இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1025குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு

(அதிகாரம்:குடிசெயல்வகை குறள் எண்:1025)

பொழிப்பு (மு வரதராசன்): குற்றம் இல்லாதவனாய்க் குடி உயர்வதற்கான செயல் செய்து வாழ்கின்றவனை உலகத்தார் சுற்றமாக விரும்பிச் சூழ்ந்து கொள்வர்.

மணக்குடவர் உரை: குற்றப்பட ஒழுகுத லினாய்த் தன்குடியை யோம்பி வாழுமவனை உலகத்தாரெல்லாரும் தமக்குற்ற சுற்றமாக நினைத்துச் சூழ்ந்துவரும்.

பரிமேலழகர் உரை: குற்றம் இலனாய்க் குடி செய்து வாழ்வானை - குற்றமாயின செய்யாது தன் குடியை உயரச் செய்தொழுகுவானை; சுற்றமாச் சுற்றும் உலகு - அவனுக்குச் சுற்றமாக வேண்டித் தாமே சென்று சூழ்வர் உலகத்தார்.
(குற்றமாயின, அறநீதிகட்கு மறுதலையாய செயல்கள். தாமும் பயன் எய்தல் நோக்கி யாவரும் சென்று சார்வர் என்பதாம்.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: யாதொரு குற்றமும் இல்லாதவனாய்த் தனது குடியைச் சிறப்படையச் செய்து வாழ்கின்றவனைத் தம் உறவினனாக உலகத்தார் கருதி அவனைச் சூழ்ந்து கொண்டிருப்பர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு.

பதவுரை: குற்றம்-குற்றம்; இலனாய்-இல்லாதானாய்; குடி-குடும்பம்; செய்து-இயற்றி, உயரச்செய்து; வாழ்வானை-வாழ்க்கை நடத்துபவனை; சுற்றமாக-கிளைஞராக; சுற்றும்-சூழ்ந்து கொள்ளும்; உலகு-உலகத்தார்.


குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குற்றப்பட ஒழுகுத லினாய்த் தன்குடியை யோம்பி வாழுமவனை;
பரிப்பெருமாள்: குற்றப்பட ஒழுகுத லினாய்த் தன்குடியை யோம்பி வாழுமவனை;
பரிதி: குற்றத்தை நீக்கிக் குடியை ஆக்கிச் செய்வானை;
காலிங்கர்: பிறர் இவன் குடி ஓம்பாக் குணமிலன் என்று உரைக்கும் குற்றம் இலனாய் மற்று என்றும் குடிவாழ்தலைச் செய்து வாழ்வானையே;
பரிமேலழகர்: குற்றமாயின செய்யாது தன் குடியை உயரச் செய்தொழுகுவானை;
பரிமேலழகர் குறிப்புரை: குற்றமாயின, அறநீதிகட்கு மறுதலையாய செயல்கள். [அறநீதி- அறநூல்களில் சொல்லப்பட்ட நீதிகள்; மறுதலையாய- மாறுபட்ட]

'குற்றப்பட ஒழுகுத லினாய்த் தன்குடியை யோம்பி வாழுமவனை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'குற்றமின்றிக் குடும்பம் காத்து வாழ்பவனை', 'முயற்சியின்மை, அறிவின்மை ஆகிய குற்றமில்லாதவனாகிக் குடும்பத்தை முன்னேறச் செய்து வாழ்பவனை', 'குற்றமில்லாத வழியில் பாடுபட்டுத் தன் குடித்தனத்தை உயர்வடையச் செய்து வாழ்கின்றவனை', 'குற்றம் ஒன்றும் இல்லாதவனாய்த் தன் குடியை உயரச் செய்து வாழ்வானை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

குற்றமின்றி, குடும்பத்தை நல்ல முறையில் உருவாக்கி, வாழ்பவனை என்பது இப்பகுதியின் பொருள்.

சுற்றமாச் சுற்றும் உலகு.:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உலகத்தாரெல்லாரும் தமக்குற்ற சுற்றமாக நினைத்துச் சூழ்ந்துவரும்.
பரிப்பெருமாள்: உலகத்தாரெல்லாரும் தமக்குச் சுற்றமாக நினைத்துச் சூழ்ந்து நிற்பர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது, குடி ஓம்புவார்க்குப் பயன் கூறிற்று.
பரிதி: சுற்றமாகச் சுற்றும் உலகம்.
காலிங்கர்: சுற்றமாகச் சூழ்ந்து வாழும் இவ்வுலகு. காலிங்கர் குறிப்புரை: எனவே தன் குடிதாங்கலே அன்றித் தன்னை அடைந்தோர் அனைவரையும் தாங்கும் தன்மையவன் என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: அவனுக்குச் சுற்றமாக வேண்டித் தாமே சென்று சூழ்வர் உலகத்தார்.
பரிமேலழகர் குறிப்புரை: தாமும் பயன் எய்தல் நோக்கி யாவரும் சென்று சார்வர் என்பதாம். [யாவரும் சென்று சார்வர் - எல்லோரும் குற்றமிலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சென்று சேர்வர்]

'உலகத்தாரெல்லாரும் தமக்குற்ற சுற்றமாக நினைத்துச் சூழ்ந்துவரும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சுற்றமாக உலகம் சுற்றிக் கொள்ளும்', 'உலகத்தார் சுற்றமாகச் சூழ்ந்து கொள்வர்', 'உலகத்தார் உறவாகச் சூழ்ந்து கொண்டு (மகிழ்வார்கள்)', 'உலகத்தார் அவனுக்குச் சுற்றமாதல் விரும்பித் தாமே சென்று அவனைச் சுற்றுவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

உலகோர் சுற்றமாகச் சூழ்ந்து கொள்வர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
குற்றம் இலனாய், குடும்பத்தை நல்ல முறையில் உருவாக்கி வாழ்பவனை உலகோர் சுற்றமாகச் சூழ்ந்து கொள்வர் என்பது பாடலின் பொருள்.
'குற்றம் இலனாய்' குறிப்பது என்ன?

குற்றம்செய்து குடிஉயர்த்தல் ஆகாது.

குற்றமற்றவராக இருந்து தன் குடும்பத்தை உயர்ச்செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வாழ்பவனை உலகத்தார் வந்து சுற்றத்தார் போன்று சூழ்ந்து கொண்டிருப்பர்.
ஒருவன் சமூக ஒழுக்கக் குறைகள், குற்றங்கள் இல்லாதவனாக தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டுள்ளான். அவன்பால் எக்குற்றமும் நெருங்காமல் காத்துக்கொள்கிறான். தான் ஏதும் குற்றம் செய்யாமலிருந்து தன் குடும்பத்தை பெருமைமிக்கதாக ஆக்கிக்கொண்டு வருகிறான். அத்தகையன் ஊரார் அனைவரது நம்பிக்கைக்கும் உரியவனாகி விடுவான். குற்றமில்லாது அறவழியில் குடியை உயர்த்தி வாழ்வோனை உலகோர் அனைவரும் உறவுகொண்டாடிச் சூழுவர். அவர்கள் எல்லோரும் அவனைத் தன் உறவினர் என்று சொல்லி உரிமை கொண்டாடி அவனைச் சுற்றிச்சுற்றி வருவர்; அவனைத் தனது உடைமையாகக் கருதுவர். குற்றம் ஏதும் செய்யாமல், தன் குடிக்காக உழைக்கும் ஒருவன் உலகோரிடை விரும்பத்தக்கவனாகி மக்கள் செல்வாக்கு உள்ளவனாக விளங்குவான்.
அறமல்லா வழிகளில் செல்வம் சேர்த்துக் குடும்பத்தைக் காப்பவனை உலகம் மதியாது என்பதும் பெறப்படுகிறது.

'குற்றம் இலனாய்' குறிப்பது என்ன?

'குற்றம் இலனாய்' என்ற தொடர்க்குக் குற்றப்பட ஒழுகுதலினாய், குற்றத்தை நீக்கி, பிறர் இவன் குடி ஓம்பாக் குணமிலன் என்று உரைக்கும் குற்றம் இலனாய், குற்றமாயின செய்யாது, குற்றமான காரியங்களைச் செய்யாமல், குற்றமாயின செய்யாது, குற்றம் இல்லாதவனாய், குற்றங்களின் நீங்கினவனாய், தாம் பிறந்த குடியினருக்குக் குற்றம் செய்யும் இயல்பு இல்லாதவனாக, குற்றமின்றி, முயற்சியின்மை, அறிவின்மை ஆகிய குற்றமில்லாதவனாகி, குற்றமில்லாத வழியில் பாடுபட்டு, குற்றம் இல்லாதவனாய், யாதொரு குற்றமும் இல்லாதவனாய், குற்றம் ஒன்றும் இல்லாதவனாய், உள்ளத்தாலும் உடலாலும் குற்றமற்றவராக இருந்து, தவறுகள் இழைக்காமல், முயற்சியின்மையும் அறிவின்மையுமாகிய குற்றங்கள் இல்லாதவனாய் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

குற்றம் புரிந்து குடி உயரச் செய்தல்வேண்டாம் என்று சொல்வது இப்பாடல். குற்றம் என்றது அறத்துக்கும் நடுவுநிலைக்கும் மாறான செயல்கள்.
பொருள்செயல்வகையில் செல்வம் உடையவரை எல்லாரும் மதித்து நடப்பர் எனக் கூறி. அவ்வொண்பொருளைக் 'காழ்ப்ப' அதாவது மிகுதியாக இயற்ற அறிவுரை பகர்ந்தார், ஆனால் அங்கும், அப்பொருளானது செய்திறன் அறிந்து, குற்றமின்றி, வந்த பொருளாக இருக்க வேண்டும் எனவும் மற்றொரு பாடலில் கூறினார். அதுபோலவே குடிசெயல்வகை அதிகாரத்து இப்பாடலிலும் குற்றம் இலனாய்க் குடியை உயர்த்து என அறிவுறுத்துகிறார். அதாவது எந்தவகையிலேனும் குடிசெய்தல் வேண்டும் எனச் சொல்லப்படவில்லை. 'குடியை உயர்த்துவதற்காக' என்ற பெயரில் குற்றங்கள் செய்யக்கூடாது என்பது கருத்து.

'குற்றம் இலனாய்' என்ற தொடர் குற்றம் இல்லாதவனாய் எனப்பொருள்படும்.

குற்றமின்றி, குடும்பத்தை நல்ல முறையில் உருவாக்கி வாழ்பவனை உலகோர் சுற்றமாகச் சூழ்ந்து கொள்வர் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

குடிசெயல்வகையில் வெற்றிகாண்பவனிடம் உலகோர் அனைவரும் நெருக்கம் காட்டுவர்.

பொழிப்பு

குற்றப்படாத குடும்பத்தைச் சிறப்படையச் செய்து வாழ்பவனை உலகம் சுற்றமாகச் சுற்றிக் கொள்ளும்.