இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1026



நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்

(அதிகாரம்:குடிசெயல்வகை குறள் எண்:1026)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கிக் கொள்வதாகும்.

மணக்குடவர் உரை: ஒருவனுக்கு மிக்க ஆண்மையென்று சொல்லப்படுவது, தான் பிறந்த குடியை ஆளுதலுடைமையை மனத்தின்கண் போக்கிக் கோடல்.
ஆளுதலுடைமை- குடியோம்புதலை எப்பொழுதுஞ் சிந்தித்தல். எனவே இது குடியோம்புதல் வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: ஒருவற்கு நல்லாண்மை என்பது - ஒருவனுக்கு நல்லாண்மை என்று உயர்த்துச் சொல்லப்படுவது; தான் பிறந்த இல்லாண்மை ஆக்கிக்கொளல் - தான் பிறந்த குடியினையாளுந் தன்மையைத் தனக்குளதாக்கிக் கோடல்.
(போர்த்தொழிலின் நீக்குதற்கு 'நல்லாண்மை' என விசேடித்தார். குடியினையாளுந் தன்மை - குடியிலுள்ளாரை உயரச்செய்து தன் வழிப்படுத்தல். அதனைச் செய்துகோடல் நல்லாண்மையாமாறு வருகின்ற பாட்டால் பெறப்படும்.)

சி இலக்குவனார் உரை: ஒருவனுக்கு நல்லாண்மை என்று உயர்த்திச் சொல்லப்படுவது தான் பிறந்த குடியினை ஆளும் தன்மையைத் தனக்கு உளதாக்கிக் கோடல்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒருவற்கு நல்லாண்மை என்பது தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல்.

பதவுரை: நல்லாண்மை-நல்ல ஆளுந்தன்மை; என்பது-என்று சொல்லப்படுவது; ஒருவற்கு-ஒருவர்க்கு; தான்-தான்; பிறந்த-தோன்றிய; இல்லாண்மை-குடியை ஆளுந்தன்மை; ஆக்கி-ஆகும்படி செய்து; கொளல்-பெறுதல்.


நல்லாண்மை என்பது ஒருவற்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவனுக்கு மிக்க ஆண்மையென்று சொல்லப்படுவது;
பரிப்பெருமாள்: ஒருவனுக்கு மிக்க ஆண்மையென்று சொல்லப்படுவது;
பரிதி: நல்ல சேவகன் என்று பேர்பெறுவது;
காலிங்கர்: நல் ஆண்மைப்பாடு என்று சிறப்பித்து உரைக்கப்படுவது ஒருவனுக்கு யாதோ எனின்;
பரிமேலழகர்: ஒருவனுக்கு நல்லாண்மை என்று உயர்த்துச் சொல்லப்படுவது;
பரிமேலழகர் குறிப்புரை: போர்த்தொழிலின் நீக்குதற்கு 'நல்லாண்மை' என விசேடித்தார். [விசேடித்தார் -ஆண்மை என்று வாளா கூறாது நல்லாண்மை என்றது போர்த் தொழிலைப் பிரித்துக் காட்டுதற்காம்]

'ஒருவனுக்கு மிக்க ஆண்மையென்று சொல்லப்படுவது' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒருவர்க்கு நல்லவீரம் என்பது', 'ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று உயர்த்திச் சொல்லப்படுவது', 'ஒருவனுக்குச் சிறப்பு தரும் வலிமை என்று சொல்லத்தக்கது எதுவென்றால்', 'ஒருவனுக்கு ஆண்மை என்று சொல்லப்படுவது யாதெனில்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒருவனுக்கு நல்லஆண்மை என்று சொல்லப்படுவது என்பது இப்பகுதியின் பொருள்.

தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தான் பிறந்த குடியை ஆளுதலுடைமையை மனத்தின்கண் போக்கிக் கோடல்.
மணக்குடவர் குறிப்புரை: ஆளுதலுடைமை- குடியோம்புதலை எப்பொழுதுஞ் சிந்தித்தல். எனவே இது குடியோம்புதல் வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: தான் பிறந்த குடியை ஆளுதலுடைமையை மனத்தின்கண் பெருக்கிக் கோடல்.
பரிப்பெருமாள் குறிப்புரை: ஆளுதலுடைமை- குடியோம்புதலை எப்பொழுதுஞ் சிந்தித்தல். எனவே இது குடியோம்புதல் வேண்டுமென்றது.
பரிதி: தான் பிறந்த குடியை இரட்சிப்பது என்றவாறு.
காலிங்கர்: தான் பிறந்த குடியினைத் தளரா நெறியினை ஆண்டு ஒழுகும் மாட்சிமையை நாளும் அழியாமல் ஆக்கிக்கொண்டு ஒழுகுதல் என்றவாறு. [தளரா நெறி-தாழாத நெறிகளை]
பரிமேலழகர்: தான் பிறந்த குடியினையாளுந் தன்மையைத் தனக்குளதாக்கிக் கோடல்.
பரிமேலழகர் குறிப்புரை: குடியினையாளுந் தன்மை - குடியிலுள்ளாரை உயரச்செய்து தன் வழிப்படுத்தல். அதனைச் செய்துகோடல் நல்லாண்மையாமாறு வருகின்ற பாட்டால் பெறப்படும். [அதனைச் செய்து கோடல் - தன்வழிப்படுதலைச் செய்து கொள்ளுதல். கோடல்-கொள்+தல்]

'தான் பிறந்த குடியினையாளுந் தன்மையைத் தனக்குளதாக்கிக் கோடல்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தான்பிறந்த வீட்டுப்பொறுப்பைத் தனதாக்கிக் கொள்ளுவதே', 'தான் தோன்றிய குடும்பத்தை ஆளும் தன்மையை தனதாக்கிக் கொள்ளுதல்', 'அவன், தான் பிறந்த குடும்பத்தை வலிமையுள்ளதாகச் செய்து கொள்வதே', 'தான் பிறந்த குடியினை ஆளுந் தன்மையைத் தனக்கு உண்டாக்கிக் கொள்ளுதல்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தான் பிறந்த இல்லத்தின் ஆளுந் தன்மையைத் தனக்கு உண்டாக்கிக் கொள்ளுதல் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒருவனுக்கு நல்லஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த இல்லாண்மை ஆக்கிக்கொளல் என்பது பாடலின் பொருள்.
'இல்லாண்மை ஆக்கிக்கொளல்' குறிப்பது என்ன?

குடும்பத்தை ஆள்வதும் நல்லவீரம்தான்.

ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது அவன் தான் பிறந்த குடும்பத்தை ஆளும் சிறப்பைத் தன்னுரிமையின் கீழ் கொண்டுவருவது ஆகும்.
குடிசெய்வான் தன் குடும்பத்தின் ஆட்சியைத் தன்பொறுப்பில் ஏற்றுக்கொண்டு அதன் மேன்மைக்கு உழைப்பான். அவனது முதல் செயல்: குடும்பத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அதைத் தனது உடைமையாக்கிக் கொள்ளுதல்.
இல்லாண்மையே நல்லாண்மை என்கிறது இச்செய்யுள். ஆண்மை என்று சொல்லப்படுவது பொதுவாகப் பகையை அழிக்கும் வீரத்தைக் குறிக்கும். ஆக்க வேலையிலும் ஆண்மை விளங்கச் செய்யலாம். தான் பிறந்த குடியை ஆளும் தன்மையைத் தனக்கு உரியதாக்கிக்கொள்வதை நல்லஆண்மை என்னும் சொல்லால் குறிக்கிறார் வள்ளுவர். இங்கே குடிசெய்வான் தன் மெய்யை வருத்திப் பொருள் குவித்துக் குடும்பத்தை மேன்மையுறச் செய்வதால் அதற்கு நல்லாண்மை எனப் பெயர் சூட்டினார் அவர்.
இக்குறளில் படைக்கப்பட்டுள்ள நல்லாண்மை-இல்லாண்மை எனும் சொல்லாட்சிகள் படிப்பதற்கு இன்பமூட்டுவனவாக உள்ளன.

'இக்குறட்பாவை (இந்திய விடுதலைப் போராட்ட வீரர்) வ உ சிதம்பரம் சொல்லாத மேடையே இல்லை எனலாம். “இல்” என்பதற்கு வ உ சி கொண்ட புதுப் பொருள் “நாடு” என்பதாகும். “ஒவ்வொரு இந்தியனும் தான் பிறந்த நாட்டை அந்நியரிடமிருந்து மீட்டுத் தனக்கே உரியதாக ஆக்கிக் கொள்வதுதான் நல்ல ஆண்மையாகும்” என்று வ உ சி விளக்கம் தருவார். தம்மீது நடந்த ராஜத்துவேஷ வழக்கில் அவர் குற்றவாளிக் கூண்டிலே நின்றிருந்த போதும் தமது வாக்கு மூலத்திலே இந்தக் குறட்பாவை இணைத்து வைத்தார்' என்று தமது நூலில் குறித்துள்ளார் ம பொ சிவஞானம்.

'இல்லாண்மை ஆக்கிக்கொளல்' குறிப்பது என்ன?

'இல்லாண்மை ஆக்கிக்கொளல்' என்றதற்குத் தான் பிறந்த குடியை ஆளுதலுடைமையை (குடியோம்புதலை எப்பொழுதுஞ் சிந்தித்தல்) மனத்தின்கண் போக்கிக் கோடல், தான் பிறந்த குடியை இரட்சிப்பது, தான் பிறந்த குடியினைத் தளரா நெறியினை ஆண்டு ஒழுகும் மாட்சிமையை நாளும் அழியாமல் ஆக்கிக்கொண்டு ஒழுகுதல், தான் பிறந்த குடியினையாளுந் தன்மையைத் தனக்குளதாக்கிக் கோடல், தான் பிறந்த குடியினைத் தானாளுந் தன்மை தனதாக்கிக் கொள்தல், தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கிக் கொள்வது, தான் பிறந்த குடியினை ஆளும் தலைமையைத் தனதாக்கிக் கொள்ளுதல், தான் பிறந்த குடியைத் தனக்கு உரிமையாக்கித் தலைவன் ஆதல் ஆம், தான்பிறந்த வீட்டுப்பொறுப்பைத் தனதாக்கிக் கொள்ளுவது, தான் தோன்றிய குடும்பத்தை ஆளும் தன்மையை தனதாக்கிக் கொள்ளுதல், அவன் பிறந்த குடும்பத்தை ஆண்மையுடையதாகச் செய்து கொள்ளுதல், பிறந்த குடியைப் பிற குடிகளினும் மேம்பட்டதாக்கிக் கொள்வது, தான் பிறந்த குடியினை ஆளுந் தன்மையைத் தனக்கு உண்டாக்கிக் கொள்ளுதல், தான் பிறந்த குடியினை ஆளும் தன்மையைத் தனக்கு உளதாக்கிக் கோடல், தான் பிறந்த குடும்பத்தை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கிக் கொள்வது, தான் பிறந்த குடும்பத்தின் பொறுப்புக்களைத் தானே தாங்கிக்கொள்ள முன்வருவது, தான் பிறந்த குடியினைத் தனக்கு உரிய குடியாகவும் தான் பெருமைப்படக்கூடிய குடியாகவும் ஆக்கிக்கொள்வது என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இல் எனும் சொல் இங்கு குடும்பம் என்னும் பொருள் தரும். இல்லாண்மை என்பது தன் குடும்பத்தை ஆளுந்தன்மையைக் குறிக்கும்.
இல்லாண்மை ஆக்கிக்கொளலாவது அவ்வாளுந்தன்மையைத் தனது உடைமையாக வைத்திருக்கும் நிலையைச் சொல்வது. உடைமையாக வைத்திருத்தல் என்றதை இன்று மனித மேம்பாட்டு மேலாண்மைத் துறையில் வழங்கப்பெறும் Ownership என்னும் சொல்லுடன் ஒப்பு நோக்கலாம். அது முடிவெடுத்தல், சிக்கல் தீர்த்தல், பகிர்ந்தளித்தல், மற்றவர்களைக் குறை கூறாமை, எல்லாவற்றிற்கும் தான் பொறுப்பேற்றல், அவ்வப்பொழுது முக்கிய நிகழ்வுகளில் கருத்துரைத்தல், தன்னுடைய செயலாக்கங்கள் என்பனவற்றை உள்ளடக்கியது. உடைமையாகக் கொள்பவன் குடும்ப நன்மைக்காகத்தான் எல்லாம் செய்வான் என்ற நம்பிக்கையை, மற்றவர்களுக்கு உண்டாக்கும்.
தான் பிறந்த குடும்பத்தின் பொறுப்பு, சுமை, இவற்றைத் தானே ஏற்றுக் கொள்ளல், தனது முழு உழைப்பையும் குடிக்காகத் தருதல், தம்மைச் சார்ந்தோரின் வாழ்க்கையை வளமுறப் பேணிப் பாதுகாத்தல்; இனிய வாழ்க்கை நடைபெறத் தொடர்ந்து முயற்சித்தல் ஆகியன இல்லாண்மையின் சில கூறுகள். இல்லத்தில் திருவோங்கச் செய்து அதன் பெருமையை உயர்த்துதல்தான் நோக்கம். சுருக்கமாகச் சொல்வதானால் இல்லாண்மை ஆக்கிக்கொளல் என்பது தன் செயலாக்கங்களால் தான் எல்லார்க்கும் தலைவன் ஆதல். இதைப் பரிமேலழகர் குடியிலுள்ளாரை உயரச்செய்து தன்வழிபடுத்தல் என்பார்.

ஒருவனுக்கு நல்லஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த இல்லத்தின் ஆளுந் தன்மையைத் தனக்கு உண்டாக்கிக் கொள்ளுதல் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

குடிசெயல்வகைக்குக் குடும்பத்தைத் தன்போக்கில் கொண்டுசெல்லும் ஆளுமை வேண்டும்.

பொழிப்பு

ஒருவர்க்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடும்பத்தை ஆளும் தன்மையை தனதாக்கிக் கொள்ளுதல்.