இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1021



கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுஉடையது இல்.

(அதிகாரம்:குடிசெயல்வகை குறள் எண்:1021)

பொழிப்பு (மு வரதராசன்): குடிப்பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை.

மணக்குடவர் உரை: ஒருவன் கருமஞ்செய்தற்கு நான் ஒழியே னென்று சொல்லுகின்ற பெருமைபோலப் பெருமையுடையது பிறிது இல்லை.

பரிமேலழகர் உரை: கருமம் செயக் கைதூவேன் என்னும் பெருமையின் - தன் குடிசெய்தற்பொருட்டுத் தொடங்கிய கருமம் முடியாமையின் எண்ணிய கருமம் செய்தற்கு யான் கையொழியேன் என்னும் ஆள்வினைப்பெருமை போல; ஒருவன் பீடு உடையது இல் - ஒருவனுக்கு மேம்பாடுடைய பெருமை பிறிது இல்லை.
('குடி செயற்கு' என்பது அதிகாரத்தான் வந்தது. பலவகைத்தாய கருமச்செயலாற் செல்வமும் புகழும் எய்திக் குடி உயரும் ஆகலின், 'பீடுடையது இல்' என்றார். குடிசெய்தற் கருமமே நடத்தலால் 'தன் கருமஞ் செய்ய' என்றும், 'பிறர் கருமஞ் செய்ய' என்றும் உரைப்பாரும் உளர். தன் கருமமும் அதுவேயாகலானும், பிறர் ஏவல் செய்தல் தலைமை யன்மையானும் அவை உரையன்மை அறிக.)

வ சுப மாணிக்கம் உரை: குடும்பக்கடமை செய்யப் பின்வாங்கேன் என்ற பெருமைபோலப் பெருமையுடையது வேறில்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கருமம் செயக் கைதூவேன் என்னும் பெருமையின் ஒருவன் பீடுஉடையது இல்.

பதவுரை: கருமம்-செயல்; செய-செய்ய; ஒருவன்-ஒருவன்; கைதூவேன்-கையொழியேன், முயற்சி நீங்கேன்; என்னும்-என்கின்ற; பெருமையின்-பெருமைபோல்; பீடு-பெருமை; உடையது-உடையது; இல்-இல்லை.


கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் பெருமையின்;

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவன் கருமஞ்செய்தற்கு நான் ஒழியே னென்று சொல்லுகின்ற பெருமைபோல;
பரிப்பெருமாள்: ஒருவன் கை கருமஞ்செய்தலினாலே உண்டிலேன் என்று சொல்லுகின்ற பெருமைபோல
பரிதி: என் உறவின் முறையார் கிளைபெருத்து வாழ நான் அவர்களுக்குக் கொடாமல் இருக்க என்னும் பெருமையில்;
காலிங்கர்: ஒருவன் தன் குடிகளாம்படி எப்பொழுதும் அதற்கேற்ற கருமம் செய்யவேண்டிப் பிறிதொன்றிற்கு அக்கை உதவேன் என்னும் இப்பெருமை போல;
பரிமேலழகர்: தன் குடிசெய்தற்பொருட்டுத் தொடங்கிய கருமம் முடியாமையின் எண்ணிய கருமம் செய்தற்கு யான் கையொழியேன் என்னும் ஆள்வினைப் பெருமை போல; [கையொழியேன் - விடேன்; ஆள்வினை-முயற்சி]
பரிமேலழகர் குறிப்புரை: 'குடி செயற்கு' என்பது அதிகாரத்தான் வந்தது. [அதிகாரத்தான் - குடிசெயல்வகை என்னும் இவ்வதிகாரத்தால்]

'தன் குடிசெய்தற்பொருட்டுத் தொடங்கிய கருமம் முடியாமையின் எண்ணிய கருமம் செய்தற்கு யான் கையொழியேன் என்னும் ஆள்வினைப் பெருமை போல' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தான் தோன்றிய குடும்பத்தை உயர்த்தற் பொருட்டு நினைத்த செயலை நிறைவேற்ற யான்இடையிலே அதனைக் கைவிட்டு நீங்கேன் என்று ஒருவன் கூறும் முயற்சியின் பெருமைபோல', '(குடித்தனத்தை மேன்மைப்படுத்த) ஒருவன் 'காரியம் செய்வதற்குப் பின்வாங்கமாட்டேன்' என்று உறுதி கொள்ளும் பெருமையைவிட', 'தன் குடிகளுக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்வதற்குச் சலிக்க மாட்டேன் என்னும் பெருமைபோல', 'தன் குடி உயர எண்ணிய கருமம் செய்து முடிப்பதற்கு யான் கையொழியேன் என்று கொள்ளும் முயற்சிப் பெருமைபோல' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தன் குடும்பக்கடமை செய்து முடிப்பதற்கிடையிலே அதனைக் கைவிட்டு நீங்கேன் என்ற முயற்சிப் பெருமைபோல ஒருவனுக்கு என்பது இப்பகுதியின் பொருள்.

பீடுஉடையது இல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பெருமையுடையது பிறிது இல்லை.
பரிப்பெருமாள்: பெருமையுடையது பிறிது இல்லை என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் எப்பொழுதும் இடைவிடாமல் வினை செய்ய வேண்டும் என்றார்; அது, பெரியோரால் செய்யல் ஆகுமோ என்றார்க்கு இதனின் மிகுந்தது ஓர் பெருமை இல்லை என்றது.
பரிதி: பெருமை இல்லை என்றவாறு.
காலிங்கர்: பெருமையுடையது பிறிதில்லை என்றவாறு.
பரிமேலழகர்: ஒருவனுக்கு மேம்பாடுடைய பெருமை பிறிது இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: பலவகைத்தாய கருமச்செயலாற் செல்வமும் புகழும் எய்திக் குடி உயரும் ஆகலின், 'பீடுடையது இல்' என்றார். குடிசெய்தற் கருமமே நடத்தலால் 'தன் கருமஞ் செய்ய' என்றும், 'பிறர் கருமஞ் செய்ய' என்றும் உரைப்பாரும் உளர். தன் கருமமும் அதுவேயாகலானும், பிறர் ஏவல் செய்தல் தலைமை யன்மையானும் அவை உரையன்மை அறிக.

'பெருமையுடையது பிறிது இல்லை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மேம்பாடு உடையது வேறில்லை', 'சிறப்புடையது வேறொன்றுமில்லை', 'ஒருவனுக்கு மேம்பாடு வேறில்லை', 'மேம்பாடு உடைய பெருமை கிடையாது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மேம்பாடு உடையது வேறில்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கருமம் செயக் கைதூவேன் என்ற முயற்சிப் பெருமைபோல ஒருவனுக்கு மேம்பாடு உடையது வேறில்லை என்பது பாடலின் பொருள்.
'கருமம் செயக் கைதூவேன்' என்பதன் பொருள் என்ன?

தன் குடி உயர மேற்கொண்ட செயல் முடியும்வரை ஓயமாட்டேன் என்னும் சூளுரை.

தான் செய்ய மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்கும்வரை சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் சொல்லும் பெருமையைப் போல மேன்மை தருவது வேறு ஒன்றும் இல்லை.
இங்கு சொல்லப்படுவது, அதிகாரம் நோக்கி, அவன் குடி உயர மேற்கொண்ட செயலாம். குடிசெய்வான் தன் குடும்பப் பொறுப்பை வாழ்வின் இயல்பு என எண்ணுவான். குடிதாங்குதலை அவனது பிறப்புக்கடன் என்று கருதுவானாதலால் குடிசெயல் 'கருமம் செய்' எனச்சொல்லப்பட்டது. குடியை உயர்த்தும் பணியில் ஈடுபட்டு 'அக்கருமம் முடியும்வரை கைசோரமாட்டேன்' என்று அவன் சொல்லும் அம்முயற்சிப் பெருமையையினும் மேம்பாடான பீடு பிறிதொன்றில்லை.

குடிசெய்வான் தன் குடி மேன்மைக்காக செயலூக்கம் கொள்ளுதல் இங்கு பேசப்படுகிறது. தன் குடும்பத்தை மேன்மேலும் உயரச் செய்வதற்காக ஒரு நல்ல குடும்பத் தலைவன் உறுதி பூணுவதைச் சொல்வது இது. தனது குடிநலம் மேன்மேலும் ஓங்குவதற்கான முயற்சியை மேற்கொண்டு, அது நிறைவேறும்வரையில், எந்தச் சூழலிலும், எந்த இடத்திலும், அதில் கை சோராமல் உழைப்பேன் என்று சொல்லும் முயற்சிப் பெருமை மிகவும் பாராட்டுதற்குரியது என்கிறது பாடல்.

'கருமம் செயக் கைதூவேன்' என்பதன் பொருள் என்ன?

'கருமம் செயக் கைதூவேன்' என்றதற்கு கருமஞ்செய்தற்கு ஒழியேன். ஒருவன் கை கருமஞ்செய்தலினாலே உண்டிலேன், என் உறவின் முறையார் கிளைபெருத்து வாழ நான் அவர்களுக்குக் கொடாமல் இருக்க, ஒருவன் தன் குடிகளாம்படி எப்பொழுதும் அதற்கேற்ற கருமம் செய்யவேண்டிப் பிறிதொன்றிற்கு அக்கை உதவேன், எண்ணிய கருமம் செய்தற்கு யான் கையொழியேன், கை ஒழியாமல் பல கருமங்களையும் செய்யுமாயின், முயற்சியைக் கைவிடேன், கைப்பணிகளிலிருந்து விலகாமல் தொடர்ந்து செய்யும், பின்வாங்கேன், இடையிலே அதனைக் கைவிட்டு நீங்கேன், பின்வாங்கமாட்டேன் என்று உறுதி கொள்ளும், ஒருவன் கையை (துணையை) வேண்டேன், சலிக்க மாட்டேன், கையொழியேன் என்று கொள்ளும் முயற்சி, நான் சோர்வடைய மாட்டேன், பின்வாங்க மாட்டேன் என்று ஒருவன் பூணும் உறுதி, முயற்சியைக் கைவிடேன், கைவிடாது செய்யும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

மணக்குடவர் 'ஒருவன் கை கருமஞ் செய்ய துவ்வேன் என்னும் பெருமையின்' எனக்கூட்டி, 'ஒருவன் உழைக்க நான் உண்ணமாட்டேன்; என்னும் பெருமையின் பெருமையுடையதில்லை' என்ற பொருளில் உரை செய்தார். ‘கைதூவேன்’ என்பதற்கு உண்ணேன் எனப் பொருள் கொள்கிறார் இவர். இவ்வுரைக்குத் ‘துவேன்’ எனப் பாடமிருப்பின் அமையும் (இரா சாரங்கபாணி). பரிப்பெருமாள் உரை 'ஒருவன் கை எப்போதும் ஓய்வின்றி உழைத்துக்கொண்டேயிருப்பதால் உண்ண நேரமில்லை; அது அவனுக்குப் பெருமை. அதிற் சிறந்த பெருமையில்லை' என்கிறது. பரிதி உரை 'குடிப்பிறந்தார் கிளைத்துவாழ நான் அவர்களுக்குக் கொடுக்காம லிருப்பேன் ஆக என்பதைக் காட்டிலும் உயர்ந்த பெருமை இல்லை. தன் உதவியின்றியே அவர்களை வாழ வைத்த பெருமையின் பெருமையில்லை' என்ற பொருளில் உள்ளது. காலிங்கர் கருதுவது 'எப்போதும் தங்குடிகள் ஆகும் வண்ணம் கருமஞ் செய்ய வேண்டி, சுற்றத்திற்கு உதவ வேண்டியல்லாமல் பிறிதொன்றற்கும் அக்கையை உதவேன் என்னும் பெருமை' என்பது. பரிமேலழகர் ‘தூவல்’ என்பதற்கு ஒழிதல் எனப் பொருள் கொண்டு 'தங்குடியுயரத் தொடங்கிய கருமம் முடிவு போகாமையின் யான் கைஒழியேன் என்னும் பெருமை' என்கிறார்.
இரா சாரங்கபாணி 'கைதூவேன் என்பதற்குக் கையொழியேன், உண்ணேன் கொடேன், கை உதவேன், ஒருவன் துணையை வேண்டேன் எனப் பல பொருள்கள் கூறப்பட்டுள. 'கை தூவல்' என்பது கையுதிர்க் கோடல், கைவிடல் என்பன போன்ற மரபுத் தொடர். தூவல் என்பதற்கு ஒழிதல் என்று பொருள். ஆதலால் கையொழியேன் என்னும் பரிமேலழகர் பொருள் சிறக்கும். கைவிடல் என்ற பொருளிலே தான் சங்க இலக்கியங்களில் இச்சொல் பயின்று வருகிறது. ஊணொலி அரவமொடு கை தூவாளே (புறம் 334:7 பொருள்: அரவ ஒலி உண்டாக்குவதைக் கைவிட மாட்டாள்) பெருங்கை தூவா வறனில் புலத்தி (நற்றிணை 90:3 பொருள்: பெரிதும் தன் கை ஒழியாத வறுமையில்லாத ஆடையொலிப்பவள்) வந்த புலவர்க்கு அளியொடு கை தூவலை (கலித்தொகை 50:17 பொருள்: புலவர்களுக்கு மழையைப் போல வழங்கும்) என்னும் ஆட்சி காண்க' என்று விளக்கம் தருவார்.

குடிசெய்வார் அனைவரும் தத்தம் குடிஉயரும் செயலைத் தொடங்கிய பின் அது முடியும்வரை 'கைதூவேன்' என உறுதிமொழி எடுக்கச் சொல்வதுபோல் அமைந்துள்ளது இக்குறள்.

'கருமம் செயக் கைதூவேன்' என்ற தொடர் குடும்பக் கடமை ஆற்றுவதில் கைசோர மாட்டேன் என்னும் பொருளது.

தன் குடும்பக்கடமை செய்து முடிப்பதற்கிடையிலே அதனைக் கைவிட்டு நீங்கேன் என்ற முயற்சிப் பெருமைபோல ஒருவனுக்கு மேம்பாடு உடையது வேறில்லை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

குடிசெயல்வகையில் வேண்டத்தக்க மன உறுதி.

பொழிப்பு

தனது குடும்பக்கடமை செய்து முடிப்பதற்கிடையில் அதனை ஒழியேன் என்ற பெருமைபோல ஒருவனுக்கு மேம்பாடுடையது வேறில்லை.