இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1028



குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்

(அதிகாரம்:குடிசெயல்வகை குறள் எண்:1028)

பொழிப்பு (மு வரதராசன்): குடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு உரியகாலம் என்று ஒன்று இல்லை. சோம்பல் கொண்டு தம் மானத்தைக் கருதுவாரானால் குடிப்பெருமை கெடும்.



மணக்குடவர் உரை: குடியோம்புவார்க்குப் பருவம் இல்லை; தம் குடும்பத்தின் குறையை நினைத்து மடிசெய்து அதனை உயர்த்துவதனாலுள தாகும் குற்றத்தை நினைக்கக் குடிகெடும் ஆதலான்.
இது குடிசெய்வார் இன்பநுகர்ச்சியை விரும்பாரென்றது.

பரிமேலழகர் உரை: மடி செய்து மானம் கருதக் கெடும் - தம் குடியினை உயரச்செய்வார் அச்செயலையே நோக்காது காலத்தை நோக்கி மடியினைச் செய்துகொண்டு மானத்தையும் கருதுவராயின் குடி கெடும்; குடி செய்வார்க்குப் பருவம் இல்லை - ஆகலான் அவர்க்குக் கால நியதி இல்லை.
(காலத்தை நோக்கி மடி செய்தல் - வெயில் மழை பனி என்பன உடைமை நோக்கிப் 'பின்னர்ச் செய்தும்' என்று ஒழிந்திருத்தல். மானம் கருதுதல் - இக்குடியிலுள்ளார் யாவரும் இன்பமுற இக்காலத்துத் துன்பமுறுவேன் யானோ? என்று உட்கோடல். மேல் 'இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது' (குறள்-481) என்றது உட்கொண்டு, 'இவர்க்கும் வேண்டுமோ?' என்று கருதினும் 'அது கருதற்க' என்று மறுத்தவாறு.)

குன்றக்குடி அடிகளார் உரை: தன்குடியை உயரச் செய்யும் பணிகளில் ஈடுபடுவோருக்குப் பணி செய்தலுக்குரிய காலம் இல்லை; காலம் கருதிக் கடத்தலாகிய சோம்பல் இல்லை; மானமும் இல்லை. காலம்,சோம்பல், மானம் கருதினால் குடியை உயரச் செய்தலாகிய பணி கெடும்.
பருவம்: நல்ல நாள் பார்த்துக் காத்திருத்தல். மூடத்தனம் முயற்சியுடையார்க்கு ஆகாது. மடிசெய்தல்: வாழ்க்கையின் இயல்பு சுறுசுறுப்பு. சோம்பல் செயற்கை. சோம்பல் தோன்றும் களம் காலம் பார்த்துக் காத்திருத்தல். விதியின்பால் உள்ள நம்பிக்கை: துன்பத்தைச் சந்திக்கும் துணிவின்மை. மானம்: உதவும் உரிமையும் உடையார்மாட்டுப் பெருமை பாராட்டுதல் அல்லது மதிப்பினை எதிர்பார்த்தல்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
குடி செய்வார்க்குப் பருவம் இல்லை, மடி செய்து, மானம் கருதக், கெடும்.

பதவுரை: குடிசெய்வார்க்கு-குடும்பத்தை உயர்ச்செய்ய முயல்வார்க்கு; இல்லை-இல்லை; பருவம்-காலவாய்ப்பு; மடி-சோம்பல்; செய்து-செய்து; மானம்--பெருமை; இங்கே வீண் பெருமை, செருக்கு, தம் நிலையில் தாழாமை; கருத-நினைக்க; கெடும்-கெட்டுவிடும், இல்லையாகும்,


குடிசெய்வார்க்கு இல்லை பருவம் :

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குடியோம்புவார்க்குப் பருவம் இல்லை;
பரிப்பெருமாள்: குடியோம்புவார்க்கு நன்மைப் பருவம் இல்லையாம்;
பரிதி: தன்குடி தழைக்கவேண்டும் என்று விசாரிப்பார்க்குப் பருவமில்லை;
காலிங்கர்: இவ்வுலகத்துக்குப் பயிர் செய்வார்க்குப் பருவம் வேண்டினாற் போலக் குடிசெய்வார்க்கு ஒரு பருவம் பார்த்திருக்க வேண்டுவது இல்லை;
பரிமேலழகர்: ஆகலான் அவர்க்குக் கால நியதி இல்லை;

'குடியினை உயரச்செய்வார்குக் கால நியதி இல்லை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கடமை செய்வார்க்குக் காலம் என்பது இல்லை', 'குடும்பத்தை முன்னேறச் செய்வார்க்குச் சோம்பியிருந்து காலத்தை எதிர்பார்த்தல் என்பது கூடாது', 'குடித்தனப் பொறுப்பை நடத்துகிறவர்களுக்கு வேலை செய்யப் பருவகாலம் என்பது இல்லை (எப்போதும் உழைப்புதான்)', 'குடியினை உயரச் செய்வார்க்கு இன்ன காலம் என்று இல்லை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தம்குடியை உயரச் செய்யவேண்டும் என்று முயல்பவருக்கு இன்ன காலம் என்று ஒன்று இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

மடிசெய்து மானம் கருதக் கெடும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம் குடும்பத்தின் குறையை நினைத்து மடிசெய்து அதனை உயர்த்துவதனாலுள தாகும் குற்றத்தை நினைக்கக் குடிகெடும் ஆதலான். [மடிசெய்து-சோம்பி]
மணக்குடவர் குறிப்புரை: இது குடிசெய்வார் இன்பநுகர்ச்சியை விரும்பாரென்றது.
பரிப்பெருமாள்: தத்தம் குடும்பத்தின் குறையை நினைத்து மடிசெய்தலினால் உளதாகும் குற்றத்தை நினைக்கக் குடிகெடும் ஆகலான் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் துன்பத்திற்குக் கொள்கலமாக வேண்டும் என்றார்; அவ்வாறு துன்புற்று ஒழுகுதல் ஆகுமோ என்றார்க்குக் குடிசெய்வார் இன்பநுகர்ச்சியை விரும்பாரென்று கூறப்பட்டது.
பரிதி: மடித்த புத்தியும் மானமும் உண்டாகில் தன் குடிமை கெடும் என்றவாறு. [மடித்த - சோம்பிய]
காலிங்கர்: எனவே எஞ்ஞான்றும் இனிய பருவம் என இதனை இங்ஙனம் பெற்றுவைத்து இயற்றாது மடிப்பதும் செய்து மற்று இக்குடி தாங்குதற்கு யான் இக்கருமம் செய்வது என்னை என்று மானிக்கும் மானம் தான் கருதவே கெட்டுவிடும் அக்குடி என்றவாறு. [இயற்றாது - வினைசெய்யாமல்; மானிக்கும் - அபிமானிக்கும்]
பரிமேலழகர்: தம் குடியினை உயரச்செய்வார் அச்செயலையே நோக்காது காலத்தை நோக்கி மடியினைச் செய்துகொண்டு மானத்தையும் கருதுவராயின் குடி கெடும்;
பரிமேலழகர் குறிப்புரை: காலத்தை நோக்கி மடி செய்தல் - வெயில் மழை பனி என்பன உடைமை நோக்கிப் 'பின்னர்ச் செய்தும்' என்று ஒழிந்திருத்தல். மானம் கருதுதல் - இக்குடியிலுள்ளார் யாவரும் இன்பமுற இக்காலத்துத் துன்பமுறுவேன் யானோ? என்று உட்கோடல். மேல் 'இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது' (குறள்-481) என்றது உட்கொண்டு, 'இவர்க்கும் வேண்டுமோ?' என்று கருதினும் 'அது கருதற்க' என்று மறுத்தவாறு. [செய்தும் என்று ஒழிந்திருத்தல் - செய்வோம் என்று கூறிச் செய்யாது தவிர்ந்திருத்தல்; உட்கோடல் - கருதுதல்]

'மடியினைச் செய்துகொண்டு மானத்தையும் கருதுவராயின் குடி கெடும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சோம்பி வீண்பெருமை கருதின் குடிகெடும்', 'சோம்பலாக இருந்து கொண்டு வீண்பெருமையை நினைப்பாராயின், அவரது குடும்பம் கெட்டுவிடும்', 'அவர்கள் வேலைக்குச் சோம்பலுற்றாலும் (அல்லது) உழைப்புக்கு வெட்கப்பட்டாலும் குடும்ப நலம் கெட்டுப் போகும்', 'காலத்தை நோக்கிச் சோம்பராக இருந்து கொண்டு மானத்தையும் கருதுவாரானால் குடியானது அழியும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

சோம்பல் கொண்டு, வீண்பெருமை கருதுவாரேயானால் குறிக்கொண்டநோக்கம் கெட்டுப் போய்விடும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தம்குடியை உயரச் செய்யவேண்டும் என்று முயல்பவருக்கு இன்ன காலம் என்று ஒன்று இல்லை; சோம்பல் கொண்டு, மானம் கருதக் கெடும் என்பது பாடலின் பொருள்.
'மானம் கருதக் கெடும்' என்றால் என்ன?

குடிசெய்வார் ஓய்வொழிச்சலின்று முயல்வார்.

தன் குடும்பத்தை மேம்படுத்துவதற்கான செயலை மேற்கொண்டவருக்கு அச்செயலைச் செய்தவதற்கு உரிய காலம் என்று ஒன்று இல்லை; அவர் சோம்பலுற்று தமக்குள்ள பெருமையை எண்ணிப் பார்த்துக்கொண்டு இருப்பாரானால் அவரது நோக்கம் கெட்டுவிடும்.
குடி என்ற சொல் குடிசெயல்வகை அதிகாரத்தில் குடும்பத்தைக் குறிக்கும். குடி செய்தல் என்பது குடும்பப்பெருமையை உயரச்செய்ய உழைப்பதும் தாம் பிறந்த குடியில் உள்ள அனைவரையும் வளத்தோடும் மகிழ்வோடும் வாழச் செய்தலுமாகும். பயிர் வளர்ப்பவர் பயிர்செய்வார் எனப்படுவது போல, தான்பிறந்த குடியுயர உழைப்பவர் குடிசெய்வார் எனக் குறிக்கப்பெறுகிறார்.
தன் குடும்பத்திலுள்ளவர்களை உயர்த்தும் செயல்களில் முனைவோர்க்கு பருவம் என்ற ஒன்றில்லை; அவர் மடிசெய்யாது தன் கடமை நிறைவேறும்வரை கைஓய மாட்டேன் என்னும் உறுதியுடன் உழைப்பார்; வீண் பெருமையைக் கருதுவாரானால் அவரது குறிக்கோள் கெட்டுப்போகும். இவ்வாறு குடிசெய்வாரின் நடைமுறைச் செயல்பாடுகளை வகுத்துரைக்கும் பாடல் இது.

பருவம்:
பருவம் என்பது மழை, பனி, வெயில் முதலிய காலநிலைகளைக் குறிக்கும். பருவத்தே பயிர் செய் என்னும் ஆத்திச்சூடி. பருவநிலை மாற்றங்களை அறிந்து எந்த பருவத்தில் எதைப் பயிர் செய்தால் விளைச்சல் கைகூடி உழைப்புக்கேற்ற பலன் கிட்டும் என்பதை தெரிந்து பயிர் செய்வர். நவரை, சொர்ணவாரி, சம்பா, கார், குறுவை போன்ற பருவநிலைக்கு ஏற்றாற்போல் பயிர் செய்யப்படுகிறது.
ஆனால் குடிசெய்வார் பருவத்திற்காக அதாவது வாய்ப்பான காலத்திற்காகக் காத்திருக்க மாட்டார் என்கிறார் வள்ளுவர். பருவம் என்ற சொல்லுக்கு நல்ல காலம்-கெட்டகாலம் என்று நாள்-கோள்-கிழமை-நேரம் பார்த்தல், இளமை-மூப்பு என்றும் பொருள் கூறுவர்.
தன் குடும்ப மேம்பாட்டை எண்ணிக் கருமமே கண்ணாய் உழைக்கும் கடமை வீரர்க்குக் காலம் தெரியாது; அவருக்கு அது ஒரு தடையாக இருக்காது. 'நாள் உதவி செய்வது போல், நல்லவன் உதவி செய்ய மாட்டான்' என்று அமைதி கூறி 'இன்று நன்று, நாளை நன்று' எனக் கடமைகளைத் தள்ளிப்போடமாட்டார். உரிய நேரம் என்று ஒன்றுமில்லை; எந்த நேரமும் உகந்ததுதான்.
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது. (காலமறிதல் 481 பொருள்: காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும்; அதுபோல் பகையை வெல்லக் கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்) என்று காலமறிதல் அதிகாரத்தில் 'வெல்லக் கருதுவோர்க்கு அதற்கு ஏற்ற காலம் வேண்டும்' என்ற பொருளில் கூறப்பட்டதைச் சுட்டிக் காட்டும் பரிமேலழகர் அது இக்குறளுடன் முரண்பட்டதல்ல என்று கூறியுள்ளார்.

மடிசெய்து:
மடி என்பது சோம்பல். குடும்பத்தை முன்னேறச் செய்ய முயல்பவர் தன் இன்பங்கருதி சோம்பியிருந்து பின்னாலே செய்து கொள்ளலாம் என்று காலத்தாழ்ச்சி உண்டாக்க மாட்டார். சிலர் சோம்பலை முயன்று செய்கிறார்கள் என்ற பொருளில் 'மடி செய்து' என்று அதை எள்ளலுடன் கூறுகிறார் வள்ளுவர். சோம்பலைச் செய்வான் சுற்றத்தைப் பேணஇயலாது; அவனால் குடி செய்தலும் ஆகாது. சோம்பியிருத்தலைச் சுட்டிக்காட்ட 'மடி செய்து' என்றார்.

குடிசெய்வார்க்குச் சொல்லப்பட்டது இச்செய்யுள். ஆனாலும் இது பொதுத்தொண்டில் ஈடுபட்டிருப்போருக்கும் நல்லுரை கூறும் வளஞ்செறிந்த உட்கருத்து கொண்ட குறளாக உள்ளது.
பெரியார் ஈ வே ரா இக்குறள் தன் போராட்டத்திற்கு ஊக்கம் கொடுத்ததாகச் சொல்வார்; இதைத் தம் வாழ்வியல் கோட்பாடாகக் கடைப்பிடித்தார். 'அவரது பொது வாழ்வில் அவர் சந்தித்த அவமானங்கள் பலப்பல - கல்லடி, அழுகிய முட்டை வீச்சு, செருப்பு வீச்சு, ஏச்சுப் பேச்சு - இவை தொடக்க காலங்களில் பரப்புரைகளின்போது அவர் எதிர்கொண்டவை. “பொது வாழ்வில் மானம் பாராதே” என்று தன் தொண்டர்களுக்கும் அறிவுரை கூறினார். அந்த வகையில்தான் இக்குறளை ஏற்றிப் போற்றினார்' (வா செ குழந்தைசாமி).
இக்குறளுக்கு தான் வாழ்ந்த வாழ்க்கையால் உரை சொன்னவர் என்று அறிஞர் அண்ணாவைக் காட்டாகக் கூறுவார் குன்றக்குடி அடிகளார்.

'மானம் கருதக் கெடும்' என்றால் என்ன?

'மானம் கருதக் கெடும்' என்றதற்குக் குற்றத்தை நினைக்கக் குடிகெடும், மானம் உண்டாகில் தன் குடிமை கெடும், மானம் தான் கருதவே கெட்டுவிடும் அக்குடி, மானத்தையும் கருதுவராயின் குடி கெடும்; மானத்தை நினைத்தானாகில் அக்குடி கெடும், மானத்தையும் கருதுவாராயின் குடிகெடும், மானத்தைக் கருதுவாரானால் குடிப்பெருமை கெடும், தமக்குள் வேண்டாத மானத்தைப்பற்றியும் எண்ணிக்கொண்டு இருப்பாராயின் குடி வளர்ச்சி கெடும், மானம் கருதினால் குடியை உயரச் செய்தலாகிய பணி கெடும், வீண்பெருமை கருதின் குடிகெடும், வீண்பெருமையை நினைப்பாராயின், அவரது குடும்பம் கெட்டுவிடும், உழைப்புக்கு வெட்கப்பட்டாலும் குடும்ப நலம் கெட்டுப் போகும், மானத்தைக் கருதிக் கொண்டு இருப்பின் குடிகெடும், மானத்தைக் கருதினால் குடிகெடும், மானத்தையும் கருதுவாரானால் குடியானது அழியும், தமக்குள்ள பெருமையையும் எண்ணிப் பார்த்துக்கொண்டு இருப்பாரானால் அந்தக் குடும்பமே கெட்டுவிடும், பொய்யான மான உணர்வும் கருதினால் குடிநலம் குலையும், தன்மானத்தையும் பெரிதாய்க் கருதுவராயின், அவர் குடிகெடும், தன் குடிக்குச் செய்யும் காரியத்தில் உயர்வு தாழ்வு கருதுவானாகில் குடியின் பெருமை கெடும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

குறளில் மானம் என்ற சொல் வருமிடங்களிலெல்லாம் 'பெருமை' என்ற பொருளிலேயே ஆளப்பட்டிருக்கிறது. ஆனால் இங்கு அச்சொல் தன்நிலையில் தாழாதும் இருக்க வேண்டும் என்ற வீண்பெருமை என்ற பொருளில் வந்துள்ளது. குடிசெய்வார் அவ்வீண்பெருமை கருதக்கூடாது என்கிறது குறள்.
வீண்பெருமை என்பது பொய்மானமாகும். பொய் மானம் குடி அழியச்செய்வது; முயற்சியை அறவே கொல்வது. தொழில்களில் உயர்வு தாழ்வு கருதி எத்தொழிலும் பார்க்க முனையாது வாளா இருத்தல், சில இடங்களுக்குச் செல்வது தங்கள் நிலைக்கு இழிவெனக் கருதுவது, தம் தகுதி என்ன அவர் தகுதி என்ன அவரை நாடி தாம் செல்வதா என்பது போன்ற அணுகு முறை, தாம் சந்திக்கப்போகிறவர் தம்மை மதிக்கமாட்டார் என எண்ணுவது போன்றவை பொய்மானத்துக்கான சில காட்டுக்கள். குடிசெய்வார் தன்மானம் கருதினால் அவரால் குடியை உயரச் செய்ய இயலாது. அவர் தன்னலம் அற்று, மானம் கடந்தவராக வாழ்பவராவார். துன்பத்திற்குக் கொள்கலமாக இருக்கும் அவர் குடும்பநன்மை கருதிப் பொய்ம்மையான தன்மானத்தையும் ஒதுக்கி வைப்பார். அவர் மானம் கருதுவாராயின் அவரது நோக்கம் கெட்டுவிடும்.
தம் தகுதிக்கு இது ஏற்ற செயலல்ல என்று கருதாமல், குடும்ப நன்மைக்கான செயல் எதுவாயினும் அதைத் தயங்காமல் செய்யாவிட்டால் குடி உயரமுடியாது, பொய் மானத்தை எண்ணிக் கொண்டிருந்தால் குறிக்கோளை எய்த முடியாது.

மானம் பற்றி ஒரு அதிகாரமே செய்த வள்ளுவரா மானம் கருத வேண்டாம் என்கிறார்? மயிர் நீப்பின் உயிர்வாழாக் கவரிமான் போன்று மானம் நீங்குமானால் மனிதன் இறந்துவிட வேண்டும் என்றவர்தானா இங்கு இப்படிக் கூறுகிறார்? ஏன் இந்த முரண்பாடு? என்ற கேள்விகள் எழுவது இயற்கை.
முன்னர் உயிரைவிட மானத்தைப் பெரிதென மதித்து நடக்க வேண்டும் என்றது மாந்தரின் தனி வாழ்வு பற்றியது. இந்தக் குறள் குடிஉயர்வு கூறும் பொதுவாழ்வு பற்றியதாதலால், குடும்பநன்மைக்காக வறட்டுமானம் பார்க்கவேண்டாம் எனச் சொல்லப்படுகிறது.

'மானம் கருதக் கெடும்' என்ற தொடர் வீண்பெருமை கருதின் குடிசெயல் கெடும் என்ற பொருள் தருவது.

தம்குடியை உயரச் செய்யவேண்டும் என்று முயல்பவருக்கு இன்ன காலம் என்று ஒன்று இல்லை; சோம்பல் கொண்டு, வீண்பெருமை கருதுவாரேயானால் குறிக்கொண்டநோக்கம் கெட்டுப் போய்விடும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பொய்மானம் பார்த்தால் குடிசெயல்வகை இயலாது.

பொழிப்பு

குடி மேம்பாட்டுக் கடமை செய்வார்க்குக் காலம் என்பது இல்லை; சோம்பியிருந்து வீண்பெருமை கருதினால் செயல்நோக்கம் கெடும்.