'நாணுடைமை' என்பது, குற்றமான எதையும் செய்யக் கூசுவது. அதாவது பழியானது, பாவமுள்ளது என்று உலகம் இகழ்ந்துள்ள காரியங்களைச் செய்துவிடாதபடி கவனித்துக் கொள்வது.
- நாமக்கல் இராமலிங்கம்:
மாந்தர்க்குரிய நற்பண்புகளில் ஒன்றாக நாணுடைமையைக் கருதுகிறார் வள்ளுவர். செய்யத் தகாத இழி செயல்களுக்கும், பழி செயல்களுக்கும்
கூச்சப்படுவது நாண் ஆகும்.
நற்குடிமக்கள் மேற்கொள்ள வேண்டிய குணங்களையும் குறிக்கோள்களையும் கடமைகளையும் சிறப்புக்களையும் தொகைவகை செய்து கூறும் குடிமை அதிகாரத்து
மூன்று பாடல்கள் (951, 952, 960) நாணுடைமை பற்றிப் பேசுகின்றன. வள்ளுவர் இலக்கியலான நிறைமாந்தரை சான்றோர் என அழைப்பார்.
அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால்பு ஊன்றிய தூண் (சான்றாண்மை 983) என்ற பாடல் சான்றாண்மைக்கு
வரையறை செய்யும். அதன்படி சான்றாண்மையின் ஐந்து தூண்களில் ஒன்றாக நாண் அமைகிறது.
தீவினைஅச்சம் அதிகாரம் கொடிய செயல்களைச் செய்ய அச்சப்படவேண்டும் என எச்சரிப்பது. நாணுடைமை அதிகாரம் பழியுண்டாக்கும் செயல்களுக்கு
வெட்கப்படுதலைச் சொல்வது.
நாணுடைமை
நாண் என்பது தக்க இவை; தகாதன இவை எனப்பகுத்தறியும் மாந்தர்க்குரிய சிறந்த குணம் ஆகும்.
இது உலகோர் கண்டு 'சீ' என்று வெட்கப்பட்டு வெறுக்கும் செயல்களை மேற்கொள்ளவோ செய்யவோ நாணுதலைக் குறிப்பது.
நாணுடைமை என்பதற்கு விளக்கமாக அறம் பொருள் இன்பம் ஆகியனவற்றை ஒருவன் பெறும்போது பிறர்பழியாமல் ஒழுகுதல் என்பார் மணக்குடவர்.
நாணம் என்ற சொல்லைக் கேட்டவுடன் பெண்களுக்கு உண்டாகும் வெட்கம் என்பதையே இன்றும் அனைவரும் எண்ணுகிறோம்.
இதனால் வள்ளுவர் அதுவேறு என்பதை முதலிலேயே விளக்கிவிடுகிறார்-தாம் செய்யும் தொழிலால் நாணுதலே நாணம்; பிற காரணங்களான் நாணுதல் குடும்பப்பெண்கள் நாணுவதாம் என்று அதிகாரத்து முதற்குறள் சொல்கிறது. நாணம் இரு பாலார்க்கும் பொது; தகாதசெயல் செய்ய முடியாதவாறு தடுக்கும் நாண் உயர்குணம் கொண்ட ஆண் பெண் இருபாலரிடமும் காணப்படும் நாணம்; இயல்பான் எழுவது மகளிர் நாணம் என வேறுபடுத்திக் காட்டித் தெளிவுபடுத்தப்படுகிறது.
தகாதவற்றைச் செய்ய வெட்கப்படுவது ஒரு பண்பட்ட மனநிலை. இதுவே சான்றாண்மைக்கு அடையாளம்.
உணவு உடை இணைவிழைச்சு என்றிவை எல்லார்க்கும் பொது; நாணமே நன்மக்கட்குச் சிறப்பு. உயிர் உடம்பைப் பற்றி நிற்பது. சால்புடைமை நாணைப்பற்றி நிற்பது.
நன்மக்களுக்கு நாணமே அணியாம்; அஃதொழிந்த பெருமிதநடை பார்ப்போர்க்கு கண்நோவாகவே இருக்கும்.
நாணுடைமை கொண்டோர் பழிச்செயல்கள் புரிய நாணுவர். தம்மால் பிறர்க்கு பழி உண்டாகிவிடக்கூடாது என்பதிலும் விழிப்புடன் இருப்பர்.
உயர்ந்த குணங்களை உடையவர்கள் நாணமாகிய வேலியை அமைத்துக் கொள்ளாமல், அகன்ற உலகில் வாழ்வதை விரும்பமாட்டார்கள்.
அவர்கள் உயிரைவிட நாணத்தையே பெரிதாகக் கருதுவர்.
நாணவேண்டியவைகளுக்குத் தான் நாணானாயின் அவனைவிட்டு அறக்கடவுள் நாணிநீங்கும்.
ஒழுக்கம் தவறுமாயின் குடிப்பிறப்புமட்டும் அழியும்; வெட்கமில்லாமை எல்லா நலங்களையும் அழிக்கும்.
நாணம் இல்லாதவன் மனிதனில்லை, பொம்மலாட்டப் பாவைதான்.
இவை இக்குறள் தரும் செய்திகள்.
சான்றோர் என்பவர்க்கு நாண் குணம் இன்றியமையாததது. அது இருக்கும்போது அது அணியாக அமைந்து அவர் நடையில் உண்மையான பெருமிதம் தோன்றும். அந்த நாணம் நீங்கிவிட்டால் அவர் பெருமிதத்தோடு நடந்து செல்வதைப் பார்ப்பவர்க்கு ஏளனமாகத்தான் இருக்கும். இதைப் பிணிநடை எனச் சொல்கிறது அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல் பிணியன்றோ பீடு நடை (1014) என்ற பாடல்.
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம் பேணலர் மேலா யவர். (1016) என்ற குறள் மேலான குணம் கொண்டோர் நாண் என்னும் வேலி அமைத்துக்கொள்ளாமல் இவ்வுலகில் வாழவிரும்பார்கள் என்கிறது. இந்த நாண்வேலிதான் அவர்கள் மீது பழி ஏதும் ஏற்படாதவண்ணம் பாதுகாக்கும். நாண்வேலி என்ற தொடர் பொருள் பொதிந்து சிறப்பாக உள்ளது.