்க்குத் தீங்கு நேராமல் காக்க முயல்வதும் குடிஉயரச்செய்வதின் பாற்படும். இதற்குத் தாங்கமுடியாத அளவு உழைப்பு தேவை. குடிசெய்வானது கடின உழைப்பே குடி மானத்தைக் காக்கமுடியும்.

'குற்றம் மறைப்பான்' என்பது குடும்பத்தின் குறைகளை நீக்கி அது துன்பமுறாமல் காக்க முயல்பவன் என்ற பொருளில் வந்தது.

தன் குடும்பம் குற்றப்படாதவாறு காக்கின்றவனது உடம்பு துன்பங்களையே போட்டு வைக்கும் ஏனமோ? என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

குடியிலுள்ளோர் சார்பாகத் தான் துன்பத்தையேற்றலும் குடிசெயல்வகையாம்.

பொழிப்பு

குடும்பம் குற்றத்துக்குள்ளாகதவாறு காக்கின்றவனது உடம்பு துன்பங்களையே ஏற்றுக்கொள்ளும் ஏனமோ?