இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1013ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு

(அதிகாரம்:நாணுடைமை குறள் எண்:1013)

பொழிப்பு (மு வரதராசன்): எல்லா உயிர்களும் ஊனாலாகிய உடம்பை இருப்பிடமாகக் கொண்டவை; சால்பு என்பது, நாணம் என்று சொல்லபடும் நல்ல பண்பை இருப்பிடமாகக் கொண்டது.மணக்குடவர் உரை: பலவகை உயிரும் மேற்கூறிய எல்லாவற்றினும் உண்டியைக் கருதிற்று: அதுபோலச் சால்பு, நாணமாகிய நன்மையைக் கருதிற்று.
இது சான்றோர்க்கு நற்குணங்கள் பலவும் வேண்டுமாயினும், இஃது இன்றியமையாதென்றது.

பரிமேலழகர் உரை: உயிர் எல்லாம் ஊனைக் குறித்த - எல்லா உயிர்களும் உடம்பினைத் தமக்கு நிலைக்களனாகக் கொண்டு அதனை விடா: சால்பு நாண் என்னும் நன்மை குறித்தது - அது போலச் சால்பு நாண் என்னும் நன்மைக் குணத்தைத் தனக்கு நிலைகளனாகக் கொண்டு, அதனை விடாது.
('உடம்பு' என்பது சாதியொருமை. நன்மை - ஆகுபெயர். உயிர் உடம்போடு கூடியல்லது பயனெய்தாதவாறு போலச் சால்பு நாணோடு கூடியல்லது பயன் எய்தாது என்பதாம். 'ஊணைக் குறித்த' என்று பாடம் ஓதுவாரும் உளர்.

நாமக்கல் இராமலிங்கம் உரை: இந்த நாணுடைமைக் குணம் எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு ஒருவன் சான்றாண்மை என்ற நிறைகுணம் உள்ளவனாகிறான். உயிர்களெல்லாம் உடம்பை ஆதாரமாகக் கொண்டு இயங்குவன. சான்றாண்மை என்ற பெரும் குணம் பழிக்கஞ்சும் நாணுடைமை என்ற நற்குணத்தை ஆதாரமாகக் கொண்டது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உயிர் எல்லாம் ஊனைக் குறித்த; சால்பு நாண் என்னும் நன்மை குறித்தது.

பதவுரை: ஊனை-உடம்பை, உண்டியை, உணவை; குறித்த-நிலைக்களமாகக் கொண்ட, இருப்பிடமாகக் கொண்டன; உயிரெல்லாம்-உயிர்கள் அனைத்தும்; நாண்-தகாதன செய்ய நாணுதல்; என்னும்-என்கின்ற; நன்மை-நன்மைக் குணம்; குறித்தது-நிலைக்களமாகக் கொண்டது; சால்பு-நற்குணங்களால் நிறைந்தமை.


ஊனைக் குறித்த உயிரெல்லாம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('ஊணைக் குறித்த' பாடம்): பலவகை உயிரும் மேற்கூறிய எல்லாவற்றினும் உண்டியைக் கருதிற்று:
பரிப்பெருமாள் ('ஊணைக் குறித்த' பாடம்): பலவகை உயிரும் மேற்கூறிய எல்லாவற்றினும் உண்டியைக் கருதிற்று:
பரிதி: காயத்தை இடங்கொண்டு இருக்கும் உயிர்போல; [காயம் - உடம்பு]
காலிங்கர் ('ஊணைக் குறித்த' பாடம்): தத்தம் உடம்பை வளர்த்தற்பொருட்டு ஊணை நத்தி வாழும் உயிர் அவை; [நத்தி - விரும்பி
பரிமேலழகர்: எல்லா உயிர்களும் உடம்பினைத் தமக்கு நிலைக்களனாகக் கொண்டு அதனை விடா:
பரிமேலழகர் குறிப்புரை: 'உடம்பு' என்பது சாதியொருமை. 'ஊணைக் குறித்த' என்று பாடம் ஓதுவாரும் உளர்.

மணக்குடவரும் பரிப்பெருமாளும் 'ஊணை' எனப் பாடம் கொண்டனராதலால் 'பலவகை உயிரும் மேற்கூறிய எல்லாவற்றினும் உண்டியைக் கருதிற்று' என்று இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கரும் 'ஊணை' எனப் பாடங் கொண்டுள்ளதால் 'தத்தம் உடம்பை வளர்த்தற்பொருட்டு ஊணை நத்தி வாழும் உயிர் அவை' எனப் பொருளுரைத்தார். பரிதி 'காயத்தை இடங்கொண்டு இருக்கும் உயிர்போல' என்றார். பரிமேலழகர் 'எல்லா உயிர்களும் உடம்பினைத் தமக்கு நிலைக்களனாகக் கொண்டு அதனை விடா' என உரைத்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'உயிரெல்லாம் உடம்பைப் பற்றி நிற்கின்றன', 'பலவகையான உயிர்கள் எல்லாம் உணவை அடிப்படையாகக் கொண்டவை', 'உயிர்கள் எல்லாம் உடம்பை நிலைக்களமாக உடையன', 'எல்லா உயிர்களும் உடம்பினைத் தமக்கு இருப்பிடமாகக் கொண்டு அதனைவிடா' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உயிர்கள் எல்லாம் உடம்பை நிலைக்களமாக உடையன என்பது இப்பகுதியின் பொருள்.

நாண்என்னும் நன்மை குறித்தது சால்பு :

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதுபோலச் சால்பு, நாணமாகிய நன்மையைக் கருதிற்று.
மணக்குடவர் குறிப்புரை: இது சான்றோர்க்கு நற்குணங்கள் பலவும் வேண்டுமாயினும், இஃது இன்றியமையாதென்றது.
பரிப்பெருமாள்: அதுபோலச் சால்பு, நாணலாகிய நன்மையைக் கருதிற்று.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது சான்றோர்க்கு நற்குணங்கள் பலவும் வேண்டுமாயினும், ஈது இன்றியமையாதென்றது.
பரிதி: நாண் என்னும் நன்மையைக் குறித்திருக்கும் சால்பு என்றவாறு.
காலிங்கர்: அதுபோல மக்கட்பிறப்புத் தன்னினும் உணர்வு இலராகிய மக்களெல்லாம் ஒழுகுப; இனி அவ்வாறன்றி மற்றுத் தம்முறைமைக்கு ஒரு குறை வருதலை நாணுவதோர் நாண் என்று உரைக்கப்படும் நன்மையை வளர்த்தலைக் குறித்து ஒழுகுவர் உலகத்துச் சால்புடை மக்கள் என்றவாறு.
பரிமேலழகர்: அது போலச் சால்பு நாண் என்னும் நன்மைக் குணத்தைத் தனக்கு நிலைகளனாகக் கொண்டு, அதனை விடாது.
பரிமேலழகர் குறிப்புரை: நன்மை - ஆகுபெயர். உயிர் உடம்போடு கூடியல்லது பயனெய்தாதவாறு போலச் சால்பு நாணோடு கூடியல்லது பயன் எய்தாது என்பதாம்.

'அது போலச் சால்பு என்னும் நன்மைக் குணத்தைத் தனக்கு நிலைகளனாகக் கொண்டு, அதனை விடாது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நிறைகுணம் வெட்கத்தைப் பற்றி நிற்கின்றது', 'அதுபோலச் சால்பு என்னும் நிறைபண்பு நாண் என்னும் நன்மைக் குணத்தை அடிப்படையாகக் கொண்டது', 'சால்பு என்பது நாண் என்னும் நற்குணத்தை நிலைக்களமாக உடையது', 'அதுபோல, நற்குணங்களின் நிறைவு என்பது நாண் எனப்படும் நன்மைக் குணத்தைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்டுள்ளது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

சான்றாண்மை நாண் என்னும் நல்ல குணத்தைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்டுள்ளது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உயிர்கள் எல்லாம் ஊனைக் குறித்த; சான்றாண்மை நாண் என்னும் நல்ல குணத்தைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்டுள்ளது என்பது பாடலின் பொருள்.
'ஊனைக் குறித்த' குறிப்பது என்ன?

நாண் இல்லை என்றால் சான்றாண்மை இல்லை.

உயிர்களெல்லாம் ஊனாலாகிய உடம்பைத் தமக்கு இருப்பிடமாகக் கொண்டு உள்ளன. அதுபோல நாணம் என்று சொல்லப்படும் நன்மையை இருப்பிடமாகக் கொண்டது சால்பு ஆகும்.
உயிர்கள் எல்லாம் உடலை இருப்பிடமாகக் கொண்டுள்ளதால் உயிர் தங்கியிருப்பதற்கு உடல் இன்றியமையாத தேவை. புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு. (நிலையாமை 340 பொருள்; உடம்பில் ஒதுக்குக் குடியாயிருந்த உயிர்க்கு புகுந்து தங்குதற்கு நிலையான ஒரு இல்லம் அமைந்திடவில்லையே. ஐயோ!) என்ற குறள் உயிர்களெல்லாம் ஊனுடலை இருப்பிடமாகக்கொண்டு வாழ்வன என்பதை உறுதிப்படுத்தும்.
உடல் இல்லையென்றால் உயிர் இல்லை; அதுபோல சான்றோர் நல்ல குணங்கள் யாவும் பெற்றிருந்த போதிலும் நாணம் என்னும் சிறப்பு குணம் இருந்தால்தான் சால்பு நிலைத்திருக்கும். ‘நாணம்’ என்னும் குணத்தைச் ‘சால்பு’ ஒரு போதும் விடஇயலாது. ஏனெனில், பிறர் பழிகூறக்கூடிய செயலைக் கண்டு நாணாவிடில், இதர நல்ல குணங்கள் யாவும், பொருளில்லாமல் போகும். ஆகவே, பண்பட்ட மனநிலை நிலைப்பதற்கு நாணம் இன்றியமையாததாகிறது. அதுவே தகாத செயல் செய்ய முடியாதபடி தடுக்கக்கூடியது. நாணம் உள்ள இடத்திலேயே சான்றாண்மையும் விளங்கும். சான்றாண்மை நாணம் சார்ந்தது.

எல்லா நல்ல குணங்களும் நிறையப் பெற்ற சான்றாண்மையானது நாணம் என்னும் சிறப்புக் குணத்தைப்பற்றி நிற்கிறது. சான்றோர் பழிக்குரிய செயலைக் கண்டு நாணாது போனால் அவரது மற்ற நல்ல குணங்கள் எல்லாம் சிறப்பழிந்து போகும். நாணுடைமை நீங்குமானால், ஒருவரது மேன்மையும் நீங்கும் என்பதும் இக்குறளால் உணர்த்தப்படுகிறது. அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால்பு ஊன்றிய தூண் (சான்றாண்மை 983 பொருள்: அன்புடைமை, இழிசெயலுக்கு நாணுதல், பொதுநல ஈடுபாடு, இரக்கம், வாய்மை ஆகிய ஐந்தும் சால்பினைத் தாங்கிநிற்கும் தூண்களாம்) என்ற பாடலில் நாண் என்னும் குணம் சால்பைத் தாங்கி நிற்கும் ஐந்து தூண்களில் இரண்டாவது தூண் என்று முன்பே சொல்லப்பட்டது. எனவே, சால்பு என்னும் நிறைகுணம் நிலைத்தற்கு நாணம் மிகமிகத் தேவையாகும்.

'ஊனைக் குறித்த' குறிப்பது என்ன?

'ஊனைக் குறித்த' என்ற தொடர்க்கு உண்டியைக் கருதிற்று('ஊண் பாடம்), காயத்தை இடங்கொண்டு இருக்கும், உடம்பை வளர்த்தற்பொருட்டு ஊணை நத்தி('ஊண் பாடம்), உடம்பினைத் தமக்கு நிலைக்களனாகக் கொண்டு அதனை விடா, உடம்பைத் தமக்கு நிலையாகக் கொண்டிருப்பது, ஊனைக் குறித்து விடாதிருக்கும், ஊனாலாகிய உடம்பை இருப்பிடமாகக் கொண்டவை, உடம்பையே தமக்கு அடிப்படை நிலையாகக்கொண்டு அதை விட்டுப் பிரியா, உடம்பினைப் பற்றுக்கோடாக உடையன, உடம்பைப் பற்றி நிற்கின்றன, உணவை அடிப்படையாகக் கொண்டவை, உடம்பை ஆதாரமாகக் கொண்டு இயங்குவன, உணவைக் குறித்தே இயங்குவன, உடம்பை நிலைக்களமாக உடையன, உடம்பினைத் தமக்கு இருப்பிடமாகக் கொண்டு அதனைவிடா, ஊனாலாகிய உடம்பைத் தமக்கு இருப்பிடமாகக் கொண்டு உள்ளன, உடலைச் சார்ந்தே இருக்கிறது, உடலைப் பற்றி நிற்கின்றன என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

மணக்குடவர் 'ஊணைக்குறித்த' எனப் பாடங் கண்டார். இதனால் 'உயிரெல்லாம் உண்டியைக் கருதிற்று' எனக் கூறினார். இவ்வாறு உரைக்க உண்டி முதற்றே உணவின் பிண்டம் (புறநானூறு 18 பொருள்: உணவை முதலாக உடைத்து அவ்வுணவால் உளதாகிய உடம்பு) என்ற பழம்பாடல் அவர்க்கு உதவுகிறது. இதன் கருத்து உடம்பு உணவால் வளர்தலின், உணவின் பிண்டம் எனப்பட்டது என்பது. 'உயிர்கட்குப் பலவகைத் தேவைகளிருப்பினும் அவற்றுட் சிறந்தது உணவு. அதுபோலச் சான்றோர்க்கு நற்குணங்கள் பலவும் வேண்டுமாயினும், இது இன்றியமையாதென்றது' என்பது மணக்குடவரின் உரைக்கருத்து. இவரது கருத்தைத் தழுவி காலிங்கர் 'தத்தம் உடம்பை வளர்க்க ஊணைவிரும்பி வாழ்வன உயிர்கள். அது போல மக்களுள்ளும் உணர்வுடையோர் நாணைக் குறித்து வாழ்வர்' என்கிறார்.
மற்றவர்கள் உடம்பின்றி உயிர் உலவ முடியாது என்பதால் 'ஊனைக் குறித்த உயிரெல்லாம்' எனப்பாடங்கொண்டு ஊன் - ஊனினாகிய உடம்பு சொல்லப்படுவதாகக் கொண்டு ஊன் - உடம்பு' எனப் பொருள் கண்டனர்.
ஊணா? ஊனா? இவற்றுள் எது சரி? ஊண்உடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல நாணுடைமை மாந்தர் சிறப்பு. என முன் குறளில் கூறியிருத்தலாலும் நாணென்னும் என்னும் தொடர்க்கு இயைதலானும் ஊண் என்னும் பாடமே சிறக்கும் என்பார் இரா சாரங்கபாணி. ஆனால் 'வள்ளுவர் பொருட்சிறப்பையன்றித் தொடைச்சிறப்பைக் கருதாதவராதலானும் 'ஊனைக் குறித்த' என்ற பாடமும் உரையுமே சிறந்தன என்கிறார் தண்டபாணி தேசிகர். 'ஊன்' எனப் பாடம் கண்ட பரிமேலழகர் 'உயிர் உடம்போடு கூடியல்லது பயனெய்தாதவாறு போலச் சால்பு நாணோடு கூடியல்லது பயன் எய்தாது என்பதாம்' என விளக்கம் தந்தார். பொருட்சிறப்பால் 'ஊன்' என்ற பாடம் 'ஊண்' என்பதினும் சிறந்து நிற்கிறது.

'ஊனைக் குறித்த' என்ற தொடர் உடம்பினைத் தமக்கு நிலைக்களனாகக் கொண்டு அதனை விடா எனப் பொருள்படும்.

உயிர்கள் எல்லாம் உடம்பை நிலைக்களமாக உடையன; சான்றாண்மை நாண் என்னும் நல்ல குணத்தைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்டுள்ளது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

சான்றாண்மைக்கு நாணுடைமை அடையாளமாகும்.

பொழிப்பு

உடம்பின்றி உயிர் இல்லை; நாணம் என்ற நற்குணம் இன்றேல் சான்றாண்மை இல்லை.