இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1014



அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணியன்றோ பீடு நடை

(அதிகாரம்:நாணுடைமை குறள் எண்:1014)

பொழிப்பு (மு வரதராசன்): சான்றோர்க்கு நாணுடைமை அணிகலம் அன்றோ? அந்த அணிகலம் இல்லையானால், பெருமிதமாக நடக்கும் நடை ஒரு நோய் அன்றோ?

மணக்குடவர் உரை: சான்றோர்க்கு நாணுடைமையாவது அழகன்றோ? அஃதில்லையாயின் பெரிய நடை நோயன்றோ?
இது சான்றோர்க்கழகாவது நாணுடைமை யென்றது.

பரிமேலழகர் உரை: சான்றோர்க்கு நாண் உடைமை அணியன்றோ - சான்றோர்க்கு நாண் உடைமை ஆபரணமாம்; அஃது இன்றேல் பீடுநடை பிணி அன்றோ - அவ்வாபரணம் இல்லையாயின் அவர் பெருமிதத்தையுடைய நடை கண்டார்க்குப் பிணியாம்.
(அழகு செய்தலின் 'அணி' என்றும், பொறுத்தற்கு அருமையின் 'பிணி' என்றும் கூறினார். ஓகார இடைச்சொற்கள் எதிர்மறைக்கண் வந்தன. இவை மூன்று பாட்டானும் அதன் சிறப்புக் கூறப்பட்டது.)

இரா இளங்குமரன் உரை: சான்றோர்க்கு நாணுடைமை என்னும் பண்பு அணிகலமாம்; அந்நாணுடைமை இல்லாதபோது, அவர்தம் பெருமித நடை நோய் நடையேயாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
சான்றோர்க்கு நாணுடைமை அணியன்றோ? அஃதின்றேல் பீடு நடை பிணியன்றோ?

பதவுரை: அணி-அணிகலம்; அன்றோ-அல்லவோ?; நாணுடைமை-இழி தொழில்களில் மனஞ் செல்லாமை; சான்றோர்க்கு-பல நற்குணங்களானும் நிரம்பியவர்க்கு; அஃது-அது; இன்றேல்-இல்லாவிடில்; பிணியன்றோ-நோய் அன்றோ-அல்லவா?; பீடு-பெருமிதம்; நடை-நடத்தல்.


அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சான்றோர்க்கு நாணுடைமையாவது அழகன்றோ?
பரிப்பெருமாள்: சான்றோர்க்கு நாணுடைமையாவது அழகன்றோ?
பரிதி: நாணுடைமையன்றோ மனிதர்க்கு ஆபரணம்;
காலிங்கர் ('கஃதிலரேல்' பாடம்): நாணுடைமை ஆகின்ற இது சான்றோர்க்கு அணிகலம் போல்வதோர் அலங்காரப் பண்பிற்று;
பரிமேலழகர்: சான்றோர்க்கு நாண் உடைமை ஆபரணமாம்;

'சான்றோர்க்கு நாண் உடைமை ஆபரணமாம்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பெரியவர்கட்கு வெட்கம் ஓர் அழகாகும்', 'நிறை பண்புடையவர்க்கு நாணுடைமை அணிகலனாகும்', 'சான்றாண்மையுள்ள மேன்மக்கள் பழி பாவத்துக்கு அஞ்சுகின்ற நாணுடைமையுள்ள குணத்தைத்தான் வாழ்க்கையின் அழகாகக் கருதுவார்கள்', 'நற்குணங்களால் நிறைந்தோர்க்கு நாண் உடைமை நல்ல அணிகலனாகும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நாணுடைமை சான்றோர்க்கு அணியல்லவோ? என்பது இப்பகுதியின் பொருள்.

அஃதின்றேல் பிணியன்றோ பீடு நடை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அஃதில்லையாயின் பெரிய நடை நோயன்றோ?
மணக்குடவர் குறிப்புரை: இது சான்றோர்க்கழகாவது நாணுடைமை யென்றது.
பரிப்பெருமாள்: அஃதில்லையாயின் பெரிய நடை நோயன்றோ?
பரிப்பெருமாள் குறிப்புரை: இது சான்றோர்க்கழகாவது நாணுடைமை யென்றது.
பரிதி: இந்த ஆபரணம் இல்லாதபோது பிணியன்றோ, மதயானைபோல ரிஷபம் போல நடக்கிற நடை என்றவாறு. [ரிஷபம் - காளை]
காலிங்கர் ('கஃதிலரேல்' பாடம்): அதனால் அஃது ஒருவர்க்கு இல் எனின் அவர் நடிக்கும் பெருமையும் ஒழுக்கமும் பெருந்துயரை விளைக்கும் பிணியாம் என்றவாறு.
பரிமேலழகர்: அவ்வாபரணம் இல்லையாயின் அவர் பெருமிதத்தையுடைய நடை கண்டார்க்குப் பிணியாம். [பெருமிதம் -மேம்பாடு]
பரிமேலழகர் குறிப்புரை: அழகு செய்தலின் 'அணி' என்றும், பொறுத்தற்கு அருமையின் 'பிணி' என்றும் கூறினார். ஓகார இடைச்சொற்கள் எதிர்மறைக்கண் வந்தன. இவை மூன்று பாட்டானும் அதன் சிறப்புக் கூறப்பட்டது.

'அஃதில்லையாயின் பெரிய நடை நோயன்றோ? என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் 'பெருமிதத்தையுடைய நடை கண்டார்க்குப் பிணியாம்' என மாறுபட்ட ஓர் உரை கூறியுள்ளார்.

இன்றைய ஆசிரியர்கள் 'வெட்கமில்லாத வீறுநடை நோயாகும்', 'அந்நாணுடைமை அவரிடம் அமையாவிட்டால் அவர்தம் பெருமித நடை அவர்க்கு நோயாகும்', 'அந்த நாணுடைமை இல்லாத வாழ்க்கை மற்ற விதங்களில் எவ்வளவு பெருமையுடையதானாலும் அதைத் துன்பமாகத்தான் கருதுவார்கள்', 'அஃது இல்லையாயின் அவர் பெருமித நடை அவர்க்கு ஒரு நோயாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அது இல்லாமல் வீறுடன் செல்வது நோய்நடை அல்லவோ? என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நாணுடைமை சான்றோர்க்கு அணியல்லவோ? அது இல்லாமல் பிணியன்றோ பீடு நடை? என்பது பாடலின் பொருள்.
'பிணியன்றோ பீடு நடை' என்றால் என்ன?

வெட்கம் கெட்டவர்க்கு வீறு நடை எதற்கு?

சான்றோர்க்கு நாணுடைமையே அணியாகும்; அந்த நாணம் இல்லாமல் அவர் பெருமிதத்தோடு நடந்து செல்வது நோய் நடையாகத்தானே இருக்கும்!
இக்குறளில் அழகுநடை பிணிநடை என்னும் இருவேறுவிதமான நடைகளைக் காட்டுகிறார் வள்ளுவர். அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால்பு ஊன்றிய தூண் (சான்றாண்மை 983 பொருள்: அன்புடைமை, இழிசெயலுக்கு நாணுதல், பொதுநல ஈடுபாடு, இரக்கம், வாய்மை ஆகிய ஐந்தும் சால்பினைத் தாங்கிநிற்கும் தூண்களாம்) என்ற குறள் நாண் சால்பைத் தாங்கி நிற்கும் ஐந்து தூண்களில் ஒன்று எனச் சொல்லப்பட்டது. அந்த நாணுடைமை பெரியோர்க்கு அணியாகும் என இங்கு கூறப்படுகிறது. சான்றோர் நாண் என்னும் அணி பூண்டு நடந்து செல்லும்போது அது அவர்க்கு அழகு சேர்ந்த பெருமித நடையாக இருக்கும். அவரே, நாண் நீங்கி தகாத செயல்களில் ஈடுபட்டபின்பும், சால்புடையோர் போலக் காட்டிக்கொண்டு அதே பீடு நடையில் தொடர்வானால் அதைக் காண்பவர்க்கு அது துன்பம் தருவதாகவே அமையும். அத்தகைய நடையைப் பார்ப்பவர்கள் 'எப்படியிருந்த பெரியவர் இப்படிக் கூச்சமில்லாமல் நடந்து போகின்றாரே. நாணில்லை. ஆனால் பெருமித நடை மட்டும் எப்படி வருகிறது?' என்று மனம் பொறுக்காமல் வருந்துவர்.

'பிணியன்றோ பீடுநடை' என்றால் என்ன?

'பிணியன்றோ பீடு நடை' என்றதற்குப் பெரிய நடை நோயன்றோ, பிணியன்றோ, மதயானைபோல ரிஷபம்போல நடக்கிற நடை, நடிக்கும் பெருமையும் ஒழுக்கமும் பெருந்துயரை விளைக்கும் பிணியாம், பெருமிதத்தையுடைய நடை கண்டார்க்குப் பிணியாம், பெருமிதமாக நடக்கும் நடை ஒரு நோய் அன்றோ, பெருமித நடை போடுவது ஒரு நோய் என்றல்லவா கருதப்படும், பெருமிதத்துடன் கூடிய நடை பிணியாகும், வீறுநடை நோயாகும், பெருமித நடை அவர்க்கு நோயாகும், மற்ற விதங்களில் எவ்வளவு பெருமையுடையதானாலும் அதைத் துன்பமாகத்தான் கருதுவார்கள், பெருமித நடை நோய் நடையேயாம், பெருமிதநடை ஒரு நோயாகுமல்லவா, பெருமித நடை அவர்க்கு ஒரு நோயாகும், அந்த நடையைக் கண்டாருக்குப் பிணி போன்றே தோன்றும், பெருமித நடை உண்மையில் நோய்வாய்ப்பட்டவனின் நடை, பெருமித நடை அவருக்கொரு நோயேயாம், பெருமிதம் மக்கள் சமுதாயத்திற்குத் துன்பத்தைத் தரும் பிணியாகும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருளுரைத்தனர்.

பீடுநடை என்பதற்கு ஏறுப்போல் நடை, மதயானை நடை, சிங்கநடை எனப் பொருள் கூறினர். பீடுநடை என்பது பெருமித நடையைக் குறிக்கும். 'நாணில்லாதவனுக்குப் பீடுநடை பிணியாம்' என்று சிலரும் 'நாணின்மை உளதாயின் அவனது பீடுநடை கண்டவர்க்குப் பிணியாம்' என்று பரிமேலழகர் முதலானோரும் இருதிறமாக இத்தொடர்க்குப் பொருள் கூறுவர். பாடலின் முதற்பகுதியில் அணி என்பது சான்றோரோடு இயைபுபடுத்தியது போன்று பிணி என்பதையும் சான்றோரோடு இயைத்துப் பொருள் கொள்வதே இயல்பானது என்பர் சிலர். ஆயினும் அணியைச் சான்றோரோடும் பிணியைக் காண்போரோடும் இயைபுபடுத்தி உரைப்பது இழுக்காகாது.

இக்குறள் புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை (வாழ்க்கைத்துணை நலம் 59 பொருள்: புகழ்விரும்பும் இல்லாளை இல்லாதார்க்கு தம்மை இகழ்ந்துரைப்பார்முன் சிங்கம் போல நடக்கும் பெருமித நடை இல்லை) என்ற பாடல் போன்ற அமைப்புக் கொண்டது. 'நாணமிலி அவ்வின்மை மறைப்பதற்கோ அறியாமலோ பீடுநடை நடப்பானாயின் அது அவனுக்கு ஒருபோதும் பிணியாகாது. காண்பவர்க்கே துன்பந்தருவதாகும் என்று பரிமேலழகர் கருதியிருப்பர்போலும். பூதங்கள் ஐந்தும் அகத்தே நகுதல்போல அவனுக்கே பிணியாம் என்பதும் பொருந்துவதாம். நயங்கண்டு தெளிக' என்பது தண்டபாணி தேசிகர் தரும் கருத்துரை.

நாண் என்ற பண்பு இல்லாது ஒழியுமிடத்து, மாண்பு மிக்கார்போல் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு ஆணவ நடை போடுவது காண்போர்க்குத் துன்பந்தரும்தானே என்று வினவுகிறார் வள்ளுவர்,

நாணுடைமை சான்றோர்க்கு அணியல்லவா? அது இல்லாமல் வீறுடன் செல்வது நோய்நடை அல்லவோ? என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

நாணுடைமை பெரியவர்களுக்கு நல்லணியாகும்.

பொழிப்பு

பெரியவர்கட்கு நாணுடைமை ஓர் அழகாகும் அல்லவோ? அது இல்லாவிடில் அவரது பெருமிதம் நடை நோய் அல்லவோ?