இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1023குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்

(அதிகாரம்:குடிசெயல்வகை குறள் எண்:1023)

பொழிப்பு (மு வரதராசன்): என் குடியை உயரச்செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையை இறுகக் கட்டிக் கொண்டு தானே முன்வந்து துணை செய்யும்.

மணக்குடவர் உரை: குடியை யோம்புவனென்று கருதி முயலுமவனுக்குத் தெய்வம் மடிதற்றுக் கொண்டு தான் முற்பட்டு முயலும்.
மடிதற்றல் - தொழில்செய்வார் ஆடையை இறுக உடுத்தல்.

பரிமேலழகர் உரை: குடி செய்வல் என்னும் ஒருவற்கு - என் குடியினை உயரச் செய்யக் கடவேன் என்று கொண்டு, அதற்கு ஏற்ற கருமங்களின் முயலும் ஒருவனுக்கு; தெய்வம் மடி தற்றுத் தான் முந்துறும் - தெய்வம் ஆடையைத் தற்றுக் கொண்டு தான் முந்துற்று நிற்கும்.
(முயற்சியை அதன் காரணத்தால் கூறினார். தற்றுதல் - இறுக உடுத்தல். முன் நடப்பார் செயல் நியதிமேல் ஏற்றப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: 'குடியை உயரச் செய்வேன்' என்று கூறி முயலும் ஒருவனுக்குத் தெய்வம் தனது ஆடையை இறுகக் கட்டிக்கொண்டு உதவுவதற்கு முன்னே நிற்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
'குடிசெய்வல்' என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான் முந்துறும்.

பதவுரை: குடி-குடும்பம்; செய்வல்-(உயரச்)செய்யக் கடவேன்; என்னும்-என்கின்ற; ஒருவற்குத்-ஒருவர்க்குத்; தெய்வம்-கடவுள்; மடி-ஆடை; தற்று-இறுக உடுத்திக்கொண்டு; தான்-தான்; முந்துறும்-முற்பட்டு நிற்கும்.


குடிசெய்வல் என்னும் ஒருவற்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குடியை யோம்புவனென்று கருதி முயலுமவனுக்கு;
பரிப்பெருமாள்: குடியை யோம்புவனென்று கருதி முயலுமவனுக்கு;
பரிதி: தன் குடியைப் பரிபாலனம் பண்ணவேணும் என்பானாகில்; [பரிபாலனம் - பாதுகாப்பு]
காலிங்கர்: தம் குடி தளராமல் பேணுதலைச் செய்வல் என்னும் அவ்வொப்பிறந்தோர்க்கு;
பரிமேலழகர்: என் குடியினை உயரச் செய்யக் கடவேன் என்று கொண்டு, அதற்கு ஏற்ற கருமங்களின் முயலும் ஒருவனுக்கு;

'குடியை யோம்புவனென்று கருதி முயலுமவனுக்கு' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'குடும்பத்தை உயர்த்துவேன் என்பானுக்கு', 'என் குடும்பத்தை உயர்த்துவேன் என்று செயலில் முற்படும் ஒருவனுக்கு', ''குடித்தனத்தின் நிலைமையை உயர்த்துவேன்' என்று உறுதி கொள்ளும் ஒருவனுக்கு', 'என் குடியைச் செம்மைப்படுத்துவேன் என்று முயற்சி செய்யும் ஒருவனுக்கு' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

என் குடும்பத்தை உயர்த்துவேன் என்று முயலும் ஒருவனுக்கு என்பது இப்பகுதியின் பொருள்.

தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தெய்வம் மடிதற்றுக் கொண்டு தான் முற்பட்டு முயலும். [தெய்வம்- (இங்கு)ஊழ்]
மணக்குடவர் குறிப்புரை: மடிதற்றல் - தொழில்செய்வார் ஆடையை இறுக உடுத்தல்.
பரிப்பெருமாள்: தெய்வம் மடிதற்றுக் கொண்டு தான் முற்பட்டு முயலும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மடிதற்றல் - தொழில்செய்வார் ஆடை உடுப்பதோர் திறன். மேல் சுற்றத்தார் நல்வினை இலராயின் ஓம்புமாறு என்னை என்றார்க்குத் தெய்வம் அருள் செய்யும் என்று கூறப்பட்டது. இத்துணையும் குடி ஓம்புதல் என்று கூறிற்று.
பரிதி: தெய்வம் பிரியமாகி வேண்டின வரங்கொடுத்து ரட்சிக்கும் என்றவாறு.
காலிங்கர்: தெய்வந் தானே மடியானதனைத் தாறு அறக்களைந்து மற்று அவன் உஞற்றின்கண் தான் வந்து முன் நிற்றலைச் செய்யும் என்றவாறு. [தாறு அறக்களைந்து- அடிக்குருத்து நீங்கும்படி; உஞற்றின்கண்-முயற்சியின் கண்]
காலிங்கர் குறிப்புரை: மடிதற்று என்பது மடியினைப் போக்கி என்றது.
பரிமேலழகர்: தெய்வம் ஆடையைத் தற்றுக் கொண்டு தான் முந்துற்று நிற்கும்.
பரிமேலழக குறிப்புரைர்: முயற்சியை அதன் காரணத்தால் கூறினார். தற்றுதல் - இறுக உடுத்தல். முன் நடப்பார் செயல் நியதிமேல் ஏற்றப்பட்டது.

'தெய்வம் ஆடையைத் தற்றுக் கொண்டு தான் முந்துற்று நிற்கும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தெய்வம் வரிந்து கட்டிக்கொண்டு முன்வரும்', 'அவனது வழிபடு தெய்வம், உடையை இறுக்கிக் கட்டிக்கொண்டு முன்னே வந்து நிற்கும்', '(உதவி செய்யத்) தெய்வம் கச்சை கட்டிக் கொண்டு தானே முன்வரும்', 'தெய்வம் ஆடையை இறுக்கிக் கட்டிக் கொண்டு உதவிசெய்ய முற்படும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தெய்வமே உடையை இறுக்கிக் கட்டிக்கொண்டு முன்னே வந்து நிற்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
என் குடும்பத்தை உயர்த்துவேன் என்று முயலும் ஒருவனுக்குத் தெய்வமே மடிதற்று முன்னே வந்து நிற்கும் என்பது பாடலின் பொருள்.
'மடிதற்று' என்றால் என்ன?

குடிசெய்வானுக்குத் தெய்வம் துணை நின்று அவன் முயற்சியை எளிதாக்கும்.

'என் குடும்பத்தை உயரச் செய்வேன்' என்று அதற்கான முயற்சிகளில் ஈடுபடும் ஒருவனுக்குத் தெய்வம் தன் ஆடையை இறுகக் கட்டிக்கொண்டு, துணைசெய்ய, முன்வந்து நிற்கும்.
ஒருவன் ஒரு செயலைத் தொடங்குகிறான். அதை எப்படியாவது முடித்துவிட வேண்டும் எனக் கடும் உழைப்பை மேற்கொள்கிறான்; தொடர்ந்து நேரம் காலம் பாராமல் உழைக்கிறான்; ஒருசமயம் சிக்கல் ஒன்று ஏற்பட்டு வேலை தடைப்படுகிறது. அதனால் அயர்வு உண்டாகிறது. அப்பொழுது எங்கிருந்தோ வந்த ஒருவன் 'தள்ளியிரு! நான் முடித்துத் தருகிறேன்' என்று சொல்லிக் கோளாறைச் சரிபண்ணிச் செயல் தொடரச் செய்கிறான். தொழிலைத் தொடங்கியவனுக்கு அந்நேரத்தில் எந்தவிதமான இன்பஉணர்வு உண்டாகும்? அதுபோலத் தான் பிறந்த குடியை உயரச் செய்வேன் என்னும் நோக்கில் உடலுழைப்பையும் அறிவையும் பயன்படுத்தித் தொடர்ச்சியாக வினையாற்றிக் கொண்டிருக்கிறான் ஒருவன். அப்பொழுது அவன் வேண்டாமலேயே தெய்வம், களத்தில் இறங்கப் போவது போல, தன் உடுப்பை இறுகக் கட்டிக்கொண்டு, அவனுக்கு உதவுவதற்காக ஆயத்தமாக வந்து நிற்குமாம். குடிசெய்வானுக்காக அந்தளவு தெய்வமும் துணை நிற்கும் என்கிறது குறள். குடிசெய்வான் ஒருவன் களைத்து விடக்கூடாது என்று தெய்வமே முன்வந்து உதவும் என்பது குறிப்பு. ஒருவன் தன் கடமையை உள்ளார்ந்து செய்யும்பொழுது உரிமை இயல்பாகக் கிடைத்து விடும் என்பதும் பெறப்படுகிறது.

குடி செய்வல் என்ற தொடர் 'தன் குடியை உருவாக்குவேன் அல்லது தளர்ந்த தன் குடியை உயரச்செய்வேன்' என உறுதி பூணுதலைக் குறிப்பது. குடியை மேன்மையும் பெருமையும் சீரும் செல்வமும் உடையதாகச் செய்வேன் எனச் சூளுரைப்பதையே குடி செய்வல் என்னும் தொடர் குறிக்கிறது. இங்கு சொல்லுதல் செயலையும் தழுவிற்று. அவ்விதம் சூளுரைத்துச் செயலில் முனையும் ஒருவனுக்குத் தெய்வம் தானாக முன்வந்து உதவும் என்கிறது குறள்.
அச்செயல்வீரன் தன்னம்பிக்கையுடன் கடுமையாக உழைத்துத் தன் குடியை வாழ வைப்பான்; அவனது ஊக்கமுடைமை, துன்பங்கண்டு துவளாமை, இடையறுவுபடாத உழைப்பு இவற்றால் அவன் குடி உயர்வுபெற்றே ஆகும் எனச் சொல்லவரும் வள்ளுவர் அம்முயற்சியுடையவனுக்குத் தெய்வம் தாமாக முன்வந்து உதவும் என்கிறார். தான் தொடங்கும் செயல்களுக்குத் தெய்வம் உதவும் என்ற நம்பிக்கையில் அவன் கடமையாற்றவில்லை. ஆனாலும் தெய்வம் உதவிசெய்து அவன் செயலை வெற்றிபெற வைக்கும். தெய்வத்தின் துணையுடன்தான் செயல் நிறைவேறியது என்பதை அவன் உணரமட்டுமே முடியும். தன் குடியை முன்னேறச் செய்வேன் என்று கடமை உணர்ந்து உழைக்கும் ஒருவனுக்கு ஆகூழும் விரைந்து முன்வந்து துணைபுரியும் என்பது கருத்து.
குடி செய்யும் முயற்சிக்குத் தெய்வம் துணை நிற்கும் என்பது வள்ளுவரின் உறுதியான நம்பிக்கை. 'தெய்வம்’ என்பதற்கு ஊழ், நல்வாய்ப்பு, வாழ்வாங்கு வாழும் பெருமக்கள், இயற்கை அறிவாற்றல், வழிபடும் தெய்வம் அல்லது இல்லுறை தெய்வம் எனப்பலவாறாகப் பொருள் உரைத்தனர். இவற்றுள் நல்லூழ் என்னும் உரை நன்று.
ஒரு சிலர் நாம் தேடிப்போனால் தெய்வம் உதவுமென்ற கருத்தில் வழிபாடு எல்லாம் செய்வர்; ஆனால் தாம் ஒன்றுமே செய்யாமல் இருந்து விட்டுப் பிறகு தெய்வத்தைப் பழிப்பர். செயல் வெற்றிபெற முழுமையாக முயன்று பாடுபடுகின்றவனுக்குத்தான் தெய்வம் முன்வந்து உதவி செய்யும். தெய்வத்தை வேண்டி வருந்தியழைக்க வேண்டியது இல்லை. அது தானாகச் சென்று உதவும். இத்தெய்வச் செயலையே தன் ஆடையை வரிந்து கட்டிக்கொண்டு உதவ முந்துவதாகக் குறள் கூறுகிறது.

இக்குறள் போன்ற நடையில் ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை (ஊக்கமுடைமை 594 பொருள்: உறுதியான ஊக்கம் உடையவனிடம் வழி கேட்டுச் செல்வம் சென்றடையும்) என்ற பாடல் ஊக்கம் உடைய ஓர் ஆளுமையாளரைப் போற்றிற்று.
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான்முந் துறும். (ஊழ் 380 பொருள்: ஊழைவிடப் பெரிய வலிமையுடையவை எவை உள்ளன? ஊழின் விளைவுகளை விலக்கிட என்ன வழிகளை எண்ணினாலும் அது முன்னால் வந்து நிற்கும்) என்ற ஊழின் வலிமை பற்றிய குறளில் மற்றொன்று சூழினும் 'தான்முந்துறும்' எனச் சொல்லப்பட்டது. இங்கு, உறுதி பூண்டு தன் குடியை உயர்த்தப் பாடுபடுவர்க்கு உதவ தெய்வம் 'தான் முந்துறும்' என்று கூறப்படுகிறது. இரண்டு இடத்திலும் 'தான் முந்துறும்' என்னும் தொடர் ஆட்சிபெற்றது.

'மடிதற்று' என்றால் என்ன?

'மடிதற்று' என்றதற்கு மடிதற்றுக் கொண்டு, பிரியமாகி, மடியான தனைத்தாறு அறக்களைந்து, ஆடையைத் தற்றுக் கொண்டு, ஆடையைக் கெட்டியாய்க் கட்டிக்கொண்டு, புடைவையை வலிந்து கட்டிக்கொண்டு, ஆடையை இறுகக் கட்டிக் கொண்டு, வேலையைச்செய்ய ஆயத்தமாய் உடையைத் தாறுபாய்ச்சிக் கட்டிக்கொண்டு, உடையை மடித்துக் கட்டிக் கொண்டு, வரிந்து கட்டிக்கொண்டு, உடையை இறுக்கிக் கட்டிக்கொண்டு, கச்சை கட்டிக் கொண்டு, ஆடையை இறுக்கிக் கட்டிக் கொண்டு, இடுப்பு வேட்டியை இறுக்க கட்டிக் கொண்டு, ஆடையை வரிந்து கட்டிக்கொண்டு என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

தொழில் புரியுங்கால் ஆடையை இறுக அணியும் வழக்கம் எங்கும் உண்டு. மடிதற்று என்பது துணியை இறுகக் கட்டிக்கொண்டு என்ற பொருள் தருவது. இது ஒரு மரபுத் தொடர். இங்கு துணி என்பது ஆடையை. உடையை இறுகக் கட்டிக்கொள்வது என்பது ஆடை உடுப்பதோர் திறன். அது தொழிலுக்கு ஆயத்தமாக இருப்பதைச் சுட்டும்.
மடி என்பதற்குச் சோம்பல் எனப் பொருள் கண்டு மடி தற்று என்னும் தொடர்க்கு சோம்பலை அறவே களைந்து எனக் காலிங்கர் பொருள் கூறினார். இவ்வுரை சிறப்பாக இல்லை.

'மடிதற்று' என்ற தொடர் ஆடையை இறுக உடுத்து எனப்பொருள்படும்.

என் குடும்பத்தை உயர்த்துவேன் என்று முயலும் ஒருவனுக்குத் தெய்வமே உடையை இறுக்கிக் கட்டிக்கொண்டு முன்னே வந்து நிற்கும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

குடிசெயல்வகையில் தெய்வத்தின் உதவி அதுவாக எந்த நேரமும் வரலாம்.

பொழிப்பு

என் குடும்பத்தை உயர்த்துவேன் என்று முயலும் ஒருவனுக்குத் தெய்வமே உடையை இறுக்கிக் கட்டிக்கொண்டு முன்வரும்.